வறுமை
சங்கரி ரொம்ப மெலிந்து விட்டாள்
இடுப்பெழும்புதான் அவளிடம் இருக்கிறது
கைக்குழந்தையை இடுப்பில் அமர்த்த
அவ்வளவு தாழ்ந்த குடிசைக்குள்ளிருந்து
வெளியே வந்து நிற்கிற சுப்பிரமணிக்கு
என்ன வெளங்காத கம்பீரமோ அது?
ஆடிட்டிங் கணக்கெழுத வருகிற
ஆசாமிக்கு இருக்கிற சாமார்த்தியம்
இவனுக்கு இல்லையே.
இவன் பார்வையும் நடத்தையும்
சரியில்லையே என்று
வேலையை விட்டு நீக்கிவிட்டார்
ஜவுளிக் கடைக்காரர்.
கவனம் மகனே, பணக்காரன் சொர்க்கத்துக்குள்
நுழையவே முடியாது என்றபடி
கல்லாவின் தலைக்குமேல்
புகைப்படத்தில் அறையப் பட்டவராய்ப்
போதித்துக்கொண்டேயிருக்கிறார் இயேசு..
உண்பதற்கும் உடுப்பதற்கும் அணிவதற்குமான
பொருள் வெள்ளம் பாய்ந்து கொண்டிருக்கும் உலகில்
கிடைத்தால் கொள்ளையடிக்கவே தயாராயிருக்கும்
ஈனப் பிச்சைக்காரர்களாய்த் தானா
கடைத்தெருவெங்கும் மனிதர்கள் கூட்டம்?