Monday, May 6, 2013

புத்த பூர்ணிமாக்கள்

கானகத்தின்
ஒவ்வொரு இழைமீதும் பொழிந்து
அதன் எழிற் பசியாற்றிக் கொண்டிருக்கும் நிலா தான்,
உன் ஜன்னலருகே வந்து
உன்னை ஏக்கத்துடன் எட்டிப் பார்க்கும் நிலாவும்.

உலகு நடத்த
உச்சி நின்று பொழிந்து கொண்டிருக்கும் நிலாதான்,
நீரள்ளி முகம் துலக்க வரும் உன்னை எதிர்நோக்கி
நீர்நிலை ஒவ்வொன்றிற்குள்ளும்
வெடவெடக்கும் குளிர்நடுக்கம் தாங்கியபடி
உயிர் காத்துக்கொண்டிருக்கும் நிலாவும்.

கடலின் அலைகளில்
சவாரி மகிழ்ந்துகொண்டிருக்கும் நிலாதான்,
உன் இருளிரவுக் கன்னக் கதுப்புகளின்
நீர் துடைக்க முன்னும் நிலாவும்.

காற்றில் மகிழ்ந்தபடி
தோட்டக் காடுகளைக்
காவல் காத்துக்கொண்டிருக்கும் நிலாதான்
உன் காதல் இரவின் களிப்பிற்காய்
மூடிய கதவின் முன்முற்றத்தில்
தாய்மை தந்தைமையுடன்
வெற்றிலை மென்றபடி
கால் நீட்டி அமர்ந்திருக்கும் நிலாவும்.

மண்துகள் ஒவ்வொன்றும் சிலிர்க்க
பாலையின் தனிமையினை
ஏகாந்தப் பெருவெளியாக்கிக் கொண்டிருந்த நிலாதான்,
கலகலக்கும் திருவிழாக் கூட்டத்தினையும்
நிலாச் சோறுண்ணும் குழந்தைகளையும் கண்டு
முறுவலித்துக் கொண்டிருக்கும் நிலாவும்.

மண்ணுயிரெல்லாம் குளிர
கமலை இறைத்துக் கொண்டிருந்த மாமனிதனைக்
கண்டு நின்றுவிட்ட நிலாதான்,
தன் செயலே கண்ணான அவன் முகம்
நேர் கண்டு மகிழக்
கிணற்றுக்குள் காட்சியளிக்கும் நிலாவும்.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP