Thursday, November 15, 2012

நான் யாரா?

சொல்கிறேன் கேள்
நானே எல்லா இடங்களுக்கும் வந்து நிற்க
இயலாதென்பதற்காவே
ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு பெண்ணையும்
ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு ஆணையும்
என் பிரதிநிதியாய் அனுப்பியுள்ளேன்

ஆனால்
ஈருடல் இணைவில்
பேரின்பம் காணுதற்கு வேண்டிய
அந்த அபாரமான சுரணையும் எழுச்சியும்
உங்களுக்கு இருக்கிறதா என்பதில்
எனக்கு அய்யம் வந்துவிட்டது
காரணம்:
வெளிர் நிறம் முன்
தன் கறுப்பு நிறம் அசுத்தம் என்றும்
அவர் மூத்திரமும் பன்னீர் என்றும்
எளிதில் தீராதநோயினால்
எப்போதுமிருமிக் கொண்டேயிருக்கிறாய் நீ

எளியதோர் தேநீர் விருந்தொன்றில்
எண்ணெய் படிந்த காரப் பொட்டலத் தாளை
செத்த எலியின் வாலைப் பிடித்துத் தூக்குவதுபோல்
சொல்லொணா அருவருப்பை
முகத்திலே இயற்றிக்கொண்டு
அனைவரும் பார்க்க குப்பைக்கூடை நோக்கி
நீ நடந்த நடையழகையும்;
முன்னாள் அக்ரஹாரத்திற்குள்ளும்
இன்னாள் அக்ரஹாரத்திற்குள்ளும்
எப்போதும் மூக்கைப் பொத்திக்கொண்டு செல்லும்
உன் முகவழகையும்;
பாதையிலுள்ள கல்லெடுத்து
ஓரமாய்ப் போடக் குனிவதும்
படுக்கையாகிவிட்ட நோயாளிக்குக்
கழிவு போக்கிச் சுத்தம் செய்ய உதவுவதும்
அடுக்காது நம் ஜாதிக்கு என
நீ உள்விறைப்பதும்; கண்டு
உண்மையிலேயே எனக்கு அய்யம் வந்து விட்டது,
நீங்கள் இருவருமே ஒழுங்காகக்
குண்டி கழுவுவீர்களா என்று
எனக்கு அய்யமாகவே உள்ளது

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP