Wednesday, March 2, 2011

கவிதையைக் கவிதைதான் மதிப்பிட முடியும் - தேவதேவன்

சும்மா இருக்க வந்ததுதான் என்றாலும் கவிதையால் நமது உலக வாழ்வை மதிப்பிடாமல் இருக்க் முடியவில்லை .உலகவாழ்வை கவிதை மதிப்பிடுகிறதே என்று அதற்காக கவிதையை உலகவாழ்வு மதிப்பிட்டு விடலாமா ? விட முடியுமா ?கவிதையை கவிதைதான் மதிப்பிட முடியும். அதாவது கவிதை தன்னைத்தான் மதிப்பிட்டுக் கொள்கிறது.வேறு எதற்கும் அந்த அதிகாரத்தை அது கொடுக்கவில்லை.

ஓர் இலக்கியக்கூட்டத்தில் பிரமிள் தனது கவிதைகள் குறித்து கேட்கப்பட்டபோது ' அவையெல்லாம் ரத்தினங்கள் ' [gems] என்றார். அதற்கு அந்த வாசகர் ' அப்படியானால் அவை வெறும் அணிகலன்கள்தானா ? ' ' என்று எதிர் வினை செய்ததற்கு அவர் ' ரத்தினம் -- அது ஓரு சக்திமிக்க ஆயுதம்! ' என்றார்.

பிரமிள் தனது வாசகனுக்கு தான் சென்றடைந்த உயரத்துக்கு அவனை அழைத்துச்செல்ல அடிவாரத்திலிருந்து உச்சிவரை படிகளை அமைத்துக் கொண்டிருப்பதில்லை. அவனது ஆர்வத்திலும் திராணியிலும் நம்பிக்கை வைத்தபடி வெகு வேகமாயும் லாவகமாயும் தாவித்தாவிசெல்வது அவர் சிந்தனை.

எனது நீள் கவிதையான கானகவாசியில் ரத்தினத்தை தேடிசெல்கிறது ஒருகூட்டம் .இயற்கையின் ஓர் அற்புத சிருஷ்டியாகிய ரத்தினம் இங்கு பேராசையின் குறியீட்டாக ஆவது தேர்ந்த வாசகர் ஒருவரை திடுக்கிட வைத்தது.

ஒரு சந்தர்ப்பத்தில் '....அப்படியானால் கவிதை இந்த வாழ்வுக்கு ஒன்றும் செய்யாதா ? ' என்று கேட்கப்பட்ட போது நான் சொன்னேன் ' ரத்தினம் இயற்கையின் ஓர் அற்புத சிருஷ்டி என்ற முறையில் நம்மிடம் கேட்டு நிற்கும் விலை என்ன ? மனித சமூக அளவுகோல்களால் நாம் அதற்கு அளித்திருக்கும் மதிப்பு, விலை மனிதனை படுகுழிக்குள் தள்ளிவிடக்கூடியது என்ற உண்மை நமக்கு உணர்த்துவது என்ன ? ரத்தினம் ஒரே சமயம் சிருஷ்டிகரத்தின் குறியீடாகவும் , பேராசையின் குறியீடாகவும், நிகழ்வதன் சிக்கலை அவிழ்த்து வாழ்வை மீட்சிகொள்ளும் முறையே கவிதை என்பது ... '

உண்மைதான் , ஒரு பொருளின் உலகியல் மதிப்பை அறவே ஒதுக்கிவிடுகிறது கவிதை .ஆகவே நாம் மீண்டும் மீண்டும் இதை சொல்லிக் கொள்கிறோம் ,உலகவாழ்வை கவிதை மதிப்பிடுகிறதே என்று கவிதையை உலக வாழ்வு மதிப்பிட்டுவிட முடியாது .கவிதையை கவிதையால்தான் மதிப்பிட முடியும்.

[நுழை வாயிலிலே நின்றுவிட்ட கோலம் முன்னுரை 19991]

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP