Thursday, November 30, 2023

கவிதைத் தொகுப்பு - 81, புறப்பாடு (காவியம்) - 2023

 


புத்தகத்தைப் பெற கவிஞர் தேவதேவன் அவர்களை +91 9894154859 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


என்ன வியப்பு இது *

என்ன வியப்பு இது!
நம்பிக்கைதரும் எத்துணை பெருங்களி இது!
அந்தி இருள் தொடங்கவும்
ஓடும் சாலையில் ஓடும் ஒவ்வொரு வாகனங்களும்
விளக்கேற்றிக்கொள்கின்றன!

ஒவ்வொரு வாகனங்களும்
”என்னைப் பின்தொடராதே” என்றே
பின்புறச் சிவப்பு விளக்குகளுடன்
ஒரேமாதிரியான
தன் தன்மையுடனே விரைகின்றன!


* புறப்பாடு தொகுப்பில் இடம் பெற்றுள்ள ஒரு கவிதை

Read more...

Wednesday, November 29, 2023

கவிதைத் தொகுப்பு - 82, துயர்மலி உலகின் பெருவலி (காவியம்) - 2023

புத்தகத்தைப் பெற கவிஞர் தேவதேவன் அவர்களை +91 9894154859 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


கூலித்தொழிலாளிகள் *

வானத்தையும் பூமியையும்
கூரையும் தரையுமாய்
அளாவிக் களிக்கிறார்கள்,
தங்குமிடமில்லா கூலிக்குடும்பங்கள்
வீடுகளை, சாலைகளை, கட்டடங்களைக்
கட்டும் பணி இடைவேளைகளில்!

எல்லோரும் இவர்களாக முயற்சித்தால்தான்
நாம் கட்ட இயலும்
கடவுளின் ராஜ்ஜியத்தை என்கிறான் கவிஞன்.

 சொல்லவும் வேண்டுமோ
 நம் முழு ஆற்றலையும்
வேறெங்கெங்கோ அல்லவா
விரயமாக்கிக் கொண்டிருக்கிறோம், நாம்!


* இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள ஒரு கவிதை

Read more...

Monday, November 27, 2023

ஒரு மரத்தைக் கூட காணமுடியவில்லை - காணொளியும், கவிதையும்

இந்தக் கவிதை ஓரு ரசிகரின் இனிய குரலில், அழகோவியமாக அமைந்துள்ளது.

கவிதை ஒலி, ஒளி வடிவில்

முழுக்கவிதையும் இங்கே.....

Read more...

Sunday, November 26, 2023

வறுமை

சங்கரி ரொம்ப மெலிந்து விட்டாள்
இடுப்பெழும்புதான் அவளிடம் இருக்கிறது
கைக்குழந்தையை இடுப்பில் அமர்த்த

அவ்வளவு தாழ்ந்த குடிசைக்குள்ளிருந்து
வெளியே வந்து நிற்கிற சுப்பிரமணிக்கு
என்ன வெளங்காத கம்பீரமோ அது?

ஆடிட்டிங் கணக்கெழுத வருகிற
ஆசாமிக்கு இருக்கிற சாமார்த்தியம்
இவனுக்கு இல்லையே.

இவன் பார்வையும் நடத்தையும்
சரியில்லையே என்று
வேலையை விட்டு நீக்கிவிட்டார்
ஜவுளிக் கடைக்காரர்.

கவனம் மகனே, பணக்காரன் சொர்க்கத்துக்குள்
நுழையவே முடியாது என்றபடி
கல்லாவின் தலைக்குமேல்
புகைப்படத்தில் அறையப் பட்டவராய்ப்
போதித்துக்கொண்டேயிருக்கிறார் இயேசு..

உண்பதற்கும் உடுப்பதற்கும் அணிவதற்குமான
பொருள் வெள்ளம் பாய்ந்து கொண்டிருக்கும் உலகில்
கிடைத்தால் கொள்ளையடிக்கவே தயாராயிருக்கும்
ஈனப் பிச்சைக்காரர்களாய்த் தானா
கடைத்தெருவெங்கும் மனிதர்கள் கூட்டம்?

Read more...

Saturday, November 25, 2023

உபவனத்தில் ஒரு பாதை

அழகன்!
திசைகளற்ற பெருவெளியில்
திகைப்பையும் தாண்டி நின்று விட்ட
திகம்பரன்.
எங்கும் செல்வதில்லை.
பரவி நிற்பவன்
எங்கும் செல்ல வேண்டியதில்லை

கொடுப்பவனும் பெறுபவனுமில்லாத
திருநிறைச் செல்வன்
தேடலின் அவசியமின்றி
தங்கலுமின்றி
தொலைந்து போதலுமின்றி
எங்கும் பரவி நிற்பவன்

திகம்பரனாய் நின்றாலும்
எங்கும் செல்வதில்லை என்றாலும்
பரவி நிற்பவன் என்றாலும்
நடை உண்டு
ஒவ்வோர் அடியிலும் ஓரோர்
கோணத்தையும் பார்வையையும்
உருவையும் அருவையும் கண்டபடி
சுழலும் உலகுண்டு
களித்துக் களித்துக் கொண்டாடிக்
கழியும் காலமுமுண்டு.

தவறினால்தான்
தனித்து விடப்பட்டவனின்
தலைகளை நொறுக்கும்
துயர்கள் அத்தனையுமுண்டு.

Read more...

Friday, November 24, 2023

ஒளிரும் பூக்கள்

ஒளிரும் பூக்களெல்லாம்
உரைப்பதனை விளம்புதற்கோ,

உதித்த பகல் வெளிச்சத்திலும்
மறதியால் அணைக்கப்படாத வேளை
பூக்களைப் போல ஒளிர்ந்தன
மின் விளக்குகள்?

Read more...

Thursday, November 23, 2023

வனப் பூங்காவில் ஒரு காலை நடைப் பயிற்சி

அவர் வேக நடையில்
குதியாளம் போட்டபடி
துள்ளிக் கொண்டு செல்கிறது
கற்றைக் கூந்தல்

கட்டுப் போட்டிருக்கும் போதும் சரி
கொண்டையிட்டுக் கொண்டிருக்கும் போதும் சரி
நிலவில் உதித்த கார்முகில் போல்
தழைத்து விட்டிருக்கும் போதும் சரி
கூட்டுயிரிகளான கூந்தலின் குதூகலம்
மாறுவதே இல்லை.

Read more...

Wednesday, November 22, 2023

துயர் கொண்ட மனிதன்

துயர் கொண்ட மனிதன்
கண்டு கொள்ள முடியாத
வாழ்வாக, மதமாக, அன்பாக, அழகாக
அவன் கண்ணெதிரே நிற்கிறது காண்
இயற்கைப் பெருஞ்செல்வம்
தன் அரும் பெருஞ் செயலூடே
அவனைக் கண்டு கலங்கியவாறே!

Read more...

Tuesday, November 21, 2023

தராசுமுள்நுனிக்கூர்மய்யம்

“இனி ஒரு விதி செய்வோம்!”
“எந்த ஒன்றையும் இனி
செய்யாமலிருப்போம்!” என
அங்குமிங்குமாய் மாறி மாறி
அமைதியின்றி அலைந்து கொண்டிருந்தது
தராசுமுள்நுனிக்கூர்மய்யம்.
நிகழவேண்டியதைச் சுட்டிக் கொண்டும்
தானாகவே செயல்பட்டுக் கொண்டும்
கொந்தளிக்கும் பேரெழுச்சியுடனே இருந்தது
அது தன் மய்யத்தைத் தொடும் போதெல்லாம்!

Read more...

Monday, November 20, 2023

விசாரணை

ஒளியைப் பற்றி
இருளிடமோ,
இருளைப் பற்றி
ஒளியிடமோ,
எழுத்துக்களைப் பற்றி
பேனாவிடமோ,
பேனாவைப் பற்றி
எழுத்துக்களிடமோ
கேட்காதீர்கள்.

எதைப் பற்றியும்
அதன் அதனிடமே
விசாரியுங்கள்
அல்லது அவ்வவற்றின்
பேரின்மைப்
புலத்திடமிருந்து…

Read more...

Wednesday, November 15, 2023

கவிதைகள் இணைய இதழ், தேவதேவன் சிறப்பிதழ்

தேவதேவன் கவிதைகளில் காணப்படும் கவிதைப்பாணிகளில் முக்கியமானது படிமங்களைப் பிரக்ஞை நிலையில் கோர்ப்பதன் மூலம் உருவாவது. அதாவது படிமங்கள் உயர்கவித்துவ நிலையிலும் கோர்க்கும் சரடு புறத்தருக்க நிலையிலும் அமைந்திருக்கும்” என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.

கவிதைகள் இணைய இதழின் ”ஜூன் 2022ம்” இதழ், தேவதேவன் சிறப்பிதழாக வந்துள்ளது. இதில் ”தேவதேவனின் கவிதைகளை ரசிப்பது பற்றி…” என்ற ஜெயமோகன் கட்டுரை, தேவதேவனின் கவிதைகள் பற்றி கடலூர் சீனு, ஜெகதீஷ் குமார், பைலார்க்கஸ், மதார், தமிழ்மணி எழுதிய வாசிப்பு அனுபவங்கள் மற்றும் 1993-ல் தேவதேவனுடனான நேர்காணலும் இடம்பெற்றுள்ளது.

கவிதைகள் இணைய இதழ், தேவதேவன் சிறப்பிதழ்

Read more...

Tuesday, November 14, 2023

திருவிழா ரயில் வண்டி -1

போகுமிடத்தை யார் தேடுகிறார்கள்?
இந்த மண்ணில் இந்த இடத்தில்
இந்தத் தாய் தந்தையரிடமல்லவா
இருந்து மகிழவே வந்துள்ளோம்!

Read more...

Monday, November 13, 2023

திருவிழா ரயில் வண்டி -2

ஸ்டேசனில் கட்டணச் சீட்டு வாங்கியாயிற்று.
அம்மா அப்பாவை அங்கேயே நிறுத்திவிட்டு
ஏறியாயிற்று வண்டியில்.
பத்து முறை சுற்றிவிட்டுப்
புறப்பட்ட இடத்திற்கே வந்துவிடும் வண்டி.
பத்து முறையும்
ஸ்டேசனில் நின்று பார்த்துக் கொண்டிருக்கும்
அம்மா அப்பாவுக்கு கையலைத்து
மகிழ்ச்சிவிடையையும் வருகையையும்
காட்டியவாறே
பயணம் முடித்து
அவர்களிடமே திரும்பியாயிற்று.
பொலியும் பூரண இன்பம் என்பது
போகுமிடமில்லா பயணமன்றி வேறேது?

Read more...

Sunday, November 12, 2023

திருவிழா ரயில் வண்டி -3

தோதான இருக்கைகளுள்ள வண்டியிலே
அம்மாவும் அப்பாவுமே உடன் ஏறி
அமர்ந்து கொண்டார்கள்.
நிலயம் சுற்றி நிற்கும் அத்தனை பேருமல்லவா
பயணிகள் கையலைப்பின்
பரிபூரண இன்பத்தைப் பகிர்ந்து கொண்டார்கள்!

Read more...

Saturday, November 11, 2023

அந்த இசை

மூலைகளில் படிந்த ஒட்டடைகளை நீக்கினேன்.
ஒவ்வொரு பொருளையும் தொட்டு அதனதன் இடத்தில் வைத்தேன்.
தூரெடுக்கப் பட்ட கிணறு போலாயிற்று அறை.
புனித நீரில் குளித்து வியர்வை நாற்றமில்லா ஆடையணிந்து
மாலை உலாக் கிளம்பியபோது
கேட்கத் தொடங்கிய அந்த இசை
நீடிக்கவில்லை.
வழிப்பறிக்கு ஆளானவன்போல் திரும்பினேன்.
விடியும் வரை
இரவின் மடியில் முகம் புதைத்து அழுதேன்.


-புல்வெளியில் ஓரு கல் (1998)

Read more...

Friday, November 10, 2023

அடுக்கக வாழ்வு

மலைகளில்
குடியேற அறிந்துவிட்டது
மானுடம்
இனி என்ன கவலை அதற்கு?

Read more...

Thursday, November 9, 2023

ஒளி கண்டு விட்டவர்களே!

ஒளி கண்டு விட்டவர்களே,
தூக்கிப் பிடியுங்கள் அதனை!
நிலவாக பரிதியாக
அது ஒளிரட்டும்!

உங்களுக்கு என்ன வேண்டும்
ஒரு பிச்சா பாத்திரத்தை
ஏந்திப் பிடியுங்கள்
எல்லோருக்குமான உணவால்
அது நிரம்பட்டும்!

பெயர் உருவமற்ற
பேரனுபவங்களாலானவர்களே
தூக்கிப் பிடியுங்கள் அதனை.
எல்லாப் புகழ்களும்
இப் பூமியினுடையதேயாகட்டும்!

Read more...

Wednesday, November 8, 2023

பார்வை இழந்த ஒரு பெண்ணின் பாடல்

துர்க்கா பூஜையின்
கோலாகலப் பண்டால்ஸ் அரங்கில்
ஓர் மூலையிலிருந்து
பார்வையிழந்த ஒரு பெண்ணின் பாடல் …

தன்னைப் போலவே
தன் பாடல் போலவே இருக்கிறதென
விம்மித் துடித்தது
வானமும் மண்ணின் உயிர்ப்பசுமையுமான
இயற்கையின் நெஞ்சம்.

தன்னையும் அறியாமல்
உறவுகளையும் அறியாமல்
உண்பதிலும் உடுப்பதிலும் களிப்பதிலும்
நம்பிக்கைகளிலுமே தம்மை வளர்ப்பவர்களாய்
எங்கும் உலவிக்கொண்டிருந்தது
பொதுசனம்.
குழந்தைகளுக்காக மன்னித்து
குழந்தைகளோடு விளையாடிக் களிக்கிறது
இயற்கையின் கீதலயம்.

Read more...

Tuesday, November 7, 2023

தேவதேவனின் கவிதைகள் பற்றிய ஆவணப் படம் - யாதும் ஊரே, யாதும் கேளீர்.

சங்க காலத்தில், மக்களின் தொலை தூரத் தொடர்புகள் மிகுந்த நேரம் எடுப்பவையாக, தொலை தூரப் பயணங்கள் மிகுந்த ஆபத்துகள் நிறைந்தனவாக இருந்து இருக்கும். இப்போது போல தமிழ் நாட்டில் இருந்து டெல்லிக்கோ, அமெரிக்காவுக்கோ உடனடியாகப் பேசவோ, பயணிக்கவோ முடிந்து இருக்காது. இந்த சவால்களையெல்லாம் மீறி, ஒர் சங்க காலக் கவிஞன் நவீனமாகச் சிந்தித்து,
“யாதும் ஊரே, யாவரும் கேளீர்” எனக் கூறியுள்ளார்.

இந்த நவீனக் காலத்தில், இதனை அடுத்த தளத்துக்கு எடுத்துச் செல்வது சிறப்பு அல்லவா.

“யாதும் ஊரே, யாதும் கேளீர்” என்பது, மனிதர்களை மட்டுமல்ல, இந்த உலகில் உள்ள அனைத்தின் மீதும் அன்புடன் இருப்பதல்லவா.

பெரும்பாலும், ஆளுமைகளைப் பற்றி ஆவணப் படங்கள் எடுப்பதுண்டு. இங்கு, வித்தியாசமாக, 2007 ஆம் ஆண்டு ஓரு ஆவணப் படம் கவிஞர் தேவதேவனின் கவிதைகளைப் பற்றி எடுக்கப் பட்டுள்ளது.

உலகில் உள்ள எல்லாவற்றின் மீதும் அன்பும், நம்பிக்கையும் வைத்துள்ள இந்தக் கவிஞரின் கவிதைகளைப் பற்றிய ஆவணப் படத்தின் தலைப்பு “யாதும் ஊரே, யாதும் கேளீர்” என அமைந்துது மிகச் சிறப்பு.

இது ஐந்து பாகங்களாக உள்ளது. ஓவ்வொரு பாகமும் குறிஞ்சி, முல்லை, மருதம் , நெய்தல் , பாலை என்ற கருப்பொருட்களில் அழகுற காட்சிப் படுத்தப் பட்டுள்ளது. கவிஞர் க. மோகனரங்கன், அக்டோபர் 2021ல், தனது முகநூல் பக்கத்தில் எழுதிய குறிப்புடன், ஆவணப் படத்துக்கான இணைப்பு கீழே கொடுக்கப் பட்டுள்ளது.



 

















1 October 2021
க. மோகனரங்கன்
பதினைந்து வருடங்களிருக்கும். ஈரோடு புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு தேவதேவன், பிரான்சிஸ் கிருபா, கோபாலகிருஷ்ணன், மகுடேஸ்வரன் முதலியோர் தமிழினி அரங்கில் குழுமியிருந்தனர். ஒளிப்பதிவாளரான நண்பர் சிபி சரவணன் எழுத்தாளர்களை புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்தும் தன் திட்டத்தின் ஒரு பகுதியாக கவிஞர் தேவதேவனை படமெடுக்க அணுகினார். புகைப்படத்திற்கு பதிலாக ஒரு ஆவணப்படமே எடுத்துவிடலாம் என முடிவு செய்து குறைந்த கால அவகாசத்தில் கிடைத்த சொற்ப வசதிகளோடு எடுக்கப்பட்ட இப்படம் பலவகைகளிலும் முன்னுதாரணமான ஒன்று. உரையாடல்கள் எதுவுமில்லாமல் , மாறும் நிலக்காட்சிகளின் பின்ணனியில் தெரிவு செய்யப்பட்ட கவிதைகள் ஒலிக்க நகரும் படம் அலாதியானதொரு காட்சியனுபவம் தருவதாக அமைந்திருக்கும் இப்படத்தின் இயக்குநர் பிரான்சிஸ் கிருபா, ஒளிப்பதிவு சிபி சரவணன், பின்ணனியில் ஒலிக்கும் கவிதைகளுக்கு குரல் தந்தது மகுடேஸ்வரன். குறிஞ்சி, முல்லை, மருதம் , நெய்தல் , பாலை என ஐந்து பகுதிகளாக இணையத்தில் பதிவேற்றப்பட்டிருக்கும் இப்படத்தினை பின்வரும் சுட்டிகளில் சென்று காணலாம்

பகுதி 1 - குறிஞ்சி

பகுதி 2 - முல்லை

பகுதி 3 - மருதம்

பகுதி 4 - நெய்தல்

பகுதி 5 - பாலை

Read more...

Sunday, November 5, 2023

அடுக்கக மாடிக் கட்டடங்கள்

தன்னுணர்வற்ற தனிமையால்
துயர்களையும் ஆபத்துகளையும்
விளைவிக்கும் கல்லறைகளா?

ஒரு புல்லைப்போல செடியைப்போல
மரத்தைப்போல மலையைப்போல
வானத்தை அறிந்தபடி
மழையிலும் பனியிலும்
ஒளியிலும் காற்றிலும்
நெகிழ்பவைதானில்லையா?

Read more...

Saturday, November 4, 2023

துள்ளித் துள்ளி…

எந்த ஒரு இசையை எழுப்புகிறது
மத்தளத் தோல் போல்
இழுத்துக் கட்டப்பட்ட இந்தக் கம்பளம்?
அறிவான் போலவே தெரிகிறது
ஓரமாய்க் காசு வாங்கிக் கொண்டு
அமைதியாய் அமர்ந்திருக்கும்
அதன் படைப்பாளி வியாபாரி.

குழந்தைகள் மட்டுமே
இணைந்து ஆடக்
காத்திருக்கும் கொண்டாட்டம்!

மண்ணோடும் விண்ணோடும்
பாய்ந்து பாய்ந்து
தொட்டுத் தொட்டும்
விலகி விலகியும்
உருண்டும் புரண்டும்
துள்ளித் துள்ளி
மனிதர்கள் சுதந்திரமாய் ஆடும் நடனம்!

Read more...

Friday, November 3, 2023

அற்புத மலர்!

இன்று, எங்கள் வண்ணச்
சுற்று வளாகத்தில்
ஓர் ஆணும் பெண்ணும்
இணையர்களாக அல்ல
சற்று எட்டியே
பேசிக் கொண்டே சென்றனர்

அந்தப் பெண்மணியின் முகத்தில்
பூத்த பொலிவைப் பார்க்க வேண்டும்
அடடா, இவ்வுலகின் ஓர் அற்புத மலர் அது!

அந்த ஆண் என்னைப் பார்த்ததும்
நெஞ்சில் ஒரு கை பொத்தி
விழிகள் கனிய தலை தாழ்த்திச் சென்றான்
அந்த முகத்திலும் அதே பொலிவுதான்
என்றாலும்
ஆண்முகத்தின் தாடி மீசைதான்
எனக்கு நெருடுவது போலிருக்கிறது எப்போதும்

நிலவுக்கு இல்லாத
சூரியனுக்கு இல்லாத
எந்த மலருக்குமே இல்லாத
இந்த மீசையும் தாடியும்
ஆணுக்கு மட்டும் எதற்கு?
ஆண்தான் எதற்கு?
சொல்லுங்கள் என் அன்னையே!

Read more...

Wednesday, November 1, 2023

குரங்குகள்

குரங்குகள் என்ற சொல்லே
குழந்தைகள் என்றே
ஒலிக்கின்றன இல்லையா?

சந்தர்ப்பம் வாய்த்தால்
வீட்டிற்குள் நுழைந்து
விளையாடி விடுகின்றன குரங்குகள்.

பெருநகராட்சிக்காரர்கள் வந்து
அடக்கி விரட்டி விட்டார்கள்
குழந்தைகளை -
மன்னிக்கவும் - குரங்குகளை!

குழந்தைகளையும் கொஞ்சம்
கவனித்துக் கொள்ளக் கூடாதா…
தங்கள் கிளைகளொடிந்தன போல்
சோகமுற்றன காண்,
உபவனத்து மரங்கள்!

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP