Saturday, August 25, 2012

நீ இங்கே வருவாய் என்று...

முதலில்
நீயே இந்த பூமியின் அரசன்
என உணர்ந்தாயானால்
எனக்குத் தெரியும்
நீ இங்கே வருவாய் என்று.

உனது கையாலாகாத்தனத்தின்
உரம் தளர்ந்து விட்ட
தாழ்வு மனப்பான்மையில்தான்
கடவுளர்கள் இங்கே உதிக்கிறார்கள் என
நீ உணரும் போழ்தே
எனக்குத் தெரியும்
நீ இங்கே வருவாய் என்று.

அறமும் அமுதசுரபியும் அமைதியுமே
உனது இலட்சியம் என்பதையும்;
அஞ்ஞானமே
நம் அனைத்துத் துயருக்கும்
காரணமென்பதையும்; ஞானம் என்பது
எந்தப் பிரிவினைக் கூறுகளையும்
சம்மதிக்காது என்பதையும்
நீ உணரும் வேளை
எனக்குத் தெரியும்
நீ இங்கே வருவாய் என்று.

இப் பிரபஞ்சத்தின்
பேரிசையை உணர்ந்தவனாகி
தோன்றிவிட்ட நம் மனித சமுதாயத்திலும்
அதே போலொரு பேரொழுங்கு
சாத்தியமே என்றும் அதை இயற்றுதலே
மனிதப் படைப்பின் உச்சம் என்றும்
பேர் வேட்கைபற்றி எரிந்து கொண்டிருப்பாயானால்
எனக்குத் தெரியும்
நீ இங்கே வருவாய் என்று.

அழகிலும் பிரம்மாண்டத்திலும்
உன்னை நீ மறப்பது கண்டு
தன்னைத் தான் மறப்பதிலேதான்
அழகும் நன்மையும் மெய்மையும்
துலங்குவதறிந்து,
பேதமறுக்கும் வாளே
துயரறுக்கும் வாளும்;
தீவினைகளின் ஊற்றுக்கண்ணே
துயரங்களின் ஊற்றுக்கண்ணும்;
கேளிக்கையை
பகட்டினைப் புரிந்து கொள்ளும் நெஞ்சமே
எளிமைக்கு இரங்கும் நெஞ்சமும்
ஏழைமுன் குற்றவேதனை கொள்ளும் நெஞ்சமும்;
அச்சத்தினாலன்றி
போர்களின் துரதிருஷ்டக் காட்டுமிராண்டித்தனத்திற்குக்
கலங்கும் இதயமே
மெய்யானஅமைதிக்கு ஏங்கும் இதயமும்;
என்பதையெல்லாம் நீ காணும் வேளை
எனக்குத் தெரியும்
நீ இங்கே வருவாய் என்று

பூஜை சடங்கு சம்பிரதாயங்கள்
பொழுதுபோக்கு கேளிக்கைகள் எல்லாம்
நம் உணர் வெழுச்சிகளைத்
துப்புரவாய் மழுங்கடித்துக் கொன்றுவிடும்
உதவாக்கரைப் பொய்மைகள் என்பதை
நீ கண்டுகொள்ளும் போதில்
எனக்குத் தெரியும்
நீ இங்கே வருவாய் என்று.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP