காற்று
இந்தக் காற்று வெளியிடையே - கண்ணம்மா
நீதான் சொல்ல வேண்டும்.
வெளி அல்ல, வெளியிலுள்ள
அசைவிற்குப் பெயர்தானே காற்று?
பற்றி நிற்பதன்றி
வருடிச் செல்வதற்குப் பெயர்தானே, காற்று?
தான் என்பதும் ஆசை என்பதும்தானே
பற்றுகிறது?
பற்றாது வருடிச் செல்வதுதானே
அன்பு என்பது?
எங்குமிருப்பதனால்
அது ஓடிப் போவதேயில்லையே!
சென்று கொண்டேயிருப்பதுபோல்
அது வந்துகொண்டேயிருக்கிறதே;
பின் எதற்கு - என் கண்ணம்மா
ஆசையும் அச்சமும் சேகரிப்புகளும்?