உபவனத்தில் ஒரு பாதை
அழகன்!
திசைகளற்ற பெருவெளியில்
திகைப்பையும் தாண்டி நின்று விட்ட
திகம்பரன்.
எங்கும் செல்வதில்லை.
பரவி நிற்பவன்
எங்கும் செல்ல வேண்டியதில்லை
கொடுப்பவனும் பெறுபவனுமில்லாத
திருநிறைச் செல்வன்
தேடலின் அவசியமின்றி
தங்கலுமின்றி
தொலைந்து போதலுமின்றி
எங்கும் பரவி நிற்பவன்
திகம்பரனாய் நின்றாலும்
எங்கும் செல்வதில்லை என்றாலும்
பரவி நிற்பவன் என்றாலும்
நடை உண்டு
ஒவ்வோர் அடியிலும் ஓரோர்
கோணத்தையும் பார்வையையும்
உருவையும் அருவையும் கண்டபடி
சுழலும் உலகுண்டு
களித்துக் களித்துக் கொண்டாடிக்
கழியும் காலமுமுண்டு.
தவறினால்தான்
தனித்து விடப்பட்டவனின்
தலைகளை நொறுக்கும்
துயர்கள் அத்தனையுமுண்டு.