Monday, September 30, 2013

ஏதும் செய்ய இல்லா நேரம்

1
ரயில் சக்கரங்களால் இணைந்தன
இணையாத தண்டவாளங்கள்.
உக்கிரமானது எனது பிரயாணம்.
ஏதாவது ஒரு ஸ்டேஷனில் இறங்கி ஆசை தீர நடக்கலாம்;
சுவடுகள் பதிக்கலாம்; ஆனால்…
க்ஷணமும் ரயிலை விட்டிறங்க மனசில்லை

2
ஸ்டேஷன்களில் நின்று டீ விற்போனே
சிற்றுண்டி, பழங்கள், பத்திரிகைகள் விற்போனே
இங்கே வா.. நீதான்… வா.
வந்துபோகும் பயணியிடம் கூட
நீ நேர்மையான வியாபாரியாய் இருப்பதற்கு
ரொம்ப ரொம்ப நன்றி! ஆ!
புறப்பட்டுவிட்டது வண்டி!

3
நாம் ஒருவரையொருவர் நோக்குவதென்ன?
நம் நினைப்புகளோ என்றும்
இணையாத தண்டவாளங்கள்
எப்போதும் ரயிலுக்கு முன்னும் பின்னுமாக

எண்ணங்களின் புகை மண்டாமல்
நாம் ஒருவரையொருவர் நோக்கலாகாதா?
அவரவர் ஸ்டேஷன் அவரவர் குறிக்கோளாயிருக்க
உறவின் நிழலாய் வரத்தானே செய்யும் பிரிவு!

ஸ்டேஷனில் இறங்கி
ஏக்கத்தோடு என்னை நோக்கும் பெண்ணே!
நான் இன்னொரு ஸ்டேஷனில்
இறங்க நினைத்திருந்தால்
அதைவிடுத்து உனக்காக
இந்த ஸ்டேஷனிலேயே இறங்குவேன்
தண்டவாளங்கள் இணைய, தண்டவாளங்கள் மேல்
நாம் கைகோர்த்து நடந்து செல்லலாம்.
ஆனால் நானோ எந்த ஸ்டேஷனிலும் இறங்க விரும்பாத
ஒரு விநோதமான பயணி. போய் வா.
எந்த ஸ்டேஷனில் நின்று நீ பயணம் மேற்கொண்டாலும்
அப்போது நாம் சந்திக்கலாமே

Read more...

காதல்

’நான் உன்னை எவ்வளவு காதலிக்கிறேன் தெரியுமா?
உலகிலுள்ள எல்லாவற்றையும்விட
உன்னையே நான் அதிகம் காதலிக்கிறேன்’

’அப்படியானால் உன் பிரக்ஞையில் என்னோடுகூட
எல்லாப் பொருள்களும் இருக்கின்றனவே’

அவளுக்காய் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்தேன்
’நான் உன்னைக் காதலிப்பது மட்டுமே அறிவேன்’
’அப்படியானால் நல்லது, வா’
’……………………………………’
’வா. ஏன் அப்படியே நின்றுவிட்டாய்?’
’இல்லை. இப்பொழுது
என்னால் உன்பின் வரமுடியாது’
’ஏன்? அதற்குள் என்னாயிற்று உனக்கு?’
’இப்பொழுது
காதல் மட்டுமே என்னிடமுள்ளது.
வெறும் காதல்’

Read more...

Sunday, September 29, 2013

வேட்டை

புலியின் மேலுள்ள கோடுகள்போல்
உடம்பெங்கும் சவுக்கடி
ஓயாத வலி, ஒரு புலி

உனது கண்கள்!
அதற்குள்ளே விநோதமான ஒரு வேல்
உனக்கும் எனக்குமிடையேயுள்ள
தூரம் எவ்வளவாயினும்
அவ்வளவு தூரம் நீண்டு என்னைக் குத்திக் கொளுவி
தன்னகத்தே இழுத்துச் சுருண்டுகொள்ளும் வேல்.

புலிதான் எனினும்
வேட்டைக்காரன் இழுத்துச் செல்லும் இரை நான்
வேலின் கொக்கி இழுப்பில்
மாமிசம் கிழிந்த கருணையால்
நான் விடுபட்டு நிற்கையில்
மீண்டும் பாய்ந்து கொளுவி
இழுத்துச் செல்கின்றன உன் விழிகள்…

தம்மை இழுத்துச் செல்லும் ஜீவநதியில்
நம் உடல்கள் சிலிர்த்த சிலிர்ப்புக்கள்…!

சிருஷ்டியின் கைகளில் பட்டுக் கொள்ளத்தானா
இத்தனையும்?
உன் கண்களுள் உற்றுநோக்குகிறேன்.
அங்கே நான்-
அந்த வேட்டைக்காரனாய்
அவன் கைகளிலிருந்து பெருகும் ஜீவநதியாய்
சிருஷ்டியாய்…

Read more...

Saturday, September 28, 2013

காமம்

உன்னைக் கண்ட முகூர்த்தமே
என்னை உன்னில் இழந்தேனோ?

இழந்த என் ஜீவனைத்தான்
உன் இதழில் என் இதழ் பொருத்தி
மீட்க முயல்கின்றேனோ?

மீண்ட என் ஜீவனோ – ’அநியாயமாய்’ –
என்னையே எரிக்க
என்னை
உன்னிலே வடித்துவிட்டு

சதா
கட்டை போலிருக்கவே முயல்கின்றேனோ?

Read more...

கோவணம்

வளர்ச்சியினைக் கண்டு மதனி சிரிக்க,
எனக்குள்ளே ’ஆண்மை’ எரிய, என்னை
கைக்குள்ளிருக்கும் சிசுவாகவே கண்டு
அம்மா அவள் பாட்டுக்குத் தேய்த்துக் குளிப்பாட்ட
கூடப் படிக்கிற பையன் ஒரு நாள் பார்த்துவிட்டுப்
பள்ளியெங்கும் ’வெட்கம்’ பரப்ப…
தீர்மானமாய் எடுத்து அணிந்து கொள்ளவிடாதபடி
ஏதேதோ தயங்க வைக்க,
ஒரு நாள்
அம்மாவின் அசப்பில்
மதனியைக் கண்டபோதோ
வெடுக்கென அணிந்து கொண்டேன்?
ஒரு நாள்
மதனியின் அசப்பில்
அம்மாவைக் கண்ட போதோ
மீண்டும் இந்த அம்மணங் காத்தேன்?

Read more...

Friday, September 27, 2013

மரத்தடியில்

மரத்தில் கட்டப்பட்ட தூளியில் துயிலும் குழந்தையைத்
தாலாட்டுகிறது
யாதுமாகி நின்ற பிரபஞ்சம்

அந்த மரத்தடியில் போயமர்ந்து
தியானிக்கலாம்
கவிதை எழுதிக்கொண்டிருக்கலாம்
குழந்தை அழுது காலுதைக்காதவரை

Read more...

கன்னி

உடல் கூசி, பரபரத்து ஒரு கூரைநோக்கி
ஓடி ஒண்டிய +2 தாவணியே!
பொட்டென்று விழுந்த ஒரு மழைத்துளி
வீதியில் வைத்து
திடுமென்று உன்னைப் பற்றி இட்ட முத்தம்

வெளியெங்கும்
ஆவேசமாய்ப் பெய்யத் தொடங்கிய மழையை
ஓயும்வரை பார்த்துக்கொண்டு நின்றாய்

இட்ட அடிகள் தழுவி
எடுத்த அடிகளுக்கு ஏங்கியுமாய்
பாதம் பற்றிய மழைநீர் கெஞ்ச
நிற்கிறாய் சற்று; ஆனால்
அப்படியே நின்றுவிட முடியவில்லை

பார்க்குமிடமெல்லாம் பளிச்சென்று
நனைந்து நின்றன மரங்கள், பறவைகள்.
பன்றிகளோடு பூமி.
நீ மட்டும் ஏக்கந் ததும்பும் முகத்தோடு
பத்திரமாய் வீடு வந்து சேர்கிறாய்

Read more...

Thursday, September 26, 2013

கீரைப்பாத்தி நடுவே ஒரு ரோஜா

யூனியன் போராட்டம், சினிமா விளம்பரம்,
ஃபேமிலி எய்டு போன்ற
எல்லா நோட்டீஸ் தாள்களிலும் கிடைக்கிற
வெற்றிடங்களை
கவிதை எழுதப் பயன்படுத்துகிறேன்
கீரைப் பாத்தி நடுவே
ரோஜாவும் வைத்திருக்கிறேன்

வேலியற்ற என் வீட்டுக் கீரைப்பாத்திகளை
அண்டைவீட்டு விலங்குகள் மேய்ந்துவிடுகின்றன
(வேலியிடப் போகிறேன் அதற்கு)
விலங்குகளையும் முந்திக் கொண்டு
என் ரோஜாவைத் திருடுவது மட்டும்
யார் என்று அறிகிலேன்!

கொடுப்பதற்கு மறுக்காத என்னிடம்
தன்முகம் மறைத்துக் கொள்ளவோ திருட்டு?

Read more...

Wednesday, September 25, 2013

நாடகக் கொட்டகை

எல்லா வேஷங்களுமே
எனக்குப் பொருந்தாமலே
கழிந்துகொண்டிருக்கிறது
ஒப்பனை அறைக்குள் உட்கார்ந்து அழுகிறேன்
பலபலவென்று கைதட்டல்…
என் கழிவிரக்கமும், ஒரு நடிப்பென அறிந்தவேளை
நடிப்புக் கோலத்தில் நடிப்பைத் துறந்தவனானேன்
ஆனால், விடுவார்களா என்னை
என் சக நடிகர்கள், ரசிகர்கள்?
பார்வையாளர்களிடமிருந்து ஒரே கூச்சல்!
ப்ராம்டர் பல்லைக் கடித்தபடி
வசனம் எடுத்துக் கொடுக்கிறார்

நான் சுதாரித்து என் திறமைகளை அணிந்துகொண்டு
பொய்ப்பல் கண்ணடிக்கச் சிரித்து
ஒப்பனை முலைகளை அசைத்தும்
அடிக்கடி கள்ளப்பார்வை நீட்டியும்
எவ்வளவு அசிங்கமாகவெலாம் ஆரம்பித்தாகிவிட்டது!

இக் கேவல வாழ்வுக்கிடையிலும்
கைதட்டலுக்காய் ஆசைக்கண் நீட்டியபோது-

பார்வையாளரே இல்லாத கொட்டகை!
யாரோ ஏளனமாய்ச் சிரிக்கும்
சிரிப்புமட்டும் கேட்கிறது

Read more...

Tuesday, September 24, 2013

ரயிலில் சந்தித்தவன்

ஏறியது தெரியும்
இறங்கியது தெரியும்
வேறொன்றம் தெரிந்திலேன்
நீண்ட பயணம்தான் அது எனினும்
இரவு அது;
உறக்கம் கொண்டுவிட்ட இரவு

ஓர் அந்திப்பொழுதின் அழகைச்
சிதறடித்துக் கொண்டு ஓடிவந்து
வண்டியைப் பிடித்தேன்
ஆசுவாசம் கொண்டு சகமனிதர்களை
நேசத்துடன் நோக்கத் துவங்குகையில்-
என்ன பரிதாபம்-
விழிகளை உறக்கம் கவ்விக்கொண்டது

யார் யாரையெல்லாமோ சந்தித்தது
உறவாடியது; பேசிச் சிரித்தது; விவாதித்தது;
நிற்கும் ஸ்டேஷன்களில் நின்று
உணவு விற்போரைக் கண்டது; வாங்கி உண்டது
எல்லாம் உறக்க மயக்கத்தின் போதையில்
வந்து போன பிம்பங்களாய்க் கழிந்தன

இன்று,
என் கதவைத் தட்டி அறைக்குள் வந்து நிற்கிறாய்
தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டு.
நீ கூறும் என் பயண நாட்களை வைத்து
சரிதான் என்று ஊர்ஜிதம் செய்கிறேன்

என் உறக்கத்தின்
போதை இருளிலிருந்து வந்திருக்கிறாய்.
மேலும், நான் தூங்கியபோது விழித்திருந்து
என்னைக் கண்டவன் நீ
ஆ!
உன்னைச் சந்திக்கிறதில்தான் எவ்வளவு மகிழ்ச்சி!

Read more...

Monday, September 23, 2013

இரவின் அமைதி

சாந்தி!
இன்னும் சில வாரங்களில் நான் உன்னை
அழைத்துக் கொள்ள முடியுமென நினைக்கிறேன்

அடுத்த அறையில் நமது அச்சு இயந்திரங்கள்
அவற்றின் இரைச்சல்.
நம் போஜனத்துக்கான இது
தவிர்க்க முடியாதது. அதே சமயம்
அதன் ஓசை கொடியது… முக்கியமாக இரவில்

இரவில், இரவின் குளிர்ச்சி உள்ளது
நக்ஷத்ரங்கள் உள்ளன; நிலவும் இருக்கிறது
இரவின் அமைதியை நாம் இழந்ததால்
அனைத்தையும் இழந்தவர்களாகி விட்டோம்

இதில் நீ தப்பிக்க உனக்குத் தாய் வீடிருந்தும்
என்னோடு சேர்ந்து
உன் அமைதியை தப்பிக்க விட்டுவிட்டாய்

பேறு காலம் உனக்குத் தாய்வீட்டையும்
இங்கு உனக்கு அடிக்கடி கிட்டாது போய்விடுகிற
இரவின் அமைதியையும்
நல்கியிருக்கிறது. எனக்கு சந்தோஷமே

குழந்தை எப்படி இருக்கிறது?
அது முகம் பார்க்க ஆரம்பித்திருக்கிறது
என்று எழுதியிருந்தாய். அதன் புலன்கள் எல்லாம்
இப்போதுதான் வளர்ந்துகொண்டிருக்குமாமே

இரவின் அமைதியில் அது துயில்கொள்ளும்;
கனாக் காணும்; கவிதை காணும்; சங்கீதம் கேட்கும்.
இரவின் அமைதியில் அது ஆனந்தம் கொள்ளும்;
அழகைப் பருகும்; எல்லாவற்றையும் பார்க்கும்.
இரவின் அமைதியில் அது சிரிக்கும்.

இயந்திரங்களின் அகோரக் கூந்தல்
வளரும் அதன் புலன்களைக் கெடுத்துவி்ட்டால்…
என்ற அச்சம்.. உனக்கும் எனக்கும்!
டாக்டரும் கூட அப்படியே பயமுறுத்துகிறார்.
கர்ப்பவாசம்போல்
எவ்வளவு ஆறுதலாயிருக்க வேண்டும் இரவு!

Read more...

Sunday, September 22, 2013

அஸ்தமனமற்ற பகல்

வார விடுமுறை
ஓடிப்போய்க்கொண்டிருந்தேன்
என் காதலியைச் சந்திக்க

மேலைத் தொடுவான் நோக்கி
இறங்கிக் கொண்டிருந்தது
முழுநிலவு போன்ற மாலைச் சூரியன்
நான் நன்றாக ஏறெடுத்துப் பார்க்கமுடியும் படியாய்
இந்த மாலையில்தான் இந்தச் சூரியன்

முன் நின்று என்னையும் என் பஸ்ஸையும்
ஈர்த்துச் சென்றுகொண்டிருந்தது அது.
எல்லாம் அழகு பெற்றன அதன் ஒளியில் –
தரிசுகள், வயல்கள், தொடுவான் வரை விரிந்த
நிலப்பரப்புடைய ஆகாயம், தூய காற்று எல்லாம்…

ஆனால்; தொடுவானில் அல்ல;
சூரியன் இறங்கியது
எல்லாவற்றையும் தாண்டி
இந்த நகரத்தில்தான். அப்போது
மலர்ந்து மணம் வீசின மின்விளக்குப் பூக்கள்
பஸ் விட்டிறங்கி நடந்து ஒரு வீட்டையடைந்தேன்
அங்கேதான் என் சூர்யன் இறங்கியிருந்தது
ஈரம் பேணி நான் கொண்டுவந்த ரோஜா ஒன்று
என் ப்ரிஃப்கேஸிலிருந்து பூத்தது

Read more...

Saturday, September 21, 2013

பறவைகள் எச்சமிட்டிருந்த விதைகள்

ஒரு நாள் – என் மாடியெங்கும் –
பறவைகள் எச்சமிட்டிருந்த விதைகள்!
என்ன விதைகள் அவை என்று தெரிந்தாலும்
பெயர் தெரிவதில்லை
அவற்றை நான் உரைப்பதற்கு!

அனைத்தையும் சேகரித்துக் கீழே வந்தேன்
மனைவியிடம் ஒன்று; குழந்தையிடம் ஒன்று;
வந்த நண்பர்களிடமெல்லாம் ஒன்று ஒன்று
அன்றாடம் நான் சந்தித்த ஒவ்வொருவரிடமும்
மறக்காமல் ஒவ்வொன்று
ஆர்வமாய்க் கொடுத்து வந்தேன்

ஒருவர் அதை என் கண்முன்னே
வாயில் போட்டரைத்து நன்றாயிருக்குதென்றார்
இன்னொருவர், ’நேற்று நீங்கள் தந்த பருப்பைச்
சுட்டுத் தின்றோம். ரொம்ப அருமை!
ஒரு கிலோ வேண்டும்’ என
வீட்டிற்கு வந்துவிட்டார்

ஒவ்வொரு நாளும் மாடிக்குச் சென்று
நான் சேகரித்து வந்தேன் நிறைய விதைகள்
விரிந்த பரப்பிற்குத தாங்கள் சொந்தமென்று
என்னை ஏய்த்து வாங்கிச் சென்றார்
வறுத்தும் அவித்தும் தின்றுவிட்டதறிந்தேன்.

எனக்கு என் வீடுபோக எஞ்சியிருந்த சிறுஇடத்தில்
ஊன்றியிருந்த ஒரு விதை தவிர
நான் சேகரித்தவை ஏதும்
பயனுற்றதாய்த் தெரியவில்லை

Read more...

Friday, September 20, 2013

கூழாங்கற்கள்

இக் கூழாங்கற்கள் உண்டு
வியப்பின் ஆனந்தத்தில் தத்தளிக்கும்
உன் முகம் என
எவ்வளவு பிரியத்துடன் சேகரித்து வந்தேன்.
’ஐயோ… இதைப் போய்…’ என ஏளனம் செய்து
ஏமாற்றத்துள் என்னைச் சரித்துவிட்டாய்1

சொல்லொணாத
அந்த மலை வாசஸ்தலத்தின்
அழகையும் ஆனந்தத்தையும்
சொல்லாதோ இக்கூழாங்கற்கள் உனக்கும்
என எண்ணினேன்

இவற்றின் அழகு
மலைகளிலிருந்து குதித்து
பாறைகளூடே ஓடும் அருவிகளால்
இயற்றப்பட்டது

இவற்றின் யௌவனம்
மலைப்பிரதேசத்தின்
அத்தனைச் செல்வங்களாலும்
பராமரிக்கப்பட்டது

இவற்றின் மௌனம்
கானகத்தின் பாடலை
உற்றுக் கேட்பது

மலைப்பிரதேசம் தன் ஜீவன் முழுசும் கொண்டு
தன் ரசனை அனைத்தையும் கொண்டு படைத்த
ஓர் உன்னத சிருஷ்டி

நிறத்தில் நம் மாம்சத்தையும்
பார்வைக்கு மென்மையையும்
ஸ்பரிசத்துக்குக் கடினத்தன்மையும் காட்டி
தவம் மேற்கொண்ட நோக்கமென்ன? என்றால்
தவம்தான் என்கிறது கூழாங்கற்களின் தவம்

Read more...

Thursday, September 19, 2013

சித்தார்த்த ராத்திரி

ஒவ்வொன்றாய் திரைகளனைத்தையும் விலக்குதலோ
சுற்றிச் சுற்றிச் சேலை களைதல்?
திரைகளனைத்தும் நீங்கி
நிர்வாணம் காணவேண்டிய அரங்கில்
ஒரு பேண்டேஜ் கட்டாய் உன் பிரா!

தரிசனம் தந்த அதிர்ச்சியா?
ஏன் ஏன் என்னவாயிற்று உனக்கு என
என்னை உலுக்குகிறாய் நீ
ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்கிறேன்
இல்லை ஏதோ இருக்கிறது…
என்றாலும் நீ
எதுவும் கேட்டுக்கொண்டிருக்கவில்லை

அரவணைந்தன உன் கைகள் என்னை

அரவணைப்பைத் துய்க்காது
விலகி ஓடி அழலாமோ இதயம்?
சற்று நேரம் அல்லது 2500 ஆண்டுகள் கழிந்து
மீண்டு திரும்பியவன் காண்கிறேன்:
என் மாம்ச உடம்பின்மீது உன் கரம்
ஒரு சிகிச்சைக் கட்டாய்த் தழுவியிருப்பதை

Read more...

Wednesday, September 18, 2013

அம்மு குட்டி

எழுதவிடுவதில்லை என் குழந்தை அம்மு
அதன் கர்ப்பவாசம் முதல்
’அவள்’ தாய்வீட்டில் இருந்த காலம் வரை
ஒரு நாவல் ஒரு கட்டுரை சில கவிதைகள் என
எழுதிக் குவித்திருந்தேன். இப்போது
எழுத விடுவதில்லை என் குழந்தை

தாத்தா பாட்டி வேலைக்காரி போன்ற
உறவுகள் ஏதுமில்லை எங்களுடன்
நாங்கள் மூவர்
நான் குழந்தையை கவனித்துக் கொள்கையிலும்
அது தூங்குகையிலும்
அவள், வீட்டு வேலைகளில் இயங்குகிறாள்
அவள் எங்கள் அம்முவைக் கவனித்துக்கொள்ள
எனக்குக் கிடைக்கிற சிறுபொழுதில்
அப்படி ஒன்றும் பெரியதாய்
எழுதிவிட முடியவில்லை

உயிரின் சுபாவம் ஆனந்தம் என்பதை
என் குழந்தையிடமிருந்தே நான் கற்றேன்
மேலும்
ஆனந்தம், அழுகை என்னும்
ஒரு ’பைனரி’ பாஷையில்
அனைத்தையும் அது சாதித்துக்
கொண்டதையும் கண்டேன்

இந்தக் கோடை விடுமுறையில்
ஒரு கை பார்க்க வேண்டும் எழுத்தை எனத்
திட்டங்கள் வைத்திருந்தேன்.
திட்டங்கள் தவிடுபொடி, அம்முவின் சிரிப்பில்
(கவலைகள் உட்பட)

Read more...

Tuesday, September 17, 2013

சில நாள்

தொடர்ந்து பெய்த மழைகளால்
நனைந்து குளிர்ந்திருந்தது பூமி
தொழிற்சாலைகளின் ஓசைகளடங்கிய
ஓய்வுநாளின் அமைதி
மேகங்களைப் போர்த்திக்கொண்ட நக்ஷத்ரங்கள்
கம்பளி போர்த்திய நிலா
எனக்குப் பிரியமான குளிர்காற்று

ஆனால், தொட்டிலில் தூங்கும் குழந்தைக்காகக்
கதவைச் சாத்துகிறேன். அவளுக்காகவும்.
(என் உடம்புக்கும் ஆகாதென்கிறாள்)
சுகமாய் விரிக்கப்பட்டிருக்கிறது எங்கள் படுக்கை
சாயுங்காலம் மொட்டுக்களாயிருந்த மல்லிகைச்சரம்
விரிந்து மணம் வீசிக்கொண்டிருந்தது அவள் கூந்தலில்
காற்று வெளியெங்கும் நிறைந்துள்ள குளிரில்
அந்த மணம் நகராது ஆசைகொண்டு தங்கியிருந்தது
அவள் இரவு உணவுத் தயாரிப்பிலிருந்தாள்

எங்கும் துக்கத்தின் சுவடுகளற்ற சாந்தி
அப்போதுதான் அந்த உணர்வு தோன்றியது எனக்கு
திடீரென இங்கு வந்து சேர்ந்தவளே இவள்
மிக அன்யோன்யமாய் இங்கு உலவுகிறாள்

அந்த காஸ் ஸ்டவ் நான் வாங்கியதுதான்
மிக விரும்பி அவள் உடுத்தியிருக்கும் அந்தப் புடவை…
இதோ இந்த பீரோ… மற்றும்…
வீட்டிலுள்ள அத்தனைப் பொருள்களுமே,
இந்த வீடே என் உழைப்பால் கட்டப்பட்டதுதான்.
கட்டும்போது நானும் ஒரு தொழிலாளியாய்
நின்று உழைத்திருக்கிறேன்.
இதோ, அவள் கூந்தலிலுள்ள அந்த மல்லிகைகளும்
அவற்றைக் கோர்த்த பண்படுத்திய எனது மண்ணில்
எனது கவனிப்பில் மலர்ந்தவைதான். ஆனால்,

இவள்தான் என்றும் இங்கே இருக்கிறவள் போலவும்
நான் இங்கு சிலநாள் தங்கிப்போக வந்தவனே போலவும்
ஒரு உணர்வு

Read more...

Monday, September 16, 2013

புள்ளிக் குயில்

எங்கள் வீட்டு முருங்கை மரத்தில்
அதனைக் கண்டேன்
(மரங்கள் செழிக்கும் மழைக் காலங்களில் மட்டுமே
இங்கே அபூர்வமான பறவைகள் வருகின்றன)

அதன் பெயர் தெரியவில்லை எனினும்
அதை நான் நன்கு தெரிந்தவனாகவே இருந்தேன்
நான் எதையோ பார்த்து நிற்பதைக்கண்ட வேலையாள்
வந்து பார்த்து, ’புள்ளிக்குயில்’ என்றான்
’சரி’ என்ற நான் ஓசைப்படாமல் பின் நகர்ந்து
பொம்மையோடு விளையாடிக்கொண்டிருந்த
என் குழந்தையைத் தூக்கிக்கொண்டு
அடுக்களையில் கைச்சோலியை போட்டுவிட்டு வரும்படி
மனைவியையும் அழைத்துக்கொண்டு…
பூமி அதிராது வந்து அம் மரத்தடியில் ஒண்டினோம்
எங்களுக்காகவோ புள்ளிக் குயில்
அதுவரையும் பறந்து செல்லாதிருந்தது?

என் வேலையாள் கையில் கவண்கல்லோடு வந்தான்
அதுவரையம் அது பறக்காதிருந்தது
குறிபார்த்து கவண் ரப்பரை இழுத்த அவன்மீது
வெறுப்பை உமிழ்ந்த என் மனைவியின் பார்வையை
வேண்டாம் வேண்டாம் எனத் தடுத்தது
துயரம் தோய்ந்த எனது புன்னகை

அதற்கு உதவவேண்டுமென்றும்
எனக்குத் தோன்றவில்லை
ஆனால்
கவண்கல் பாயும் போதும்,
கவண்ரப்பர் இழுபடும்போதும்
துடித்தது எங்கள் உயிர்

அவன் இன்னொரு கல்லை எய்தான்
இறக்கையில் சிலும்பலாய் அடிபட்டு நகர்ந்து
இன்னும் எங்கள் பார்வையில் விலகாதிருந்தது அது

அவன் இன்னொரு கல்லை எய்தான்
திடுக்கிடல் ஏதுமில்லை
’போதும்’ என நினைத்ததுபோல்
சிறகடித்துப் பறந்தோடிற்று அது

Read more...

Sunday, September 15, 2013

உனது சட்டை

உனது சித்து உடம்பிற்கு
எப்போதும் பெரிதாகவே இருக்கிறது
உனது போஷகனுடைய சட்டை

அது பளபளப்பு குறையவில்லை
கிழிந்து காலாவதியாகி விடவில்லைதான்
வேறு எந்தக் குறையுமில்லைதான்
ஆனாலும் அதன் சைஸ்… அந்த ஒன்றுதான்…

உன் உடற்கட்டு பிரமாதம் அல்லதான் என்றாலும்
உனக்கே உனக்கென்றிருக்கும் உடல்!
அதற்கென்றும் ஒரு அழகு இருக்கிறதே!
அதை ஒரேயடியாய் புறக்கணிக்கலாமா?

ஏழைதான் நீ என்றாலும்
விடாதே
கொஞ்சக் காசையாவது செலவழி
அந்தச் சட்டையையே உன் சட்டைக்கான
மூலப்பொருளாக்கி விடு

Read more...

Saturday, September 14, 2013

பறிக்கப்படாத பூக்கள்

ரோஜாப் பூக்களின் மத்தியில் உன் முகம் –
அதுவும் ஒரு பூ என்றிருந்தேன்.
ஆனால்
பூக்கள் பூக்களைக் கொய்வதில்லையே!

