Wednesday, July 31, 2013

விஷம்

பாற்குடத்தில்
விழுந்துவிட்டது
விஷம்
வேர் பிடித்துப் பரவுமுன்
அள்ளி எடுத்துவிட
தவிக்கும் கைகள்
எல்லாமே விஷ அழுக்குக் கைகளானால்?


தீண்டிவிட்டது சர்ப்பம்
புண்ணில்லாத வாய்கொண்டு
கடித்துத் துப்பு உடனே
ஏனெனில்
குடலுடம்பு ஒரு புண்

காலங்காலமாய்
நான் விசுவாசத்தோடு
தொழுது வந்த தெய்வம்
ஒரு விஷ சர்ப்பம்
(பின்னால்தான் இது தெரிந்தது)
ஒரு நாள் என்னைக் கொன்று
இட்டுச் சென்றது ஓர் அமுதவெளிக்கு
இன்று அமுதவெளி முன்
ஒரு சர்ப்பம் நான்
பாற்குடத்தில் விழுந்துவிட்ட
துளி விஷம்

தெய்வத்தைக் கொன்று
பட்டத்தை அபகரித்துச் சூடிக்கொள்
இல்லையேல்
தெய்வம் உன்னைக் கொல்லவிடு
ஆள்பவள் ஒருவனுக்கே இது இடம்

Read more...

Tuesday, July 30, 2013

தராசு முள்

என் தராசு முள்
தன் அலைவுப் பிரதேசத்திற்குள்
தடுமாறியது
இருந்தும் –
நடக்கும் கால்கள் நகர்ப்புற இருட்டில்
இடையறாது தன் நிழல்களுடன்
பொருது வென்றபடி வர
கையோடு வரும் அரிக்கேன் விளக்காய்
ஒளி எப்போதும்
என் உடன் வந்துகொண்டுதானிருக்கிறது
நான் புசிப்பதற்காக
தன் உடலை மாத்ரம்
என் பாத்திரத்தில் மீனாகப் போட்டுவிட்டு
வானில் பறந்தது தராசுமுள்
மீண்டும்
மீன்கொத்தியாய் தாழ வந்தது
கடல் தன் அலைகளை இழந்து
மீனாய் நிறைந்தது
வானோ தன் வெறுமையை இழந்து
பறவையாய் நிறைந்தது

Read more...

புசித்தல்

கைக்கெட்டின ரொட்டி
வாய்க்கெட்டப் போகிற சமயம்
நிறுத்து
என விழும் தினசரித்தாள்
ஜன்னல் வழியாய்
பேப்பர்ப் பையனைப் பின்தொடர்ந்து
சாவாய் உறைந்து நின்றுவிடும்
செய்தித்தாளின் எழுத்துக்கள்
மறுகணம், அதே கணம்
அச் செய்தித்தாள் தளத்தை விட்டு
இரை தேடி உறுமியபடி
அவனை நோக்கிவரும் எழுத்துக்கள்

மழை தண்ணியின்றி
எரி்ந்துபோன ஒரு கிராமத்தைவிட்டு
வெளியேறும் கிராமத்து ஜனம்…

’கிறிஸ்துவே!
நீர் இரண்டு அப்பத்தை
ஆயிரக்கணக்கானோர்க்குப்
பெருக்கிப் பகிர்ந்த
அற்புதம் மட்டும்
எனக்கு வரவில்லையே!’
என்று இரங்கிவிட்டு
உண்ண முடியாமல் விட்டுப்போன ரொட்டியை
பசி அழைக்க திரும்பி வந்து பார்க்கையில்
ஆயிரக்கணக்கான உயிர்கள் பசியாறி
கொண்டாடும் திருவிழாத் தேராக்கியிருந்ததை
கண்டு ’கண்டேன்’ என்கிறான்
கொண்டாடிக் குதியாளமிடுகிற
எறும்புகளை உதறித் தள்ளி
எடுத்துப் புசிக்கிறான்
அந்த சத்தியத்தை – ரொட்டித்துண்டை!

Read more...

Monday, July 29, 2013

காட்சி

மண் சுவரில்
காரை உதிர் ஓவியங்கள் உயிர் பெற
அவை நடுவே
முன்னங்கால்களில் தலை சாய்த்து
துயிலும் நாய் ஒன்றின்
மார்புக்குழி உள்ளிருந்து
ஒரு மூட்டைப்பூச்சி
மெல்ல எழுந்து வெளியே நகர
நாயின் துயில்
துயிலல்ல
மரணம்!
……………
சுற்றிக்
குருசேத்ரமாய் வதையும் உலகம்
இதைக் கண்ணுற்ற காட்சியால்
திகைத்து
சித்திரங்களாகும் இம் மண்சுவரில்

Read more...

பூக்காடு

1.
எத்தனை முறை மழை பெய்தும் என்ன
பூக்காது காய்க்காது பழுக்காது
புல் புல்லாகவே தளிர்க்கிறது

2.
புல் நுனியில் ஒரு பூ காணும் ஆவல்
மேனியினின்று உயிரைப் பிரிக்கிறது.
உயிர்
வாழ்வின் புதுத்தேன் அருந்த மலர்தேடி அலைகிறது
உடன்
காமாக்னி பட்டுக் கருகாத
புல் நுனிகளில் மலர்கள் பூக்கத் தொடங்குகின்றன

3.
என்னைப் பின்தொடரும் என் நிழல்
என் மாம்சம்
என் இணை
தன் ஆசை நகங்கள் கிள்ளிய பூ
வாடி மரிக்கிறது அவள் தலையில்
மறுநாள் பிணவாடை போக ரகசியமாய்
அவள் மேனி குளித்தெழுந்தும்
மேனியின் வாடையே பிணவாடை
எனத் திடுக்கிட எழுந்து நகைக்கும்
உயிர்

4.
காலத்தின் அற்பத் தேவைக்கும்
சுயலாபக் கடவுளுக்கும்
காமக் கூந்தலுக்கும் பலியாகாமல்
விடுபட்ட மலர் ஒன்று
கால, சுயலாப, காம
இதழுதிர்ந்து காய்க்கிறது;
அப்படியே கனிகிறது.
கனியுள்ளே கோடி பெறும் வித்துக்கள்
நாளையொரு பூக்காடு விரிப்பதற்கு

Read more...

Sunday, July 28, 2013

மும்முனைக் காதல்

இறங்கினதும்தான் தெரிந்தது
’கடலுக்கு எப்போதுமே
கரைகள் மீதுதான் காதல்’

கோபத்துடன் வெளியேறும் தோணியை
கடல்
வழிமறித்து மல்லுக்கட்டும்
இடையைப் பிடித்துக் கெஞ்சும்
உதறி மீண்டும்
தோணியின் பக்கங்களையும்
கரையையும்
மாறிமாறித் தொட்டு
அலைமோதி அலைமோதிப் புலம்பும்

தோணிக்கு
ஈரம் சொட்டச் சொட்டக்
கரையேறி நிற்கையில்தான் புரியும்
உடனே பிணக்கைக் களைந்து
இறங்கும் மீண்டும்

கடல்
அதனை அணைத்தபடி
கரைக்கு வந்தே குலவிக்கொண்டிருக்கும்
அந்தக் கரையேற்ற வெளியில்
தோணியும் கடலுடன் குலவும்

Read more...

இலட்சியவாதிகளுக்கு

ஒரு மானஸ சட்டத்தில்
கைகளை விரித்து
தன்னைத் தானே அறைந்துகொண்ட
சிலுவைமரமாக்கிக் கொண்டு
சிறுவன் ஒருவன்
பாறைமேல் நிற்கிறான்.
அவன் காலடி உயிர்ப்பில்
உலகம் இரண்டாய்ப் பிளந்து
அவனுக்கு இருபுறமும் ஆகிறது
அவனை எகிறி வீழ்த்த
உறுமுகின்றன
பிளவுபட்ட பாறை முரடுகள்
அவனோ
சாவைத் தின்று
ஜனித்த பிறப்பின்
அண்டத்தை உலுக்குகிற பலம் திரட்டி
-பின்னர் அதெல்லாம் வியர்த்தமாவதறியாமல் –
அறிந்து
தன் மூர்க்கம் விட்டுக் கசிந்துபோன
பாறைப் பிளவின் ஈரத்தில்
தன் மூர்க்க குணம் விடாது
வேரூன்றி வளர்ந்து
சாதுவான பாறையைப்
பிளந்து தீர்த்து
விருட்சமாகிறான்.

ஓ…விருட்ச! அங்கே
வெகு ஆழத்தில் சென்று நீ கண்டதென்ன?
அதைச் சொல்!

இன்று
உன் வேர் நூல்களால்
நீயே ஏற்படுத்திய பாறைப் பிளவுகளைத்
தைத்து இணைத்துக்கொண்டு
கந்தல் கோலத்துடன்
கல்பகோடி வாய்களுடன்
என்னைத் தடுத்து நிறுத்தியபடி
நீ சொல்வதுதான் என்ன?

Read more...

Saturday, July 27, 2013

உறி வெண்ணெய்

குடிசையின் கந்தல் ரூபங்கொண்டது
ஒளிவெளி

சூரியனாய் நக்ஷத்ரங்களாய்
உட்சுடரும் பால்வெளி
குடிசையின்
கந்தல்கள் வழியாய் மாத்ரம்

அந்த சூர்ய நக்ஷத்ரங்கள் வழியாய்
பிரவஹிக்கும் பால்வெளி வெள்ளம்
உள் நிரம்பி
தன் அலைக் கரங்களால்
என் படுக்கையை ஏந்தித்
தாலாட்டத் தொடங்கிற்று

நான் என் தூக்கத்தை மூடிவிட்டு
கண்களைத் திறந்து
கதவைத் திறந்து
-இதுவரை சரிதான்
புறம் வந்தால் – அதுதான் தப்பு

கறைபட்டுப் புரளும் வெளி
கண், உதடுகளிலே
ஒளி வெண்ணெய் சிரிக்கும்
திருட்டுக் கண்ணனாக
முழிக்கும் உலகம்

பெருநிலை நோக்கிக்
கனன்றசையும் உறி வெண்ணெயாக
என்னுள் தொங்கும் ஒரு சுடர் ஒளி

Read more...

அறிவிப்பு

உங்கள் வரவு நல்வரவாகுக
அன்றன்றைக்குள்ள ஆகாரத்தை
அன்றன்றைக்கே
உங்களுக்குத் தருகிறோம்
தயவுசெய்து
கடன் சொல்லாதீர்கள்
கடன்
உணவை விஷமாக்கும்
இன்றைய கணக்கை
இன்றே தீர்த்துவிடுங்கள்
நேற்றைய பாக்கிகள்
நேற்றைய ருசிகள்
ஆரோக்யத்தைக் கெடுத்துவிடும்
நாளைய திட்டங்களும் கூட
நாம் ஒவ்வொரு தடவையும்
உணர்வின் சூட்டுடன்
புதிதாகவே சந்திப்போம்

Read more...

Friday, July 26, 2013

வியர்த்த போதம்

விழாது உருட்டிச் செல்லக் கிடைத்த
சைக்கிள் வீல் வளையம் ஒன்றை
ஒரேவீச்சாய்த் தள்ளிவிட்டுப்
பார்த்து நின்றேன்:
ஓயும் முன்
ஒரு வட்டமடித்துவிடப் பார்த்து
விழுந்தது
துடிதுடித்து

Read more...

’எனது ராஜ்யம் பரலோகத்திலிருக்கிறது’

வானிலிருந்துதான் வருகிறது மழை
அதனை ஏந்தி உபயோகித்து
நகரம் வெளிப்படுத்துவதோ
நாறும் சாக்கடை

வானத்திலிருக்கிற சூரியன்
சாக்கடை நீரை ஆவியாக்குகிறது

Read more...

வேளைகள்

வெயில் பாவுபோடும்
மார்கழியில்
கூதல் காற்றே ஊடாய்ப்
பாய்ந்து பாய்ந்து
நாள்தறி நடக்கும்

இரவுச் சேலையில்
அபாரம்! அபாரம்!
எத்தனை சித்ர வேலைப்பாடு!

விற்பதற்கு முன்
நிலவுப்பெண் முகமெல்லாம்
பொங்கப் பொங்க
உடுத்துப் பார்க்கிறாள்

நேரமிஃதில்
நெய்தவரைக் காணோம்
வாங்குவாரையும் காணோம்

கவிதைத் துவாரம் வழி நோக்கும்
கள்ளப் பயலே!
கதவை அடைத்துக்கொண்டு
அவள்
தன்னழகு பார்க்கும்
தனிமைப் பொழுது இது!
உன் சந்தையிலே காண
முடியாதது

Read more...

Thursday, July 25, 2013

வர்க்கபோதம்

திறந்தேன்

ஓங்கி உயர்ந்த விதானம் நோக்கி
அடுக்கி அடுக்கியிருந்த மூட்டைகள்
கை கால் தலையற்ற முண்டங்களாய்
என்னைச் சிதைத்தன

நெஞ்சைப் பிராண்டும் கரப்பான் பூச்சிகள்
நுழைந்ததும் வௌவால்கள்
முகத்திலறையும் கோவில் பாழாக
பிடரி பிடித்துத் தள்ளியது வெளியே

அங்கே
பிணங் கொத்தும் கழுகு காக்கைகள்
தான்யச் சிந்தல் வியர்வைத் துளிகளைக்
கொத்த வரும் ஈ குருவிகளாய்

காணச் சகிக்காமல்
சிமிட்டியைப் போத்துக்கொண்டு
நகரும் குருதிச் சாக்கடை

கடைத்திண்ணை நடைபாதைகளில்
பாரவண்டிகள் மற்றும் அங்கங்கே
ஒதுக்கமெல்லாம் முழித்துக் கிடந்தன
வலுமிகுந்த கைகால்கள்
மேலெல்லாம் இரத்தம் வழிய

சிங்காரத் தலைகளெல்லாம்
சொகுசாய் மிதந்தன
கடைகளுக்குள்ளே கல்லாமுன்னே
இளித்துக்கொண்டும் சிமிட்டிக்கொண்டும்
கடைவாய்ப் பற்களில் இரத்தம் ஒழுக

பின்னொரு நாள்:
பெரிய பெரிய பூட்டுகள் கண்டு
ஜெயில் ஜெயிலென்றும்
பெரிய பெரிய கதவுகள் விதானம் கண்டு
கோயில் கோயிலென்றும் மனம் அலற
கோடவுண் கதவைத் திறந்தேன்

கண்டேன் அதனை

Read more...

குற்றபோதம்

”பிதாவே இவர்களை மன்னியுங்கள்…”

கன்னி மேரியின் கருணை முகம்
வாடல் கதம்பச் சரத்துடன் நோக்க
ஈக்கள் மொய்த்து ஆட்டம் போடும்
’அந்தோணி இறைச்சிக் கடை’;

தெருவோர வெயிலில்
காக்கைகளைக் காதலிக்கும்
காதலி பற்களாக-
உப்புப் போட்டுப் பரத்தி வைத்த
நாறும் மீன்கள்;

தெருமுக்குக் கொடிக் கம்பங்களில்
குழாயடிப் பொம்பளைகளின்
ஆபாஸ நாக்குடன்
ஐந்தாறு;

மிச்சப் பொழுதெல்லாம்
இருண்ட நிழல்களில்
வலை பின்னும் மானுடர்கள்;

சந்தை இரைச்சலைத்
துரத்திவிடும் கடலலைகள்;

(ஊர்) மத்தியிலிருந்து ஆகாயத்தை
நலுங்காமல்
சிலுவை தூக்கித் தொட்டு நிற்கும்
ஒரு மாதா கோவில்…
அதன் மணி ஒலி… எங்கும்
கவியும் குற்றச்சாட்டுகள்…

Read more...

Wednesday, July 24, 2013

வாழ்வும் கலையும் (எனது கம்யூனிஸ்ட் நண்பர்களுக்கு)

ஈயை ஈயை நோகாதே
புண்களைக் கவனி – உன்
புண்களைக் கவனி

வியர்வை நாறும் என் மேனியை
விடாயைத் தணிக்குமிக் குளிர்நீரை
இட்லிப் பார்சலை ஈரத் தரையை
பேதா பேதமற்று என் அசுத்தங்களை
எல்லாவற்றையுமே தான்
அமர்ந்து அமர்ந்து காட்டி
புண புண் என்றே எகத்தாளம் பேச

பொறுக்காத கைகள் பொங்கியெழுந்து
உடனே உடனே விரட்டும்

என் அதிருப்திக் கனலிலே அமர முடியாமல்
எழுந்த அதிர்ச்சியில்
எல்லாம் மறந்து – உடன்
புத்தம் புதுசாய் ஒரு கலை பிறக்கும்
(மேற்படி புண் பற்றி அன்றி வேறு?)

புண்ணை விட்டெழுந்த வெளியில் நின்று
நாற் பரிமாணங்களிலும் திரிந்து திரிந்து
கோலம் போடும்

என் நாற்காலி மரச்சட்டத்தில் அமர்ந்து
சற்று தியானிக்கும்
(முன்னதிலும்
புத்தம் புதுசாய் ஒரு கோலம் போட)

ஆகவே சும்மா
ஈயை ஈயை நோகாதே

உன் புண்களைத்தான்
கவனி! ஆற்று!

Read more...

பிக்னிக்

நெருப்பு மூட்ட முடியாமல்
கிழித்த தீக்குச்சிகளையெல்லாம்
காற்று அணைக்கும்

”காப்பாற்ற வெளியிலே நான்
தீ மூட்டிச் சமைப்பதெப்போ?”

சருகுகளையெல்லாம் கூட்டுங்கள்
செத்த
சுள்ளிகளையெல்லாம் அடுக்குங்கள்
இவைகொண்டே
காப்பொன்று ஆகாதா?

வட்டமாய் நெருங்கிச்
சூழ்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே!
”கொளுத்துகிறேன் இத் தீக்குச்சியும்
புஸுக்கென்று போய்விட்டால்?”

அன்று;
தீ பற்றிக் கொள்ள
குதூகலம் கொப்பளித்துப் பொங்கி
ஆரவாரம் உயர்ந்து தொட்ட
அங்கேதான்
கைமறந்த தீப்பெட்டி தான்
’ப்ஹார்” என ஜ்வலித்து
நெருப்புக்குள் நெருப்பாயிற்று

Read more...

Tuesday, July 23, 2013

தரிசனம்

செடி ஒன்று காற்றில்
உன் முகப்பரப்பிற்குள்ளேயே அசைகிறது
கோணங்கள் எத்தனை மாற்றியும்
இங்கிருந்து உன் முகம் காண முடியவில்லை
இவ்விடம் விட்டும் என்னால் பெயர ஆகாது
ஆனால் காற்று உரத்து வீசுகையில்
செடி விலகி உன் முகம் காண முடிகிறது

Read more...

இருப்பும் இன்மையும்

வீதி பார்த்த
கதவை அடைத்து விட்டுத்தான்
சாப்பிட உட்காருகிறேன்

வெளிறி மரித்த பிணக்குவியலென
சோற்றுப் பருக்கைகள்

நான் இன்னும்
வரிக்காத எனது மனைவியும்
பெறாத எனது குழந்தைகளும்
பசித்து
மரித்துப் போன என் சகாக்களோடு
உடற்பிச்சை கேட்டு
கதவுதட்ட
தட்டத் தட்டத் திறவாமல்
விழுங்கி வைக்கிறேன்

தட்டு கழுவிய எச்சித் தண்ணீரை
தென்னை மரம் ஏற்றுக் கிளுகிளுக்கும்
எஞ்சிய பருக்கைகள் புன்னகைக்கும் தூரடியில்
ஒரு பாடலெனப் பறந்துவந்த சிட்டுக் குருவி
அக்கம் பக்கம் பார்த்துவிட்டுக்
கொத்தி மறையும்

Read more...

Monday, July 22, 2013

நமக்குத் தொழில்...

கவிதை – ஆனால்
கவிதைக் கலை
மருத்துவ மனையாகாது
அதன் கேட் அருகே நான்
ஒரு காலி பாட்டில் வியாபாரி

Read more...

மண்

வறண்டு
இறுகிப்போன பூமியின் மேல்
பொழிந்தது
மேலே குவிந்துநின்ற கருணை.
மண்வாடை தன் மீது கமழ
குதூகலித்த மனிதனின்
கூர் கலப்பை
வறண்டு இறுகி தன் பிறப்பை மறந்த
மண்ணைக் கிளறியது.
காற்று தீண்டிய சுதந்திர தலத்தில்
உயிர்த்தெழுந்து
சிலிர்த்ததொரு மண்துகள் ஒன்று
தன்னை உணர்ந்தது, பூமியாகியது.
உயர்ந்து குவிந்து நின்ற அக் கருணையின்
மழை வித்துக்களை ஏற்று
சுபிட்சம் மலர்ந்திற்று

Read more...

Sunday, July 21, 2013

பாலத்தின் கீழ் ஓடும் நதி

ஆடிஆடி வரும்
அலைக் குழந்தைகளுடன்
காலமாம் நதி போகும்

குறுக்கே
வாழ்வென்னும்
ஓர் அகண்ட பாலம்

விடுவிடெனப் போகும் அம்மை
விரலிலிருந்து நழுவிக்
குனிந்து
பாலத்தின் மர இடுக்கினூடே
என்ன ஏது என்று
நோக்கும்
ஆர்வக் குழந்தையை
சிடுசிடுத்து இழுத்துப் போவாள்

வான் பார்த்து ஆடும் அலைகள்
பாலத்து நிழலில்
சற்றுப் பயமும் கலந்த
புதுமையில் ஆனந்தித்தபடி
அம்மா அம்மா மேலே என்ன?
என்ன;
அலட்சியம்,
அசுவாரஸ்யம்,
ராங்கித்தனம்-
எல்லாம் புடை சூழ
இழுத்துப் போவாள்
நதியம்மாவும்.
அவளுக்கு இவள் மீதும்
இவளுக்கு அவள் மீதும்
ஆர்வமே இல்லையெனினும்
ஒரே இடத்தில்
அவளுக்கும் வழிவிட்டு
இவளுக்கும் ஒரு வழி அமைந்த
ஆச்சர்யத்தைக்
குழந்தைகள் காணத் துடிப்பார்

Read more...

இந்த மரம்

துப்புரவாய்
இலைகளுதிர்ந்து நிற்கும் இவ்வரசமரம்
பழுத்த ஒளிபட்டுத்
தரையெல்லாம் தகதகக்கும்
இலைச் சருகுகள் மத்தியில்
வானத்தில் வேர் பரப்பிப்
பூமியெல்லாம் ஐசுவரியம் கொட்டும்
மாயமரம்?

Read more...

Saturday, July 20, 2013

நிலவு கீத வெள்ளத்திலே

தந்திக் கம்பிகள்
மீட்ட
சித்திரக் கையுடன்
வளைந்து நெளிந்து குழைந்து
தன் இசையில்
தானே லயித்து
மயங்கி நிற்கும் வேப்பமரம்.
சாலையிலே
வாய்சிந்திச் செல்லும் மனிதர்.
அப்பாவி
விளக்கு மரங்களின்
ஒற்றை ஒற்றைப் பூக்கள்.
விட்டு விட்டு வந்துபோகும்
வாகன
சப்தக் கொடி நுனிக்
கவிதைப் பூக்கள்:
ஸ்வ சித்ரங்கள்.
கறுத்த சிலுவைகளாய்க்
கூடிக் குழுமித்
தோளோடு தோளாய் கையோடு கையும்
கோர்த்துக் கோர்த்து நிற்கும்
கருக்குமட்டைப் பார்வையாளர்கள்.

Read more...

எனது பத்தினி

யாரது
தேம்புவது

ஏன்

காலமெல்லாம்
குலவிக் கலவிப் – பின்
பிரிந்து அழும் பொழுதெல்லாம்
கவி எழுதத் துணை நின்றருளிய
என் பத்தினி!

ஏன்

இன்று நான்
என் கவிதைகளை யெல்லாம்
அள்ளிக் கட்டிக்கொண்டு
எரியும் காமத்துடன்
காலமெனும் விலைமகளின்
கதவைப் போய்த் தட்டிக்கொண்டிருக்க...
ஆ! தேம்புகிறாளே
இக் கணமெனும்
என் பத்தினி!

Read more...

Friday, July 19, 2013

ஈரமண் பூமியில் எழுதப்பட்டவை

எல்லோர்க்கும்
பொழிந்தது மழை எனினும்
பூரண இன்பம்
பொலிந்தது எதிலே?

நீளநீளமாய் நிலத்தைக் கிண்டிய
ஏர் உழுதலிலா?

தணுப்பு குலவித்
தணலுக்கு வேட்கும்
என் பாலை மணலில் நான்
திரும்பிப் பார்க்கையில்
தடம் நிறுத்தி
ஓர் அபிநயத்தில் என்னை நோக்கும்
என் பாதச் சுவடுகளிலா?

பறவைகள் இறங்கிவந்து
எட்டாத நட்சத்திரங்களை
எனக்குக் காட்ட
பூமியில் பொறித்ததிலா?

என் தனிமையின் பாடல்
இந்த இதமான தரையில்
நலுங்காமல் அமர நினைந்து
என் விரல் வழியாகவும் சற்று
ஒழுகிய கிறுக்கலிலா?

குதியாளம் பதித்த
சின்னஞ்சிறு பாதச் சுவட்டின்
நடுவில் ஊறும் நீர் பருக
பூமிச் சுற்றம்
தாகமாய் எழுந்து உட்குவியும்:
எழுந்த பாதத்திலே
மோதிச் சிதறும்
சிரிப்பென்னும் அச்சிரிப்பினிலா?

குதிங்கால் கட்டை விரல்களைக்
வட்டமானியாய்க் கொண்டு
அச்சிறார்களின் குதூகலம்
சிந்திய வட்டங்களிலா?

...எதிலே
எம் முத்திரையில்?

Read more...

என் பிரியமான செம்மறியாடே!

உள்ளங்கால்களை நிமிண்டி
அழைக்கவில்லையா பாதை?
நட்சத்திரம்
உன் முகத்தருகே சிமிட்டிவிட்டு
தூர நின்று சிரிக்கிறது பார்!

உன் நெஞ்சிலாடக்
கழுத்தில் கட்டியிருக்கும் மணியின்
நாதம் சுவைக்க,
மவுனம் சுவைக்க,
நடக்கணும் நீ.
தெரிந்ததா?
அற்புதம் அற்புதம் என்று
நீ திகைத்துத் திகைத்துப்போய் நின்றாலும்
நின்றுவிட முடியாது;
நடந்தே யாகணும்

நடை நிறுத்தித்
திகைத்தே போனால்,
உன் நெஞ்சிலாடக்
கழுத்தில் கட்டியிருக்கும்
மணி ஒலிக்காது திகைத்தே போனால்,
அடியே!
அந்த அற்புதம் அற்புதமல்ல
சவம்!
புரிந்ததா?
எங்கே, நட பார்க்கலாம்!
மணியின்
நாதம் சுவைத்து
மௌனம் சுவைத்து
நாதம் சுவைக்கையிலேயே மௌனம் சுவைத்து...

Read more...

Thursday, July 18, 2013

போர்வை

படுக்கச் சென்றேன்
என்னைப் பார்த்ததும்
எனக்கு நன்றாய் இடம் போட்டு
ஓரமாய் நாணிக் கோணி ஒரு தினுசாய்ப்
புன்னகை ஒன்றையும் காட்டியபடி
என் பத்தினி-
புடவை தேர்ந்தெடுக்கிற
பெண்களுக்கிணையான மோகத்துடன்
நான் வாங்கி வைத்திருக்கும்
எனது ஷோலாப்பூர் போர்வை-
கிடக்கிறாள் ஆர்வமாய்.
படுத்துக்கொண்டேன் பக்கத்தில்.
அவள் மொழி கேட்கவே
ஆவலாயிருந்தேன்
அவளோ பிடிவாதமாய்ப்
பேசாதிருந்தாள்
ம்ஹுஹும்
வாடை விறைக்காப் பொழுதினிலே
வரைவதில்லை நான் அவளை,
பக்கம் என்னை உரசிக்கொண்டு
பார்க்கிறாள் பாவமாய்...
உடனே தான்
இரக்கம் கொண்டு நான் அவளை
ஒரு கையால்
மெல்லத் தழுவிக்கொண்டேன்
சொற்கடந்த
காதல் தொட்ட உறக்கத்தில்
கலந்து மறைந்தோம் அவ்விரவில்

Read more...

யார் தனிக்கட்டை?

அவர்கள் காம்பவுண்டில் அடிக்கடி
சாக்கடை பெருகி
முற்றத்துக்கு வந்துவிடும்
(அவனும் ஒரு பங்காளிதானே அதில்)
அவன் மனசோ அதன் மேல்
தாமரைகளைப் பிறப்பித்து
மிதக்கும்.
அவனைப் பார்க்கும் கண்களெல்லாம்
’அவனுக்கென்ன தனிக்கட்டை’
என்று அசூயைப்படும்.
சரிதானா அது?
முற்றத்துச் சாக்கடை
இவர்கள் எல்லோரின் ஏன புதல்வி,
யாருக்கும் தெரியாமல்
அவன் கதவைத் தட்டுகிற
சேதி தெரியுமா?
அவன் கதவைத் திறப்பான்.
வெட்கத்துடன்
தலைகவிழ்ந்து நிற்கும் அது.
விலக்கி நடந்தால்,
அது பார்க்கும் பார்வை
ஆளைக் கொன்றுவிடும்.
இட்ட அடிகள் தழுவி
எடுத்த அடிகளுக்கு ஏங்கியுமாய்
பாதம் பற்றிக் கெஞ்சும்.
முகச் சுளிப்பு கண்டு
கலங்கும்...
ச்சை!
அவனா தனிக்கட்டை?

Read more...

Wednesday, July 17, 2013

விலகிச் செல்லும் நண்பன்

யாருனக்குச் சொன்னதோ
என்னைப்பற்றி அவ்வாறெல்லாம்!
நன்றாய்த்தானே பழகிக்கொண்டிருந்தாய்
இதுவரை?
அடைய முடியாததற்கான
மன நெகிழ்வைப் போல் உன்னிதழில்
கசிந்த ஒரு புன்னகை;
சமயங்களில் ஏளனம்.
சோகம் ஒரு கோழிக் கூடையாய்
என் மீது கவுத்தியிருக்க
எனது விடுதலையற்ற
இப்பொழுதையும் நீ
ஏகாந்தம் என்றெண்ணியவன் போல்
விலகிச் செல்வதேன்?
நானே போராடி
என் விடுதலையைப்
பெற்றுக்கொள்ளட்டும் என்றா?
நான் உனக்காகத்தான்
காத்திருக்கிறேன் இவ்வாறென்க
என்ன ஏது என்று ஏன்
பதறிப் போகிறாய்
சாமர்த்தியமான பேச்சென்று
சிரித்துச் சுவைத்து
விட்டு விடுகிறாய், ஏன்?
ஒரு நண்பனுக்காக
நான் காத்திருக்கலாம்
இங்கு என்று
நீ நினைக்கக்கூட முடியாமல்
போனதென்ன?

Read more...

Tuesday, July 16, 2013

வானக் குழந்தை

புறவயப் பார்வையே
தவிர்ந்து போன
சுய லயிப்பில்
சிலுசிலுக்குது தென்னை

ஒரு
மையத்தைப் பிடித்துக்
கொண்ட ஆதாரத்தில்
சிறகடிக்காமலே
சுற்றிச் சுற்றி வரும்
என் கறுப்புப் பறவை

-இதுகளை
மொட்டு மொட்டுனு
இமைக்காது பார்த்துக்கொண்டிருக்குது
வானக் குழந்தை

என் கறுப்புப் பறவை
தவம் கலைந்து
வானைப் பார்த்துப் பழக நெருங்க –

அகப்படவா செய்யும்
அந்த மாதிரிக் குழந்தை?

Read more...

பாரவண்டி

அரைடிராயர் பையன் ஒருவன்,
கைவண்டி நிறைய விறகு
இழுத்துச் செல்கிறான்
குண்டும் குழியுமான ரோட்டில்
அதுபோகும் ’நறநறக்’கிடையே
வண்டியிலிருந்து நழுவி விழலாம்
விறகுத் துண்டொன்று என்று
அவ்வொலியே கவனமாக
நெஞ்சிலும் கனக்கக் கனக்க...

யாரோ கண்டு
முன்னிற்கும் வானமாய் ஓடிப்
பின்வந்து உதவி கொடுக்க
லகுவாகப் போச்சு வண்டி – தம்பி
வியந்து போய்த் திரும்பிப் பார்த்தான்:
வானந்தான், யாருமில்லை.
மீண்டும் அவன் இழுத்துச் சென்றான்
நழுவுவிறகுக் கவலையெல்லாம் விட்டொழித்து

Read more...

Monday, July 15, 2013

என்னுடைய தட்டு

நான் சாப்பிட்ட தட்டை
நானேதான் கழுவணும்
ஏனோதானோவென்று
ஒப்பேற்றிவைக்க முடியாது
அப்புறம் நான்தானே அதிலே
மறுபடியும் சாப்பிடப் போவது?

எவர்சில்வர் தட்டு சார்
வட்டத் தட்டு
கைக்கு அகப்படாமல்
கண்ணாடி ஒளிந்துகொள்ளும் நாளில்
முகம் பார்த்துத் தலைசீவ உதவும்.
வெளிச்சத்தைக் கண்டாக்
கொண்டாட்டம் இதுக்கு.
காதலிக்கும் கைகள்
கைவிட்டால்
நெஞ்சு பொறுக்காது கூட்டலிடும்...
எப்போதும்
உதட்டில் ஒரு புன்னகை
உள்ளமெல்லாம் புன்னகையாய்
உடலெல்லாம் புன்னகை.
மடியில் தூங்கிவிட்ட குழந்தையை-
சிணுங்காமல் எடுத்துத்
தொட்டிலில் கிடத்துவது போல்
மெதுவாய் வைப்பேன் தரையில்.
யோசிச்சுப் பார்த்தால்தான்
எனக்கே தெரியுது
இந்தத் தட்டின்மீது எனக்கு
எவ்வளவு பிரியம் என்று!
தொந்தரவு தரும் பிள்ளையை
பதனமாய்ப் பேசி
சேக்காளிகள் விளையாடும்
இடம் காட்டி
தந்திரமாய் அனுப்பி வைப்பதுபோல்
பசையாய்ப் படிந்து நிற்கும்
சாப்பிட்ட எச்சத்தை
நீருக்குள் உள்ளும்
புறமும் தீண்டியபடி
சுழற்றிச் சுழற்றிச் சுழற்றிக்
காலங்கள் உருண்டோடக்
கண்ணுங் கருத்துமாய் கழுவிக்கொண்டிருக்கையில்
மாறி மாறி விரல்களை நெருடிய பிசுக்கை
உற்றுக் கவனித்தேன்:
எவர்சில்வர் தட்டின் நெற்றியில்
பொறித்திருந்தது என் பெயர்தான்

Read more...

Sunday, July 14, 2013

பனங்காட்டில் ஒரு பதனீர்க்காரி

என்ன ஆச்சரியம்!
கருங் கருந் தூண்களாய் நிற்கும்
சாவின் உச்சியில்
பத்தி விரித்து விரித்துச் சீறி நின்ற பாம்புகள்
என்னமாய் மயங்கிக் கிடக்கின்றன
அவள் காலடியில்!

அப்படியே கையிலெடுத்து
அதன் உடம்பிலிருந்தே
அதைக் கட்ட
ஒரு கீற்றும் உரித்து, கட்டி,
அதிலேயே பருகக் கொடுக்க
பானையில் வைத்துக் காத்திருக்கிறாளே
பனைகள் முன்னே பதனீர்க்காரி

பார்வைக்குக் கிடைத்தும்
பருகக் கிடைக்காமல் போய்விடுமோ
எனப் பதறுகின்ற நெஞ்சின்
ஏக்கத்தைத் துழாவிப் பிடித்துப்

பருகுகிறேன் பருகுகிறேன்

Read more...

Saturday, July 13, 2013

ஒற்றைப் பனை

சாசுவதத் திமிர்கொண்டு
அட்டகாசமாய்ச் சிரித்தது
ஒற்றைப் பனை

அறியாப் பருவத்தில் ஒரு நாள்
ஒரு புள்ளும் சப்திக்காத
ஒரு கிளையும் சலனிக்காத
வெட்ட வெளி வெம்பரப்பின்
பாழ் நடுவே
’நான் யாரு...? என எழுந்த
வினாவொன்றிற்கு
விடையொன்றாய்
ஒன்றே
வினாவும் விடையுமாய்
இன்று இப்பனை
எவ்வாறு தோன்றியது
இந்தப் பாழ் நிலத்தில்...?

சிந்தைச் சலசலப்பை ஒதுக்கிச்
சிரமலரில் அந்த
அமுதிறக்கப் பார்க்கையில்
வசமாய்க்
கொடுத்தது பாம்பு ஒன்று

உச்சியிருந்தமானிக்கே கீழே
பழுத்த பழம் போலிறங்கும்
சாவின் கருப்புத் தூணாய்
உடலை உதிர்த்தான்
கருப்பண்ணன்
என்றார் ஓர் அண்ணன்
என்னை நெருங்கி.
பனை-
சாசுவதத் திமிர்கொண்டு
அட்டகாசமாய்ச் சிரிக்கிறது!

Read more...

Friday, July 12, 2013

நடையழகு

உருளும் அலைகளில்
ஏறி இறங்கி ஏறிச்
செல்லும் படகசைவு

தண்ணிக் குடங்களேந்திச்
செல்லும் இவர்களின் நடையசைவு

உற்றுக் கவனித்தால்
பாழடைந்து பயந்து அழும்
என் நினைவுகளைத்
துயிலூட்டிக் கிடத்திவிடும்
தொட்டிலாட்டு

அப்புறம் நான் மாத்ரமேதான்!
சிலசமயம்
பாற்கடலில் பாம்பணையில்
என் மகாலட்சுமியோடு!

சில சமயம்
நதியில்
துடிதுடித்து மிதந்து செல்லும்
ஒரு அக்னிக் குஞ்சாக!

சில சமயம்
எல்லாம் விழுங்கி
எரியும் ஒரு பெருநெருப்பாக!

சில சமயம்...

Read more...

ஒரு சாயங்காலம்...

குளியலறை விடியலில்
மேனியலங்கங்கே பூத்த
பனித் துளிகளை உண்டு
ஈரமாகும் துவாலை
’சூடிக் கொடுக்கச்
சூடும் மாலை’யென
அணியும் சட்டை
மாலைக் காற்றில்
விடுபட்டுப் பித்தேறி
முகத்தை எட்டி தீண்டியாடும்
நீள வளர்த்த சிகை
ஒதுக்கும் விரல்களில்
பூக்கும் ஒரு பெண்மை
உன் நினைவு

Read more...

வாளித் தண்ணீர் முன்...

வெயில் பொசுக்கின வெளியெல்லாம்
புல் மலர்ந்து விழித்திருந்த
ஒரு மழைக்காலத்தின்
பச்சை வெளிகளில்
தன் தோட்டத்துக்காக யாத்திரை செய்த
ஆதி நாட்களைப்
பட்டை உரித்து உரித்துக்
காத்துவரும் கொய்யா

ஆறாத
அம்மாவின் விடுகதையில்
பூவில்லாது சடை பின்னாத
ராஜகுமாரியாம் முருங்கை

பழுத்து உதிர்ந்து
உலர்ந்த கொப்பும்
கொழுவித் தொங்க
நிற்கும் நெடுமரப் பப்பாளி

’கிராப்பு வெட்டிக்கொண்ட’
உல்லாசத்தில்
ஒளிவீசும் கருவேப்பிலை

நீல வானம்
வான நீலம்

எல்லாம் வந்தாச்சு
அவன் குளிக்க
வாளித் தண்ணியில்;
வந்து கிளுகிளுக்குது
காலைக் காற்றில்;
அவன்
நாற்றங்காலின் பன்னீர்க் கன்றும்
அவன் முகம் பார்க்குது பளபளன்னு

எனினும் ஏன் தாமதிக்கிறான்?
எதை எதிர்நோக்கி நிற்கிறான்
அம்மணக் கோலத்தில்
அண்ணாந்த விழிகளோடு?

அணில் குருவி ஆடுகிற
அந்த லோக
ஆசிக்கா?

அகால வெளி கனிந்து
சொட்டின வண்ணமாய்
வாளி நீரில் வந்து
விழும் முருங்கைப் பூவுக்கா?

ஏன் அப்படிப் பார்க்கிறான் தண்ணீரை?
நினைவுகள் படிந்து அழுகும் நீரைத்
தன் பார்வையாலே காய்ச்சித்
தீர்த்தமாக்கவா...?

Read more...

Thursday, July 11, 2013

மீன் பிடிப்பவர்கள்

கழுகுகள் வட்டமிடும்
என் கடற்கரையில் இரவெல்லாம்
விண்மீனில் குளித்த
வல்லங்கள் கடலோடி
வலைகளிலே அள்ளிவந்த
மீன்களைக் கரையில் இறைக்கும்

காலியான கஞ்சிச் சட்டி,
வெற்றிலை புகையிலைப் பெட்டி,
வலைகள் வழியும் வலிய
தோள்களை உயர்த்திக்கொண்டு,

வட்டக்கார, கமிஷன்கார
யாபாரிகள் மொய்த்துக் கிளப்பும்
இரைச்சல்களைப்
பீயென ஒதுக்கி விலகி,

தத்தமது நிழல் சென்று
வலை பழுது பார்க்க அமரும்

Read more...

கடல் நடுவே

இருந்ததது முன்பு
நம் பெருமை
நாம் ஒரே கப்பலில்
வாழ்கிறோம் என்பதிலே

கப்பலின் உச்சிக்
கொடி அசையும்
எப்போதும்
ஒரு துடிப்புடன் தவிப்புடன்
திணறலுடனும்;
எல்லாவற்றுக்கும் மேலாய்த் தெரிகிற
ஒரு வெற்றி எக்களிப்புடன்
நம் அத்தனை பேர் ஆவியும்
அதில் துடிக்க

கப்பலை எப்போதும்
இடைவிடாமல் கவனித்துப்
பந்தோபஸ்தாய் வைத்திருந்தோம்
ஜன்னல் கண்ணாடிகளைத்
துடைத்துத் துடைத்துச்
சுத்தமாய் வைத்திருந்தோம்
காதலே மணக்க
நம்முள் தோன்றிய
’மலங்களை’
அதன் தோற்றமும் மணமுமே
சொல்லிவிட – உடனுக்குடனே
களைந்தெறிந்தோம்; கடல் நடுவே
நாமே உயிர்த்தோம் ஒரு பேரழகாய்

கப்பல்
துண்டு துண்டாகத் தெறித்துச்
சிதறுகையில்
உயிருக்குப் பயந்து
வெறிச்சிட்ட ஒரு கணத்தில்தான்
புரிந்தது;
எல்லாம் பொய்!
நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டுவந்த
பொய்யர்கள் நாம் என்று!
நாம் களைந்தெறியாது
இக்கடலில் பதுக்கியதெல்லாம்
வலிய வலிய மிருகங்களாய்
நாம் கவனிக்காது
சுரணையற்றுக் கொண்டுவந்த
உயிர்த்துளிகளெல்லாம்
பிரம்மாண்டமான பாறையொன்றாய்
முற்றித் திரண்டு
நம் மொத்த அஜாக்கிரதையினால்
நாம் உடைந்து சிதறி...

இப்போது புரிகிறது
எல்லாமே ’கனா’வென்று!

போராடப் பயந்து
சாவே சுகமென்று தேர்ந்து
அலைகளிலே அசையும் பிணங்கள்.
சதா சாவை எதிர்த்துத்
தத்தளிக்கும் நான்
கொஞ்சம் ஆசுவாசிக்க
அகப்பட்டது
ஒரு துண்டு மரம்-
ஆ! நம் உடைந்த கப்பல்...
எல்லாம் கனவல்ல,
சத்தியமே என்னும் பிரமாணம்!

Read more...

Wednesday, July 10, 2013

வெண்மணல் தேரி

பின்னால் கொஞ்சம் தள்ளி
கோடை மெல்லிய நதி.
மணலில்
ஊர்த் துணிமணிகளையெல்லாம்
உலர விரித்து
வண்ணான் வண்ணாத்திகள்
துவைத்துக் கொண்டிருப்பர்.
ஒரு வண்ணாத்தி – தன்
கைஜோலியை விட்டுவிட்டு
ஒரு பிரியப்பட்ட ஆணிடம்
பனை மறைவில்
பேசிக்கொண்டு நிற்பாள்.
மனம் வெளுக்கும்
வெண்மணல் தேரியைக்
கறுத்த கூண்டாக்கிய
பனங்காட்டுக்குள்
இருவர்;
ஒருவன் மற்றவனிடம்
விளக்கிக் கொண்டிருக்கிறான்,
மேலே
பனையோலைக் கீதம்
கிளிகளாய்ப் பறந்துகொண்டிருக்க...

Read more...

அவரைப் பந்தல்

சாந்துச் சட்டிகள்
தலையில் தாங்கி
ஓட்டைக் குடிசை வாழ்
சித்தாளுப் பெண்கள்
கொம்பில் ஏறும்
அவரைக் கொடியாய்
மூங்கில் சாரம்
வனைந்த படிகளில்
ஏறினர் ஏறினர்,
’இன்று முதல் ஸ்டிரைக்’
என்றனர்
இறங்க மறுத்தனர்
சாவுக்கென்ன
யாருக்கும் பணியமாட்டோம் எனச்
சூளுரைத்தனர்
இங்கிருந்தபடியே
சமைத்து உண்டு பெற்று
வைராக்யத்தோடே
பழைய வாழ்வை நடத்தினர்

வீட்டுக்காரனோ தந்திரசாலி
பிடுங்கின வரைக்கும் லாபமென்று
காய்களை வளைத்துப்
பறித்துச் சாப்பிட்டான்

மீண்டும் புரட்சி
மரத்துப் போச்சி!

Read more...

Tuesday, July 9, 2013

கரையான் ஏறும் பனைகள்

வேண்டாம்.
சொரணையற்ற தன்மையைக் கூட
யாரும் ஏச வேண்டாம்.
மனசின்
சொரணையற்ற பகுதி கூட
சொரணை மிகுந்த மிக மென்மையான
பகுதியைப் பயந்து போய்க்
காபந்து பண்ணுகிற உஷாராய்தானே இருக்கிறது!

நெஞ்சைக் கொட்டி வரைந்த
ஓவியமாய்க் கரையான் ஏறும்
பனையேறி ஏறி இறங்காத
பனைகளில்.
இதோ பாருங்கள்;
வேண்டாம்,
கை வைக்க வேண்டாம்.
அடடா!
நான் சொன்னது கேட்கலியா நீங்க!
உயிர்பாசம் கொண்டு
பரபரக்கும் கரையான்கள்...
சொரணை மிகுந்த மனசின்
மிக மெண்மையான பகுதி.

இப்பொ புரிகிறதா
சொரணை மிகுந்த மிக மென்மையான
மனசு
சொரணையற்றுப் போகும் விதம்?

Read more...

கப்பல் கட்டுதல்

வாழ்வக் கடலில்
சாவே சுகமெனத் தேர்ந்த
பிணங்கள் நடுவே
தத்தளிக்கும் ஒருவன்...

கைகொள்ளும்
பிணங்களைச் சேர்த்துக்
கட்டுமரத் தெப்பமாக்கி
அவன், முன்பு ஆசுவாசிக்க; போராடக்
கிட்டிய
உடைந்த கப்பலின்
ஒரு துண்டு மரத்தால், சத்தியத்தால்
துடுப்புப் போட்டுப்
பிணங்களையெல்லாம்
கரைகொண்டு சேர்க்கிறான்
சேர்த்துக்கொண்டேயிருக்கிறான்

கரையில்-
தன் கனல் கொண்டு
பிணங்களையும் அணைத்து
உயிர்த்தெழ வைக்கிறான்...

மீண்டும்
இக்கரையில்
கடல் கடக்கும் கடனுக்கு
ஒரு கப்பல் கட்ட
ஊக்கமாய் வேலைகள் நடக்குது
எங்கும்

Read more...

Monday, July 8, 2013

இருவர்

தோட்டத்துக்கு நீர் பாய்ச்சத்
தோதான நிலா வெளிச்சம்.
தன் தோட்டக்
கிணற்றுக்குள் தெரிந்த நிலவின்மேல்
மோகத்தால் விழுந்து விட்டான்

தோட்டத்தையே அறவே மறந்துவிட்டான்

ஒரே நினைவாய்
அந் நிலவைத்தான் பிடிக்க எண்ணி
முயன்று முயன்று முயன்று
ஏற்றம் இரைக்கும் கையுடனே
மூச்சு வாங்க இளைத்து நின்றான்

மண்வெட்டிக் கையோடு
நீர் விலகி முடித்த மச்சினன்
சிரித்து நின்றான் இவனைப் பார்த்து
நீர் குளுரப் பாய்ந்த தோட்டமென

Read more...

கடல் தூங்குகிறது

மூச்சலைகள் மார்பில் நெளிய
மல்லாந்து படுத்தபடி
கடல் தூங்குகிறது...

கரையோரப் படகுகளாய்
ஜனங்களும் அசைந்து கொள்ளப்
புரண்டு புரண்டு படுத்துக்
கடல் தூங்குகிறது...

கரை கொணர்ந்து இரைத்த
மீன் சவங்களைச் சுற்றி
வெற்றிலைக் குதப்பலாய்
வாக்குவாதங்களைத் துப்பிவிட்டு
கைலிகளைத் திரைத்துக் கட்டிக்கொண்டு
ஓடி வந்து சூழ்ந்துகொண்டனர்,
ஆகாயம் நோக்கித் திறந்த
ஒரு கூண்டு போல

புன்முறுவல் காட்டி
குன்றாத உயிர்ப்போடு
கடல் கம்பீரமாய்த்தான் தூங்குகிறது...

சாவை மெய்க்கக் குனிந்த
ஈக்களும் காக்கைகளும் விரட்டிக்
காத்திருக்கும் பலகாரக் கடைக்காரிகள்
மணலில் புதையத் தள்ளி வந்த
டீக்கடை கண்ணாடி கிளாசுகள்
கொடுக்கல் வாங்கல் சப்தங்கள்
ஏலம் விடுபவனின் ஒற்றைக் குரல்
லோடு எடுத்துப் போகும் சைக்கிள்காரனை
துரிசப்படுத்தும் கங்காணி வேகங்கள்...

எல்லா ஒலிகளும்
சோ சோ என முரலும்
கடலின் குறட்டைக்கு
வெகு எச்சரிக்கையாய்க்
கீழாகவே ஒலிக்கிறது

குறுகுறுக்கும் நெஞ்சங்கள்
கடலின்
குறட்டை ஒலியிலேயே
பயந்து திருந்த
கடல் இங்கே இன்று வரை
நிச்சிந்தையாய்த்
தூங்கிக் கொண்டுதான் இருக்கிறது...

Read more...

Sunday, July 7, 2013

தண்ணீர் லாரி

தெருக் குழாய்கள் இல்லாத
நகர் நோக்கி பசி போக்கத்
தாயாக ஓடிவரும்
நகராட்சித் தண்ணீர் லாரி.

பன்றிக் குட்டிகளாய் மொய்த்து
முலை நோக்கி மோதுங் குடங்கள்
தமக்குள்ளே இடித்துக்கொள்ளும்
ஆபாசமாய்க் கத்தும். கூச்சலிடும்

எங்கே அந்த பரிசுத்த அமைதி
எனத் தேடினால்
ஒரு நிழலோரம் லாரி டிரைவர்
பீடி புகைத்துக் கொணடிருப்பான்

Read more...

இட்லிக்காரம்மாள்

பிழைப்புக்காய்
திசையெங்கும் முட்டிக் களைத்து
நண்பகல் படுக்கையில்
’நான்’ உதிர்ந்துபோய்க் கிடக்கிறேன்.
கட’க்கு கட’க்கு எனத்
தாலாட்டும் ரயில் பிரயாணமாய்
உலகு உருளும் ஒலி.
இட்லிக்கார விதவையம்மாள்
மாவாட்டிக்கொண்டிருக்கும் ஒலி.
நள்ளிரவு.
பாத்திர சப்தமும் அடுப்புக் கனலும்.
உறக்கம் கலைந்து
நாளைய பயத்தில்
வேகும் என் நெஞ்சு.
விடியற்காலை
மெதுவாய் எழுந்து
சாவகாசமாய்க் குளித்துவிட்டு
சாப்பிடப் போவேன் – அவளிடம்
இரண்டே இரண்டு இட்லிகள்
கடன் சொல்லி வாங்கி

Read more...

Saturday, July 6, 2013

பாலையிலே விளைந்த சோலை

தகிக்கும் பாலை
கால்களைக் கெஞ்சக் கெஞ்ச
தண்ணிக் குடங்க ளேந்தி வரும் அவளை
வாரி விட்டு விடாய் தீர்க்க
வழி பார்த்து நிற்கும் பாறைகள்-
ரௌடித்தனமாய்

மேகக் குடங்க ளேந்தி நடந்த
மின்னல் கொடி யொன்று
மலையிலே இடறி
ஆறு ஒன்று ஓடுது
அதோ... அதோ...

பயந்தபடியே ஆயிடிச்சா?
சரி சரி,
தடுக்கி விழுந்த அவளெங்கே?
செத்தே போனாள்?
ஆடும் நதி ஆகவும்,
பாடும் பயிர் பச்சை பறவைகளாகவும்
எழுந்தாளோ?
காலை வாரிக் காரியம் சாதித்த
கயவனையும் காதலிலே
முழுக்காட்டுகின்றாளோ?

Read more...

என்னை எடுத்துக்கொண்ட இவள்

விடாய்த்துப்
பிளந்த வாயுடன்
குழாயடியில்
குடம்
பதறிப் பதறி
ஏந்திக் குடிக்கும்

தாகந் தீர்ந்த பின்னும்
விடாது பொழிந்து
வழியும் ஜலத்தில்
தேக மெல்லாம் சிலிர்த்துத்
திணறத் திணறச்
சுகிக்கத் தொடங்கும்
பிறகு

உள்ளும் புறமுமாய்
பெருகிவிடும் வெள்ளத்தில்
அமிழ்ந்து
கைவல்யமாயிருக்கும்
அப்போது

ஒரே குறுக்கீடாயிருக்கும் ’நானு’ம்
கரைந்துகொண்டிருக்கும்
கடைசியாய்

ஒன்றேயான வெள்ளத்தில் கலந்து
மறைந்து போயிருக்கும்
ஆனால் இவளோ

நான் சுகிக்கத் தொடங்கியதுதான் தாமதம்
தூக்கிக்கொண்டு போய்விட்டாளே
வாக்குறுதிகள் அளித்தபடி

Read more...

Friday, July 5, 2013

இரட்டைக் குடம் ஏந்தி வருகிறவள்

இது,
தாகம் எரிகிற
அத்துவான வெயில்
கிளைக்க மறந்து
நெட்டென நின்றுவிட்ட
பனைகள் வழியே
என் தாக விழிகளுக்கு
’அவள்’
தண்ணீர் சுமந்து வருகிற கோலம்

ஒரு குடம் தலையில்
பிடித்தரமில்லாமல் நிராதரவாக;
ஆனால் அதுதான் கவனமாக.
ஒரு குடம்
’ஆசபாசமாய்’ ஒசிந்த இடையில்
வளைக் கரத்தின் அரவணைப்பில்
ரொம்பச் செல்லமாக;
ஆனால் அலட்சியமாக.
என்றாலும்
சமன் காத்து இயங்குகிற
நடை;
அதற்கு
இசைவாய் அசையும்
மற்றுள்ள கை – ஆ! அதுதான்
எத்தனை அனுசரணையோடும் விழிப்போடும்!

Read more...

முத்தமிடும் போது...

மூண்டு வரும் சிரிப்பாணி
விழிகளிலும் தெறிக்க
அழகு உதடு
அழுத்தும் பற்களால்
அநியாயமாய்ப் பிரிந்து காணும்
வாழ்வும் சாவுமாய்!


அன்று காலை
குளிக்கிறதுக்குப் போகும் வழியில்
ஆலமரத்தில் அவள்
பல் துலக்கக் குச்சி ஒடிக்கும் சப்தம்
என் பறவைகளெல்லாம் பதறிச் சிதற

முகம் கழுவ நீர் கேட்டாள்
நான் குளித்துக்கொண்டிருக்கையில் வந்து
தென்னை மரம் நிற்கும் இடத்தில்.
ஒரு கணமே
காண முடிந்த பற்களை அவள்
வெடுக்கென மறைத்துக்கொண்டாள்,
முகத்தில் அதே சிரிப்பாணி
விழிகளிலும் தெறிக்க
அழகு உதட்டின்
அநியாயமாய்ப் பிரிந்து காணும்
வாழ்வும் சாவுமாய்

தென்னைகள் பூவாய் முழிக்கும்
கிணற்றிலே குளித்தெழுந்து
பச்சைக் குழல் ஒதுக்கிப்
பார்க்கும் ஒளி முகமும்,
வேணா வெயில் எரித்தும்
கருகாத மலர்போல உருவும்,
மேலாக்கு விலகி விலகி
வேட்கை போல் குலைத்த முலையும்...

ஏந்தி... அவள் எதிரே நிற்க
பிடிக்குள் சிக்கி...
முத்தக் கிணற்றில் வாளி இறங்கி
’அது’ சித்திக்கும் சமயம்;
தள்ளியே போயினள்
தான் தந்த கணப்பு மாத்ரம்
எப்போதும் என்னை எரிக்க

இருள் சூழுமிவ் அந்திப் போதிலும்
அவள் அதே சிரிப்பாணியும்
அழகும் உதட்டின்
அநியாயமாய்ப் பிரிந்து காணும்
வாழ்வும் சாவுமாய்!

அன்று துயில் விட்டெழுந்தபோது
தாவி ஒரு குச்சி ஒடித்தேன் வேம்பில்
என் பல் துலக்க

Read more...

Thursday, July 4, 2013

நான்

வெள்ளையடிக்க
உயர்த்திய மட்டையிலிருந்து
எரிகல்லாய் உதிர்ந்து
தலையில்
கொட்டிய துளிகள்,
இவள்
கிள்ளியெடுத்துக்
கூந்தலில் சூடிய
வெள்ளை ஜவந்தியாய்ச்
சிரித்த சிரிப்பு
நெஞ்சை நிறைக்க, வெள்ளைச்
சுவரைப் பார்த்தேன்
ஒற்றை ஜவந்திப் பூவாய்ப்
பிரகாசிக்கும் ஆனந்த வெளி!-அதிலே
தன் நிழலை இழுத்துக்கொண்டு
சுறுசுறுவென்று நகரும் ஒரு புள்ளி எறும்பாய்
நான்

Read more...

குளியலறைக்குள்

உள் நுழைந்து
கதவுகளை மூடிக்கொண்டு
குளிக்கும்போது
சுகத்தில் சொக்கும் – திணறும் –
என் உயிர்.

நிலாப் பூத்த அந்திகளில்
நம் கிராமத்துக் கிணற்றில்
முங்கி முங்கித் திளைக்கும் தலைகள்
அல்லிப் பூக்களாய் சிரிக்குமே
தம் தோல்வியை ஒப்புக்கொண்டு!

ஷவரை நிறுத்தியதும்
ஒரு பூரண மௌனம் – சாந்தி

சாந்தியற்ற உலகம்
கதவைத் தட்டிக்
கலைக்கும் அழைக்கும்
கெஞ்சும்
உறுமும்
சேற்றை வீசும்

எல்லாவற்றுக்குப் பிறகும்
சிரிக்கும்

உலகம் உலகம்!

Read more...

Wednesday, July 3, 2013

தபஸ்

கிணற்றுக்குள் விழுந்த
சோப்புக் கட்டி தபஸிருக்கும்
எதிரே:
அழுக்கைத் தேடும் மீன் கூட்டம்
கிணறெங்கும் உலாவிவரும்

Read more...

கிணற்றாங்கரை

சங்கிலியிட்ட வாளி
தாலியாய்க் கழுத்தில் தொங்க
கிடைத்த ஓய்வில்
வானம் பார்த்து நிற்கும் துலாக் கம்பு.
சிமெண்டுத் தளமிட்ட
கிணற்றுச் சுற்றெல்லாம்
காயும் நெஞ்சாய்
உலர்ந்துகொண்டிருக்கும்.
உதிர்ந்த இலைகளைக் கட்டி
அழுதுகொண்டிருக்கும் ஓர் ஒரம் சகதியாய்.
கிணற்று நீரின் நிச்சலன மவுனத்தில்
அவனை உற்றுப் பார்க்கும்
அவன் முகம்.
யாருக்குமே தெரியாமல்
காலம் நழுவும்.
இடையே ஒரு வேதனை
குழிழியாய்த் தோன்றி மறைய
ஏன்? என்று கேள்விக்குறியாய்
புருவம் நெரிக்கும்.
சொல்கிறேன் என
ஒரு பழுத்த இலை நீர்மேல் விழுந்து
சலனமற்ற நீர் அதிர்ந்து
வலிக்கும் நெஞ்சு

Read more...

Tuesday, July 2, 2013

சுற்றம்

பிரம்மச்சாரி வீடென்று
இரக்கப்பட்டு
என் முற்றம்
பெருக்குவாள்
அடுத்த வீட்டம்மாள்.
பன்னீர் மரமும்
கோலத்தைப்
போட்டுவிடுமே
பெரூஉசாக!

Read more...

தள்ளு அவனது பார்வையை

படீர் படீரென
உள்ளங் கையால் தப்பிச்
சூரியனாய் சிரிக்கவை, சிரி.
கைகளில் அள்ளி
முகத்தோடு சேர்த்துப் பரவசமாகு.
வீசி வீசி நீந்தித்
தழுவிக் கொள்ளப் பார்.
முடியாது; கலங்கிவிடாதே.
பேசாமல் மிதந்து, ஆசுவாசி.
நிலை நீச்சலில் நில்.
இதழ் வைத்துப் பருகு;
அந்த இன்பத்தைக்
கொப்பளித்துக்
குளமெங்கும் பரவவிடு.
திகைத்து திகைத்து நிற்காதே.
உன் வட்டத்தை விரி
எப்போதும் இயங்கிக்கொண்டு.
மிதக்கும்
எல்லோரையும் அசைத்து
உறவாடு
உன் உடல்மீது பசியோடு
கரையோரம் வெறி’த்துக் கொண்டிருப்பவனைக்
கவனிக்கவே கவனிக்காதே, பெண்ணே!

Read more...

Monday, July 1, 2013

முகங்கள்

வேலைக்கு அலைந்து
வெயிலில் உழைத்துக்
கருத்துப் போன முகம் எனக்கு

இன்று கொஞ்சம்
வெளுத்த முகம்.
’வேனிஸ்ஸிங் கீரீமா’ய்
உருகும் பனிச் சிகரங்களில்
உன் முகம் கண்டபின்னே

மீண்டும் கருத்த முகம்

Read more...

ஒரு மழைநாளில்...

பளிச்சென்ற பாதங்கள்
கலைந்து
ஒரு இணைப்பாதம்
உயர்த்திப் பிடித்த நீலப்புடவை.
கொட்டி வெறித்த வானப் புதுமை.
பூமி நோக்கிய பார்வை.
உள்ளுணர்வாய்
பூத்த சிரி,
நதியோட்ட அழுகாக
அவள் விலகி விலகி நடந்துவர;
ஈரக் கூந்தலுடன் தலை தாழ்த்தி
இரு கரையும் நிற்கும் மரங்கள்;
விழி மூடிய தியானத்தில்
வானத்தை நெஞ்சில் இருத்தி
குண்டுகுழி நீர்கள் லயிக்க
தென்னைமரக் கிளை மீது
புளகித்துச் சிலிர்த்து மீண்டும்
மௌனமாய் அமர்ந்திருக்கும்
நன்றாய் நனைந்த காகம் ஒன்று

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP