மானுடத் துயர்
கவிதை வாசிப்பு: கவிநிலவன்
இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்
Poet Devadevan
கவிதை வாசிப்பு: கவிநிலவன்
இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்
உன் அணுக்கத்தினால்
அவன் அடைந்திருந்த ஆனந்தம் பற்றி
அவன் அறிந்ததும்
துவண்டதும்
விடுதலை பெற்றதும்
உன் விலகலினால்
அவன் அடைந்த
தாளாத் துயரத்தினால் அல்லவா?
அது நீயே அல்ல
அது உன் போலி உருவம் என்பதை
அவன் கண்டபோது அடைந்த
பெருநிறையல்லவா வேண்டற்பாலது?
உன்னை அவன் கண்டுகொள்வதற்குத்தானா
இவ்வளவு காலமாயிற்று?
இனி பிரிவு என்பதே கிடையாதபடி
அவன் உன்னைக் கண்டுகொண்டபோது
இனி அடைய வேண்டியது என
என்ன இருக்கிறது சொல்?
காணும் திறனும் உணர்வுத் தீவிரமுமுள்ள எந்த மனிதனுமே இந்தப் பேராறு மானுட வரலாறாகவே தன்னை உருவகப் படுத்திக்கொண்டு வந்து நிற்பதைப் புரிந்துகொள்வான். காலம் காலமாகவே மாறுதலின்றி அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கும் பிணங்கள்தாமா நாம்? அல்லது அனைத்தையும் வெளியே நின்றபடி காணவும், சிந்திக்கவும், உணரவும் தெரிந்த இந்த கரையோர மரங்களா? இந்தப் பார்வையிலிருந்து இன்று முதல் தொடங்கப் போகிறோம்.
இயற்கையாகட்டும், ஒசத்தி, தாழ்த்தி, போட்டி, பொறாமை, பேராசை, புகழ், செல்வாக்கு, மேலாண்மை என போரிலும் துயரிலும் வதையுண்டு கிடக்கும் மனித சமுதாயமாகட்டும், அவர்களின் அரசியலாகட்டும் அங்கே உழன்று கொண்டே அவர்களைப் பற்றிக் கதறுவதல்ல கவிதையினுடைய செயல். கவிதைக்கு இவற்றைவிட மேலானதொரு பணி உண்டு, அதைத்தான் நாம் இங்கே பார்க்கப் போகிறோம். அதுதான் கவிதையின் மதம். அதுவே மெய்மதம். நித்தியத்திலிருந்து சுழலும் வாள் அது. அதன் பார்வையில், சுழற்சியில், மாண்டு உதிப்பதுதான் கடவுளின் ராஜ்ஜியம். மகத்தானவைகள் என்று சொல்லப்பட்டு இழிந்து கிடப்பவற்றையெல்லாம் அழித்தே அந்த மாண்பினைப் படைத்துக்கொண்டேயிருக்கும் புத்தொளி, ஞானம்.
காலமற்ற தருணங்களிலெல்லாம் தனிப்பெருங்கருணையால் நமக்குக் காட்சிதரும் பொறிகளையும், மின்னல்களையும் பற்றி நிறுத்திச் சுடராக்கி, நாம் படைத்துவிடப் பார்க்கும் ஒளி உலகம்!
நூறு கவிதைகளடங்கிய இச் சிறுநூல் ”பேராற்றங்கரை மரங்கள்”, ”மற்றுளது” என்ற ஐம்பது ஐம்பது கவிதைகளாலான இரண்டு தொகுப்புகள் இணைந்தது. தொடர்ந்து இதுபோலும் ஏறத்தாழ இருபது தொகுப்புகள் வெளிவரலாம். ஆர்வமுடன் இதனைச் செயலாக்க முன்வந்திருக்கும் எழுத்து பதிப்பகத்து அன்பர்களுக்கும், தட்டச்சு செய்து உதவிக் கொண்டிருக்கும் நண்பர்கள் சுடலைமுத்து, நவீன் ஆகியோருக்கும் எனது அன்பும் நன்றியும். இந்நூலை எனது இனிய அன்பர் ஈரோடு பாரிக்கு சமர்ப்பிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
-தேவதேவன்
கவிதை நூல் வாங்க இங்கே சொடுக்கவும்
கவிஞர் தேவதேவனின் புதிய கவிதைத் தொகுப்பு “பேராற்றங்கரை மரங்கள்”, எழுத்து பிரசுரம் பதிப்பகத்தால் செப்டம்பர் 2026ல் வெளியிடப்பட்டுள்ளது. கவிதை நூலைப் பெற பதிப்பகத்தை அல்லது கவிஞரைத் தொடர்பு கொள்ளலாம்
மானுடத் துயரத்தைத்தான்
நீள்நெடுங்கருங்கூந்தலாய்
நீ வரித்து விரித்து நடந்த காலம்முதலாய்
இந்த ஆழியும்
கூப்பாடு போடத் தொடங்கியது காண்!
கடுந்துயர்க் கூந்தலைக்
கார்மேகமாய் மாற்றும் வேலையைக்
கதிரோனிடம் ஒப்படைத்த பின்தானே
ஆழியின் கூப்பாட்டொலியும் அடங்கி
பொங்கிப் பொங்கிக் களிக்கும் தேனமுதப்
பாட்டொலியாய் மாறியது?
காயும் வெயிலில்
தான் இளைப்பாறுவதற்கான
நிழலை
தானே படைத்துக் கொண்டு நிற்கின்றன
மரங்கள்!
விதைத்துப்
பரவுவதற்காக மட்டும்தானென்றால்
இத்தனைப் பூக்கள்
பூக்க வேண்டுமா இந்த மரம்?
உருவமில்லாத முழுமையும்
பெயர் கொடுக்கப்படும் போதுதானே
துண்டுகளாக மாறிவிடுகிறது?
துண்டுகள், ஆபத்தான துண்டுகள்
எனப் புரிந்து கொள்ளப்படும் போதுதானே
முழுமைக்கே திரும்பிவிடுகிறது?
இமைப் பொழுதில் மாறிவிடும் இவற்றை
இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தால்?
மொத்த முழுமைக்கும் உருவமில்லை
துண்டுப் பகுதிகளுக்குத்தான் உருவமுண்டு
முழுமையில் எல்லாப் பகுதிகளும் இருக்கின்றன
ஆனால் துண்டுப் பகுதிகள் எதிலும்
முழுமை இல்லை. அதனால்தானே
அவற்றிற்குத் துண்டுகள் என்றே பெயர்?
முழுமையில் வாழாமல்
துண்டுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் வரை
உய்வில்லை இந்த உலகிற்கு,
மேலும் இந்த உலகத் துயர்களுக்கெல்லாம்
காரணம் இவன்தான் அல்லவா?
கிடைக்கப் பெற்று
நம்மால் உண்டு செரிக்கும் போதெல்லாம் மட்டுமே
உயிர் பெற்று வாழும் ஆற்றல்கள் எவை
அவற்றையெல்லாம் பற்றிக் கொள்ளுங்கள்!
கடவுளுக்கு உருவமில்லை
ஆனால், செயல் எனும்
உருவத்தில்தான் அவரைக் காணமுடியும்!
ஆனாலும் நிச்சயமாக அது
நாம் படைத்த உருவத்திலில்லை.
நம்மால் படைக்கப்படாத
அந்த உருவத்திலும்கூட
அவர் மாறிக் கொண்டேயிருப்பதால்
அவரைப் பற்றுதல் என்பதே
புதுமாதிரியானதாக இருக்கிறது
பகலுக்கு பரிதிபோல
இரவுக்கு வேண்டியிருக்கிறது
பிணச் சிதை நெருப்பு
நெய்யில் எரியும் சுடர்
மின்விளக்கு என
ஏதாவது ஒன்றா,
சுட்டும் விழிச்சுடர் போலும்
வான்மீன்கள் கோடி அல்லவா?
அதன் கீழ்தானே இருக்கிறது
மெய்வழிச் சாலை?
இந்த இருண்ட காட்டிடையே
பார்வையினின்றே பிறக்கும் பாதையாய்!
ஓடும் நதி
தன் உள்ளத்து மீன்கள் மூலமே
அறிந்து கொள்கிறது,
அனைத்து திசைகளையும்!
திசைகளற்ற பெருவெளியையும்!
தான் வாழும் இடத்தையும்!
தன்னையும்!
தான் அல்லாததை
அறிய முற்படும்போதுதானே
தன்னையும் இழந்து
காணும் கண்களேயாகிவிட்டது?
முத்துப் பற்கள் ஒளிர
இடையறாது ஒலிக்கும் புன்னகையாய்
கடல் அலைகள்!
கரை மணல் மடிமீது அமர்த்தி
தழுவி வருடி சீராட்டிக் கொண்டு
நீலவானையும்
நிலாவையும்
நட்சத்திரங்களையும்
எல்லையற்ற அமைதியையும்
காட்டுகிறாய் உன் மக்களுக்கு!
அவர்களோ
வேறெங்கெங்கெல்லாமோ அல்லவா
சுற்றித் திரிந்து கொண்டு
போரிலும் துயரிலுமாய் உழல்கிறார்கள்?
விண்ணின் சிரிப்போ
மரங்களின் சிரிப்போ
பூத்து பூத்து உதிர்ந்து உதிர்ந்து
பூத்துக் கொண்டேயிருக்கும்
ஒளிமலர்களோ?
ஒளியும் நிழலும்
ஓடிப் பிடித்து விளையாடும்
கண்ணாம்பூச்சி ஆட்டமோ
அசையும் மரக்கிளைகளின்
ஒளிநிழல் ஆட்டம்?
வானம் விண்மீன்களால்
பூமி தண் வண்ணமலர்களால்
கடல் தன் வெண்நுரை அலைகளால்
மனிதர்கள் தங்கள் பேரன்பால்
எப்போதும்
பூத்துப் பூத்துச் சொரிகிறார்கள்தானே
கவிதையின் மதம் உலாவும்
கடவுளின் ராஜ்ஜியத்தில்!
பிரிவு என்பதே நம்மிடம் ஏது
எட்ட நிற்கையில்தானே
தகித்தபடி வளர்கிறோம்
கிட்ட நெருங்குகையில்தானே
குளிர்ந்தபடி அணைத்துக் கொள்கிறோம்
வான்வெளியின்
பொன் இன்மையினை மேயும்
வெண்மேகங்களன்றோ
கார்மேகங்களைப் பொழிகின்றன?
வழிமறிக்கப்பட்ட ஆசைகள்தாமோ
வழியெல்லாம் பேரன்பாய்
பூத்து பூத்து நிற்கின்றன!
கவிஞர் தேவதேவனின் “இசைக்குறிப்புகள்” என்ற கவிதைத் தொகுப்பு, வேரல் புக்ஸ் பதிப்பகத்தால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
யார் காண்பதற்காகப் பூத்திருக்கிறது
இந்தத் தாமரை மலர்?
தன்னைப் பூப்பித்த
கதிரவன் காண்பதற்காகவா
கதிரவனைக் காண்பதற்காகவா
இந்த மானுடக் கேள்விகளுக்கெல்லாம்
அப்பாலுள்ளதோ காதல்?
இந்த நீர்த் தாவர மலர்
தன் வண்ணங்களையெல்லாம்
அழித்துவிட்டு வந்து நிற்கிறதா?
தன் வண்ணங்களையெல்லாம்
ஒவ்வொன்றாய்
எடுத்து எடுத்து காட்ட வந்திருக்கிறதா?
தனக்கும் காலமும் இடமும் உண்டெனினும்
முன்னறிவுகள் ஏதுமின்றே பூத்திருக்கும்
இந்த ஒளி மலரில்தானே
அன்னையே நீ வந்து
அமர்ந்திருப்பதைக் காண்கிறேன்?
எப்போதுமே
காற்றில்
மயங்கி கிறங்கிக்
களிநடம் புரிந்து கொண்டிருக்கும்
கிளைகள்.
எப்போதாவதுதான்
காற்றையும்
காற்றின் செல்திசையையும்
சுட்டி ஏமாறுகின்றன
இல்லை
ஏமாறுவதுபோல் நடிக்கின்றன!
பாத்திரத்தில்
வண்டலாயிருந்த அடித் தண்ணீரை
செடிகள் மீது கொட்டினான்
இலைகளில் தண்ணீர்
துளிகளாகவே படிந்ததேன்?
ஆறு, ஏரி, வாய்க்கால், குளம், குட்டை என
பெய்யும் மழையும் அமைதியான வேளை
இலைகளிலும் கம்பிகளிலும்
துளிகளாய் அமைந்தே நம் விழிகளை ஈர்ப்பதேன்?
பறவை
சொல்லித் தீராத ஒன்றையா
காற்றில் அலைக்கழிந்து
பூமியை வந்தடைந்து
சொல்லப் பார்க்கிறது
சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று?
தான் கடந்து போக முடியாத
ஒரு இடம் இந்த வானம்தான்
என்பதை நன்கு அறிந்து கொண்டது
இந்த பறவை!
போட்டி அல்ல
இனி தேவையானது
நட்புதான் என்பதையும்
பரிதியும் நிலாவும் விண்மீன்களும்
மேகங்களும் மலைகளும்
வான் உயர் மரங்களும்
புல்களும் கூட
இந்த வானத்தின் பிள்ளைகள்தாம்
என்பதையும்!
ஒரு காலத்தில்
கவிஞன் என அழைக்கப்பட்ட அந்த மனிதன்
அந்த வீட்டிலிருந்தும் வெளியேறிவிட்டான்!
அவன் தொட்ட இடமெல்லாம்
மய்யங்களும் எல்லைகளுமில்லாத
பெருங்களம்! சுதந்திர வெளி!
உண்மையும் அழகும் அன்பும்
வற்றாது பெருகிக் கொண்டிருக்கும் ஊற்று!
ஒழுங்கின்மைகளையெல்லாம்
விலக்கிக் கொண்டே முன் வந்து கொண்டிருக்கும்
ஒழுங்கின் பொன் வெளி!
கவிதையின் மதம் உலாவும் கடவுளின் ராஜ்ஜியம்!
அங்கேயும் அவன் இல்லை
இருப்பது
ஒரு பேரரசு மட்டுமே!
கடவுளின் சொந்த ராஜ்ஜியமான
வெயில் மலர்க் குளிர்தலத்து
பெங்களூருவாசி அவன்
தூத்துக்குடி நண்பகல் தகிக்கும் வெயிலில்
மாறாத குளிர்மை எப்படி?
ஒரு நண்பனுடனல்லவா
நடந்து சென்று கொண்டிருக்கிறான்?
முட்டையிடுவதற்கும்
குஞ்சு பொரிப்பதற்கும்
துயில்வதற்குமான கூட்டை
வீடு என்பார்களா?
பாதையற்ற வெளிதானே
பறவைகளின் வீடு?
அது யாரு, பறவை என்பது?
விடுதலை என்பதுதானே
பறவை என்றானது?
ஒவ்வொரு விலங்குகளும் உயிர்களும்
அதனதன் குணங்கள்தாமே?
மனிதன் என்பவன் பற்றி
நாம் அறிந்து கொள்ள முடியாதா என்ன?
கடவுள்தான் மனிதன் ஆனது, சரி,
பாதைகளில் தொலைந்தமைதானே
இந்த பரிதாப நிலைகள்?
அழைப்பிற்கு இணங்கும்
அவனது அன்பு வருடலாலே
மடிந்து உதிர்ந்து உதிர்ந்து விழுகின்றன
உதிரம் குடிக்கவந்த கொசுக்கள் சில
உதிர்மலர்களைப் போல!
“நீங்கள் குழந்தைகளாகாதவரை
கடவுளின் ராஜ்ஜியத்தை அடைய முடியாது!”
உண்மை கண்டீர்!
எந்த ஒலி கேட்டாலும்
திரும்பிப் பார்த்த குழந்தை-
அதற்கு நாம் ஒரு பெயர் சூட்டிய முதல்தானா
அது தன் குழந்தைமையிலிருந்தும் விலகி
பிரச்னைகள் ஆரம்பித்துவிட்டன?
என்றால் இந்தப் பெயர்கள்
எதைச் சுட்டுகின்றன
எங்கு செல்கின்றன
என்பதையும்,
பெயரற்ற பெருநிலையையும்
குழந்தைமையையும்
கடவுளின் ராஜ்ஜியத்தையும்
நாம் கண்டு கொண்டிருக்க வேண்டுமல்லவா?
தன்னைத் தானே
சுற்றி வருகிறது
நித்திய வனத்தின்
வெள்ளிமலைப் பாதை
எங்கும் போகாமல்
எங்கும் போகாமலுமில்லாமல் !
ஓடைநீர் ஒழுகிச் செல்லும்
ஓசைமட்டுமே கேட்கிறதென்றால்
இந்தப் பேரியற்கையும் பேரண்டமுமே
கேட்டுக்கொண்டிருக்கிறது
என்றுதானே பொருள்?
கட்டுடல் அழகு காணுமிடமெல்லாம்
ஆவியோடணைத்துக்
கட்டிப்பிடித்துக் கொள்ளத் தோன்றும்
தன் அன்பையும் தோழமையையும்
ஒரு கணமும் தவற விடாமலும்
தேங்கிவிடாமலும்தானே
சென்றுகொண்டேயிருக்கிறது
காற்று?
அந்த அமைதியை
டிப் டிப் என்று
ஒரு ஒலியினால் தானே
சொல்ல முடிகிறது
என்றது அணில்!
அதே அமைதியைத்தானே
'ப்ளம் கேக்' என
ஒரு பொருளின் பெயருமே
ஒலித்தது இப்போதும்!
இனி எல்லாப் பொருள்களுமே
இந்த உலகில்
இந்த அமைதியைத்தானே
ஒலிக்கப் போகின்றன!
மேட்டு நிலமானாலும் சரி
மேலேறும் பாதையானாலும் சரி
வானத்தைக் காட்டிவிட்டு எப்போதும்
பூமிக்கே இறங்கிவிடுகிறது 'அது'!
ஒளியில் கண் சிமிட்டிக்கொண்டு
ஓடும் இந்த நதி
எங்கு தோன்றினோம்
எங்கு போய்க்கொண்டிருக்கிறோம்
என்பதே தெரியாது
யோசிக்கிறதுமில்லை
தன் வாழ்வுப் பயணத்தில்
பாறைகள் பசுந்தாவரங்கள் என
வந்தவர்களோடெல்லாம்
கொண்ட உறவினையும்
இதன் இனிமையையும் தவிர
வேறெதுவுமே அறியாது
அப்படி ஒரு வெகுளி!
உலுக்கி குலுக்கி
சிதறி உருளச் செய்துவிட்டிருக்கிற
ஆற்றல்
இந்த ஒவ்வொரு பாறைகளிடமும்
குண்டுக் கற்களிடமும் பருமணல்களிடமும்
தூசுகளிடமும்கூட
மழையின் செய்தியாய்
வானத் துண்டுகள் போல்
மழைத் திட்டுகள்!
விண்ணினின்று இறங்கிய பேரன்பாய்..
மலைகளையும் பள்ளத்தாக்குகளையும்
வளைத்துத் தழுவிக் கொண்டிருந்தது மஞ்சு
மனித நெருக்கடிகளே இல்லாத வெளியில்
ஒரு மனிதன் ஒரு மனிதன்மீதுதான்
எத்துணை பரிவு கொண்டவனாகிவிடுகிறான்!
எதிரே வந்துகொண்டிருக்கும் இருவர்
எத்துணை வறுமையும் கொந்தளிப்புமாய்
இருந்தாலுமென்ன,
இந்த நேரம் இந்த வெளியில்
பேரன்னையின் அரவணைப்பில் துவளும்
பிள்ளைகளைப் போலல்லவா
காணப்படுகிறார்கள்?
நில்! என்று சொல்லி அவனை
நிற்கவைத்துவிட்டது யார்?
ஒரு மரம்
கொழித்துக் குலுங்கும்
ஆயிரம் ஆயிரம் மலர்களோடு ?
ஒரு மரத்தைக்கூட காணமுடியாத
அன்பில்லாத
இந்த உலகைவிட்டு
திரும்பு திரும்பு
இங்கே திரும்பி நட! என
தன்னை நோக்கி அழைக்கவந்த
அந்த மரம்தானா அது?
தேநீரில்
சற்று சூட்டை இறக்கி
குளிர்மை சேர்ப்பதற்காக
குவளையை மெலிதாய்
சுழற்றினான்.
கைவிரல்கள், குவளை,
குவளைத் தேநீர்,
தேநீரை பருகிக்கொண்டிருந்த ஒளி _
யாவுமல்லவா இணைந்து நடனமாடியது!
உலகமே விழிகள் திருப்பி வியந்து நிற்க
நிகழ்ந்து கொண்டிருந்ததுதான்
எத்துணை பெரிய அற்புதம்!
தண்ணீர் குடிக்க என
எழுந்தாலே போதும்
தம்ளரில் விழுகையில்
தன் வெண்இன்மைகளை அல்லவா
நுரைத்து பூத்து சிரித்துக்கொண்டாடியபடி அல்லவா
ஆட்டம்போடுகிறது தண்ணீர் !
இப்போது
சர்க்கரை இல்லாத
பால் இல்லாத
அரை தம்ளர்
கரிய தேநீரைச் சூடாற்றுகையில்
அதேபோலவே ஒரு வெண்இன்மை -
நுரைத்து பூத்து சிரித்துகொண்டாடுகிறது;
புதிதாக
சூடு பரக்கும் ஆவி
திசைநோக்கி வீசாதபடிக்கு
அமைந்த காற்றாதலால்
சுழன்று சுழன்று
பேரின்ப நடனமல்லவா ஆடுகிறது!
உடல் உறுப்பு ஒன்றின்
தசைநார்ப்பிசகு வலிபோக்க வந்த
நிபுணரான அந்தப் பெண்ணுக்கு
மாறா இளமை ஒன்று மிளிரும் மாய அழகு!
மானுட அழகின் பொதுமொழி பேசும் கண்கள்!
சிகிச்சை பயிற்சிக்கு இடையே இடையே
நடந்த உரையாடலில்
பெருநகர்களுக்கே உரிய
உலகின் வேறு வேறு தலங்கள்
வேறு வேறு மொழிகள்
வேறு வேறு இனங்களையெல்லாம் கடந்த
புத்தம் புதியதொரு செய்தியாக
தான் ஒரு குழந்தைப்பேறு மருத்துவரும்கூட
என்றார் அவர்
அவர் பெயர் 'இலக்கியா' எனும்
பொருள்தரும் சமஸ்கிருதச் சொல்.
அவரது பொழுதுபோக்காய்:
கால்பந்து மற்றும் கதக் நடனம்.
அம்மா பரதநாட்டியர்,
அப்பாவும் கவிதைநேசர்
இலக்கியா எனும் பெயருடன்
மகளுக்கு இசையையும் நாட்டியத்தையும்
கற்றுக்கொடுத்தவர்.
உலகைக் கொடூரமாய்ப் பாழ்படுத்திக்கிடக்கும்
சாதி மத இன பிரிவுகளையெல்லாம் தடுத்து
உலகை இணைத்துவிடுவதற்கான
அடையாளமாய்
கலையும் இலக்கியமும் மருத்துவமுமாய்
அந்த பெண்மணி_
மானுட அழகின் பொதுமொழி பேசும்
கண்களுடன்!
துவாரமுள்ள ஒரு மூக்குமடலில்
சொருகுவதற்கான ஊசியுடன்,
கட்புலனாகா
பொன்னில் பொதிந்த
புள்ளி வைரக்கல்லாய்,
ஆயிரம் மண்துகள்களுக்கு நடுவே
வழியில் அவன் கண்களைப் பறித்துவிட்ட
ஒரு மூக்குத்தி!
ஒவ்வொரு மண்துகள்களையும்
ஒளிரவைக்கப் பார்க்கும் பேரொளி!
எப்போதும் அவன் உயிரை
வாட்டி வதைத்துக் கொண்டிருந்த
பெருவெள்ளத் துளியும்
விலைமதிக்க முடியாததும்
ஆசைகளாலன்றி
பேராற்றற் பெருங்கடலில் விளைந்த
முத்துச் சன்னம்!
வெயில் தாளாது ஓடிச்சென்ற சாலை
பெருமூச்செறிந்து நின்றது ஒரு மரநிழலில்
வரிசை மரங்கினூடே அச்சாலை
மெதுவாய் நகர்ந்துகொண்டிந்தது
நானோ,
மெதுவாய் நடத்தலையும், போகுமிடத்தையும் மறந்து
திகைத்து நின்றுவிட்டேன்.
மனிதர்களுக்கு இடைஞ்சலிக்காது
சாலையோரங்களில் மரங்களின் ஊர்வலம்
கானகத்தில் மரங்களின் மாநாடு
மரங்களின் ஒரே கோஷம்:
”மழை வேண்டும்!”
மழை வேண்டி வேண்டி
வானத்தைப் பிராண்டின கிளைகள்
நீர் வேண்டி வேண்டி
பூமியைப் பிராண்டின வேர்கள்
வெள்ளமாய்ப் பெய்த மழையில்
மரங்களும் சாலையும் நானும்
நனைந்தோம்
முளைவிடும் விதைமீது கிழிந்தது அதன் மேல்தோல்
நனைந்து பிய்ந்து போயிற்று எனது கால் செருப்பு
சாலைகள்
எங்கும் தங்குவதில்லை!
சாலையோர மரங்கள்
பயணம் செய்வதேயில்லை!
சாலையும்
சாலையோர மரங்களும் போன்ற
புரிதல்மிக்க நண்பர்கள்
உலகில் யாருமில்லை
கண் கொள்ளாக் காட்சியாய்
தட்டுநீரில் நடந்து செல்லும்
கொக்கும் கொக்கின் பிம்பமும்!
தடாகத்தில் நீந்தும்
வாத்தும் அதன் பிம்பமும்!
நமது உருவிற்கும் பிம்பத்திற்கும்
இடையேயன்றோ இருக்கிறது
நாம் கண்டுகொள்ள வேண்டிய காட்சி?
நீரில் தெரியும் நெற்கதிர்கள்
சொர்க்கத்தின் விளைச்சல்கள்
நாம் அதனை
நேரடியாய் அறுக்க முடியாது
நினைவிருக்கிறதா
காதல்தான் மலர்களானது என்பதை
நாம் முதன் முதலாக கண்ட பொழுது?
காதலையும் கருணையையும் இழந்த
காமமும் வெறுப்பும் துயரமும்தான்
மனிதர்களானது என்பதை
நாம் முதன் முதலாக கண்ட பொழுது?
இயற்கை வேளாண்மையில்
கொழித்த தக்காளிப் பழம் அல்லவா
சிக்கென்ற இனிப்பும் உறைப்பும் வண்ணமும்
அழுத்தமாய்க் கூடிய அற்புதச் சுவையுடன்
இருந்தது…
உடன் வந்து கொண்டிருந்த
அழகியும் அன்பியுமானவரிடம்
“இதழ்ச் சுவை போல” என்று
வாய்க்கு வந்த சொல்லைச் சொல்ல
அச்சமாக இருந்தது…
அதனாலேயும்தானே அது
கூடுதலான சுவையுடன் இருந்தது?
ஒளிரும் மின் விளக்குகளுடன்
வானத்தின் கீழிருந்த மைதானம் போலிருந்தது
அந்த ஆடைக் கடையின் சிறப்புக்கூறு, கவர்ச்சி!
வணிகமே நோக்கமாயிருந்ததால்
அதைப் படைத்தவனாலும் சரி
அதனால் ஈர்க்கப்பட்டு வந்து உலாவும்
மனிதர்களாலும் சரி
கண்டு கொள்ளப்படாத
அனாதையாகவே இருந்தது
அங்கே அந்த படைப்பின் விக்கிரகம் அளித்த
பேருணர்வு!
”வயதாலும் அறிவாலும் செல்வத்தாலும்
சாதியாலும்
நான் எத்துணை பெரியவன் தெரியுமா?”
என்றுதானா
ஏழைகளை நோக்கி
ஊனக் கைத்தடி கொண்டு
ஓர் அறிவு கெட்ட ஜென்மம்_
எத்துணை கம்பீரமும்
கர்வமும் காட்டுகிறது பாருங்கள்!
இருந்த இடத்தில் இருந்தபடியே
ட்ரெட்மில்லில் ஓடவிட்டு
அவன் இதயத்தைப் பரிசீலிக்கிறார்
டாக்டர்.
நடைக்கும் அப்பாலுள்ள
சொற்சமாச்சாரங்கள் எதுவுமே
காரியத்திற்கு உதவவில்லை மற்றும்
ஆபத்துகளின் ஊற்றாயிருப்பதும் என்பதுதானே
நாம் கண்டதும் காணாததுமான உண்மை?
பதினொன்றாம் மாடியில்தான்
அவன் ஓய்வும் துயிலும்.
கீழே புல்வெளியும் மரங்களும் செழித்த
உபவனத்தில்தான் அவன் நடை.
திடீர் திடீரென
குழந்தைகளின் விளையாட்டுச் சதுக்கத்திலிருந்து
வானமும் பூமியும்
கூடிவிட்டாற்போல்
கோடானு கோடி சமிக்ஞைகளுடன்
விரிந்து பூத்து உதிரும் ஒரு
பேரொலிமலர்!
விண்ணிலிருந்தும்
மனிதனின் மய்யத்தைத் தொட்டு
மய்யத்திலிருந்தும்
சிக்கிக் கொண்டதிலிருந்து
பாய்ந்து
பூமியைத் தொட்டு நிற்கும்
கதிர்!
முதல் சொல்லாகவும்
எழுத்தாகவும்
எண்ணாகவும்
விண்ணிலிருந்து
மண்ணில் வந்து
ஊன்றி நிற்கும்
நான்!
காற்று தழுவிச் செல்லாத
உடம்பின் ஒரு பகுதியில்
நீங்காத புழுக்கம்!
காரணமான ஆடைதான்
தனை உணர்ந்து ஒற்றி
ஆறுதலளிக்கிறது அதை!
வியர்த்துக் கசியும் உடலை
ஆற்றட்டும் என
சட்டையைக் கழற்றி
நாற்காலியின் முதுகில் போட்டான்!
அவன் பெண்ணானதால் போடமுடியவில்லை
ஆணானதால் போட்டான்
மனிதன் ஒருபாலுயிரியாயிருந்தால்
இந்த பிரச்னை உண்டுமா, சொல்லுங்கள்?
பூமியின் தாகவிடாயினால்தானே
மழை பொழிகிறது பூமியின் மீது!
அறத்தின் தாகவிடாய் கொண்டுதானே
காலமற்ற பொழுதுகளில்
கருணையின் அவ்வப்போது
பெய்யும் பெருமழையும்
பொழிகிறது அறத்தின் மீது?
போதாத அதிருப்திக் கனலால்தானே
ஒரு மரத்தைக்கூடக் காணமுடியாத
பாலைவனமாகிக் கிடக்கிறது உலகம்?
காலம் காலமாய்
எரிந்து கொண்டிருக்கும் பாலைவனம்
எதிர் நோக்கிக் கொண்டிருக்கும் பெருமழை
- நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள் -
ஒட்டுமொத்தமான
தாகவிடாய் பெருகினால் மட்டுமே
பொழியும் காண்!
எல்லைக்குள் வசிப்பவர்களா
எல்லையோரம் வசிப்பவர்களா
எல்லைமீறலில் வசிப்பவர்களா
எல்லையில்லா வெளியில்
எல்லையையும்
எல்லையின்மையையும்
அறியும் வெளியில் வசிப்பவர்களா
யார் நீங்கள் என்று ஒருவர் கேட்டால்
நாம் யார் என்று சொல்லப் போகிறோம்?
அலம்புவதுபோல்
அவன் தலையைக்
கோதிச் செல்கிறார் செவிலி
கவலைப்படாதீர்கள்
எல்லாம் சரியாகிவிடும் என்றபடி,
எல்லாப் பிரச்னைகளும்
அங்கே-
நம் மண்டையில்தான் இருப்பதுபோல்!
தன் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டதால்
இருந்த இடத்தில் இருந்தபடியே
நடந்து கொண்டேயிருக்கிறது
இதயம்.
மூடிய பனித்திரை விலக்கி
தான் படைத்த உலகின்
குன்றாத பேரெழிலை
எட்டிப் பார்க்கிறான் சூரியன்!
நாம் படைத்த உலகைப் பற்றி
அவனுக்கென்ன கவலை?
ஓ, சூர்ய
நீ மலர்விக்கும் இப் பூமிப் பூவில்
நான் ஒரு இதழ், அப்படித்தானே?
என்ன வியப்பு இது, நீயே
எனக்கு உள்ளும் புறமுமாய்
திகழ்ந்து கொண்டிருப்பது?
நாம் யார் சூர்யா?
இப் பேரண்டத்திற்கும் வெளியேயிருக்கும்
பேரின்மைதான் கடவுள் எனில்
அவரும் நமக்கு உள்ளேயும் வெளியேயும்
இருப்பவர்தானே?
கடவுள் என்பதும்
பேரின்மை என்பதும்
தன்மய்யமற்றதாலே முடிவிலியும்
முடிவிலியானதாலே தன்மய்யமற்றதும்,
அல்லவா?
இம் முடிவிலியே
எல்லாப் படைப்புகளுக்கும் ஆதாரமாய்
தாய்பிள்ளை சுழற்சியில் இயங்குவதை
நான் என் கண்ணாலே பார்த்திருக்கிறேன், சூர்யா!
மனிதர்களும் தாம் படைக்கவேண்டிய
மானுட வாழ்வுக்கான முன்மாதிரியும்
இதுவாகவே இருக்க வேண்டும்.
இப் பேரண்டத்தின் மதம் இது
இல்லையா, சூர்யா?
உப்பிய வயிற்றை
ஒரு உள்ளங்கையால் தொட்டபடி
தன் உள்ளிருப்பை உணரும்
பெண் விழிகளைப் பார்த்திருக்கிறீர்களா?
இந்தக் குழந்தை-
(இதுபோல் இப்போது
உலகில் பிறந்து கொண்டிருக்கும்
ஒவ்வொரு குழந்தையும்தான்)
இந்த உலகைக் காப்பாற்றும்
கடவுள் என்றே நம்புகிறேன்
இந்த அன்னையர்கள் எல்லோருமே
கன்னிமேரிகள்தாம் என்றே நம்புகிறேன்
ஒரே ஒரு வேறுபாடுதான்
இயற்கை தன் தவறிலிருந்து
தன்னைத் திருத்திக் கொண்டுவிட்ட
இந்த உலகத்திலிருந்து இனி பிறக்கப்போவது
ஒற்றைப் பாலுயிரியான
தெய்வங்கள் மட்டுமே என்பதுதான்!
நிழற்குடைத் தாழ்வாரங்களிலோ
மழைநீர் ஓடும்
நிதான நடைத் தளங்களிலோ
எங்கேயும் அசையாது நிற்கின்றன
நடக்கின்றன
புருவக் குடையின்கீழ்
ஒரு ஜோடிக் கண்கள்
அமிர்த மழைப் பொழிவை
பார்த்தபடியோ
வேட்டபடியோ
பொழிந்தபடியோ
பாடகி: தீபா
இக் கவிதை ”காற்றினிலே வரும் கீதம் - 2022” கவிதைத் தொகுப்பில் உள்ளது. தன்னறம் பதிப்பகத்தின் தொகுப்பு- 1ல் உள்ளது
அடுத்த அடுத்த பொம்மைகளுக்கு
தாவித் தாவிச் சென்று கொண்டிருக்கும்
குழந்தைகளைத்தாமே நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்?
பேரின்மை
பொம்மை வடிவானவுடனேயே
மரித்தும் போனதை
கண்டு உதறி
யாண்டும் மெய்ம்மை காணவே
விழித்துக் கொண்ட குழந்தைகளைப் பார்த்திருக்கிறோமா?
விதவிதமான பொம்மைகளால்
அறையை நிறைத்துவிட்டார் சுநேகா.
“ஏன்ம்மா இப்படி?
நீ இன்னும் வளரவேயில்லை சுநேகா”
என்றார் அவள் கணவரும்.
ஒருநாள் அவன் கண்டு கொண்டான்
பொம்மைகளின் விழிகளிலுள்ள
பேரின்மையே
குழந்தைகளின் விழிகளிலும் ஒளிர்வதை!
மேலும்
அவர்கள் வளர்வதில்லை!
அவர்களின் நிரந்தரத்தன்மைக்கு
நிகரே இல்லை!
அவர்கள் மரிப்பதேயில்லை!
கவனியுங்கள்
ஏன் எப்படி என்று
கேட்கவேமாட்டீர்கள்!
அவர்களுக்கு உயிர் இல்லை என்றால் என்ன
உயிருள்ள மனிதர்கள்தாம்
என்ன சாதித்துவிட்டார்கள் இந்த உலகில்?
சுநேகாவிடமோ குழந்தைகளிடமோ
இதைச் சொல்லிவிடாதீர்கள்
உங்களைக் கொன்றுவிடுவார்கள்!
அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்
என்பதுதானே முக்கியம்?
சொல்லி முடித்தவுடன்
நாமும் கேட்டுக் கொண்டவுடன்
அவர்களும் அங்கிருந்து
போய்விடுவார்கள்தானே?
ஒரு பொட்டு மூக்குத்தி!
அதன் அழகு ஏன் நம்மை
இப்படிக் கொல்கிறது?
எவ்வளவு காலமாய்
நாம் கண்டடையாமலே இருந்த ஒன்றை
இன்று நாம் கண்டு கொண்டோம்
ஒரு மொத்த அழகோடே!
ஆழ்கடலினின்று கண்டெடுத்த
முத்தின்மேல் ஒளிரும் முழுநிலவுபோலும்
ஒரு பேரொளியை!
பெரும் புரட்சியைப் படைக்க இருக்கும்
பெரு வெள்ளத்தின்
ஒரே உண்மையான ஒரு துளியை!
அவர் நடக்க நடக்க
இடமும் வலமுமாய்
அவர் செறிகுழலும் அசைந்தது.
தன்னை ஆட்டுவிக்கும்
உயிர் பற்றியோ
உடல் பற்றியோ
உறுப்புகள் பற்றியோ
தன்னைப் பற்றி
எதுவும் அறியாத பிறவி
நடை நிற்கவும்
அது தானும் நின்றபோதெல்லாம்
யாவும் அறிந்தது மட்டுமா
நிகழ்ந்தது
யாவும் அறியாததும்
புதிது புதிதாய்
நிகழ வேண்டியதுமல்லவா
நிகழ்ந்தது அங்கிருந்து?
ஊழல் மலிந்துவிட்ட
மனித உறவுகளை விட்டு
தூர வந்து நிற்பதாலோ
இத்துணை களி நிறை
இந்தக் காற்று வெளியினிலே
கண்விழித்துக் கொண்ட தாவரங்களுக்கு?
இப் பேரண்ட
பெருவெளியைப் பார்த்தல்லவா
புன்னகைக்கிறது,
புல்லிலிருந்து ஒரு பூ!
“இப்போதெல்லாம் மனிதர்கள்
நம்மைப் பார்ப்பதேயில்லை
எப்போதும் கைபேசியிலும்
அல்லது ஏதாவது ஒரு எண்ணங்களிலும்தான்
மூழ்கியவர்களாய் இருக்கிறார்கள்
எல்லாப் பிரச்சனைகளும்
காரணங்களும்
விடுதலையின் அமைதியும்
தாங்களே என்பதறியார்”
இந்த அகால வேளையிலும்
நடை உலா வந்தவர்களைப் பார்த்து
கனிவுடனும் பெருந்துயருடனும்
பேசிக்கொண்டனர்.
சொக்கவைக்கும்
ஜில்லென்ற குளிர்காற்றும்
ஊர்ந்து சென்று கொண்டிருந்த
உச்சிநிலாவும்
விண்மீன்களை மறைத்துவிட்ட
மழைமேகங்களும் நீலவானமும்
இரவிருளில் ஆன்றமைந்துவிட்ட
மரச்செறிவுகளும்
விரிவளாகத்தின் வீதிவிளக்குகளும்.
மரநிழலில்
ஒரு பெஞ்சு
சித்தார்த்தரேயாய்!
அமர வந்த மனிதருக்கு முன்னமே
நன்கு அமரத் தெரிந்ததாகவேதானே
இருக்க வேண்டும்
அந்த பெஞ்சு?
காதல் திருமணம் செய்து கொண்டோர்களால்
பூத்திருக்க வேண்டாமோ
பொன்னுலகு இப்பூமியில்?
காதல் திருமணம் என்ற பெயரில்
ஆண் பெண் இச்சைத்
தேர்வு மட்டும்தான் நடந்துள்ளதா?
மலராத மொட்டாகவும்
கனியாத காயாகவும்
காத்திருக்கிறதோ காதல் திருமணமும்?
வேரோடும்
வீசும் காற்றோடும்
வெயிலோடும்
ஒளியோடும் மட்டுமே
அவர்கள் நின்றிருந்தால்தானே
மலரவும் கனியவும் முடியும்?
பாதுகாப்புணர்வு போலும்
இருளில் ஓடும் வாகனங்களின்
பின் சிவப்பு விளக்குபோலும்
நடுநெற்றி உச்சியில்
சிவப்பு அணிந்துகொண்டு
அழகழகான இளம்பெண்கள் ...!
அழகு, மேலும் அழகுபெற்றதே தவிர
பாதுகாப்பு எங்கே தோன்றியது ?
பயம் எங்கே தோன்றியது?
நம்பிக்கை நம்பிக்கை இழப்பு என்ன
மானுட சஞ்சலங்கள் எங்கே தோன்றின?
அற்புதமானதோர் முடிவும் துவக்கமுமாய்
தோன்றியதோர் நிறையுணர்வுதான்
எத்துணை அற்புதம்!
ஆண்களும் பெண்களும் காதலும் காதல் தோல்வியிலுமாய் எவ்வளவு இன்பம் அவ்வளவு வலியுடனுமாய் வாழும் வாழ்க்கை நாம் அறிந்ததுதானே?
ஆண் என்றும் பெண் என்றும் உள்ள இந்த இருபால்மையினால்தானே மனிதன் இயற்கையோடும், சக மனிதனோடும் கொள்ளும் உறவை இழந்து போரும் துயருமான உவகைப் படைத்துவிட்டான்?
குடும்பம் என்றும் சமூகம் என்றும் கடவுள் என்றும் பெரியவன் என்றும் அடிமை என்றும் மேலாண்மை என்றெல்லாம் வளர்ந்து ... இருமையும் அதற்கு எதிரான ஒருமையும்கொண்ட உலகைப் படைத்துவிட்டான்?
இயற்கையின்முன் இயற்கையை மறைத்துக்கொண்டு நின்றபடி இணையாகவும் தனியாகவும் மனிதர்கள் சுயப்படம் எடுத்துக் கொள்வதை நீங்களும்தானே பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்?
அன்னை இயற்கையே, இதற்கு பதில் சொல்லுங்கள்!
உங்கள் இயற்கையில்மட்டும் நீங்கள் பாதுகாக்கத் தொடங்கியுள்ள ஓரவஞ்சனை ஏன்?
பொறாமைப் படுவானேன்
கூந்தல் இருக்கிறவா
கொண்டை போட்டுக்கிடுறா
நமக்கு
ஒரு மயிர் இருந்ததால் போதுமே
ஒரு பேருலகைப் படைத்துவிடுவதற்கு?
என்ன கெடுபேறு! யார் செய்தது இது?
எதைக் காண வந்தார்களோ
அந்தக் கடலை மூடிவிட்டது,
அவர்கள் சந்திப்பு!
என்றாலும் தனிப்பெருங்கருணையால்
அவர்கள் எந்த இடத்தில் சென்றமர்ந்தாலும்
அடங்காத காதலுடன், தனது வானத்துடன்
அவர்கள் அருகேதானே வந்தமர்ந்து கொண்டிருந்தது
கடல்!
சாப்பிடும்போது அவர்
தன் இதழ்களில் சூடியிருந்த
வண்ணத்தையும் சாப்பிட்டுவிட்டாரா, என்ன?
கைப்பை திறந்து எடுத்து
அதனை மீண்டும் சூடிக்கொண்டார்
மனிதர்களைப் போலின்றி
தன் வாழ்வினை நன்கறிந்த
உண்ணும் உணவோடு போலவே
பார்க்கும் விழிகளோடும்
கேட்கும் செவிகளோடும்
தழுவும் காற்றோடும்
உயிர்க்கும் மூச்சோடும்
உட்சென்று செரித்து மறைந்துவிடும்
வண்ணத்தை!
பேரு புகழு இரசிகர்கள் என
நிறைந்திருந்த மனித சமூகம்
நடுவே அமர்ந்து
பேசிக்கொண்டிருந்தார்கள் அவர்கள்
“நீ பெண்ணாயிருப்பதே போதும் தெரியுமா?”
என்றான் அவன்.
அறிவுரை கூற வந்துவிட்டாயா, முட்டாள்!
நாம் மனிதர்களாய் இருப்பதே போதுமானது என
ஏன் சொல்ல முடியவில்லை உனக்கு?
எனச் சொல்லாமலேயே
ஒரு முறை முறைத்தார் அவர் அவனை!
ஒவ்வொருவராய் தங்கள் கவிதைகளை வாசித்துவிட்டபின் பார்வையாளர்களிடமிருந்து ஒவ்வொரு கவிதைக்கும் எதிர்வினை எதிர்பார்த்து நடத்தப்படும் ஒருவகையான கவியரங்கம் அது. பார்வையாளர்களில் ஒருவராய் அமர்ந்திருந்த தந்தையின் மடியில் அமர்ந்திருந்தது, ஒரு குழந்தை.
ஒவ்வொருவரும் தங்கள் கவிதையை வாசித்து முடிக்கும்போதும் மிகச்சரியாகவே அதே நேரத்தில் அதேநேரத்தில் அந்தக் குழந்தை கரைந்தது. அப்படியொரு கரைச்சல்! குழந்தைகளுக்கே உரிய கரைச்சல்!
முதன்முதலாக அதைக் கண்டபோது, நல்லவேளை கவிதை முடிந்த போது கத்தியது என்று சமாதானமாகிக் கொண்டார்கள். தந்தைக்கு, குழந்தையை வெளியே கொண்டுசென்று நிற்கவேண்டுமே என்ற சங்கடம். அப்புறம்தான் அந்த குழந்தை ஒவ்வொரு கவிதையின் முடிவிலும்தான் கரைந்தது கண்டு எல்லோரும் திடுக்கிட்டார்கள். நிகழ்ச்சி இயக்குனர் அதிர்ந்துவிட்டார்.
விழா முடிந்து வெளியேறுகையில் ஒவ்வொருவரும் அவர்களை ஈர்த்த கவிதைகளையும், ஒரு சந்திப்பின் நிறைவிலுமே செல்ல வேண்டியவர்கள் மிகுதியும் அந்த குழந்தை கரைச்சல் பற்றிய மனமூட்டத்தோடேயே சென்றார்கள்.
அடுத்த ஆண்டு, அதே காலை, அதே விழா, நிகழ்ச்சி அமைப்பாளரும் இயக்குனருமானவர் ஒரு அழைப்பிதழை அழுத்தமான ஒரு வேண்டுகோளுடனே குழந்தை மானசாவுக்கும் தந்தை நவீனுக்கும் மறக்காமல் அனுப்பிவைத்தார்.
கவியரங்கில் அந்த துடிப்பு ஒரு சடங்காக நிகழ்த்தப்படுவதை இயக்குநர் தன் மேலாண்மையால் நிறுவிய அந்த நாளிலிருந்து அது உறுதியாகிவிட்டது. குழந்தை அழாவிட்டால் குழந்தையைக் கிள்ளிவிட்டார்கள், பெற்றோர்கள். குழந்தையே வராவிட்டாலும், இருக்கிறவர்களிடையே வளர்ந்த குழந்தை, இளைஞர்கள் என்று மெது மெதுவாக ஆர்வமும் அக்கறையும் உள்ள யாராவது ஒருவர் குழந்தையைப் போலவே கால்கை உதைத்து கரைந்தனர்.
குழந்தை மானசா சிறுவயதிலேயே கவிதை மற்றும் இலக்கிய அரங்கில் வளர்ந்தும் வாழ்ந்தும் வந்தவர். அந்நாட்டின் மரியாதைக்குரிய கவிஞரும் வருங்காலத்திற்கு வழிகாட்டும் ஒரு இலக்கியப் புள்ளியும் ஆனவர். அவர் இல்லாத ஒரு காவியமேடை அந்த நாட்டில் கிடையாது.
இப்போது மானசா தொண்ணூறு வயது மூதாட்டியாக அந்த மேடையில் இருக்கிறார். விழா அரங்கில் கவிதைதோறும் கரைவதற்குரிய குட்டிக்குழந்தை இல்லை. வளர்ந்தவர்களும் இல்லை. அந்தச் சடங்கிற்குரிய குழந்தையாவதற்கு வெட்கப்பட்டவர்களாய் நீ செய், நீ செய் என்று எல்லோரும் தயங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் மானசா அந்தப் பொறுப்பை தானே எடுத்துக்கொண்டு கைகால்களை உதைத்துக்கொண்டு கரையத் தொடங்கினார். யாராவது நிகழ்த்த வேண்டுமல்லவா?
உள்ளதாம் பொருளை
ஓதி உணர்த்த முடிந்ததா?
ஓதும் வேதங்களால்
உள்ளொளி துலங்கியதா?
கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத்தில் இருப்பாள்
துயர்மலி உலகின் பெருவலி கொண்ட
துய்யர்களிடமும் இருப்பாள்தானே?
கருணை வசனங்கள் போதுமோ
கருணை அதில் உண்டோ, செல்வி?
கள்ளமற்ற முனிவர்களா,
கள்ள முனிவர்களா என்பதையும்
கண்ணுடையார் ஒருவரால்தானே
கண்டுகொள்ள முடியும், தேவி?
கைப்புண்ணைக் காணக்
கண்ணாடி வேண்டுமோ, அம்மா?
உள்ளதாம் பொருள் அதனையே
வளர்ப்பதற்கு வேறு வழியே இல்லையா?
அதைக் காட்டாமல்
துதிகளுக்கோ காத்திருப்பவள் நீ?
எம் அன்னையே
காண்பவர்களோடு காணாதார்க்கும்கூட
அருளும் நீ
கவிதையின் மதம் உலாவும்
கடவுளின் ராஜ்ஜியத்தை
அழித்துக் கொண்டேயிருக்கும் மனிதனுக்கும்
அளித்துக்கொண்டேதானே இருக்கிறாய்
கடவுளின் ராஜ்ஜியத்தை?
மெய்ச் செயல்வடிவமாக மட்டுமே
ஒளிரும் கருணையே!
துதிகளுக்கு வளையாத
அரும்பொருளேயான ஆளுமையே...!
குட்டி வானத்தைத்தான்
அவன் ஒரு போர்வையாய்ப்
போர்த்திக்கொண்டு
தலையைமட்டும்
வானத்திற்கு வெளியே நீட்டியவனாய்
துயின்றுகொண்டிருந்தான்.
வேற்றுக் கிரகத்திலிருந்துதான் ஒரு மனிதன்
தழைக்கும் காம்போடு
ஒரு மலரைக் கொண்டுவந்தான்.
ஒரே மலர்தான்
முதல் மலராய்
வேர்விடத் தொடங்கியது இந்த பூமியில்.
அப்புறம் இந்த பூமியில்
எல்லா இடங்களுக்கும் பரவிவிட்டது.
ஆனால் ஒவ்வொரு மலருமே
தன்னை முதல் மலராகவும்
மனிதர்கள் தேடும்
பேர், புகழ், பெருஞ்செல்வம் எல்லாம்
தானேதான் என்றும்
நொடிதோறும்
மாறி மாறி நிகழ்ந்து கொண்டேயிருக்கும்
தனது பிறப்பையும் மரணத்தையும்
சொல்லவே முடியாது என்றும்
கண்டவரே கிடையாது என்றும்
சொல்லிக்கொண்டேயிருக்கிறது காண்!
இந்தக் காற்று வெளியிடையே - கண்ணம்மா
நீதான் சொல்ல வேண்டும்.
வெளி அல்ல, வெளியிலுள்ள
அசைவிற்குப் பெயர்தானே காற்று?
பற்றி நிற்பதன்றி
வருடிச் செல்வதற்குப் பெயர்தானே, காற்று?
தான் என்பதும் ஆசை என்பதும்தானே
பற்றுகிறது?
பற்றாது வருடிச் செல்வதுதானே
அன்பு என்பது?
எங்குமிருப்பதனால்
அது ஓடிப் போவதேயில்லையே!
சென்று கொண்டேயிருப்பதுபோல்
அது வந்துகொண்டேயிருக்கிறதே;
பின் எதற்கு - என் கண்ணம்மா
ஆசையும் அச்சமும் சேகரிப்புகளும்?
இந்த இடத்திற்குத்தான்
உங்கள் எல்லோரையும்
அழைத்து வந்துவிட விரும்புகிறேன்
ஆனால் உங்கள் ஒவ்வொருவரினதும்
முழு ஒத்துழைப்பும் இல்லையெனில்
இது நடக்காது.
துளிகளால்தாம்
பெருவெள்ளம் என்பதை
நாம் எப்போதும் சொல்லிக்கொண்டேயிருக்கிறோம்.
இங்கே வந்துவிட்டால்
எரியும் நம் தாகவிடாய்
எல்லாம் அடங்கிவிடும்.
எரியும் நம் தாகவிடாய்
எல்லாம் அடங்கிவிட்டால்
நாம் இங்கே வந்துவிடலாம்
என்றும் சொல்லலாம்.
இங்கு அங்கு எனும் இடங்களில்லை
காலமும் இல்லை
ஒரு நொடிதான் காலம்
என்றும் சொல்லலாம்.
எல்லாம் அடங்கிவிடும் இங்கே
பேர் புகழ் பெருஞ்செல்வம்
எதுவுமே தேவைப்படாது
ஒரே ஒரு துயரம்தான்
நம்முடைய தாகமாய் நம்மிடம்
தங்கிவிடக்கூடும்
எல்லோரும் இந்த இடத்திற்கு
வந்துவிட வேண்டும் என்பதே அது!
இந்த இடத்திற்குத்தான்
உங்கள் எல்லோரையும்
அழைத்து வந்து விட விரும்புகிறேன்.
அங்கே நான் இருக்கமாட்டேன்
நாம் மட்டுமே இருப்போம்.
இல்லை, நாமும் இருக்கமாட்டோம்
நம் உறவு மட்டுமே இருக்கும்!
குளிர் கூடிவிட்டது
எனது பெருங்களிப்பும்தான்
கூடிவிட்டது!
இறுகக் கட்டி அணைப்பதுபோன்ற
இந்தக் குளிர்
உனது பேரன்புதான் அல்லவா?
உனது செல்ல ஆட்டுக்குட்டிகளான
எங்களுக்கு
தலைக்கவசமும் உடல்கவசமுமாய்
குளிராடைங்கள் அணிவித்து
நடக்கமட்டுமே செய்தால் போதுமென்றும்
வேறு ஒன்றும் செய்யவேண்டியதில்லை என்றும்
இரண்டு கைவிரல்களையும் சட்டையின்
கீழ்ப்பைகளுக்குள் புதைத்துக்கொண்டு
எத்துணை சுகமாய் நடக்கச்சொல்கிறாய்
உன் காதல் வெளியில்!
தளிர்நடைச் சிசுக்களாய்
சொர்க்கத்திலிருந்து வந்த
தேவதைகளை நடத்தியபடி
"மாமாவுக்கு வணக்கம் சொல்லு" என்றபடி
உலவும் மனிதர்களாய்
இன்று ஓர் அற்புத உலகக் காட்சி!
இந்த மனிதர்கள் எல்லோருமே
சொர்க்கத்தை
கவிதையின் மதம் உலவும்
கடவுளின் ராஜ்ஜியத்தை
படைத்துவிடும் முகமாய்
தங்கள் குழந்தைமையைத்தான் இப்படி
வெளியே உலவ விட்டுள்ளார்களா?
அல்லது
தங்கள் வேண்டாமையினால்தான்
இப்படி வெளியே விட்டுவிட்டு
அதையும் அறியாமலே உலவுகிறார்களா?
யாண்டும்
களங்கமில்லாத
கருப்பை உடையவர்களில்லையா
இந்த மனிதர்கள்?
தங்கள் மூடத்தனங்களால்
சொர்க்கத்தை மூடிவிட்டு
புகைமூட்டத்தில் திணறிக்கொண்டிருப்பவர்கள்தாமோ?
எத்தனை பயன்பாட்டுக்குப் பிறகும்
அழுக்காகாமல்
மிக எளிதில் மீண்டு கொள்ளும்படியாய்
எப்போதும் ஒளிர் பளபளப்புடனே
படைக்கப்பட்டிருக்கும்
இந்த உணவுத் தட்டுகள் போலே
படைத்துக் கொள்ள முடியாதா என்ன.
நம் மனதை நாம்?
© Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008
Back to TOP