தன் பூந்தோட்டத்தில் நின்று
பூப்பறிக்கும் பூக்காரி ஒருத்தி
சின்ன மீன்களை விழுங்கிக்கொண்டு நகரும்
ஒரு ராக்ஷஸ மீனைப்போல் தோன்றுகிறாள்.
அந்தப் பூந்தோட்டத்தைப் போல
இது வியாபாரத்துக்காய்ப் போட்டதல்ல!
வெறும் அழகுக்கு

என்னை முட்டாள் என்று ஏசு
பிழைக்கத் தெரியாதவன் என்று சொல்
எப்படி வேண்டுமானாலும் எண்ணிக்கொள்.
என் ரோஜாத் தோட்டத்துள் புகுந்து
என்னைப் பரிதாபமாய் நோக்கும் பெண்ணே!
என்னை மன்னித்துவிடு! விலகு!
உன் ஆசை தன்னை உணராதது
சரி, போகட்டும்.
ஒன்றே ஒன்றைமட்டும்
பறித்துக்கொள் – உன் ஆசைக்கு.
மற்றனைத்தையும் விட்டுவிடு – அந்த அழகுக்கு.
ஆனால் இதைத் தெரிந்து கொள்:
உன் விரல்களுக்கு மட்டுமல்ல,
ரோஜாவின் மென்மையும் மணமும்
போட்டோவுக்குக்கூட
அகப்படமாட்டேனென்கிறது
மட்டுமல்ல; இதற்கெல்லாம் மேலே ஒரு உண்மை:

பறிக்காத இப்பூக்களின் வெறும் அழகில்தான்
காய்க்கிறது
என் பசி தணித்து உயிர் வளர்க்கும் கனி

Read more...

Friday, September 13, 2013

வறட்சி

1.
நெருப்பென விரிந்த இந்த வெயிலில்
பறிக்காத ஒரு தாமரை மலர்போல்
நீ காணுவதெங்ஙனம்?
எந்தவொரு ஊற்றில்
வேர்கொண்டுள்ளது நின் உயிர்?

2.
விழிகளில் நீர்;
கைகளில் வெற்றுக்குடம்.
வெற்றுக்குடம்
கனக்கிறது

3.
தவியாய்த் தவிக்கிறது,
தண்ணீர்ப்பானையைச் சுற்றி வெயில்
கைகளில்லாத மண்பானை
கசிகிறது
கைகளில்லாத வெயில்
நக்குகிறது

4.
நெருப்புக் கால்தடங்கள் கேட்டதும்
நடுங்குகின்றன – மண்ணுள் பதுங்கிய
வேர் பெற்றிராத வித்துக்கள்
ஆழ வேர் பெற்றுள்ளவை
வெயிலை எதிர்த்து வெல்கின்றன
நீர் கேட்டுத் தவிக்கும் மண்ணுக்கு
நிழலைக் கொட்டுகின்றன, மரங்கள்

6.
மரங்கள்!
ஆ! மரங்களல்லவா கோடையை
வசந்தமாய் மாற்றுகின்றன!
கோடைவெயிற் கொடுமையை
நீ எப்படி வெல்கிறாய்?
மரத்த தோலும் பழுதுற்ற நின் பார்வையும்
வசந்தத்தை எதிர்க்கும் கவசங்களாயினவோ?

Read more...

Thursday, September 12, 2013

டிசம்பர்

இரவைக் காவல் காத்துக்கொண்டிருக்கிறான்
இரவுக் காவலன் ஒருவன்
காவலனின் கண்களில்
உறக்கத்தைத் தூவுகிறது
பகலுடன் கலக்க நினைத்த இரவு
வாசல்களெங்கும்
மலர்களுக்குமுன் மலர்ந்திருந்த
மார்கழி மாதக் கோலப் பெண்கள் –
உதயச் சிசுவை அள்ளித் தத்தம்
வீட்டுள் எடுத்துச் சென்றனர்

2.
விடிகாலைப் பனியும்
விடிகாலைச் சூரியனும்
காதலர்கள்
விடிந்த காலையில்
தன் இயல்பினாலேயே
தன் காதலியை இழந்த
தனிமையில் நின்றான் சூரியன்
பனியின் சுவடுகளை
எங்கும் தாங்கியிருந்த
இயற்கையில் களித்து ஏகாங்கியானான்

3.
இளமையின் விழிகளை முத்தமிடுகிறது பனி
நடுங்கி அழுகிறது என் முதுமை
என்னைவிட முதிர்ந்த என் தோட்டமோ
தளிரும் பூவும் கனியும் பறவைகளுமாய்ச் சிரிக்கிறது
ஒரு மூலையில்
சுள்ளியும் சருகும் நெருப்பும் தந்து
என்னைத் தன்னோடணைத்துச் சேர்த்துக்கொள்கிறது
நெருப்பை என் விரலிடுக்கில்
ஒழுகவிட்டதால் எழுந்த புகை –
பனி வேடமிட்ட பாவி –
காற்றில் ஏறித் தோட்டமெங்கும் திரிந்து
கண்ணைக் கரிக்கிறது
கருகுகின்றன மலர்மொக்குகள்

Read more...

Wednesday, September 11, 2013

எனக்குத்தான் நீச்சல் தெரியுமே!

ஆற்றில் பிடித்துத் தள்ளினாய்
பிழைத்துக் கொண்டேன்
குளத்தில் பிடித்துத் தள்ளினாய்
பிழைத்துக் கொண்டேன்
கிணற்றிலே தள்ளி விட்டாய்
பிழைத்துக் கொண்டேன்
இன்று கடலிலே தள்ளி விட்டாயே!
தவிக்கிறேன் நான்

ஆனால் கடல் ஓர் அற்புதம்!
ஓர் அலை என்னை மூழ்கடிக்கும்;
மற்றோரலை வந்து கைதூக்கிவிடும்

Read more...

Tuesday, September 10, 2013

மூட்டைப்பூச்சியாய்…

ஏவுகணையாய்
ஒரு விரல் எனது வானில்
வெட்ட விரிந்த வெளியில்
அதன் பார்வைக்குத் தப்ப வழியேயில்லை.
மூட்டைப்பூச்சியாய் பதறி ஓடுகிறேன்.
இருள் ஒதுங்கும் பள்ளங்கள்,
பதுங்கல் குழிகள் நிறைந்த
என் ராஜ்யத்தில் போய் ஒளிந்துகொள்ள

ஆனால், என்னை அது
எங்கும் தொடர்கிறது,
வெளிக்கு இழுத்து, அல்லது
அந்த ஸ்தலத்திலேயே நசுக்கித் தீர்த்துவிட,
வந்து நிற்கும் அதன் நிழலில்
உயிரைப் பற்றிக்கொண்டு நடுநடுங்குகிறேன்

பயத்தின்
உக்கிரத் தணல் எரியும் மண்டபம் ஒன்றில்
ரத்தக் களறியின்றி மரணமுமின்றி
அந்தர்யாமியாகத் தவிக்கிறேன்.
ஆனால் அது என்மேலே நின்று
என்னை நசுக்கிவிடக் –
கூடும் பொழுதுக்குள் நான் மறையவேண்டும்
இல்லையேல் அந்த வெள்ளைவெளியில்
விரல் நச்சிய இரத்தக் கரையாவேன் – ஆகி
உயிர் பெருக்கித் தொடர்ந்தலைவேன்

Read more...

மொட்டைமாடிக் காற்றும் புத்தகமும்

குண்டடி பட்டதாய்
இறக்கையடித்துத் துடிக்கிறது
மொட்டைமாடிக் காற்றில், மறந்து
நான் தரையில் விட்ட புத்தகம்;
படிக்கையில் வானில் தடம் பதிக்காது
பறந்துசெல்லும் பறவை அது
குனிந்து எடுத்தேன்
ஒரு குழந்தையைத் தூக்குவதுபோல் –
ஆவியோடணைத்து முத்தமிட்டேன்

என்னை மறக்கச் செய்யும் காற்று
உன் சிறகுகளை ஒடிக்குமா?
ஒடிக்காது.
’என்னைப் படி’ என்று
உன்னை இறைஞ்ச வைக்கிறதோ காற்று?
நான் துடித்து, உன்னைக்
கையிலெடுத்து முத்தமிடுகையில் – நீ
அமைதி கொள்வதன் அர்த்தமென்ன?

Read more...

Monday, September 9, 2013

காதலர் பாதை

என்ன கூறுகிறது,
இடையறாத கடலின் பெருங்குரல்?
கரையோரம் ஒரு சிறு படகு
எதற்குக் காத்திருக்கிறது?
படகின் நிழலில் ஒரு ஜோடி
மண்ணில் புரண்டு
புணர்ச்சியில் ஆழ்ந்துபோனதென்ன?

2.
புணர்ந்தெழுந்தவர் தளர்ந்து நடந்தனர்.
மணல்மேட்டில் உதிதது ஒருவன் வந்தான்
வாசித்தான் தன் கவிதை ஒன்றை.
இன்பத்தின் பிடரி சிலிர்க்க,
அவள் இவனைப் பாய்ந்து தழுவினாள்
இருவரும் சரிந்தனர் அவன் நிழலில்

உவர்ப்பைக் கடந்து
சுவையற்ற பெருஞ்சுவையை ருசித்து
முத்தம் பெயர்கையில்
அவன், படகை எடுத்துக் கடலில்
மீன்பிடி வலைகளுடன்…

3.
அவர்கள் நடந்தார்கள்.
எத்தனை மண்புயல் கடந்தார்கள்?
அவை புரட்டிக் காட்டிய
எத்தனை சவஎலும்புகள் கண்டார்கள்?

கண்டுமென்ன?
யாவற்றையும் திரை போர்த்தியது
பசி, சோர்வு, பயம் எனும் பைசாசங்கள்

மணல்மேட்டில் ஒரு புது உதயம்.
பழங்களும் மீனும் விறகும் நிறைந்த ஒரு
கூடைப் பரிதி; கூடைக் கிரீடம்
அதன் இடுப்பில் ஒரு பெரிய பட்டாக்கத்தி
முகத்தில் கொம்பு மீசை
பசியாறும் பெண்ணுடம்பைப்
புசித்துக் கொண்டிருந்தன கூடைக்காரனின்
காமப்பேய்க் கண்கள்

திடுக்கிட்டு மிரண்டவளைப் பார்த்து இளித்தவன்
கையையும் பிடித்திழுக்கத் துணிந்தான்
இவன் அவனைத் தடுக்க – கைகலப்பு
அவள் பதறிக் குறுக்கிட – சிக்கல்
இவனைக் கெஞ்சித் தடுத்து, அவள்
கூடைக்காரனுக்கு இணங்கிப் படுத்தாள்

புத்துணர்வொன்று தோள்மேல் துள்ள
புகுந்தான் இவன்
தன் கோடரியைக் கையிலெடுத்துக்
காட்டுக்குள்ளே

4.
இருவரும் நடந்தனர்
எங்கும் ஒரு வேதனை, அவமானம்
கிளறிக் கிளறிக் காட்டும் மண்புயல்கள்
மூடவும் செய்வது ஏன்?
மணல்மேட்டில் இப்போது
ஒரு பெரிய கூடை
முகத்தில் அதே கொம்பு மீசை
இடுப்பில் மிகப்பெரியதோர் பட்டாக்கத்தி
அக் கூடைக்காரன் – இவள்
இருவர் கண்களிலுமே காமாந்தகாரம்!
இவள் அவளைப் பிடித்து இழுக்கவே
கொம்பு மீசைகள் கோபம்!
பட்டாக் கத்திகள் மோதல்!
கொட்டிக் கவிழ்ந்த கலயம் போல்
இரத்தக் குழம்பினில் பழையவன்!

பிணத்து நிழலில்
புணர்ந்தெழுந்து நடந்தனர் ’காதலர்’

5.
ஓடிப்போய் அவர்கள் முன்
என் கவிதையை வாசித்தேன்.
’பைத்யம் பைத்யம்’ எனச் சிரித்தது ஜோடி
திடுக்கிட்டுச் சோர்ந்து திரும்பினேன்
பிறகு –
எனது பாறை நோக்கிப் போய்விட்டேன்
ஆற்றின் அழகையெல்லாம்
அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்க

6.
’காதலர்கள்’ நடந்துகொண்டிருந்தார்கள்
மூடிமூடிப் புதையுண்டிருந்தவைகளை
மண்புயல்கள் அடிக்கடி
கிளறிக் கிளறிக் காட்டத்தான் செய்தன

கடலின் இடையறாத பெருங்குரல்
கேட்டு கொண்டேயிருக்கிறது
கரையோரம் ஒரு சிறு படகு
காத்துக் கொண்டேயிருக்கிறது
எங்கே போய்க்கொண்டிருக்கிறார்கள்
நம் ’காதலர்கள்’?

Read more...

Sunday, September 8, 2013

கைக்கோல்கள்

கால்கள் நொய்ந்தாலும்
கைகள் இருக்கின்றன
கைகள் நொய்ந்தாலும்
வயிறு இருக்கிறது

கால்கள் நொய்ந்தன என
கழிகளைப் பற்றுவோனே!
கால்கள் நொய்ந்தனவோ
கழிகள் கொண்டு ஒருவரை ஒருவர்
தாக்கிக் கொல்கையில்?

கழியைப் பற்றாதே!
பற்றுவோனைப் பற்றிக் கொல்ல
கழியில் இருக்கிறது, நாகம்!

கண்மூடிக் கும்பிட்டுக் கொண்டிருக்கையில்
கடவுளர் படத்தைக்
கரையான் தின்றுகொண்டிருக்கிறது
சுயம்வரம் நடப்பதாய் ஒருவரை ஒருவர்
வாரிக்கொண்டிருக்கும் மேடையில்
அத்தனை பேருக்குமாய்
அத்தனை எண்ணிக்கையில்
வருகிறாள் அவள்!

Read more...

பக்ஷி ஜோஸ்யம்

’இத்தனை அழகான கவிதைகளை
எப்படி எழுதுகிறாய் நண்பா?’

சும்மா ஒரு பக்ஷி ஜோஸ்யம்தான்
இதிலே, உன் பெயருக்கு, அவன் பெயருக்கு
ஊர் பெயருக்கு என்பதெல்லாம்
ஒரு சாக்குதான்.
உண்மையில் என் கிளி
ஒன்றும் அறியாதது
பச்சைக் குழந்தைமாதிரி.
ஒரு சீட்டெடுத்துத் தரும்.
தன் உயிரை ஈர்த்ததையெல்லாம்
வரைந்துவைத்த சீட்டுக்களினின்று ஒன்று.
அதுக்குத் தக
சேகரித்து வைத்த குறிப்புகளைப் புரட்டிக்
கரைவிடுவேன். அவ்வளவுதான்

Read more...

Saturday, September 7, 2013

போஸ்ட் மார்ட்டம்

1.
பைத்தியம் பிடித்துப்
புலம்பித் திரிந்துகொண்டிருந்தது
டிஃபன் பொட்டலம் கட்டிக்காத்த ஒரு காகிதம்.
எச்சிலையைத் தின்கிறது
புல்வெளியை விட்டு வந்த மாடு.
பழங்களனைத்தையும் இழந்துவிட்ட வாழைத்தார்
கடைக்காரனால், நடுரோட்டில், பஸ்கள் மிதிக்க
நார் நாராய் செத்துக்கொண்டிருந்தது,
எரிந்து முடிந்து புகைந்து கொண்டிருந்தான்
பெட்டிக் கடைமுன் சிகரெட் பிடிக்கும் ஒருவன்.
நடைபாதையில் டீ குடித்துக்கொண்டிருப்போர்
தொப் தொப்பென்று இறந்து விழுகின்றனர்.
குதியாளமிடுகிறது டீக்கடையில் பாட்டு.
கடைத்தெருக்களில் கிடந்த பிணங்கள்
திடீரென்று எழுந்து ஆர்ப்பாட்டம்.
போலீஸ்வேன் ஓடிவந்து
பிணங்களை அடுக்கி எடுத்துக்கொண்டு போனது

2.
பிணங்கள் கூடி பிழையுண்ட ஓர் உயிரை
போஸ்ட் மார்ட்டத்துக்குத் தள்ளின.
குளோரோபாமற்று
நாலைந்து பிணங்கள்
அமுக்கிப் பிடித்துக்கொண்டன.
ஒரு பிணம் அறுக்க
வெதுவெதுப்பான குருதி பீரிட, அலறி,
துடிதுடிக்கும் உயிர்தான்
தான் இன்னும் பிழைத்திருக்குங்
காரணம் என்ன என வியந்தது

3.
ஓ, டாக்டர்!
இந்த மரணத்தின் காரணங்களைக் கண்டுபிடிக்க
நீர் பிணங்களை அறுத்துப் பார்ப்பதென்ன?
குளோரோபாரமின்றி
துடிதுடிக்கும் உயிரோடு
கதறலோடு
பீரிடும் குருதியோடு
தன்னை அறுத்துப் பாரும்

Read more...

Friday, September 6, 2013

மழை

மழை மீது
(மழையின் சவக்கோலமான
மழைத் தண்ணீர் மீது)
மழை விழுந்து
மழை உயிர்த்தெழும்பும்
சிலிர்த்துக்கொண்டு.
ஒவ்வொரு துளியிலும்
ஒரு மையம் உடைகிறது
அதன் வட்டம் மழை முழுக்க பரவுகிறது
ஒரு கோடி மையங்கள்!
ஒரு கோடி வட்டங்கள்!
மழையின் கரையோரம் நான் நடந்தேன்
மழை உயிர்த்து கரை பொய்த்து
என் காலடியில் சரிந்தது
கரை சரிந்து கரை முழுகி
வெள்ளத்தில்
சதா பொய்த்துக்கொண்டிருந்தது
கரை முழுசுமே பொய்யென உணர்ந்தேன்-
தொடுவானம் போல்
மழையின் கரை ஒரு பொய்
துளியின் வட்டம்
கரையற்ற மழையில்
காண முடியாத
இருக்க முடியாத ஒன்று
புலன்களின் வாயில்களை அடைத்து
உள்ளே நோக்குகிறேன்-
திசையற்ற மனவெளியில்
மழை எங்குமிருந்து
ஒரு புள்ளியை
அல்ல, ஏதோ ஒரு புள்ளியிலிருந்து
எங்கும் பாய்கிறது
ஒரு புள்ளியை நோக்கிப் பாய்கிறது-
அல்ல, இரண்டுமே.
மழைத் தாரை
சக்திமிக்க மின்கம்பிகளாய் வீறிட்டு
இருபக்கமும் பாய்ந்து
சூரியனாய் எரிகிறது; ப்ரகாசிக்கிறது.
இப்போது மழை மீது மழை.
ஒரு பரிதி; நெருப்புக் கோளம்

Read more...

Thursday, September 5, 2013

வேகம்

ஓடு
ஒரே தாவலாய் ஏறி
உன் ’பைக்’கை எடுத்து
உன் லட்சியத்துக்கு குறுக்கே
நீ கற்பித்துள்ள கால தூரத்தை
ஒரே விழுங்கில் விழுங்கிப்
பால்யத்தில்
நீ அங்கே ஐக்யமுற்றிருந்த
அந்த நடனத்தைக் காண,
முந்தானை பற்றி நின்ற
அரை ட்ரௌசர் பையனாய்
அமர்ந்து காணப் போ…

இன்னும் சற்று நேரமேயிருக்கிறது
வேகமாய்ப் போனால்
இந்தக் கணம் முடிவதற்குள்
போய்விடலாம்

போகிற வேகத்தில்
பின் இருக்கையில் அமர்ந்து
உன்னைத் தொடர்கிற இலட்சியத்தையும்
வழியிலே உருட்டிவிட்டுத்
தன்னந்தனியாய்ப் போ!

சாலையின் இரு கரைக் காட்சிகளும்
வெள்ளையடிக்கும் மட்டையின்
ஒற்றை இழுப்பில் மறைகிற
சுவர்ச் சித்திரங்களாய்ப் பரிணமிக்க,
பால் வெளியில் சிறகு விரித்த
ஒரு கறுத்த பறவையாய்
நீ மாத்ரம் ஜனிக்க
கூட்டு உன் வேகத்தை இன்னும்…

பொந்து போலும்
ஒரு ஊற்றுக் கண்ணினின்றும்
பொங்கிக் குழைந்து அபிநயித்து
ஆடியபடி
காற்றில் இறக்கை விரித்து வரும்
ஒரு சங்கீதம்
அடிபட்ட கிரௌஞ்ச பக்ஷியாய்
கத்திச் சாக,
எதிர்ப்படும்
மாபாரதச் சோகங்களையெல்லாம்
ஒரே தள்ளாய் விலக்கிக்கொண்டு
போ…

இனி நிற்றல் என்பதே கூடாதபடி
நிறுத்தல் பற்றின நினைவே
அற்றுப்போம்படி
போ… போ

அங்கே நிருத்தம் காணக்
கூடியிருக்கும் தலைக் கடல்களை
தார்ச் சாலையாய்த் தேய்த்துக் கடந்து
உன் நிருத்த ஸெந்தரியையும்
நீ விழுங்கப் போகையில்
நிறுத்திவிட முடியாது.
போ
போய்க் கொண்டேயிரு
நீயே மறைந்து போகும்வரை

Read more...

Wednesday, September 4, 2013

ஆதார மையம்

இந்த கோளில்
எத்தனை கோணங்களில்
என் பார்வைக் கத்தி விழுந்து
இதழ் இதழாய்
கண்கள் எரிந்து குளமாக,
உரிக்க உரிய,
உதிர்ந்து போவதில்லை எதுவும்

எத்தனை கோணத்தில்
எத்தனை பார்வைக்
கத்திகள் வீழினும்
என் மனவெளிக் கோளில்
ஆச்சரியமாய்
அவைபற்றி இருந்து வரும்
ஆதார மையமொன்றுண்டு
என்ன அது?
கேட்காதே
கேட்டும் சொல்லியுமா
புரிந்துவிடப் போகிறது?

ஞாயிற்றுக் கிழமைகளில்
மனைவிக்கு ஒத்தாசையாய்
சமையல் கட்டில்
கண்ணீர் பொங்க
வெங்காயம் அரிகிறாய்

நடைபாதைச் சாப்பாட்டுக்
கடைக்காரி முன்
உணவு முடிக்கும்
கூலித் தொழிலாளியாய்,
மாம்பழத்தை
முழுசாய் நறுக்கிச்
சிதையாமல் இலையில் வைத்துத் தர
சிதையாமல் காத்திக்கிறாய்

கற்போடு
மனைவியை அமர்த்தித் தூங்க வைத்துப்
பின்
மேஜையில் காத்து நிற்கும்
வெள்ளைக் காகிதங்களைத்
தள்ளி வைத்து
துண்டம் துண்டமாய்க்
காணும் அலமாரிப் புத்தகங்களை
ஒரே பார்வையில் கூட்டி ஒதுக்கிவிட்டு
ஒரு தனிப்
பூவின் மகரந்தங்களெனக் காணும்
நட்சத்திரங்கள் மேல்
பன்னீர்ப்பூ உதிர்ந்து கிடக்கும் முற்றத்தில்
நீ பாய் விரித்துப் படுக்கிறாய்

அப்போதெல்லாம்
அப்போதெல்லாம்
உன்னால் ஸ்பரிச்சிக்கப்படுகிறதே
அதுதான்; அதுதான்.

Read more...

Tuesday, September 3, 2013

நானல்ல

குறுக்கிடும் பாதைவழி வந்து
என் முன் நடந்தாள் அவள்

சமூக பயத்துக்கு ஆட்பட்டு
நான் என் நடையைச் சுருக்காததால்
நான் அவளைப் பின் துரத்துவதாய்
காட்சியளித்திருக்கிறது அது

எங்களைக் கண்காணித்தவாறு
எங்களை ஒட்டி
உடன் வந்து கொண்டிருந்தது வேலி

வேறு யாருமற்று
அனாதையான அந்த இடத்தில்
முந்தானை பிடித்து இழுக்கப்பட்டு
இரத்தம் அதிரத் திரும்பினாள் அவள்
நானும் நின்றேன் சில வினாடிகள்
குற்றக் கூண்டுக் கைதியென

நானல்ல குற்றவாளி,
வேலியே
தனக்கு எதிர்சாட்சி

Read more...

யுத்தத்தில்

நிராயுதபாணியாய் நின்றான்
ஒரு போர் வீரன்

தன் உடல் கிழிக்கும் ஆயுதங்கள்
அத்தனையையும் கௌரவித்து ஏற்றுக்
குருதிக் கண்ணீர் வடித்து நின்றது
பகைவனின் அறியாமை கண்ட
அவன் உடல்

உயிரோ,
குருதி வடிக்காத ஒரு ’பின்-குஷன்’

Read more...

Monday, September 2, 2013

திருமாங்கல்யம்

கடலில் உப்பாக
மையம்
எங்குமிருந்தது;
எங்கும் இல்லாதிருந்தது
அதன் வட்டம்

ஒரு தலையை மையம் கொண்ட
ஒரு திருமாங்கல்யம்
நான் வரித்த உலகம்

பிரபஞ்சவெளியின் முடிவின்மையெனும்
கொள்ளைச் செல்வத்தை
மொத்த சுதந்திரத்தை
ஒரு சிறு படிவமாக்கி
தன் கழுத்திலணிந்து கொள்ளும் ஆசை

Read more...

அந்த பஸ்

பஸ் ஸ்டாப்பில், ஒரு பஸ்
சக்கரங்கள் சுழலாமல்
என்ஜின் மட்டும் இயங்கித்
தடதடத்துக் கொண்டிருக்க
அடித்துப் புரண்டு ஓடிவந்து
ஏறி அமர்ந்தேன்
(அப்படி ஓடி வந்திருக்கவே வேண்டாம்)

அந்த பஸ்
என்றும்
அப்படியேதான் இருந்தது எனினும்
பயணம் செய்கிறேன்
என்றே உணர்ந்தேன்

Read more...

Sunday, September 1, 2013

அறுத்து எறியப்படாத முலைகள்

பிரியதமே!
ஓடும்போது குலுங்கி
வேகத் தடை செய்யும்
உன் முலைகளாம் தசைத் திரள்கள்
தம் சிறுமுகம் தூக்கி
என்னை உறுத்து விழித்துச்
சொல்லும் பொருள்?

வெகு முன்னேற்பாடாய்
உன் சதைப்பரப்பில் நீ ஏற்றிருக்கும்
இந்தக் களஞ்சியங்களிரண்டும்
அருவருப்பாய்க் கனக்கவில்லையா
உன் நெஞ்சில்?

கணந்தோறும் எரியும்
வாழ்வின் உக்கிர நெருப்பில்
நின்று தியானிக்க இயலாத புருஷர்கள்
காலக் குகைகளிற் பதுங்கி
அங்கே தங்களுக்கு முன்னேயே
வந்து பதுங்கியிருக்கும்
உன் முலைகளாற் கவரப்பட்டு
சதா உன் முலை பற்றிக்கிடக்கும்
முலைக் கச்சையாயினரே!

என் உடன் வந்துகொண்டிருந்த
வேக நடையை விட்டு
கால்களை மடக்கி அமர்ந்து
பசித்தழும் சிசுவுக்கு
நீ கச்சையவிழ்க்கிறாய்!

நீ அவிழ்த்து விலக்கிய
காற்றின் தீண்டல் படாத
கச்சையின் உள் பரப்பு
புழுங்கி நாறும் குரல்
உனக்குக் கேட்கவில்லையா?
கச்சை நாண்களை ஏற்றி ஏற்றி
உன் முலையம்புகளால்
புருஷர்களை வீழ்த்தி
அவர்களை நீ
உன் முலைக் கச்சைகளாக்கிவிடும் நோக்கில்
உன் ஆதிக் குணம்தானே
விசாலித்துள்ளது!
முலைகளைப் பிடுங்கவும்
மூண்ட காலாதீதப் பெருநெருப்பில்
அநீதி நாறத் தொடங்கிய
மதுரையை எரித்துவிட்டு
மலையுச்சி ஏகி மறைந்த
கண்ணகியின் கதை தெரியாதா உனக்கு?
இனி என்று நீ வீறுகொண்டு
முலைகளை அறுத்தெறிந்துவிட்டு
என் வேக நடையோடு
வந்துசேரப் போகிறாய்
சொல்!

ஸ்திரீ சொல்கிறாள்:
புருஷ!
என் தாய்ப் பிரகிருதியால்
சீதனமாய்க் கொடுக்கப்பட்ட இத் தனங்கள்
கால நோய் பிடித்த கட்டிகளல்ல!
அன்னவளின் கருணாமிர்தம் ஊறும்
அவ்வக் கண ஊற்று

ஓடும்போது குலுங்கி
வேகத் தடைசெய்யும்
இக் கருணாமிர்தக் கருவிகள்
தம் ஸ்ரீமுகம் தூக்கிச்
சொல்லும் பொருள் கேள்:

அறிவாயோ நீ
எங்கிருந்து புறப்பட்டது
உன் வேக நடையென்று?

முலை பருகாது
முலை பற்றிக்கிடக்கும்
முலைக் கச்சைகள்
முலை நுனியினின்று
முதுகு நோக்கி ஓடிச் சிறுத்து
புண்கட்டும் துணிகளாய் நாறின பார்!
எனவே ஓடும்கால்களை மடக்கு-
உடன்
உன்னில் சுரக்கத் தொடங்கும்
முலைகள் முன்
நீயே சிசுவாய்
பருகுவாய்

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP