Sunday, April 14, 2013

எனது சைக்கிள் திருடனுக்கு ஒரு கவிதை

நண்பா,
பூமியில் நான் கால் பாவாதபடிக்கு
என்னைச் சுமந்து செல்லும்
மறைக்கப்படாத ஒரு ரகசியம் அது.
தவறுதான்; அதை நான் பூட்டி வைத்துப் பழகியது

என்னை மீறிய ஓர் அபூர்வப்பொழுதில்
அது தனது அனாதி கோலத்தில் நின்றிருந்தபோது –
அதை நீ கவர்ந்து சென்றுவிட்டாய்
நான் அதைப் பூட்டி வைத்தது போலவே.
எனது துக்கம்; நாம் இருவருமே குற்றவாளிகளானதில்

அந்தச் சிலுவையுடன்
கெண்டைக்கால் சதைகள் நோக
பூமியில் எனது தூரம் கடக்கப்படவும்;
உனது தூரம் நெடுந்தொலைவு ஆகிவிடும்போது –
வாகனம்தான் எனினும் –
உன் கால்களும்தான் நோகும்.
நண்பா,
பூமியில் நம் சுக – துக்கத்தின் கதை இவ்வளவுதானே!

பள்ளத்தை நோக்கிப் பாயும் வெள்ளம்;
வெற்றிடத்தை நோக்கி ஓடி வரும் வாயு;
துயர் நோக்கிப் பாய்ந்து வந்தது கருணை;
”இதை வைத்துக் கொள்ளுங்கள்,
நீங்களாய் இன்னொன்று பெறும் வரை
அல்லது உங்களுடையது மீட்கப்படும்வரை.
நன்றியுணர்வாலோ திருப்பிக் கொடுக்கப்பட
வேண்டுமென்ற கடப்பாட்டுணர்வாலோ
உங்களைத் தொந்தரவு செய்து கொள்ள வேண்டாம்
அவசரமின்றி சிரம்மின்றி இயல்பாய்
நீங்கள் ஒன்று பெற்றுக் கொள்ளும் வரை
இதை வைத்துக்கொள்ளுங்கள்.”

அது வெறும் வாகனம் அல்ல;
இரு நண்பர்களுக்கிடையேயுள்ள உறவு;
துயர் நோக்கிப் பாய்ந்து வந்த கருணை;
அவ்வளவு அழகாய் அற்புதமாய் புத்தம்புதியதாய்
ஆனந்தமாய் இருந்தது அது

எனது நண்பனே,
மதிப்பிற்குரிய எனது சைக்கிள் திருடனே,
இப்போது முன்னெப்போதையும்விட
அதிக அளவில் அச்சத்தின் விலங்கால்
நான் பூட்டப்பட்டதை உணர்கிறேன்.
இப்போது என் சுற்றுமதிலுக்குள்ளும் கூட
அதைப் பூட்டி வைக்கிறேன்.
அந்த வாகனத்தை விட்டு நான் இறங்கும்போதெல்லாம்
நட்பு காட்டும் உன் புன்னகையில் நான் வெட்குகிறேன்
எனது துக்கம்; நாமிருவருமே குற்றவாளிகளானதில்

மதிப்பிற்குரிய நண்பனே!
’மதிப்பிற்குரிய’ என்று ஏன் அழைக்கிறேன் என்றால்
உன் மீது எனக்குப் பகைமையோ அன்போ இல்லை.
என் வாகனத்தை நான் பெற வேண்டும் என்ற
நியாயமான உந்தலால் போலீஸில் புகார் செய்கிறேன்.
அவர்கள் கடமை வீரர்கள். அவர்கள் உன் மீது
என்னைவிட மேலும் ஒரு மடங்கு மதிப்புடையவர்கள்.
என் வாகனத்தை மீண்டும் புதியதாய்
எனக்குப் பெற்றுத்தருவதற்குக் காரணன் நீயல்லவா?

என் வாகனத்தைப் பெற்றுக்கொள்ள
காவல் நிலையம் வந்தபோது, அப்படியே
உன்னையும் பார்த்துப்போக நின்றேன்
கண்ணாடியில் தெரியும்
பிம்பம் தன் உருவை உற்றுப் பார்ப்பது போல்,
சிறைக் கம்பிகளுக்கு அப்பால் நீ இப்பால் நான்

அந்த இரும்புத் திரையைத் தொட்டேன்.
எத்தனையோ மெல்லிய திரைகளைத் தொட்டிருக்கிறேன்
அப்படி ஒரு மெல்லிய திரைதான்
இப்படி இரும்பாகி விட்டிருக்கிறது
எனினும் தர்சனத்தை மறைக்காத இரும்புத்திரை அது
என்னுள் ஒரு கொந்தளிப்பு, அதை உடைத்துக் கிழிக்க

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP