மாற்றம்
அய்ம்பது ஆண்டுகள்தானே கழிந்திருக்கும்?
நூறு ஆண்டுகள்?
உலகம் எவ்வளவு மாறிவிட்டது!
எவர் மனமும் நோகாமலே
எதுவும் அகற்றப்படாமலே
எல்லாம் மாறிவிட்டது!
ஒரு மின்னற் பொழுதில்!
ஒரு மயிலிறகுத் தொடுகையில்!
அழகழகான
பூங்காவனங்களுக்கு நடுவே உள்ள
நூலகங்கள்தாம் இப்போது கோயில்கள்!
தொன்மையான கோயில்கள் எல்லாம்
வரலாற்றை உணர்த்தும்
அழகிய கண்காட்சி தலங்களாகவும்
குழந்தைகள் ஓடி விளையாடக்கூடிய
மண்டபங்களாகவும் மாறிவிட்டன!
அடையாளங்களற்ற மேகங்களைப்போல்
மனிதர்கள் எங்கும் மிதந்து கொண்டிருந்தனர்
கவிதையின் மதம் மட்டுமே
கோலோச்சிக் கொண்டிருந்தது காண்!
அனைத்து மனிதர்களாலும் கொண்டாடப்படுபவையே
திருவிழாக்களாயிருந்தன.
ஒரு காலத்தில்
வேறுபடுத்தும் அடையாளங்களாய் இருந்தவை எல்லாம்
அழகை விரும்புவோர் எவராலும்
மாறி மாறி அணியக் கூடிய
வண்ண ஆடைகள் போல் மட்டுமே ஆகின.
எண்ணத் தொடர்களாலும் அச்சத்தாலும்
காலம் காலமாய் வந்த நினைவுகள் எல்லாம்
நூல்களுக்குள்ளும் மின் அணுத் தகடுகளுக்குள்ளும்
வெகு நிம்மதியாய் ஓய்வு கொண்டுவிட்டன!
அறிவியல் வளர்ச்சியின் கருணையினால்
சமூக அலுவல் நேரமும்
வெகு சிறியதாய் சுருங்கிவிட்டது!
எப்போதும் காலாதீதப் பெருவெளியில் பூக்கும்
காமலர்த் தோட்டத்து
வண்ணத்துப் பூச்சிகளே ஆயினர் காண்
மனிதர்கள்!