Monday, April 15, 2024

குன்றாத அமுதம்










எத்தனை வண்ணத்துப்பூச்சிகள்
வந்தமர்ந்து தேனுண்டாலும்
குன்றாது விளைந்து கொண்டிருந்தது
மலர்த்தேன்
வந்தமர்ந்த மலரிடமிருந்து
அதுவும்தான் தேன் பருகிக் கொண்டிருப்பதால்!

Read more...

Friday, April 12, 2024

கூழாங்கற்கள்

 

Photo courtesy: peakpx.com















”கூழாங்கற்கள்” கவிதையைப் படிக்க இங்கே சொடுக்கவும்


Read more...

Wednesday, April 10, 2024

மாபெரும் பாடல்

மேரா நாம் இஸ்க்
தேரா நாம் இஸ்க்
என் பெயர் அன்பு
எங்கள் பெயர் அன்பு எனப்
பாடலின் இசைப் பெருக்கம்
இப்பேரண்டமெங்கும் விரிந்துவிடுமாறு
ஒலித்தது பாடல் அவன் பாடியது

ஆனால் அந்தப் பாவி பாடாத வேளையில்

பாழும் இந்த உலகின்   
சாதிவிஷக்காரன் என்பதுதானே
நாம் கண்ட கொடுமை..?

பாடுவது யார்க்கும் அரியவாம்தான் என்றால்
இதுகாறும் நம்மால் படைக்கப்படாத
ஒரு மாபெரும் பாடலைத்தானே
பாடப் பார்க்க வேண்டும் நாமிவ்வுலகில்?

Read more...

Monday, April 8, 2024

பாடுகள்

கூட்டத்தில்
ஓர் இடம் பிடிப்பதற்காக
அப்புறம்
கூட்டத்தில்
தானே ஒசத்தியானவன் எனும்
ஒர் பேர் பெறுவதற்காக
அப்புறம்
தான் பேர் பெற இயலாமற் போனாலும்
தன் குழு, தன் இனம், தன் சாதிக்காரனுக்காக …

மெது விஷத்தால்
தன்னையும் உலகையும்
போராலும் துயராலும்
கொன்று கொண்டிருக்கிறான் மனிதன்

பேர் புகழ் பணம் தரத் தொடங்கிவிடும்
எந்தச் செயலானால் என்ன
எந்தக் கலையானால் என்ன
கவிதையேயானாலும் என்ன
ஒசத்தியான மனிதனுக்கு
பயிற்சியினால் ஆகாதது என்ன?

பயிற்சியைத் தாண்டி ஒன்று உண்டா?
அன்பாவது, அறமாவது –
அழகு பற்றியெல்லாம் எவனுக்குத் தெரியும்?
உருவமில்லாத இந்த மெய்ப்பொருள்களை
யார் அறிவார்?
யாரால் ஏய்த்துவிட முடியாது?
கச்சிதமாக தயாரிக்கப்பட்ட ஒரு துப்பாக்கி
சுடாமலா போகும்?
வர விடுவோமா பிற குலத்தோரை
எத்தனைக் கால பாரம்பரியம் நம்முடையது?
நாம் தீட்டும் பொய்களாலும் இழி சித்திரங்களாலும்
கண்களும் காதுகளும் இயலாதவன் போன்ற நம் நடிப்பாலும்
நாம் செய்யும் கொலைகளை விடப்
பிறிதொரு ஆக்கச் செயல் உண்டோ?

பயப்படாதீர்கள், அன்பர்களே
கவிதையின் ஆரம்ப வரிகளுக்குச் செல்லுங்கள்
குற்றத்தின் வேர் கண்டுவிட்டால் போதும்
மின்னற்பொழுதே தூரம்
இதோ கண் முன்னே தான் இருக்கிறது
கடவுளின் ராஜ்ஜியம்!


-இனி ஒரு விதி செய்வோம்(2023) தொகுப்பிலிருந்து
இந்நூல் சீர்மை பதிப்பகத்தில் கிடைக்கும்


Read more...

Friday, April 5, 2024

தேவதேவனை தவிர்ப்பது… Aug 2015 - ஜெயமோகன் தளத்திலிருந்து

தேவதேவன் கவிதைகள் தன்னை கவர்ந்துள்ளது பற்றிய வே.ஸ்ரீநிவாச கோபாலனின் கேள்விக்கு ஜெயமோகனின் பதில் இந்தக் கட்டுரையில் உள்ளது

முழுக் கட்டுரையும் இங்கே வாசிக்கலாம்.....

”சிலுவைப் பிரயாணம்" கவிதை இங்கே


Read more...

Wednesday, April 3, 2024

இந்த மலைகள்!

கேள்விகளோடு வந்து நிற்கும்போது
உரையாடுகின்றன இந்த மலைகள்!

கேள்விகள் இல்லாதபோதுதான்
எத்துணை அமைதியாக!

இரைச்சல்களோடு வந்து நிற்கும்போதும்
எத்துணை துல்லியமாக எதிரொலித்தபடி!

Read more...

Monday, April 1, 2024

குட்டிப் பாப்பாவுக்கு ஒரு கதை

கூடி வாழ்ந்தபடி
கூட்டமாய்ப் பறந்து திரியும்
குருவிகளை பறவைகளைப்
பார்த்திருப்பீர்கள்.
அவர்கள் நம் பார்வையில்
ஒன்றுபோல் காணப்படுவதில்
ஒரு பொருளுண்டு
ஒரு கதையுண்டு.

