பின்னலான விஷயங்கள்...
பின்னலான விஷயங்கள் எல்லாம் உலகில்
சிக்கலாகத்தான் இருக்க வேண்டுமா, என்ன?
பின்னிவிட்டிருந்த தனது நீள் நெடுங் கருங்கூந்தலை
முன்னெடுத்து மார்மீதுபோட்டு_ அவர்
சிரித்துக்கொண்டு நிற்பதைப் பாருங்கள்!
Poet Devadevan
பின்னலான விஷயங்கள் எல்லாம் உலகில்
சிக்கலாகத்தான் இருக்க வேண்டுமா, என்ன?
பின்னிவிட்டிருந்த தனது நீள் நெடுங் கருங்கூந்தலை
முன்னெடுத்து மார்மீதுபோட்டு_ அவர்
சிரித்துக்கொண்டு நிற்பதைப் பாருங்கள்!
அகலத் திறந்த
முதுகின் முழுநிலா
எதற்கான ஓர் உவமையுமல்ல, அல்லவா?
அழகின்மீது
அடுக்கடுக்காய் விழுந்துகொண்டேயிக்கும்
பூவிதழ்கள்போல்
மூடப்படவே முடியாததோர் அழகு!
அழிவில்லாத ஒன்றை
அறிவித்துக் கொண்டேயிருக்கும் ஒரு சொல்!
கவிதை என்பதால்
வேறு ஒரு வழியில்லாமல்
தோன்றிவிட்ட ஒரு படிமம்!
( வான்கோ பதிப்பகம் வெளியிட்ட தேவதேவனின் நிலவில் உதித்த கார்முகில் கவிதை நூலுக்கு லோகமாதேவி எழுதிய முன்னுரை)
தேவதேவன் அவர்களை 2018 ஆம் ஆண்டு காவிய முகாமில் முதன்முதலாகச் சந்தித்தேன். அமர்வுகளின் இடைவேளையில் வெயில் காய்ந்துகொண்டு பட்டுத்தலையணைகளைப் போல மலர்ந்திருந்த ஹைட்ராஞ்சியாக்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில் தேவதேவன் அருகிலிருந்த ஒரு அடர் ஊதா மலரைக்காட்டி, ‘இது எத்தனை அழகாருக்கு இல்லியா’ என்றார். அதற்கு முன்னர் அவரிடம் நான் பேசியிருக்கவில்லை.
முழுக் கட்டுரையையும் இங்கே படிக்கலாம்
கவிதை நூல் வாங்க இங்கே சொடுக்கவும்
கைகால் முளைத்த ஒன்றுபோல்
அவர் நின்றும் நடந்தும்
இவ்வுலகைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
அவர் முன்னும் பின்னும் பக்கங்களிலும்
எங்குமாய் நின்று
அவரையே பார்த்துக்கொண்டிருந்தது
பூஜ்யம்!
இடையிலிருந்து நீண்ட ஒரு கால்
நேர்கோடறிந்தது
எழுந்து அடி எடுத்து வைக்கும் போது
மின்னிய அழகை
எடுத்துரைப்பதற்கோ
உவமையேயில்லை!
கவிதையே இல்லையே இதுவரை!
நெஞ்சில்
ஒரு சின்ன பெருமிதம்!
ஆனாலும் தேவதைப் பெண் அவர்
நடக்கும் போதுதான் வெளிப்படுகிறது!
கவிதை வாசிப்பு: கவிநிலவன்
இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்
உன் அணுக்கத்தினால்
அவன் அடைந்திருந்த ஆனந்தம் பற்றி
அவன் அறிந்ததும்
துவண்டதும்
விடுதலை பெற்றதும்
உன் விலகலினால்
அவன் அடைந்த
தாளாத் துயரத்தினால் அல்லவா?
அது நீயே அல்ல
அது உன் போலி உருவம் என்பதை
அவன் கண்டபோது அடைந்த
பெருநிறையல்லவா வேண்டற்பாலது?
உன்னை அவன் கண்டுகொள்வதற்குத்தானா
இவ்வளவு காலமாயிற்று?
இனி பிரிவு என்பதே கிடையாதபடி
அவன் உன்னைக் கண்டுகொண்டபோது
இனி அடைய வேண்டியது என
என்ன இருக்கிறது சொல்?
காணும் திறனும் உணர்வுத் தீவிரமுமுள்ள எந்த மனிதனுமே இந்தப் பேராறு மானுட வரலாறாகவே தன்னை உருவகப் படுத்திக்கொண்டு வந்து நிற்பதைப் புரிந்துகொள்வான். காலம் காலமாகவே மாறுதலின்றி அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கும் பிணங்கள்தாமா நாம்? அல்லது அனைத்தையும் வெளியே நின்றபடி காணவும், சிந்திக்கவும், உணரவும் தெரிந்த இந்த கரையோர மரங்களா? இந்தப் பார்வையிலிருந்து இன்று முதல் தொடங்கப் போகிறோம்.
இயற்கையாகட்டும், ஒசத்தி, தாழ்த்தி, போட்டி, பொறாமை, பேராசை, புகழ், செல்வாக்கு, மேலாண்மை என போரிலும் துயரிலும் வதையுண்டு கிடக்கும் மனித சமுதாயமாகட்டும், அவர்களின் அரசியலாகட்டும் அங்கே உழன்று கொண்டே அவர்களைப் பற்றிக் கதறுவதல்ல கவிதையினுடைய செயல். கவிதைக்கு இவற்றைவிட மேலானதொரு பணி உண்டு, அதைத்தான் நாம் இங்கே பார்க்கப் போகிறோம். அதுதான் கவிதையின் மதம். அதுவே மெய்மதம். நித்தியத்திலிருந்து சுழலும் வாள் அது. அதன் பார்வையில், சுழற்சியில், மாண்டு உதிப்பதுதான் கடவுளின் ராஜ்ஜியம். மகத்தானவைகள் என்று சொல்லப்பட்டு இழிந்து கிடப்பவற்றையெல்லாம் அழித்தே அந்த மாண்பினைப் படைத்துக்கொண்டேயிருக்கும் புத்தொளி, ஞானம்.
காலமற்ற தருணங்களிலெல்லாம் தனிப்பெருங்கருணையால் நமக்குக் காட்சிதரும் பொறிகளையும், மின்னல்களையும் பற்றி நிறுத்திச் சுடராக்கி, நாம் படைத்துவிடப் பார்க்கும் ஒளி உலகம்!
நூறு கவிதைகளடங்கிய இச் சிறுநூல் ”பேராற்றங்கரை மரங்கள்”, ”மற்றுளது” என்ற ஐம்பது ஐம்பது கவிதைகளாலான இரண்டு தொகுப்புகள் இணைந்தது. தொடர்ந்து இதுபோலும் ஏறத்தாழ இருபது தொகுப்புகள் வெளிவரலாம். ஆர்வமுடன் இதனைச் செயலாக்க முன்வந்திருக்கும் எழுத்து பதிப்பகத்து அன்பர்களுக்கும், தட்டச்சு செய்து உதவிக் கொண்டிருக்கும் நண்பர்கள் சுடலைமுத்து, நவீன் ஆகியோருக்கும் எனது அன்பும் நன்றியும். இந்நூலை எனது இனிய அன்பர் ஈரோடு பாரிக்கு சமர்ப்பிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
-தேவதேவன்
கவிதை நூல் வாங்க இங்கே சொடுக்கவும்
கவிஞர் தேவதேவனின் புதிய கவிதைத் தொகுப்பு “பேராற்றங்கரை மரங்கள்”, எழுத்து பிரசுரம் பதிப்பகத்தால் செப்டம்பர் 2026ல் வெளியிடப்பட்டுள்ளது. கவிதை நூலைப் பெற பதிப்பகத்தை அல்லது கவிஞரைத் தொடர்பு கொள்ளலாம்
© Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008
Back to TOP