இந்த மனிதர்கள்
தளிர்நடைச் சிசுக்களாய்
சொர்க்கத்திலிருந்து வந்த
தேவதைகளை நடத்தியபடி
"மாமாவுக்கு வணக்கம் சொல்லு" என்றபடி
உலவும் மனிதர்களாய்
இன்று ஓர் அற்புத உலகக் காட்சி!
இந்த மனிதர்கள் எல்லோருமே
சொர்க்கத்தை
கவிதையின் மதம் உலவும்
கடவுளின் ராஜ்ஜியத்தை
படைத்துவிடும் முகமாய்
தங்கள் குழந்தைமையைத்தான் இப்படி
வெளியே உலவ விட்டுள்ளார்களா?
அல்லது
தங்கள் வேண்டாமையினால்தான்
இப்படி வெளியே விட்டுவிட்டு
அதையும் அறியாமலே உலவுகிறார்களா?
யாண்டும்
களங்கமில்லாத
கருப்பை உடையவர்களில்லையா
இந்த மனிதர்கள்?
தங்கள் மூடத்தனங்களால்
சொர்க்கத்தை மூடிவிட்டு
புகைமூட்டத்தில் திணறிக்கொண்டிருப்பவர்கள்தாமோ?