தேவதேவனின் கவிதைகள் பற்றிய ஆவணப் படம் - யாதும் ஊரே, யாதும் கேளீர்.
சங்க காலத்தில், மக்களின் தொலை தூரத் தொடர்புகள் மிகுந்த நேரம் எடுப்பவையாக, தொலை தூரப் பயணங்கள் மிகுந்த ஆபத்துகள் நிறைந்தனவாக இருந்து இருக்கும். இப்போது போல தமிழ் நாட்டில் இருந்து டெல்லிக்கோ, அமெரிக்காவுக்கோ உடனடியாகப் பேசவோ, பயணிக்கவோ முடிந்து இருக்காது. இந்த சவால்களையெல்லாம் மீறி, ஒர் சங்க காலக் கவிஞன் நவீனமாகச் சிந்தித்து,
“யாதும் ஊரே, யாவரும் கேளீர்” எனக் கூறியுள்ளார்.
இந்த நவீனக் காலத்தில், இதனை அடுத்த தளத்துக்கு எடுத்துச் செல்வது சிறப்பு அல்லவா.
“யாதும் ஊரே, யாதும் கேளீர்” என்பது, மனிதர்களை மட்டுமல்ல, இந்த உலகில் உள்ள அனைத்தின் மீதும் அன்புடன் இருப்பதல்லவா.
பெரும்பாலும், ஆளுமைகளைப் பற்றி ஆவணப் படங்கள் எடுப்பதுண்டு. இங்கு, வித்தியாசமாக, 2007 ஆம் ஆண்டு ஓரு ஆவணப் படம் கவிஞர் தேவதேவனின் கவிதைகளைப் பற்றி எடுக்கப் பட்டுள்ளது.
உலகில் உள்ள எல்லாவற்றின் மீதும் அன்பும், நம்பிக்கையும் வைத்துள்ள இந்தக் கவிஞரின் கவிதைகளைப் பற்றிய ஆவணப் படத்தின் தலைப்பு “யாதும் ஊரே, யாதும் கேளீர்” என அமைந்துது மிகச் சிறப்பு.
இது ஐந்து பாகங்களாக உள்ளது. ஓவ்வொரு பாகமும் குறிஞ்சி, முல்லை, மருதம் , நெய்தல் , பாலை என்ற கருப்பொருட்களில் அழகுற காட்சிப் படுத்தப் பட்டுள்ளது.
கவிஞர் க. மோகனரங்கன், அக்டோபர் 2021ல், தனது முகநூல் பக்கத்தில் எழுதிய குறிப்புடன், ஆவணப் படத்துக்கான இணைப்பு கீழே கொடுக்கப் பட்டுள்ளது.
1 October 2021
க. மோகனரங்கன்
பதினைந்து வருடங்களிருக்கும். ஈரோடு புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு தேவதேவன், பிரான்சிஸ் கிருபா, கோபாலகிருஷ்ணன், மகுடேஸ்வரன் முதலியோர் தமிழினி அரங்கில் குழுமியிருந்தனர். ஒளிப்பதிவாளரான நண்பர் சிபி சரவணன் எழுத்தாளர்களை புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்தும் தன் திட்டத்தின் ஒரு பகுதியாக கவிஞர் தேவதேவனை படமெடுக்க அணுகினார். புகைப்படத்திற்கு பதிலாக ஒரு ஆவணப்படமே எடுத்துவிடலாம் என முடிவு செய்து குறைந்த கால அவகாசத்தில் கிடைத்த சொற்ப வசதிகளோடு எடுக்கப்பட்ட இப்படம் பலவகைகளிலும் முன்னுதாரணமான ஒன்று. உரையாடல்கள் எதுவுமில்லாமல் , மாறும் நிலக்காட்சிகளின் பின்ணனியில் தெரிவு செய்யப்பட்ட கவிதைகள் ஒலிக்க நகரும் படம் அலாதியானதொரு காட்சியனுபவம் தருவதாக அமைந்திருக்கும் இப்படத்தின் இயக்குநர் பிரான்சிஸ் கிருபா, ஒளிப்பதிவு சிபி சரவணன், பின்ணனியில் ஒலிக்கும் கவிதைகளுக்கு குரல் தந்தது மகுடேஸ்வரன். குறிஞ்சி, முல்லை, மருதம் , நெய்தல் , பாலை என ஐந்து பகுதிகளாக இணையத்தில் பதிவேற்றப்பட்டிருக்கும் இப்படத்தினை பின்வரும் சுட்டிகளில் சென்று காணலாம்
பகுதி 1 - குறிஞ்சி
பகுதி 2 - முல்லை
பகுதி 3 - மருதம்
பகுதி 4 - நெய்தல்
பகுதி 5 - பாலை