Tuesday, February 12, 2013

மரணப்படுக்கை

1.
அகண்டவெளி அந்தரத்திலிருந்து
எல்லாவற்றின் மீதும் நிபந்தனையற்றுக் கவியும்
அது வருகிறது வருகிறது.
தரைமீது
உச்சபட்ச கொடூரத்தின்
சிகரமுக நெருப்பு
திடுக்கீட்டின் உச்ச வேதனை
எக்கணமும் விலக்கமுடியா இயல்புக் கருணை
அக் கொடூர முக நெருப்பையும்
கொஞ்சித் தழுவியபடி
விரைவில் முடித்துக்கொள்கிறது
தன் உடம்பை

2.
எத்துணை அற்புதம் இந்த மூச்சு
சுருதி சேர்க்கப்பட்ட நரம்புக் கருவிபோல்
எவ்வளவு துல்லியம் இந்த உடம்பு
எத்துணை நுட்பம்
எத்துணை அபூர்வ படைப்பு

படுக்கையில் பூத்த இந்த மலர்ச்
சிசுவைத் தடவித் தடவிச் சீராட்டுகிறது
மரணம் – அதன் தாய்

3.
நோயால் நொந்து ஜீணித்து
நுண்ணிவிட்ட உடம்பின் மேல்
உடலும் மனமும் ஒன்றான சுருதி ஏறி
குருவி ஏற சிறு கொம்பாடும் சலனம்போல்
நடுங்குகிறது
மரணம் தொட இருக்கும்
உடம்பு

4.
அனந்த கோடி ஆண்டுகளாய்
மரணப்படுக்கையில் ஓர் உடம்பு
அதன் ஒரே செயல்பாடாய்
அன்பு – அவ்வுடம்பின் தொண்டைக் குழாயில்
மேலும் கீழுமாய் இயங்கும் மூச்சு
இடையறாது வெளி உந்தப்பட்டுக் கொண்டேயிருக்கிறது
இப் பிரபஞ்சம் முழுவதையும் நிரப்ப உத்தேசித்தது போல்

5.
மிகப் பரிச்சயமான இந்த அனுபவத்தை
இத்துணை காலம் எப்படி மறந்திருந்தேன்?
அதிதீவிர சிகிச்சை அறை நோக்கி
இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கிறேன்
முடிவற்று நீண்ட ஒரு மருத்துவமனைத் தாழ்வாரத்தில்
பிணமும் பிறவியுமாய் நான்

6.
அமுதம் கடைகிறது
கூரை மின் விசிறி
அறை வெடித்துவிடாதபடி
கண்காணிக்கிறது
ஜன்னல் வெளியே
பரந்திருக்கும்
கருணைவெளி

7.
ஆகா எவ்வளவு ஆனந்தம்
இந்த மரணப் படுக்கை!
ஆனாலும் எப்படி வந்தன
இந்தச் சித்ரவதைகளும் ஊடே?

8.
எல்லா உறுப்புகளையும்
பத்திரமாய் திருப்பிக்கொடுத்துவிட்டாய்
நன்றி.
சூழல் மாசு செயும் மரித்த மிருகம் போல்
இதுவரை இவ்வுடம்பு தன் அணுத்துடிப்பினாலேயே
உலகைத் துன்புறுத்தி வந்துள்ளதாய் ஓர் உணர்வு.
இனி உன்னைப் பேணுவதன் மூலம்
உலகை – மன்னிக்கவும் – சுற்றியுள்ளவர்களை
உன்னிப்பேன்

9.
வெகுகாலம் கழித்து
தட்டுத் தடுமாறி
கட்டிலை விட்டெழுந்து
என் நாற்காலியை ஜன்னலருகே
இழுத்துப்போட்டு அமர்ந்து விட்டேன்

துல்லியமாக எந்தக் காட்சியும் துலங்கவில்லை

எங்கும் இதயத்தைப் பிழியும் ஒரு நிம்மதியின்மை
அமைதியற்ற மனதின் இடையறாத சலசலப்பாய்
பிரபஞ்சக் காட்சிகளெங்கும் ஓர் அசைவு
கொடூரமான காலத்தில்
எனக்குப் பணிவிடை செய்ய வந்தவள்
முடிவற்ற அலுப்பின்
ஒரு சவுகரியமான முடங்கலில்
காலங்காலமாய் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருக்கிறாள்
அடிக்கடி எழும் குத்தல் போன்ற விழிப்பில்
ஆழ்ந்த தூக்கம் இல்லை அண்ணா என்கிறாள்
இன்று மீண்டும் படுத்துத் தூங்குகிறாள்.
முடிவற்ற அழகு அவள் உடம்பிலிருந்து
அந்த அறையை நிரப்பிக்கொண்டிருக்கிறது
அறையெங்கும் ஓர் அபூர்வமான நிச்சலனம் சாந்தி
அறை கொள்ளாது வீங்குகிறது
மெல்லத் தட்டுத் தடுமாறி எழுந்து
அறைக் கதவைச் சற்றே திறந்துவைக்கிறேன்
மருத்துவமனை வெளியெங்கும்
சிறகடித்து அலைந்த இரு குழந்தைகள்
அறைக்கு முன் வந்து ஆனந்தமாய்க் கலகலத்து நிற்கின்றன
வெகு காலமாய் என் கட்டிலில்
தலைப்பக்கமும் கால்ப்பக்கமுமாய் நின்று
என் உயிரை அலைக்கழித்து விளையாடிய
ஜனன மரணக் குழந்தைகள் அவை

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP