அந்த இசை
மூலைகளில் படிந்த ஒட்டடைகளை நீக்கினேன்.
ஒவ்வொரு பொருளையும் தொட்டு அதனதன் இடத்தில் வைத்தேன்.
தூரெடுக்கப் பட்ட கிணறு போலாயிற்று அறை.
புனித நீரில் குளித்து வியர்வை நாற்றமில்லா ஆடையணிந்து
மாலை உலாக் கிளம்பியபோது
கேட்கத் தொடங்கிய அந்த இசை
நீடிக்கவில்லை.
வழிப்பறிக்கு ஆளானவன்போல் திரும்பினேன்.
விடியும் வரை
இரவின் மடியில் முகம் புதைத்து அழுதேன்.
-புல்வெளியில் ஓரு கல் (1998)