Wednesday, September 30, 2026

பேராற்றங்கரை மரங்கள் - முன்னுரை

காணும் திறனும் உணர்வுத் தீவிரமுமுள்ள எந்த மனிதனுமே இந்தப் பேராறு மானுட வரலாறாகவே தன்னை உருவகப் படுத்திக்கொண்டு வந்து நிற்பதைப் புரிந்துகொள்வான். காலம் காலமாகவே மாறுதலின்றி அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கும் பிணங்கள்தாமா நாம்? அல்லது அனைத்தையும் வெளியே நின்றபடி காணவும், சிந்திக்கவும், உணரவும் தெரிந்த இந்த கரையோர மரங்களா? இந்தப் பார்வையிலிருந்து இன்று முதல் தொடங்கப் போகிறோம்.

இயற்கையாகட்டும், ஒசத்தி, தாழ்த்தி, போட்டி, பொறாமை, பேராசை, புகழ், செல்வாக்கு, மேலாண்மை என போரிலும் துயரிலும் வதையுண்டு கிடக்கும் மனித சமுதாயமாகட்டும், அவர்களின் அரசியலாகட்டும் அங்கே உழன்று கொண்டே அவர்களைப் பற்றிக் கதறுவதல்ல கவிதையினுடைய செயல். கவிதைக்கு இவற்றைவிட மேலானதொரு பணி உண்டு, அதைத்தான் நாம் இங்கே பார்க்கப் போகிறோம். அதுதான் கவிதையின் மதம். அதுவே மெய்மதம். நித்தியத்திலிருந்து சுழலும் வாள் அது. அதன் பார்வையில், சுழற்சியில், மாண்டு உதிப்பதுதான் கடவுளின் ராஜ்ஜியம். மகத்தானவைகள் என்று சொல்லப்பட்டு இழிந்து கிடப்பவற்றையெல்லாம் அழித்தே அந்த மாண்பினைப் படைத்துக்கொண் டேயிருக்கும் புத்தொளி, ஞானம்.

காலமற்ற தருணங்களிலெல்லாம் தனிப்பெருங்கருணையால் நமக்குக் காட்சிதரும் பொறிகளையும், மின்னல்களையும் பற்றி நிறுத்திச் சுடராக்கி, நாம் படைத்துவிடப் பார்க்கும் ஒளி உலகம்!

நூறு கவிதைகளடங்கிய இச் சிறுநூல் ”பேராற்றங்கரை மரங்கள்”, ”மற்றுளது” என்ற ஐம்பது ஐம்பது கவிதைகளாலான இரண்டு தொகுப்புகள் இணைந்தது. தொடர்ந்து இதுபோலும் ஏறத்தாழ இருபது தொகுப்புகள் வெளிவரலாம். ஆர்வமுடன் இதனைச் செயலாக்க முன்வந்திருக்கும் எழுத்து பதிப்பகத்து அன்பர்களுக்கும், தட்டச்சு செய்து உதவிக் கொண்டிருக்கும் நண்பர்கள் சுடலைமுத்து, நவீன் ஆகியோருக்கும் எனது அன்பும் நன்றியும். இந்நூலை எனது இனிய அன்பர் ஈரோடு பாரிக்கு சமர்ப்பிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

-தேவதேவன்

கவிதை நூல் வாங்க இங்கே சொடுக்கவும்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP