பார்வை இழந்த ஒரு பெண்ணின் பாடல்
துர்க்கா பூஜையின்
கோலாகலப் பண்டால்ஸ் அரங்கில்
ஓர் மூலையிலிருந்து
பார்வையிழந்த ஒரு பெண்ணின் பாடல் …
தன்னைப் போலவே
தன் பாடல் போலவே இருக்கிறதென
விம்மித் துடித்தது
வானமும் மண்ணின் உயிர்ப்பசுமையுமான
இயற்கையின் நெஞ்சம்.
தன்னையும் அறியாமல்
உறவுகளையும் அறியாமல்
உண்பதிலும் உடுப்பதிலும் களிப்பதிலும்
நம்பிக்கைகளிலுமே தம்மை வளர்ப்பவர்களாய்
எங்கும் உலவிக்கொண்டிருந்தது
பொதுசனம்.
குழந்தைகளுக்காக மன்னித்து
குழந்தைகளோடு விளையாடிக் களிக்கிறது
இயற்கையின் கீதலயம்.