வெகுகாலத்திற்கு முன்பு
அவர்களிடையே அரசர்கள் இருந்தார்கள்
செல்வர்கள் இருந்தார்கள் ஏழைகள் இருந்தார்கள்
தீரர்கள் இருந்தார்கள் சாமான்யர்கள் இருந்தார்கள்
பெரியவர்கள் இருந்தார்கள் சிறியவர்கள் இருந்தார்கள்
வேறுபாடுகள் இருந்தன ஒற்றுமைகள் இருந்தன
சான்றோர்கள் இருந்தனர் துன்பமும் இருந்தது.

துயரை முடிவுக்குக் கொண்டுவர அறிந்த
சான்றோர் ஒருவர் தோன்றினார்.
முழுமையான, புனிதமான ஒரு மனிதர்.
அந்நாள் தொட்டு
ஒவ்வொரு புனிதராய்த்
தோன்றிக் கொண்டே இருந்தார்கள்.

ஓர் ஒற்றை ஆலமரம் மட்டுமேயாய்
இருந்த இடம் திடீரென்று
ஒர் பெருங்காடாக மாறிவிட்டது.

ஒரு புல்லின் உதவி கொண்டு
பூமியெங்குமொரு பச்சைக் கம்பளமே
விரிந்து விட்டது.

வானத்தை நோக்கி
வேர் விரித்தாற் போன்று
அத்தனை இலைகளையும்
உதிர்த்து நின்ற ஒர் மரத்தில்
குபீரெனப் பொங்கி எழுந்தன
புதுத் துளிர்கள்.

ஒற்றை விதை ஒன்றில் தோன்றிய
ஒற்றைப் பூமரம்தான்
ஒற்றைப் பூங்கொத்தாக
கொள்ளை கொள்ளையாய்
விதைகள் வீசப்போகும்
கொள்ளை கொள்ளையான பூக்களுடன்.

பூமியெங்குமோர் புன்னகையைக் கொளுத்திற்று
பயிர்கள் எங்கும் அமர்ந்து
பசியாறி எழுந்து பறந்த
படைக் குருவிகள் போல்
நீங்கியதோர் வெக்கையும்
குளுகுளுவென்று எழுந்ததோர் பசுமையும்.

இனி இந்த பூமியில்
எந்த ஒரு கசடும் படியவே முடியாதென
ஒரு பெருவெள்ளம்
கொட்டிப் புரண்டு பாயத் தொடங்கியது
அருவிகளும் ஆறுகளுமாய்.

பளீரிடும் வெண்பட்டுக் கம்பளமாய்
விரிந்த வெயிலில்
சின்னஞ்சிறு புழுக்களும்
இன்பமாய் நெளிந்து ஆடின.

மயில் தோகை போல்
வானில் படர்ந்த மேகங்களிலிருந்து
பொழிவதற்கு முன்
ஒரு மனிதனின் மூளையைப்
பொட்டெனத் தீண்டிவிட்ட
சொட்டுத் துளியினில்தான்
எத்தகைய பேரின்பம்!

அன்றுதான்
வேறுபாடுகளையோ துயர்களையோ அறியாத
இந்த புதுக் குருவிகளும்
தோன்றி விட்டன என்கிறார்கள்.


- ஏஞ்சல் (2019)  கவிதைத் தொகுப்பிலிருந்து.

Read more...

Friday, March 29, 2024

ஒரு வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை - தேவதேவன் கவிதைகள் பற்றி பூங்குழலி வீரன்

வல்லினம் பெப்ரவரி 2013 இதழில் வெளிவந்த கட்டுரை.

வண்ணத்துப்பூச்சிகள் கவிஞர்களுக்குப் மிக பிடித்த நண்பர்கள் எனலாம். அவர்களின் துயர் பகிரும் உயிராகவும் கூட இந்த வண்ணத்துப்பூச்சிகள் உலவித் திரிந்திருக்கின்றன. குழந்தைகளுக்கும் உற்ற தோழனாகவும் உறக்கத்தில் அலறி எழுவதற்கான காரணமுமாகவும் இந்த வண்ணத்துப்பூச்சிகள் இருக்கின்றன. சிறியதும் பெரியதுமான ஆங்காங்கே மொய்த்துக் கிடந்து எப்போதும் படபடத்த சிறகோடு பறந்தபடியேயிருக்கும் வண்ணத்துப்பூச்சிகள் மிக அழகாக எதையோ நமக்கு உணர்த்தியபடியே இருக்கின்றன. ஒரு வண்ணத்துப்பூச்சி எப்போதுமே ஒரு வண்ணத்துப்பூச்சியாக பிறப்பதில்லை.

முழுக் கட்டுரையும் இங்கே வாசிக்கலாம்.....

”ஒரு வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை” கவிதை இங்கே


Read more...

Wednesday, March 27, 2024

மரங்கள், பூக்கள், தேவதைகள்

ஒளிரும் வானத்தைச்
சிறிய பெரிய
விண் சுடர்களாய்க் காட்டுகின்றன
வனப் பூங்காவின் மரங்கள்!

விண்ணில் ஒளிர்ந்தாலும்
மண்ணை வாழ்த்தவே
தரையில் வந்து
விரிந்து கிடக்கும் பூக்கள்.

தன் வேர்களையும்
இப் பேரண்டத்தின் வேர்களையும்
நன்கறிந்து கொண்ட
பெருந் தேவதைகள்!

Read more...

Monday, March 25, 2024

அவரின் புன்னகை

இயங்கும் பெருக்குமாறோடு
விளையாடின சருகுகள்
கொஞ்ச நேரம்
அவரும் அவைகளுடன்!

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP