Friday, April 26, 2024

எனது வீட்டுத்தோட்டம்

”எனது வீட்டுத்தோட்டம்” கவிதையைப் படிக்க இங்கே சொடுக்கவும்


Read more...

Wednesday, April 24, 2024

30 -04 - 2024 கவிஞர் தேவதேவனுடன் ஓர் இணையவழி உரையாடல்

 


Read more...

இசை

பாதத்திலொரு முள்தைத்து
பாதையெல்லாம் முள்ளாய்க் குத்துகிறது

வழியை அடைக்கிறது வலி

வலியினுள்ளா
வழியினுள்ளா
வாத்தியம் ஒன்று இசைக்கிறது!

Read more...

Monday, April 22, 2024

தர்மம்

தர்மம் வேறு
மதம் வேறு
(தர்மம் - நம்மால் உருவாக்கப்படாததும்
மதம்- நம்மால் உருவாக்கப்பட்டதும் ஆம்)
இல்லையா?

தர்மத்தின் முன்னொட்டாக
மதத்தின் பேரைச் சேர்க்கிறது
சாத்தான்!
பாவம்
அவனும்
தன்னைத்தானே
அறிந்து கொள்ளாத
அறிவிலிதானே?

Read more...

Friday, April 19, 2024

பெருங்குளம்












”பெருங்குளம்” கவிதையைப் படிக்க இங்கே சொடுக்கவும்


Read more...

Wednesday, April 17, 2024

அவன் குரல்

உங்களைப் போன்றவர்கள்
எங்கள் கட்சிக்கு வந்தால்
இந்த உலகத்தையே மாற்றி விடலாம்
என அழைத்தார்கள் அவனை

உங்களைப் போன்றவர்கள்
எங்கள் மதத்திற்கு வந்தால்
இந்த உலகத்தையே மாற்றி விடலாம்
என அழைத்தார்கள் அவனை

உங்களைப் போன்றவர்கள்
எங்கள் அமைப்புக்கு வந்தால்
இந்த உலகத்தையே மாற்றி விடலாம்
என அழைத்தார்கள் அவனை

ஒரு பக்கம் அத்துணை பெரியதாய்
ஒரு சத்சங்கத்தையே அவன் நண்பர்கள்
வளர்த்த போதிலும்
சாதி எனும் சாத்தானைக் கண்டு கொள்ளாமல்
ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு காலோடே
கடவுளின் ராஜ்ஜியத்தை எழுப்ப முடியாதது கண்டான்

தீமையின் விஷவேரைக் கண்டுகொண்டா-
னவன் குரலைக் கேட்டு இருக்கிறீர்களா?
எல்லாவற்றையும் மறுப்பவன்
எந்த ஒரு வழியும்
இல்லை என்று மட்டும் சொல்லி விடாமல்
ஒரு வழி இருக்கிறது என்றவன் சொல்வதை
நாம் கவனிக்கலாமல்லவா?

ஒரே வழி அதனை
நாம் கவனிக்காதமைதானோ
போரும் துயரும் அறமின்மையுமே
தொடர்ந்து வரும்
இந்த உலகைப் படைத்திருக்கிறது?

ஒரு கணம் போதுமே என்கிறானே
தீதிலாதோர் தேவருலகைப் படைத்து விட?
கணந்தோறும் எரிந்து கொண்டே
ஒளிர்ந்து கொண்டுமிருக்கும்
அழியாச்சுடர் அல்லவா அது?

Read more...

Monday, April 15, 2024

குன்றாத அமுதம்










எத்தனை வண்ணத்துப்பூச்சிகள்
வந்தமர்ந்து தேனுண்டாலும்
குன்றாது விளைந்து கொண்டிருந்தது
மலர்த்தேன்
வந்தமர்ந்த மலரிடமிருந்து
அதுவும்தான் தேன் பருகிக் கொண்டிருப்பதால்!

Read more...

Friday, April 12, 2024

கூழாங்கற்கள்

 

Photo courtesy: peakpx.com















”கூழாங்கற்கள்” கவிதையைப் படிக்க இங்கே சொடுக்கவும்


Read more...

Wednesday, April 10, 2024

மாபெரும் பாடல்

மேரா நாம் இஸ்க்
தேரா நாம் இஸ்க்
என் பெயர் அன்பு
எங்கள் பெயர் அன்பு எனப்
பாடலின் இசைப் பெருக்கம்
இப்பேரண்டமெங்கும் விரிந்துவிடுமாறு
ஒலித்தது பாடல் அவன் பாடியது

ஆனால் அந்தப் பாவி பாடாத வேளையில்

பாழும் இந்த உலகின்   
சாதிவிஷக்காரன் என்பதுதானே
நாம் கண்ட கொடுமை..?

பாடுவது யார்க்கும் அரியவாம்தான் என்றால்
இதுகாறும் நம்மால் படைக்கப்படாத
ஒரு மாபெரும் பாடலைத்தானே
பாடப் பார்க்க வேண்டும் நாமிவ்வுலகில்?

Read more...

Monday, April 8, 2024

பாடுகள்

கூட்டத்தில்
ஓர் இடம் பிடிப்பதற்காக
அப்புறம்
கூட்டத்தில்
தானே ஒசத்தியானவன் எனும்
ஒர் பேர் பெறுவதற்காக
அப்புறம்
தான் பேர் பெற இயலாமற் போனாலும்
தன் குழு, தன் இனம், தன் சாதிக்காரனுக்காக …

மெது விஷத்தால்
தன்னையும் உலகையும்
போராலும் துயராலும்
கொன்று கொண்டிருக்கிறான் மனிதன்

பேர் புகழ் பணம் தரத் தொடங்கிவிடும்
எந்தச் செயலானால் என்ன
எந்தக் கலையானால் என்ன
கவிதையேயானாலும் என்ன
ஒசத்தியான மனிதனுக்கு
பயிற்சியினால் ஆகாதது என்ன?

பயிற்சியைத் தாண்டி ஒன்று உண்டா?
அன்பாவது, அறமாவது –
அழகு பற்றியெல்லாம் எவனுக்குத் தெரியும்?
உருவமில்லாத இந்த மெய்ப்பொருள்களை
யார் அறிவார்?
யாரால் ஏய்த்துவிட முடியாது?
கச்சிதமாக தயாரிக்கப்பட்ட ஒரு துப்பாக்கி
சுடாமலா போகும்?
வர விடுவோமா பிற குலத்தோரை
எத்தனைக் கால பாரம்பரியம் நம்முடையது?
நாம் தீட்டும் பொய்களாலும் இழி சித்திரங்களாலும்
கண்களும் காதுகளும் இயலாதவன் போன்ற நம் நடிப்பாலும்
நாம் செய்யும் கொலைகளை விடப்
பிறிதொரு ஆக்கச் செயல் உண்டோ?

பயப்படாதீர்கள், அன்பர்களே
கவிதையின் ஆரம்ப வரிகளுக்குச் செல்லுங்கள்
குற்றத்தின் வேர் கண்டுவிட்டால் போதும்
மின்னற்பொழுதே தூரம்
இதோ கண் முன்னே தான் இருக்கிறது
கடவுளின் ராஜ்ஜியம்!


-இனி ஒரு விதி செய்வோம்(2023) தொகுப்பிலிருந்து
இந்நூல் சீர்மை பதிப்பகத்தில் கிடைக்கும்


Read more...

Friday, April 5, 2024

தேவதேவனை தவிர்ப்பது… Aug 2015 - ஜெயமோகன் தளத்திலிருந்து

தேவதேவன் கவிதைகள் தன்னை கவர்ந்துள்ளது பற்றிய வே.ஸ்ரீநிவாச கோபாலனின் கேள்விக்கு ஜெயமோகனின் பதில் இந்தக் கட்டுரையில் உள்ளது

முழுக் கட்டுரையும் இங்கே வாசிக்கலாம்.....

”சிலுவைப் பிரயாணம்" கவிதை இங்கே


Read more...

Wednesday, April 3, 2024

இந்த மலைகள்!

கேள்விகளோடு வந்து நிற்கும்போது
உரையாடுகின்றன இந்த மலைகள்!

கேள்விகள் இல்லாதபோதுதான்
எத்துணை அமைதியாக!

இரைச்சல்களோடு வந்து நிற்கும்போதும்
எத்துணை துல்லியமாக எதிரொலித்தபடி!

Read more...

Monday, April 1, 2024

குட்டிப் பாப்பாவுக்கு ஒரு கதை

கூடி வாழ்ந்தபடி
கூட்டமாய்ப் பறந்து திரியும்
குருவிகளை பறவைகளைப்
பார்த்திருப்பீர்கள்.
அவர்கள் நம் பார்வையில்
ஒன்றுபோல் காணப்படுவதில்
ஒரு பொருளுண்டு
ஒரு கதையுண்டு.

வெகுகாலத்திற்கு முன்பு
அவர்களிடையே அரசர்கள் இருந்தார்கள்
செல்வர்கள் இருந்தார்கள் ஏழைகள் இருந்தார்கள்
தீரர்கள் இருந்தார்கள் சாமான்யர்கள் இருந்தார்கள்
பெரியவர்கள் இருந்தார்கள் சிறியவர்கள் இருந்தார்கள்
வேறுபாடுகள் இருந்தன ஒற்றுமைகள் இருந்தன
சான்றோர்கள் இருந்தனர் துன்பமும் இருந்தது.

துயரை முடிவுக்குக் கொண்டுவர அறிந்த
சான்றோர் ஒருவர் தோன்றினார்.
முழுமையான, புனிதமான ஒரு மனிதர்.
அந்நாள் தொட்டு
ஒவ்வொரு புனிதராய்த்
தோன்றிக் கொண்டே இருந்தார்கள்.

ஓர் ஒற்றை ஆலமரம் மட்டுமேயாய்
இருந்த இடம் திடீரென்று
ஒர் பெருங்காடாக மாறிவிட்டது.

ஒரு புல்லின் உதவி கொண்டு
பூமியெங்குமொரு பச்சைக் கம்பளமே
விரிந்து விட்டது.

வானத்தை நோக்கி
வேர் விரித்தாற் போன்று
அத்தனை இலைகளையும்
உதிர்த்து நின்ற ஒர் மரத்தில்
குபீரெனப் பொங்கி எழுந்தன
புதுத் துளிர்கள்.

ஒற்றை விதை ஒன்றில் தோன்றிய
ஒற்றைப் பூமரம்தான்
ஒற்றைப் பூங்கொத்தாக
கொள்ளை கொள்ளையாய்
விதைகள் வீசப்போகும்
கொள்ளை கொள்ளையான பூக்களுடன்.

பூமியெங்குமோர் புன்னகையைக் கொளுத்திற்று
பயிர்கள் எங்கும் அமர்ந்து
பசியாறி எழுந்து பறந்த
படைக் குருவிகள் போல்
நீங்கியதோர் வெக்கையும்
குளுகுளுவென்று எழுந்ததோர் பசுமையும்.

இனி இந்த பூமியில்
எந்த ஒரு கசடும் படியவே முடியாதென
ஒரு பெருவெள்ளம்
கொட்டிப் புரண்டு பாயத் தொடங்கியது
அருவிகளும் ஆறுகளுமாய்.

பளீரிடும் வெண்பட்டுக் கம்பளமாய்
விரிந்த வெயிலில்
சின்னஞ்சிறு புழுக்களும்
இன்பமாய் நெளிந்து ஆடின.

மயில் தோகை போல்
வானில் படர்ந்த மேகங்களிலிருந்து
பொழிவதற்கு முன்
ஒரு மனிதனின் மூளையைப்
பொட்டெனத் தீண்டிவிட்ட
சொட்டுத் துளியினில்தான்
எத்தகைய பேரின்பம்!

அன்றுதான்
வேறுபாடுகளையோ துயர்களையோ அறியாத
இந்த புதுக் குருவிகளும்
தோன்றி விட்டன என்கிறார்கள்.


- ஏஞ்சல் (2019)  கவிதைத் தொகுப்பிலிருந்து.

Read more...

Friday, March 29, 2024

ஒரு வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை - தேவதேவன் கவிதைகள் பற்றி பூங்குழலி வீரன்

வல்லினம் பெப்ரவரி 2013 இதழில் வெளிவந்த கட்டுரை.

வண்ணத்துப்பூச்சிகள் கவிஞர்களுக்குப் மிக பிடித்த நண்பர்கள் எனலாம். அவர்களின் துயர் பகிரும் உயிராகவும் கூட இந்த வண்ணத்துப்பூச்சிகள் உலவித் திரிந்திருக்கின்றன. குழந்தைகளுக்கும் உற்ற தோழனாகவும் உறக்கத்தில் அலறி எழுவதற்கான காரணமுமாகவும் இந்த வண்ணத்துப்பூச்சிகள் இருக்கின்றன. சிறியதும் பெரியதுமான ஆங்காங்கே மொய்த்துக் கிடந்து எப்போதும் படபடத்த சிறகோடு பறந்தபடியேயிருக்கும் வண்ணத்துப்பூச்சிகள் மிக அழகாக எதையோ நமக்கு உணர்த்தியபடியே இருக்கின்றன. ஒரு வண்ணத்துப்பூச்சி எப்போதுமே ஒரு வண்ணத்துப்பூச்சியாக பிறப்பதில்லை.

முழுக் கட்டுரையும் இங்கே வாசிக்கலாம்.....

”ஒரு வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை” கவிதை இங்கே


Read more...

Wednesday, March 27, 2024

மரங்கள், பூக்கள், தேவதைகள்

ஒளிரும் வானத்தைச்
சிறிய பெரிய
விண் சுடர்களாய்க் காட்டுகின்றன
வனப் பூங்காவின் மரங்கள்!

விண்ணில் ஒளிர்ந்தாலும்
மண்ணை வாழ்த்தவே
தரையில் வந்து
விரிந்து கிடக்கும் பூக்கள்.

தன் வேர்களையும்
இப் பேரண்டத்தின் வேர்களையும்
நன்கறிந்து கொண்ட
பெருந் தேவதைகள்!

Read more...

Monday, March 25, 2024

அவரின் புன்னகை

இயங்கும் பெருக்குமாறோடு
விளையாடின சருகுகள்
கொஞ்ச நேரம்
அவரும் அவைகளுடன்!

Read more...

Friday, March 22, 2024

தேவதேவன் கவிதை பற்றிய கட்டுரை "காலம், நேரம், இடம்" - ஜி.எஸ்.எஸ்.வி.நவின்

2021ல் வெளிவந்தது.

நத்தையின் அகத்துள் அமைந்த பெரும்புரவி என்கின்ற படிமத்திற்கு இணையானது கீழுள்ள தேவதேவனின் கவிதை. ஒரு ஆறுக்கு ஆறு அறையில் எப்படி இருளும், ஒலியும் ஒரு சேர முயங்க முடியும். ஒருவன் எப்படி தன் வீட்டு அறையின் மறுமுனையில் அமெரிக்காவை பொருத்தி காண முடியும் என்றால் அது கவிஞனின் வாழ்வில் மட்டுமே சாத்தியம்.

முழுக் கட்டுரையும் இங்கே வாசிக்கலாம்.....

Read more...

Wednesday, March 20, 2024

யாருமேயில்லாத பழக்கடை

யாருமே இல்லாத அந்த பழக்கடை
ஆசீர்வாதிக்கப்பட்டது போல இருந்தது!

வானத்தையும் மரத்தையும் பறவைகளையும்
பக்கத்துக் கடைக்காரர்களையும்
காவலாக வைத்துவிட்டு
தேனீர்க் கடைக்குச் சென்றிருந்த பழக்கடைக்காரன்
வேகமாய் திரும்ப வந்தபோது

அருந்திய தேநீரின் சுவையாலோ
கண்டு கொண்ட மனிதர்களைக்
கண்டுகொண்ட விழிப்பினாலோ
கடமை மிக்கதொரு
கடவுளைப் போலவே தோன்றினான்!

Read more...

Monday, March 18, 2024

நிறை

தாகம்!
’தண்ணீர்’ என விரல் அடையாளமிட்டுக் கேட்கிறீர்கள்.
வருகிறது
தேவாமிர்தம் என அருந்தி முடிக்கிறீர்கள்
பெற்றுக் கொண்ட குவளையுடன்
இன்னும் கொஞ்சம் கொண்டு வரட்டுமா
என்று கேட்கிறார்
போதும் என்கிறீர்கள்
அப்படி ஒரு நிறைவுடன்தானே?

பணம் பொருள் சேர்ப்பதில் மட்டும்
ஏன் இந்த நிறைவு இல்லை?

Read more...

Friday, March 15, 2024

பரிசுப் பொட்டலமாகத்தான் இருக்கிறது வாழ்க்கை! - தேவதேவன் பேட்டி

ஜனவரி 2019ல், இந்து தமிழ் திசைக்கு கொடுத்த பேட்டி இது

இயற்கை வியப்பு, ஆன்மிக அம்சத்தைத் தனது கவிதைகளின் அடிப்படையாகக் கொண்டு நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிவரும் கவிஞர் தேவதேவன். கடவுளின் இடத்தில் இயற்கை ஒழுங்கை வைத்து அதன் விகாசத்தில் அது தரும் ஆனந்தத்தில் இயங்கும் பக்திக் கவிஞர் இவர். ‘கவிதை பற்றி’ என்ற சிறிய உரையாடல் நூலும் முக்கியமானது. முதல் தொகுதியான ‘குளித்துக் கரையேராத கோபியர்கள்’ தொடங்கி நாற்பது கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். ‘புரியாது கழிந்த பொய்நாட்கள் எல்லாம்’ என்பது இவரது சமீபத்திய தொகுப்பு. கவிதையை உயிர்த்துவம் மிக்கச் செயல்பாடாகக் கருதும் தேவதேவனிடம் உரையாடியதிலிருந்து… முழுக் கட்டுரையும் இங்கே வாசிக்கலாம்.....

”ஒரு புல்லின் உதவிகொண்டு” கவிதை இங்கே


Read more...

Wednesday, March 13, 2024

அசையும் பல்

என்ன காலம் இது?
என்ன வேலை இது?
அசையும் பல்லை
சுட்டு விரல் ஒன்றால்
தொட்டு அழுத்தி
ஆட்டு ஆட்டு என்று
ஆட்டிக் கொண்டிருந்தான் அவன்!

அதுவும் ஆட்டத்தில்
ஆட்டத்தை இரசித்துக்கொண்டே
ஆடிக்கொண்டிருந்தது
உயிரினின்றும்
கழன்று போகப் போகும்
கவலையே இல்லை
மரணம் பற்றியோ
எதிர்காலம் பற்றியோ
இழப்பு பற்றியோ
எந்த நினைவுகளுமே இல்லாத
பேறுபெற்ற வாழ்வின்
பெருநடனத்திலல்லவா
திளைத்துக் கொண்டிருந்தது அது!

Read more...

Tuesday, March 12, 2024

நடைவழியில்

நடை வழியில் கிடந்தது ஒரு சுள்ளி
இந்த அமைதியான காலை வேளையில்
அது தன் உள்ளே வைத்திருந்த குரல் கேட்கவே
அதை நெருங்கி
அவன் தன் பாதங்களால் தொட்டு அழுத்தினான்
அதுவும் மகிழ்ந்து வெளிப்படுத்திய
இனிமையான அந்தக் குரல்
உரைத்தது காண்:
“வெளியினதும் உன்னுடையதுமான
உறவு அன்றி ஏதுமில்லை, அன்பா!”

Read more...

Friday, March 8, 2024

தேவதேவன் கவிதைகள் -1 & 2, முதல் 16 தொகுதிகளின் தொகுப்பு - வம்சி பதிப்பகம்


தேவதேவனின் முதல் 16 கவிதைத் தொகுப்புகள் , இரண்டு புத்தகங்களாக வம்சி பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது.

வாங்குவதற்கு இங்கே சொடுக்கவும்.


Read more...

Wednesday, March 6, 2024

மலர்கள்

நடைபாதையில்
செம்பொற்கம்பளம்போல் விரிந்து கிடந்த
டுயூலிப் மலர்களைக்
கூட்டிவைத்திருந்தார் தோட்டக்காரர்

எந்த ஒரு மலரும்
தன் தனித்தன்மையை விடாமலேயே
கூடிக் களித்துக் கொண்டு
அப்போதும் ஓர் ஒற்றைப் பூச்செண்டு
மலர் போல!

Read more...

Monday, March 4, 2024

மலர்

ஒரு நாளுக்குள் உதிர்ந்து
ஒரு வாரத்திற்குள் சுருண்டு
உலர்ந்து விடும் இந்த மலர்
தனக்குள் வைத்திருக்கும் காலத்தை யார் அறிவார்?
இந்த மொத்த உலகின் ஒரு பகுதியாகவே
தன்னை உணர்ந்த மலர்
இந்த மொத்த உலகிற்கும் தனது மணம்
பரவிக் கொண்டிருப்பதைத்தான் அறியாதா?
துயரங்களேயற்ற அமைதியான
முழுவாழ்வையும் வாழ்ந்து விடத்தானே செய்கிறது?

இந்தப் பேரன்மையும் பெருவாழ்வையும்
பேரழகையும் தெரிந்து கொண்டுதானா
காதலன் காதலிக்கு மலரை நீட்டுகிறான்?
காதலி தன் தலையில் சூடிக் கொள்கிறாள்?

Read more...

Saturday, March 2, 2024

கட்டுரைத் தொடர் - கவிதையின் மதம் –12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

வரலாறு அதிகாரமிக்கவர்களாலும் பூசிமெழுகுபவர்களாலும்தான் எழுதப்படுகிறது என்றாலும் அவற்றையும் மீறி உண்மையை ஆய்ந்துணர முடிபவர்களால் நாம் கண்டடைவது என்ன? நாம் கண்டுகொள்ளாததும் கண்டுகொள்ள வேண்டியதும் என்ன என்பதுதானே அதுவாக இருக்க முடியும்?
அதுதான் மெதுவிஷமாய் நம் உள்ளும் புறமுமாய் எங்கும் பரவிக்கிடக்கிறது என்கிறோம். கண்ணுக்குத் தெரியாத அதற்கு நாம் என்னென்ன(சாத்தான்!) பெயர்களைச் சூட்டினாலும் அது பெயர்களில் மறைந்து கொண்டு மீண்டும் மீண்டும் நம்மைப் பற்றிக் கொள்கிறது. மெதுவிஷமும் பற்றமுடியாத ஒரு புதுமனிதனை நாம் உருவகித்துப் பார்க்கிறோம் இப்போதும். விளம்புவதற்கப்பாற்பட்ட ஓர் செயலாக, செயல்களாக, அது உலவ வேண்டும்.

முழுக் கட்டுரையும் இங்கே வாசிக்கலாம்.....

Read more...

Friday, March 1, 2024

பேறு பெற்றோர்

தன் காலடியில் ஒரு சிறு சக்கரம்
இருப்பதைக் கண்டு கொண்டவர்கள்
பேறு பெற்றோர்

அதுவே தர்மசக்கரம் என்பதை உணர்ந்தோர்
பெரும் பேறு பெற்றோர்

அதனை இயக்கும் பிடி கிடைத்தோர்
மீப் பெரும் பேறு பெற்றோர்

அதுவே மொத்த உலகத்தையும்
விபத்தே இல்லாமல் படைத்து இயக்கும்
மய்யமற்றதோர் மய்யப்
பெருஞ்சக்கரம் என்பதை உணர்ந்தோர்
மீ மீப் பெரும் பேறு பெற்றோர்.

Read more...

Wednesday, February 28, 2024

சைக்கிள் ஓட்டுதல்

எத்துணை பெரிய மகிழ்ச்சி அது!
”அவள் சைக்கிள் ஓட்டக்
கற்று விட்டாள்! கற்று விட்டாள்!” எனக்
கத்தினான் தெருவில்
கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்த சிறுவன்
நேற்று சைக்கிள் ஓட்டத்
திணறிக் கொண்டிருந்த தன் தோழி
இன்று வெற்றிகரமாய்ச்
சைக்கிள் ஓட்டிச் செல்வதைக் கண்டு!

அது எத்துணை பெரிய அதிசயம் என்பதும்
நம் ஒவ்வொரு செயலும்
நம் பேருலகத்தோடே இணைந்திருப்பதும்
அந்த பேரொலிக்கன்றி யாருக்குத் தெரியும்?

Read more...

Monday, February 26, 2024

வனப் பூங்காவில்

வானம் வந்திறங்கி
மல்லாந்து மகிழ்ந்து கிடக்கிறது,
ஒளியும் நிழலும் பூக்களும் கொண்டு
புனைந்து நெய்ததொரு பொற்கம்பளத்தில்

Read more...

Saturday, February 24, 2024

கட்டுரைத் தொடர் - கவிதையின் மதம் –11: பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்றுவிடற்கு

‘சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்’ என்ற ஒரு குறளும் உண்டல்லவா? ஏன் இச்சொற்றொடர் பிறந்துள்ளது? சிந்தித்துப் பார்த்தால் போதும். அனைத்துத் தவறுகளுக்கான காரணத்தையும் நாம் கண்டுபிடித்துவிடலாம். இந்த அறிவு என்பதும் ஆராய்ச்சி என்பதும்கூட எளியதொரு செயல்தான். எது கடினமானதும், நடைபெறாது உலகைத் துயருக்குள்ளாக்கியிருப்பதும் அதை நீக்க நாம் என்ன செய்ய வேண்டும், ஏன் எப்போதும் செய்ய வேண்டிய ஒன்றை விலக்கிக்கொண்டே இருக்கிறோம் என்பதும்தானே நாம் இப்போது காண வேண்டிய உண்மை?

முழுக் கட்டுரையும் இங்கே வாசிக்கலாம்.....

Read more...

Friday, February 23, 2024

கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஓர் உயர் அடுக்ககம்

ஆயிரம் பறவைகளின்
ஓற்றை அலகுபோல்
ஒரு மின்தூக்கி
கட்டிக் கொண்டிருக்கிறது காண்
ஆயிரம் பறவைகளுக்கான
ஓரு வீட்டினை!

Read more...

Wednesday, February 21, 2024

ஒரு விசாரணையும் தெளிவும்

வசுதைவ குடும்பகம் என்பதையோ
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதையோ
கடவுளைத் தந்தை எனக் கொண்ட தேவகுமாரனையோ
என்றைக்கு நாம் அறிந்து கொண்டோம்?

உலகப் பயணம் வாய்த்த போது தெரிந்ததா?
அடுக்கக மாடிக் கட்டடங்கள் எழும்பிய போது தெரிந்ததா?
தொழில்நுட்ப வளர்ச்சியால்
உலகம் ஒரு குட்டி கிராமமாகி விட்டபோது தெரிந்ததா?

எத்தகைய மதங்களாலும் ஞானிகளாலும் மாமனிதர்களாலும்
கடவுள்களாலும் சொற்களாலும் தத்துவங்களாலும்
இயலவில்லை என்பது புரிந்ததா?

இனம் என்பதும் சாதி என்பதும் மதம் என்பதும்
நாடு என்பதும்தான்
மானிடத் துயரின் விஷவேர் என்பது புரிந்ததா?

அமைதியின் பேரின்பக் கஞ்சி குடிப்பதற்கிலார்
அதன் காரணங்கள் யாதெனும் அறியுமிலார்
அய்யகோ அய்யகோ என்று
அலறும் துடிப்பினையுமிழந்து நின்றார்
இந்த நிலை கெட்ட மனிதனை உயிர்ப்பிக்கத்தானே
நீங்காத நெஞ்சப் பொறுப்புடனே
பார்வையில் மட்டுமே பிறக்கும்
பாதையினைத் தெரிந்து கொண்டவர்களாய்
பார்க்கத் தொடங்கியிருக்கிறோம், நாம்?

Read more...

Monday, February 19, 2024

அதிர்ச்சி

எத்தனை மேலான
பெயர்கள், காட்சிகள், சொற்கள் என
பார்த்தும் கேட்டும் படித்தும்
எத்தனை எத்தனை வியப்புகள்
அத்தோடே
மயக்கங்களும் ஏமாற்றங்களும்!

பெயர்கள் உருவங்கள் சொற்கள்
எல்லாம் கடந்து
காண்பதற்கு அழகாக இருப்பவையல்லவா
உண்மையும் நன்மையும் அன்பும் அழகும்?

Read more...

Saturday, February 17, 2024

கட்டுரைத் தொடர் - கவிதையின் மதம் –10: அடையாளங்களும் அதன் விஷப்பயிர்களும்

குழந்தைகளின் களியாட்டங்ளைக் கவனியுங்கள். எல்லோரும் இவ்வாறே இன்புற்றிருக்க விழைவதுவே மானுட லட்சியம். ஆனால் துன்பம் நேர்கையில், அது தனது மானுடப் பொறுப்புணர்வை நோக்கித் திரும்புவதுதானே இயற்கையாக இருக்கவேண்டும்? தடைக்கல்லாக இருப்பது எது? நம் தன்மய்யம் ஒன்றே அல்லவா? இதை அறிந்திராதவரை நம் கலைகளாலும் இலக்கியங்களாலும் ஏது பயனும் இல்லை அல்லவா?
நான் என்னும் பிடியிலிருந்துதானே நமது அனைத்துக் கடவுள்களும் சாத்தான்களும் ஆட்டம்போடுகின்றன. மாறாக, ‘நான் இல்லை’ எனும் காலமற்றதும் இடமற்றதும் பொருளற்றதுமான ஓர் இன்மைநிலையில்தானே, அன்பும், அழகும், உண்மையும், மெய்யான வாழ்வும் ஒளிர்கின்றன? இயற்கையாக இது தோன்றும் போதெல்லாம்தானே அதனை ஒரு கருணை என்று கண்டுகளிக்கிறோம்? எவ்வளவோ உயர்தொழில்நுட்பத்தையும் அறிவியலையும் கண்டடைந்துவிட்ட நாம் இதனையும் கண்டடைந்துவிடமுடியாதா என்ன?

முழுக் கட்டுரையும் இங்கே வாசிக்கலாம்.....

Read more...

Friday, February 16, 2024

உண்மை நன்மை அழகு

“கடவுள்தான் உன்னை அனுப்பியமாதிரி இருக்குப்பா”,
என்று உள்ளம் நெகிழ்ந்து உருகிய கண்ணீர்
நெஞ்சம் வந்து முட்ட- எல்லோர்க்கும் தான்
நிகழ்ந்த அனுபவங்களையெல்லாம் யோசித்துப் பாருங்கள்.
கடவுள் இருக்கிறார், எங்கே இருக்கிறார்,
என்பதையெல்லாம் தெரிந்து கொள்வீர்கள்.

ஆனால் இந்தத் தருணங்களால்
நிறைந்திருக்க வில்லையே நம் வாழ்க்கை?
நாம் சமைத்திருக்கும் வாழ்வை
நாம் தெரிந்து கொண்டோமா?

இளைப்பாற்றும் இடங்கள் என்றும்
காக்கும் அரண்கள் என்றும் – நம்மை
மக்கு மடையர்களாக்கும்
தடைகளையெல்லாம் அழித்தாலல்லவா
கவிதையின் மதம் உலாவும்
கடவுளின் ராஜ்ஜியத்தை நாம் படைக்க இயலும்?

Read more...

Wednesday, February 14, 2024

இந்த மனிதனைப் பார்த்திருக்கிறீர்களா?

ரொம்ப ரொம்பத்
தீவிரமான ஒரு மனிதனைச்
சந்திக்க நேர்ந்தது.
நாம் படைத்த பெரும் பெரும்
இலக்கியங்களைக்கூட
பொழுது போக்குகளாகத்தானே
ஆகிக் கிடக்கின்றன என்கிறான்.

இவன் கோளாறுதான் என்ன

உனக்கு என்னதான் வேண்டும்
எனக் கேட்டால்
அதை நீங்கள்தானே
கண்டுபிடிக்க வேண்டும் என்கிறான்.
(அதாவது ஒவ்வொருவரும்
தானேதான் கண்டுபிடிக்க வேண்டுமாம்)

நீங்கள் இந்த மனிதனைப்
பார்த்திருக்கிறீர்களா? பார்க்கவில்லையா?
அவனை நான் பார்த்துவிட்டேன்
அவன் இடத்தையும் அறிவேன்.
(நம் ஒவ்வொருவருக்குள்ளேயும் தானே
இருக்க வேண்டும் அவன்?)
மெதுவிஷமும் பற்ற இயலா
அந்தப் புது மனிதன்!

மாற்றப் படாத வீடு என்று
குழப்பங்களையும் போர்களையும்
துயர்களையும் சுட்டுகிறான்
என்ன செய்ய எனத் துவள்கையில்
தோள் தொட்டு
மின்னற் பொழுதே தூரம் என்கிறான்

அய்யோ அய்யோ
நாம் கொளுத்தி வளர்த்துவிட்ட தீயை
நாம் தானே அணைக்க வேண்டும்
அவசர அவசரமான பணிகள்
எத்தனை எத்தனை எனத் தவித்தால்
தீயைத் தீயென
நாம் கண்டு கொண்டால் போதும்
தயாராய்க் காத்து நிற்கின்றது
பூட்டிக் கிடக்கும் பொன்னுலகைத் திறந்துவிட
அருட்பெருஞ்சோதியின்
தனிப்பெரும் கருணை என்கிறான்

குளித்துக் கரையேறாத கோபியர்கள் எனச் செல்லமாய்
மானுட சமுத்திரக் குழந்தைகளை
தன் மாயக் கண்ணாடியில் காட்டுகிறான்

Read more...

Monday, February 12, 2024

வசந்த ராணி

மரமே ஒரு பூவாக
வனமும் வானமும் பூமியும்
வாழ்வுமே ஒரு பூவாக!

”நான் ஒரு மலர்தான் என்பதுதானே
முதன்மையும்
மறைந்து கிடக்கும் பேருண்மையுமாம்”
என்றபடி வெளிப்பட்டுவிட்டார் காண்
வசந்த ராணி!


Read more...

Saturday, February 10, 2024

கட்டுரைத் தொடர் - கவிதையின் மதம் –9: கடவுள்தான் உன்னைக் காப்பாற்ற வேண்டும்

‘கடவுளைக் கண்டமாதிரி இருக்கிறது.’ ‘கடவுளாலும் உன்னைக் காப்பாற்ற முடியாது.’ ‘கடவுளே வந்தாலும் முடியாது.’ ‘கடவுள் என்று ஒருத்தர் இருந்தால் உண்மையிலேயே எவ்வளவு நன்றாக இருக்கும்!’ ‘பார்த்தீர்களா, கடவுள் இருக்கிறார்.’ – இது முதல்வரியைப் போன்றதேதான். இப்படி இப்படி கடவுள் என்ற சொல்லைத்தான் நாம் எப்படி எப்படியெல்லாம் பயன்படுத்துகிறோம். அறிவுக்கு அப்பால் நின்றபடிதான் ஒரு கவிஞனும் கடவுள் என்று தனக்குப் பெயர் சூட்டிக்கொள்கிறான்.

ஊட்டி நாராயணகுருகுலத்திலிருந்து வந்த துண்டுபிரசுரம் மூலம் நித்ய சைதன்ய யதியின் தன் வரலாற்று நூல் வெளிவந்துவிட்டது என அறிவிக்கப்பட்டிருந்தது. சற்றும் தாமதிக்காமல், உடனேயே தொகை அனுப்பி – அப்போதே அது எனக்கு மிகப் பெரியதொகை – உடனே வழக்கம்போல் பள்ளிக்குச் செல்லும் வழி அஞ்சல்நிலையத்திலேயே அதைப் பெற்றுக்கொண்டு பள்ளியின் ஓய்வுநேரத்திலேயே அதைப் படிக்கத்தொடங்கி ஒரே மூச்சில் அதை முடித்தேன். வாசிப்பில் அணுக்கமான நண்பரிடம் நான் அதைச் சொல்ல அவர் அதை ஊர்ந்து வாசிக்கத் தொடங்கி, நானே திரும்பவும் மற்றொரு நூலை வாங்கிக் கொள்ளும்படிச் செய்துவிட்டார். அந்த நூலில் இரண்டு இடங்களில் நான் அடிக்கோடிட்டிருந்தேன். ஒன்று மிகப் பிரபலமான அரசியல்வாதி ஒருவரைப் பற்றிய வருத்தத்திற்குரிய உண்மை. மற்றொன்றுதான் கடவுளைப் பற்றி அவர் என்னைப்போலவே எழுதியுள்ள வரிகள்.

முழுக் கட்டுரையும் இங்கே வாசிக்கலாம்.....

Read more...

Friday, February 9, 2024

உன் துயரங்களையெல்லாம்

உன் துயரங்களையெல்லாம்
எங்காவது இறக்கிவைக்கப் பார்க்காதே
இறக்கி வைத்து வைத்த இடத்தையே
கைகூப்பித் தொழுகிறவனாய் ஆகாதே.

துக்கம் ஒரு மணிமுடியாய்
இரத்தம் வடிக்கும் முள்முடியாய்
உன் சிரசிலேயே இருக்கட்டும்
துக்கம் அறிந்தவன்தானே
துக்கம் நீக்கும் வழிசுட்ட முடியும்?

துக்கம் நீங்கி
துக்கம் போலுமே பெருநிறை ஒளிரும்
பேரின்மை வெளியில்தானே
கவிதையின் மதம் உலாவும்
கடவுளின் ராஜ்ஜியத்தைக்
காட்ட முடியும்?

Read more...

Wednesday, February 7, 2024

நல்லிணக்கமும் நற்செயல்களும்

எந்த நற்செயல்களும்
அடையாளங்களுக்குள்ளிருந்து வரவில்லை!

அடையாளங்களுக்குள்தானே
இரகசியமாய் ஒளிந்திருக்கிறான் சாத்தான்?
அவன்தானே நல்லிணக்கம் பேசுகிறான்?

நல்லிணக்கம் செய்வதெல்லாம் கடவுள்
நம் அடையாளங்களையெல்லாம்
நம்மிலிருந்து கழற்றி எறிந்திருக்கும்
வேளைகளில் மட்டுமே அல்லவா?

Read more...

Monday, February 5, 2024

வெள்ளிமலை...

வெள்ளிமலை உச்சியிலிருந்து
குட்டிச் சிறுமியாய்
குதித்திறங்கி ஓடிக்கொண்டிருந்த வண்டியில்
நாட்டிய சுந்தரி கிருபா லட்சுமி.

வழியெங்கும் கொஞ்சம் கொஞ்சம்
இலைகளுதிர்ந்து கிளைகளுடன் நிற்கும்
மரங்களெல்லாம்
“என் சதங்கைக்குப் பதில் சொல்லடி” என்றபடி
அப்பப்பா,
எத்தனை எத்தனை அபிநயங்களுடன்!

என் செல்லமே, இனி நமக்கு இந்த
இயற்கையுடன்தான் போட்டி
பாவப்பட்ட இந்த மனிதர்களுடன் அல்ல.

Read more...

Saturday, February 3, 2024

கட்டுரைத் தொடர் - கவிதையின் மதம் –8: காதலும் எண்ணங்களும்

முதல் எண்பதுகளில் ஓர் ஆண்டு அது. அடையாறு வசந்தவிஹாரில் பத்துநாட்கள்(ஏழு நாட்கள்?) ஜே. கிருஷ்ணமூர்த்தியின் சொற்பொழிவினைக் கேட்கச் சென்றிருந்தேன். அந்தப் பத்துநாட்களின் பிற பொழுதுகளெல்லாம் பிரமிளுடன் கழிந்தன. ஊர் திரும்புகையில் பிரமிள் போகிறது போகிறீர்கள் திருவண்ணாமலை சென்று யோகி ராம்சுரத்குமாரைச் சந்திந்துவிட்டுச் செல்லுங்கள் என்று கூறியிருந்தார். சென்றேன்.

முழுக் கட்டுரையும் இங்கே வாசிக்கலாம்.....

Read more...

Friday, February 2, 2024

அப்போது

எல்லோரும் இப்படி ஆகமுடியும்
எல்லாவற்றையும்
களைந்து நின்ற
காலமற்றபோதே
கடவுளானேன்
இதைச் சொல்லும்
இப்போது தவிர.

கடவுளின்போது
நானில்லை
நீயுமில்லை
ஒரு சொல்லுமில்லை
காதலும்
செயலும் மட்டுமே
இருந்தன அப்போது.

Read more...

Wednesday, January 31, 2024

கணநூல்

கற்றது கைம்மண் அளவு
கல்லாதது கணநூல் அளவு
கவிதை அளவு
முடிவிலாது
உருளும் இவ்வுலக அளவு
இல்லையா, என் கண்மணி?

Read more...

Monday, January 29, 2024

பள்ளியில் குடியரசு தினவிழா

காட்சி மேடைக்குக் கீழே
சுட்டெரிக்கும் வறுமையினைப்போல்
உரத்த வெயில் படலம்

மேடை நிழலுக்குள்ளிருந்து கொண்ட
வி அய் பிக்கள் முகம் நோக்கி
வெயிலில் நடம்புரிகின்றனர் குழந்தைகள்

சுவர் நிழலில் ஏழைப் பெற்றோர்கள்

ஏங்கி ஏங்கி அலமறுகின்றன
தூர நிறுத்தி வைக்கப் பட்ட மரங்கள்!

Read more...

Saturday, January 27, 2024

கட்டுரைத் தொடர் - கவிதையின் மதம் –7: வாழ்வின் நடனமும் பரலோக ராஜ்ஜியமும்

ஒரு காட்சி ஊடகத்தின் கருத்தரங்க மேடையில் பார்வையாள விருந்தினராகக் கருத்துரைக்க அழைக்கப்பட்டிருந்தேன். அதை இயக்குபவர்கள் அன்றைய அந்தப் பொருளுக்கு என்னைத் தேர்ந்தெடுத்துள்ளமை பெரும் வியப்பூட்டுவதாயிருந்தது. ஒரு பக்கம் தங்கள் தொழிலில் மிகக் குறைந்ததும் சரியானதும் நேர்மையானதுமான கட்டணத்தையே போதுமெனச் செயல்படுபவர்கள், பொருள் சேர்த்தே தங்கள் வளத்தையும் தொழிலையும் பெருக்க விரும்பாதவர்கள். மறுபக்கம், இல்லை, நாம் சற்று வளம் தேடிக்கொள்வதுதான் சரி என்று அதற்கான தங்கள் காரணங்களோடு சாதிப்பவர்கள். ஒரு மருத்துவர், ஒரு ஆட்டோக்கார இளைஞன், ஒரு உணவு விடுதிக்காரர் இவர்கள் நோயாளிகள், ஏழைகளிடமிருந்து மிகமிகக் குறைந்த கட்டணமும் அதுகொண்டே நிறைந்த உழைப்பின்மூலம் போதிய வருமானமும் மிகப் பெரிய மனநிறைவையும் அடைவதாகச் சொன்னார்கள். இவர்களை நான் அங்கே காணநேர்ந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. என் வாழ்வின் ஓர் அற்புத நிகழ்வு அது.

முழுக் கட்டுரையும் இங்கே வாசிக்கலாம்.....

Read more...

Friday, January 26, 2024

கவிஞர் தேவதேவன் மற்றும் அவரது கவிதைகள் பற்றி - பாலாஜி ராஜு

இந்தக் காணொளியில் ரசிகர் பாலாஜி ராஜு, கவிஞர் தேவதேவனைச் சந்தித்த அனுபவம், அவரது கவிதைகளின் வழியாக விரிந்த கவிதை உலகிற்கு சென்றது மற்றும் அவருக்கு மிக நெருக்கமான கவிதைகளான ”அமைதி என்பது”, ”எத்துணைக் காதல் தெரியுமா இந்த சிறிய பசைப் பாட்டிலுக்க” மற்றும் ”தோள் பை” பற்றி உணர்வுப்பூர்வமாக பகிர்ந்துள்ளார்.


ரசிகர் பாலாஜி ராஜுவின் காணொளி

அமைதி என்பது” கவிதை இங்கே .....

”எத்துணைக் காதல் தெரியுமா இந்த சிறிய பசைப் பாட்டிலுக்கு” கவிதை இங்கே.....

"தோள் பை” கவிதை இங்கே.....

Read more...

Wednesday, January 24, 2024

அப்போது இரண்டு பாதைகள் இருப்பதே…

அப்போது இரண்டு பாதைகள் இருப்பதே
எனக்குத் தெரியாது
நான் உன்னைப் பின் தொடர்ந்து கொண்டிருந்தேனா,
அல்ல, நீதான் என் முன்னே நடந்து கொண்டிருந்தாயா,
நான் தனியானவன் தானா,
_ எதையும் நான் அறியேன்.

ஒரு நாள் அந்த இரண்டு பாதைகள் முன்னே இருக்க
நீ சென்று கொண்டிருந்த பாதையை
நான் தேர்ந்தேன். தன்னந்தனியாகவேதான்
நான் உன்னைப் பின் தொடர்ந்து கொண்டிருந்ததையும்
பிரிய முடியாததையும்
வாழ்வின் எல்லா அழகுகளையும் ரகசியங்களையும்
நான் கண்டுபிடித்துவிட்டேன் என்பதையும்
நான் கண்டேன்.

Read more...

Monday, January 22, 2024

பெருஞ்சுடர் வடிவம்

தேவதைகளின்
பின்னழகாய்
விரிந்த கருங்கூந்தல்
சென்று கொண்டிருந்தது
அவன் முன் - னழகாய்!

அறியாமையின்
ஒளியும் இருளுமான
பெருஞ்சுடர் வடிவம்!

Read more...

Saturday, January 20, 2024

கட்டுரைத் தொடர் - கவிதையின் மதம் –6: இரண்டு சாலைகள் பிரிந்தன ஒரு மஞ்சள் வனத்தில்

அடுப்பங்கரையிலிருந்தபடியே மனைவி தன் குட்டிக்குழந்தையிடம் கேட்கிறார்: “அப்பா, எங்கே… என்ன செய்துகொண்டிருக்கிறார்?” ஓடிப்போய் அடுக்களைக்கும் கூடத்திற்குமிடையேயுள்ள வாயில்நிலையைப் பற்றி நின்று ஆடியபடி எட்டிப் பார்த்த குழந்தை, கூடத்தின் ஒரு மூலையில் அமர்ந்து எழுதிக்கொண்டிருந்த தன் தந்தையைப் பார்த்தபடி அம்மாவிடம் “க வி தை…” என ராகம் போட்டது. இங்கேதான் அமர்ந்து கவிதை எழுதிக்கொண்டிருக்கிறார் என்பது அதன் பொருள். ஆனால் குழந்தையின் அந்தக் குரலில் திடுக்கிட்டவனாய் அவன் அசந்துவிட்டான். ஒரு கவிதைக்கணம் அது அவனுக்கு. வாழ்வின் இதுபோன்ற ஓர் அனுபவத்தை நாம் சொல்லி மாளாது அல்லது சொல்ல முடியாது.

முழுக் கட்டுரையும் இங்கே வாசிக்கலாம்.....

Read more...

Friday, January 19, 2024

காரணம் யாருமில்லை

பிழைப்புக்கான
அலுவல் நேரமாய்
வாழ்க்கை கழிகிறது

வாழ்வுக்கான
வாழ்வு நேரமாய்
வாழ்வு எங்கும்
நிலைத்திருக்கிறது

அவன் பற்றிக் கொண்ட
வாழ்க்கைதானே
அவனைப் பற்றிக்
கொண்டிருக்கிறது?

Read more...

Wednesday, January 17, 2024

ஒரு காதல் கதை

பூஜாக்குடலை ஏந்தியபடி
பூப் பறித்துக் கொண்டிருந்தது
ஒரு பெரிய பூக்குவியல் ஒன்று

அவைகள் பூஜித்துக் கொண்டுதானே
இருக்கின்றன
அவைகளை ஏன் பறிக்க வேண்டும்
கடவுள் கேட்டாராக்கும்
எனும் பழைய கேள்விகளையெல்லாம் மறந்தவனாய்
ஒன்றும் பேச முடியாதவனாய்
அவன் அவளைப் பார்த்தான்.

என்ன? என தன் முகத்தில்
ஒரு கேள்வியை வரைந்து காட்டினாள் அவள்.

இல்ல, இதைவிட
நல்லதாய் ஒன்று செய்யலாமே என்றான்

பளாரென்று அவன் முகத்திலறைந்ததுபோல்
காதல் பண்ணலாம் என்கிறாயா? என்றது
அழுத்தமான அவள் பார்வைதான்

சற்றே அதிர்ந்தாலும்
ஆமாம் அதேதான் என்பதை
உறுதியாகவே சொல்லின
அவன் இதழ்கள்

அன்று முதல் அவள்
எல்லாப் பூக்களையும் போலவே
இவ்வுலகைப் பூஜிக்கும் ஒரு
பூக்குவியலாக மட்டுமே
ஆகிவிட்டாள்.

Read more...

Monday, January 15, 2024

தோள் பை

ஓடும் ரயிலில்
அவன் மடியில் தலைவைத்து
அமர்ந்திருந்தது
ஒரு தோள் பை.
அடக்கமான
அய்ந்து திறப்புவாய்கள் அதற்கு.
அவனுடையன
எல்லாவற்றையும் சுமந்துகொண்டு
தன்னையே அவனைச் சுமக்கச் செய்யும்
பேரறிவன்!

குழந்தையாய் வந்த பேரன்னை!

மடியில் அவன் கையடங்கலுக்குள்
அது சாய்ந்து படுத்திருப்பதைப் பாருங்கள்!
என்ன ஒரு உறவு அது!
தீண்டும், வருடும்,
அவன் விரல்களில் பூக்கும் மகரந்தங்களும்
விழிகளில் ததும்பும் கண்ணீருமாய்!
இத்துணை அமைதியும் அன்பும்
ஒழுக்கமும் உடைய உயிர்கள் இருக்கத்தானே செய்கின்றன இவ்வுலகில்.

அருகில் வந்து அமர்ந்தவன் இடித்து
இடைஞ்சலிக்காமல் இருக்கும்படி
அதனை மேலும் நெருக்கமாய்த் தனக்குள்
இழுத்து அணைத்துக்கொண்டான் அவன்.
தனக்குப் பாதுகாப்புத் தரும் உயிரைத்
தான் பாதுகாக்கும் முறையோ அது, அல்லது
அருகிலமர்ந்த அந்த மனிதனுக்காகவோ?
விளக்கிச் சொல்லத்தான்,
பிரித்துச் சொல்லத்தான்,
சொற்களாலே சொல்லிவிடத்தான்
முடியுமோ இந்த அன்பை!


- மகாநதியில் மிதக்கும் தோணி - 2022 தொகுப்பிலிருந்து

Read more...

Saturday, January 13, 2024

கட்டுரைத் தொடர் - கவிதையின் மதம் –5: திக்குத் தெரியாத காட்டில்…

ஒரு கவிதையின் நம்பகத்தன்மை அதை எழுதியவன் தன் எழுத்துகள் மூலம் சம்பாதித்து வைத்திருக்கும் புற ஆளுமையிலிருந்து அல்ல. அவனது மற்ற கவிதைகளிலெல்லாம் கனன்றபடி விரிந்துகிடக்கும் அந்த ஆளுமையிலிருந்தே ஏற்படக்கூடியது. இதுவே மனிதனைவிட அவனது கவிதை முக்கியமானது என்பதை நாம் காணும் இடம்.

முழுக் கட்டுரையும் இங்கே வாசிக்கலாம்.....

Read more...

Friday, January 12, 2024

இதுவே என் சேதி

இயேசுவே
மதமாகிய சிலுவையிலிருந்தும்
உம்மை நான் மீட்பேன்
இதுவே என் சேதி என் தந்தையே.

உமது ஆசைகளையும் தோல்விகளையும்
கண்ணீரையும் இரத்தத்தையும்
நான் அறிவேன்.

துயர் நீக்க அறிந்த
கவிதையின் மதம் உலாவும்
கடவுளின் ராஜ்ஜியத்தில்
உம்மை நான்
இளைப்பாற்றுவேன் என் தந்தையே.

Read more...

Wednesday, January 10, 2024

எத்துணைக் காதல் தெரியுமா இந்த சிறிய பசைப் பாட்டிலுக்கு

எங்கோ விழுந்து
தொலைந்துவிட்டது
பசைப் பாட்டிலின்
நுண்துளை மூடி.

தன் பணி முடிவதற்குள்
பயனற்றுப் போக விரும்பாத பசை
நுண்துளையருகே இருந்த
தன் உடல் மரித்துக் காத்துக் கொண்டது.

Read more...

Monday, January 8, 2024

கவிதை

எண்ணங்களால் உருவாக்கப்பட்ட
தத்துவங்களல்ல இது.
எந்த மனிதனும்
கண்டேயாக வேண்டிய
உண்மை.
உயிரின் குரல்.
அமைதியின் மொத்தம்.
அழகின் கொண்டாட்டம்.
அன்பின் ஈரம்.
அறத்தின் தகிப்பு.
புத்த புன்னகை.
நித்தியத்தின் கரங்களிலிருந்து
சுழலும் வாள்.
ஒளிமட்டுமேயான
ஓவியநிலா.
நாம் அறியாதவற்றின்மீது
தோன்றித் தவழ்ந்து ஓடும்
அமுதநதி.

உண்மையைச் சொல்வதானால்
அது நினைவில் வைத்துக்கொள்ளக்கூடிய
ஞாபகம் அல்ல!

முழுவாழ்வின் மலர்ப் புன்னகை.
முழுமையின் புனிதத் தொடுகை.

சிதைவும் உயிரின்மையுமல்ல.
உடைந்த ஒரு பகுதி அல்ல.
உடைந்த ஒரு பகுதியின்
கண்ணீரோ கூக்குரலோ
கதறலோ அல்ல.
எனினும்
முழுமையின் முழுவாழ்வின்
கண்ணீர் என்றொன்றும்
காதல் என்றொன்றும்
இருக்கவே இருக்கிறது
ஆற்றல்களெல்லாம் அடக்கப்படாமலேயே
கொந்தளித்துக் குழைந்துகொண்டு கிடக்கும்
அமைதி என்பதும் அதுதான்.
கவிதை என்பதும் அதுதான்.


இந்தக் கவிதை “கவிதையின் மதம்” கட்டுரைத் தொகுப்பில் முதல் கட்டுரையின் இறுதியாய் உள்ளது.

Read more...

Saturday, January 6, 2024

கட்டுரைத் தொடர் - கவிதையின் மதம் –4: மெல்லிய அசைவுகளும் பயங்கொள்ளி அசைவுகளும்

எனது பதிப்பாள நண்பர் ஒருவர் எனது கட்டுரைத்தொகுப்பு ஒன்று கொண்டுவரும் முயற்சியில் அனைத்துவகைக் கட்டுரைகளையும் திரட்டி அனுப்பிவைக்கச் சொன்னார். அனுப்பிவைத்தேன். அந்தக் காலத்தில் ஒரு நிழற்பட நகல்கூட எடுத்துவைத்துக்கொள்ளாத நிலையில் பதிப்பாளரிடமும் கிடந்து அவைகள் தொலைந்து போயின. இருவருக்குமே எதிர்பாராதது அது. தொகுப்பாக ஒரு ஐநூறு பக்க அளவு வந்திருக்கக்கூடிய அந்த எழுத்துகளின் இழப்பு எதுவாக இருக்கும் என யோசிக்கிறேன். அன்று என்னிடமிருந்த ஊக்கமும் உணர்ச்சிகளும் எண்ணங்களோடும் கருத்துக்களோடும் ஊடாடிய வகையில் நிகழ்ந்த ஒரு நாட்டியத்தைத்தான் நாம் அதில் பார்த்திருக்க முடியும். அந்த எழுத்திற்காக நான் இப்போது வருத்தப்படவே இல்லை.

முழுக் கட்டுரையும் இங்கே வாசிக்கலாம்.....

Read more...

Friday, January 5, 2024

இந்த வண்ணத்துப் பூச்சிகள்

உதிர் இலைகளின் நடனத்தைக்
கற்றுக் கொண்டனவாய்
இந்த வண்ணத்துப் பூச்சிகள்!

Read more...

இந்தச் சருகுகள்

ஒரு பெரிய மரத்திலிருந்து பிரிந்த துயரமே இல்லை.
எத்துணை அமைதியாகக் கிடக்கின்றன இந்தச் சருகுகள்!

காற்றை உணரவும்
நடந்து செல்வோர் பாதம் தொடுகையில்
தான் சொல்ல வேண்டியதைச் சொல்லவும்
தன் காதலை ஒலிக்கவும் இசைக்கவும்..

பெரும்பாலான பொழுதுகளில் அனைத்தையும் மறந்தபடிதான் நடைவழிக்
காற்றில் உயிரின் சிலிர்ப்புடன் மட்டுமே
எத்துணை அமைதியாகக் கிடக்கின்றன!

Read more...

Wednesday, January 3, 2024

அடுக்கு மாடி உயரத்திலிருந்து பார்க்கும்போது

இந்த தென்னை மர சிரசுகள்!
காய்களுடனும் கனிகளுடனும்
அத்துணை பெரிய காதலுடனும்
பூமியிலிருந்து பீரிட்டுக் கொட்டும்
நூறு நூறு நீருற்றுக்கள்!

Read more...

Tuesday, January 2, 2024

கவிதைத் தொகுப்புகள் 74 - 78 வாங்க


















கவிதைத் தொகுப்பு - 78 - காண்பதும் காணாததும்
கவிதைத் தொகுப்பு - 77 - நடைமண்டலம்
கவிதைத் தொகுப்பு - 76 - மெதுவிஷமும் பற்ற இயலாப் புதுமனிதன்
கவிதைத் தொகுப்பு - 75 - வேணுவனம்
கவிதைத் தொகுப்பு - 74 - விண்மாடம்

இந்தக் கவிதைத் தொகுப்புகளை ஆட்டோநேரட்டிவ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

கவிதைத் தொகுப்புகளை வாங்க இங்கு சொடுக்கவும் .....

Read more...

Monday, January 1, 2024

சிறிய தென்னந்தோப்பு

அங்கே எந்த ஒரு தென்னை மரமும்
கூட்டத்தோடு இல்லை.
கூட்டத்தோடு இல்லாமலும் இல்லை.
தன்னந்தனியாக இல்லை.
தன்னந்தனியாக இல்லாமலும் இல்லை.

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP