Wednesday, March 4, 2026

பொம்மைகளின் விழிகளில்…

விதவிதமான பொம்மைகளால்
அறையை நிறைத்துவிட்டார் சுநேகா.
“ஏன்ம்மா இப்படி?
நீ இன்னும் வளரவேயில்லை சுநேகா”
என்றார் அவள் கணவரும்.

ஒருநாள் அவன் கண்டு கொண்டான்
பொம்மைகளின் விழிகளிலுள்ள
பேரின்மையே
குழந்தைகளின் விழிகளிலும் ஒளிர்வதை!

மேலும்
அவர்கள் வளர்வதில்லை!
அவர்களின் நிரந்தரத்தன்மைக்கு
நிகரே இல்லை!

அவர்கள் மரிப்பதேயில்லை!
கவனியுங்கள்
ஏன் எப்படி என்று
கேட்கவேமாட்டீர்கள்!

அவர்களுக்கு உயிர் இல்லை என்றால் என்ன
உயிருள்ள மனிதர்கள்தாம்
என்ன சாதித்துவிட்டார்கள் இந்த உலகில்?
சுநேகாவிடமோ குழந்தைகளிடமோ
இதைச் சொல்லிவிடாதீர்கள்
உங்களைக் கொன்றுவிடுவார்கள்!

அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்
என்பதுதானே முக்கியம்?
சொல்லி முடித்தவுடன்
நாமும் கேட்டுக் கொண்டவுடன்
அவர்களும் அங்கிருந்து
போய்விடுவார்கள்தானே?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP