Friday, May 31, 2013

தோல் சிவப்பும் ஆழ் சிவப்பும்

இயற்கை இன்பங்களையும் கலைத்துவிடும்
ஏழ்மைத் துயர் கவிந்த வானம்
வற்றிய குளம் பார்த்துப் பார்த்து
வறண்ட நிலங்கள் தகிக்க
வாடிச் சோர்ந்த குடிசைகள்
சிறு காற்றுக்கும் அஞ்சி நடுங்க
எங்கு தொலைந்தனர், இவ்வூரின்
திறமைசாலிகளான மனிதர்கள்?
அவர்களுக்கும் கல்வியும் செல்வமும்
வழங்கப்பட்டதல்லவா,
அறமற்ற பொய்மதத்தையும் மீறி
அறம் வென்று?

உள்ளத்தின் சிவப்பை யெல்லாம் ஒழித்துவிடும்
செல்வத்தின் கரி மண்டிய வானம்.
தோல் சிவப்பே நமது நெறியென்றெண்ணியோ
சிவப்புத் தோல் நண்ணிச்
சிவப்புத் தோல் போர்த்திக்கொண்டு
பொய்மதம் பீடித்துலாவுகின்றன நகரங்கள்?
உரைக்க வொண்ணாததாய் உணர வொண்ணாததாய்
வான் நிறைத்து அழுகின்றனவோ
மெய் மதமும் துயரமும்?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP