Wednesday, October 31, 2012

நீரிலா? ஒளியிலா?

கனன்று சிவந்த இத்தாமரை
மிதந்து கொண்டிருப்பது நீரிலா? ஒளியிலா?

நீரை உறிஞ்சி அவளைத் தன்னோடு
பொத்திக்கொள்ள விரும்பும் ஆசையை
விட்டுக் கொடுத்துவிட்டது மண்!

மண்ணில் இடம் பிடித்துக்கொண்ட நீரோ
ஆசையால் பொங்கிப் பொங்கி
அவளை முழுங்கிக்கொள்ளத் தாவுகிறது!

தனது விண்ணுடல் கொண்டு
நீரில் மூழ்கிவிடாது மிதந்தபடி
மேலேமேலே நீண்டுநீண்டு
ஒளிக்கடலில் மூழ்கிவிடவே துடிக்கிறாள் அவள்!

Read more...

பூ

ஒரு பூ
ஒரு புன்னகை
ஒரு பெரும்புரிதல்!

பரிவர்த்தனைக்கு முயல்கையில்
அடையும்
தோல்வி துக்கம் முதலான
இடைப்பட்ட எதனையும்
ஏற்க மறுத்து
அவற்றைச் சாம்பலாக்கி
எரியும் கனல்!

அணையாத
தன் காதலை வெளிப்படுத்த
மலரைச் சொல்லாக்கிய
முதற் காதலனின் இதயத் துடிப்பு!

Read more...

Tuesday, October 30, 2012

மழைநீர் சேகரித்தல்

அதோ அந்தத் தாமரை இலையைப் பாருங்கள்
அனைத்து வறுமைகளுக்குமான
மூலகாரணத்தைக் கண்டுவிட்ட தீர்க்கதரிசியும்
அசாதாரணமான செயல்வீரனும்போல்
தானே ஒரு பிட்சா பாத்திரமாக மேலெழுந்து
அசைகிறது மழை வேண்டி!

அது நீரின் இன்றியமையாமை தெரிந்து
நீரிலேயே தன் வாழ்வமைத்துக்கொண்ட
ஓர் உயிர்
நீரின் அருமையைச்
சதா உரைத்துக்கொண்டும்
செயல்படுத்திக் கொண்டும்
இருக்கும் ஓர் உன்னதம்

அதற்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது
மழை என்பதும் மழைநீர் சேகரித்தல் என்பதும்
காலத்தின் அழுக்கினைப் போக்குவதும்
பூமியினைப் பேணுவதுமான
ஒரே செயல்தான் என்பது

இப்பூமியெங்கும் தலை உயரத்
தண்ணீர் தாங்கிகளாகவும் ஏங்கிகளாகவுமே
நின்றுகொண்டிருக்கும் தாவரங்களைப் பார்த்து
நாம் திருந்திக்கொள்ள வேண்டிய
திடீர் வேளை இல்லையா இது?

மழை என்பதும், மழைநீர் சேகரித்தல் என்பதும்
உள்ளார்ந்த அன்பின் வெளிப்பொருளின்றி வேறென்ன?

Read more...

ஆடு மேய்த்தலும் அத்தைமகள் பார்த்தலும்

கொட்டாவியுடன் சோம்பல் முறித்தபடி
எழுந்திருக்கையிலேயே
இனிய அந்தத் தீர்மானம்
ஒரு காலைமலர்போல் பூக்கிறது

எத்தனை இனியது இப்பூமி!
எத்தனை இனியது இவ்வாழ்வு!
அவன் இதயத் துடிப்பினை ஆமோதிப்பதையே
தம் வாழ்வாகக் கொண்டனவோ, மேமே எனும்
அவன் ஆட்டுக் குட்டிகளும்?

அயல் கிராமத்திலிருக்கும் அவன் அத்தைமகளின்
ஆழ விழிகள்தாமோ,
விண்ணும் விண்ணளவு விரிந்து மிளிரும் இப்பூமியும்,
தன் அருமையை
ஆழ உணர்ந்தும் நீரும் இப்பறவைகளும் நிழலும்?

திரும்பும் வழியில் சற்று இளைப்பாறித்
தாகவிடாய் தணித்துச் செல்லும் சாக்கில்-
அவள் விழிகளில் அவன் காண்பதுவோ
அவன் ஆடுகள் மேயும் இவ்வுலகமன்றோ?

வழியெங்குமான காட்டுமலர்களிலும்
காய்ந்த புற்களிலும் கால் தைக்கும் முட்களிலும்
எலி ஒளியும் புதர்களிலும் சின்னஞ்சிறு உயிர்களிலும்
இந்தக் காற்று வெளியினிலும் கண்மாய் விழியினிலும்
எங்கும் ஒளி வீசுவது
அவளின் சொல்லொணா அன்பும் அழகுமேயன்றோ?

Read more...

Monday, October 29, 2012

தூரத்து இருள்

என் நிலைமை எப்படி இருந்தால் என்ன?
’நலந்தானா?’ என உன் தொலைபேசிக் குரல்
என்னைத் தீண்டும்போது
நலமன்றிப் பிறிதொன்றுமில்லா
அதிசயமன்றோ நிகழ்கிறது!

...
எரியும் தீக்குச்சி
இருளில் நிற்பதுண்டோ?

தூரத்திருளை அது உற்று நோக்குகிறது,
புலியின் விழிகளாய்

Read more...

தியானம்

முதுமையோ இது?
ஒவ்வொரு நண்பகல் இடைவேளையிலும்
நான் சற்றே தலைசாய்த்து
விழி மூடி நாடுவது உறக்கம் இல்லை எனில்
அது என்ன?

அவ்வேளை
அத்தனை சுற்றுப்புற ஒலிகளும்
மூளைப் பிராந்தியத்திற்குள்ளே நடப்பதுவாகி
உறக்கம் அறுக்கும்
இடையூறாவதுதான் என்ன?

விழித்துக்கொண்ட மூளை
செய்யத் தொடங்குவதுதான் என்ன?

Read more...

தேநீரும் அவனும்

குளிர்சுக அறையுள் வந்துநிற்கும்
ஒரு தேநீரின் சூடு
அந்த அறையைப் பாதிப்பதில்லையா?
ஆனால் அந்த அறிவுகெட்ட குளுமை அறை
தன் உள்வேட்கைக்கெதிராகவே
அத் தேநீரைக் குளிரவைத்து
துயர்மூட்டிக் கொள்கிறதே!

அவனது இருப்போ
கவிதையின் சுரணை
அணையாத தழல்
கால இடங்களால்
தீண்டமுடியாத வெளி
இருளினைப்
பாதித்தேயாகும் ஒளி

Read more...

முத்து...

என்னும் ஒரு திண்மை
அழிந்தது
தன் ஒளியில்!

Read more...

Sunday, October 28, 2012

வில்

பாய்ந்து வந்த அம்பைப் பற்றி
ஒன்றுக்குப் பத்தாய் முறித்துக்
காலின் கீழ் போட்டு
மிதி மிதி என்று மிதித்துப்
பொடிப் பொடியாக்கித் தீர்த்தும்
தீராக் கொந்தளிப்பின் மூச்சிரைப்பு!

”எய்தவனிருக்க
அம்பை நோவதென்ன?”

கையில் வில்லுடன்
விதிர்விதிர்த்து நின்றவனை நோக்கிச்
சிறுத்தையெனப் பாய்ந்தது கொந்தளிப்பு!

”வேண்டாம் வேண்டாம் வேண்டாம்
அவ் வில்லினைப் பிடுங்கிப்
பூழ்தி செய்திட்டாற் போதுமே!”

Read more...

கிளை தறிப்பு

தான் அமர்ந்திருந்த கிளையையே
தன் கோடரியால் தறிக்கும்
உன் தீரத்தை அஞ்சியோ
ஓடிப்போய் சரஸ்வதியை இழுத்துவந்து
உன் நாவில் எழுதினார்கள்
என் ஆட்டிடையனே
மகாகவியே
காளிதாசா?

Read more...

கலைமகளே! சரஸ்வதியே!

மனசாட்சியற்றுத் தாழ்ந்த மக்களும்
கலைகளிலே ஜொலிக்கமுடியும் என்றால்
என்ன பொருள் தாயே?
கலைச் சித்தாந்தங்களைத் தமக்கேற்ப வளைத்து
வகுத்துக் கொள்வோம் என்பதுவா?

வெண்டாமரை மலரில்
உனக்கு முன்னே வீற்றிருக்கும்
போதிசத்துவரையா கேட்கவேண்டும்?

அன்பு
உயிர்மை
மீமிகை உணர்ச்சிப் பெருக்குக்கான
தூய்மை – இவற்றொடு
தர்மத்துடனும்
தாகத்துடனும்
துக்கத்துடனுமான
முழுவாழ்வுடன்
தொடர்பேயில்லாத கலைகளைக் குறித்துக்
கவலைப்படவும் தகுமோ, சொல்?

ரொம்ப ரொம்ப ரொம்பக் குறைவாகவே
கலைஞர்களில் கலைஞர்களை
நான் பார்த்திருக்கிறேன் தாயே,
என் வாணாளில்

Read more...

Saturday, October 27, 2012

கோர சம்பவம்: ஓர் இரங்கற்பா (ஸ்ரீரங்கம். ஜனவரி 23. 2004.)

மெய்ம்மையை ஒளிவீசிப் பிடிக்கமுயலும்
கணப் பார்வை உக்கிரத்தை
குருட்டுத்தனமான வீம்புடன் எதிர்த்து
பற்றிக்கொண்டது
வேள்வித் தீ வெக்கையேறிய மண்டபம்

ஃபிலிமில் பதிந்தது
யாக நெருப்பு

உயிரிழந்து கிடந்த அலங்கோலம்
காணச் சகிக்காது
தானும் அவற்றோடழிந்து கிடந்தது
புகைப்படக் கருவியும்

Read more...

ஆற்றல் X ஆற்றல்

1
கபடி கபடி என
பாடத் தொடங்கியிருந்த வேளை
அவனை வீழ்த்த நின்ற குழுவிழிகளில்
பேராபத்தான ஒரு குரூரத்தைக்
கண்ட முதற்கணமோ
விளையாட்டுக் களத்தை விட்டே
அவன் விலகிவிட்டான்?

2
உன்னதமாக்கலே
உனக்கு டிமிக்கி கொடுத்தபடி
மாபெரும் விளையாட்டுப் போட்டிகளில்
கொதித்துக் கொண்டிருக்கிறது
பூர்வகுடி இன பேத மோக
மிருகப் பகை வெறி

3
அட!
விளையாட்டு என்றால் என்ன என்பதை
நன்கு அறிந்திருக்கிறார்களே இவர்கள்!
ஆட்டம் தொடங்குமுன்
எதிர் எதிர் அணியினர் புன்னகையுடன்
கை குலுக்கிக் கொள்கிறார்கள்!

ஒரு அணியின் ஆற்றலே
பிறிது அணியின் ஆற்றலைத்
தீவிரப்படுத்தும் உந்துதலாதலால்
ஒருவர்க்கு தம் அணியினரை விடவும்
எதிர் அணியினரே
மிகுந்த நேசத்துக்குரியவராகிறார்
ஓகோ! நேசம்தானோ விளையாட்டின்
ஒழுங்குமுறைகட்கு உட்படுகிறது!

ஆற்றலும் ஆற்றலும் மோதி
வெற்றி தோல்விகள் புகைந்து அகன்றுவிடும்
ஒற்றைப் பேராற்றலாக
பெருந்தகைப் பார்வையாளர்களின்
ஆரவாரம் போலன்றோ
உயர்கிறது வானில்!

4
உயரும் ஒற்றைப் பேராற்றலே
நீயன்றோ
ஒருக்காலும் சிதையாது
உலகெங்கும் பரவி நின்று
சமயக் குழுப் பணியாய்ச் செயல்படுகிறாய்
தன்னைக் காட்டிக்கொள்ளும் தேவையற்ற
தனித் தனி மனிதர்களிடம்!

Read more...

Friday, October 26, 2012

குறியீட்டு எண்

எத்தனை நூறு வயது உனக்கு?
எத்தனை எத்தனை பருவகாலங்கள்
அதன் மீமிகைகள் மீதங்களின்
அதிர்ச்சிகளைக் கண்டவள் நீ?
ஒற்றையாய் இப்பூமி முழுக்கவே நிழல் தரத்
துடிப்பதுபோல் ஓங்கி விரிந்து கனன்று நிற்கும்
உன்னைக் கண்ட பிறகுமா
மனிதன் கோயில்கட்டிக் கொண்டிருக்கிறான்?

விம்மும் நெஞ்சோடு
உன் மேனியைத் தொட விழையும்
என் விரல்களின் ஆர்வப் பதற்றம்
உன்னை ஆரத்தழுவி
அமைதியடையவே முயல்கையில்
அவ் விரல் நுனிகளில் கனலும் குருதிமதிமீமிகை
உன் சொரசொரப்பான மேனியைத்
தொட்டு வாசிக்கிறது
அதிலே:
எண்ணற்ற விண்மீன்களும்
எல்லையற்ற வெளியுமான
இப் பிரபஞ்சம்,
அண்டவெளிக் குடும்பம்
அதிபேரற்புத அபூர்வப் பெருநிகழ்வான
பூமிக் கிரகம்,
ஆழிசூழ் நிலப்பரப்பு
மாநிலம்
மாவட்டம்
வட்டம்
ஊர்

இந்த இடம்
இதோ
இவ்வேளை
ஓருயிராய் உன்மத்தம் கொண்டு
ஒன்றி நிற்கும் நாம்

Read more...

நான் பார்த்ததில்லை எனினும்

நான் பார்த்ததில்லை எனினும்
ரிஷிப் பள்ளத்தாக்கினையும்
இமயமலைப் பனி ஒளிர்வையும்
போய்ப் பார்க்கக் கிடைத்த பாக்கியவான்
ஒருவரைச் சந்திக்க நேர்ந்தபோது
’பார்த்தவர்போல் தெரியவில்லையே’
என மனம் சோர்ந்து ஐயுற்றேன்
நான்தான் ரொம்பப் பார்த்தவன்போல்

Read more...

Thursday, October 25, 2012

கான மயிலாடக்...

கண்டிருந்த வான்கோழி
தானும் தன் பொல்லாச்
சிறகு விரித்தாட
தோகையிற் கண்களெல்லாம்
நீர் நிறைய
தோன்றியதே அங்கு மழை!

Read more...

”க்வாக்!”

தூக்கிய குண்டியும்
மலப்பிசுக்கின் உராய்வை
அருவருத்தது போன்ற நடையுமாய்
நீர்நிலை நோக்கி
நடந்து செல்லும் வாத்தே,

நீரைத் தரித்துக்கொண்டதும்
பொடுக்கென்று
தீணடப்பட்டுவிட்டவனேபோல்
உடல் சிலிர்த்துக்கொள்கிறாய்

திடீரென வாழ்வின்
பெருபேறுணர்ந்த வேகம்,
விசேஷமான பாதங்கள்
தன்னிறைவு பெற்ற பரவசம்-
படபடக்க நீந்துகிறாய்

விழித்துக்கொண்டவன்போல்
பீடு ஒளிரும் குருதி அதிர
விண்ணிலிருந்து வந்ததன் அடையாளம்
தன்னில் கண்டு
சிறகு தட்டிக் கொள்கிறாய்

கண்ணிறைந்த வெளியில்
கண்டுவிட்டதையோ
அப்படி ஒலிக்கிறாய்
அந்த மவுனத்தில்?

Read more...

Wednesday, October 24, 2012

நெல்லுக்கு இறைத்த நீர்...

வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்
தன்னை
நதியாகப் பாவித்துக்
குளித்துத் துவைத்துச்
செல்லும் பெண் நினைவால்

Read more...

அற்ற குளத்தின்...

கொட்டியும் ஆம்பலும் நெய்தலும்
மண்ணோடு மண்ணாய் ஒட்டித்
தம் உயிர் பிடித்துக் காத்திருக்க,

விரையும் பொன்பறவை
வேக வேகமாய்
தன் சிறகுதொடும்
காற்றையும் கிளர்த்திக்கொண்டு
மேலெழுந்து மேலெழுந்து
மழை தேடிப் போகிறதோ
வெளியெலாம் துழாவியபடி?

Read more...

ஓடுமீன் ஓட...

வானை மறந்தனையோ?
வானத்து
மீன்களை மறந்தனையோ?
வீசு தென்றற்
காற்றை மறந்தனையோ?

சகதிக்குள் காலூன்றினை?
தன் நிழலையே நீருள் பாய்ச்சி
கூம்பிய சிறகுகளுக்கடியில்
வியர்த்து நாறும் கக்கங்களுடன்
சளைக்காமல்
கால் மாற்றி மாற்றி
ஒற்றைக் காலில் நின்றபடி...
ஓடுமீன் ஓடத்
தன் சாதி மீன் காண்பதற்கோ
வாடி நிற்கின்றாய் கொக்கே?

Read more...

Tuesday, October 23, 2012

ஊற்றுப்பெருக்கு

ஆற்றுப் பெருக்கற்று
அடிசுடும் அந்நாளில்
அவ்வாறு
சிறுவர்களாடும்
கிரிக்கெட் திடலாகும்
ஊற்றுப் பெருக்கால் உலகு ஊட்டும்

Read more...

தாகம் தீர்ந்த மலைகள்

உங்களுக்குத் தெரியுமா,
வறண்டு அனல் உமிழும் இந்த மொட்டை மலைகள்
யாருமறியாத ஒரு பொழுதில்
யாருமறியாத தம் கால்களால் எழுந்து
அதோ, ஒளிரும் நீர்நிலையடைந்து
ஒரு சிறு தடயமுமின்றி
மீண்டும் வந்து அமர்ந்துகொண்டுள்ளன என்று?

Read more...

தென்னை

நின்று
தளரா வளர்தெங்கு
தாளால் நீர் உண்டு
தலையாலே தான் தருமாம்
விதையும் கனியுமான
வித்தகத்தின் இரகசியத்தை!

Read more...

Monday, October 22, 2012

தாகமுள்ளவன்

வெட்டவெளியின் இதயத் துடிப்போ?
வெகுதூரமாகி நறுங்கிய பரப்பில்
கட்டிச் சூர்ய ஒளியாய்ப்
பளபளத்துக் கொண்டிருக்கிறது தண்ணீர்.
தகித்துக்கொண்டிருக்கும் வெளியில்
தாகமுள்ள ஒருவன் அதைத் தேடுகிறான்
அப்போது விண்ணுலகே
அவனை ஆசீர்வதிக்கச் சூழ்ந்து வந்து நிற்கிறது

பாறையும் பாறைபொடிந்த மணலும் தாண்டி
காய்ந்த சகதிப் பொருக்குகள்
சருகுகளாய் நொறுங்க நடந்து
காலணிகளைக் கழற்றிவிட்டு
பாதங்கள்கூசி முகஞ்சுளிக்க
கால்பதியும் சகதிக்குள் கதியற்று
கால்தூக்க கால் ஊன்றத்
தெறிக்கும் சகதிக்குள் நெளிந்து
கால்பாவத் தோதான கடுந்தடம்
காணக்கிடைக்காது தோற்றும்
பொறுமையிழக்காமல் நகர்ந்து முன்னேறி
தண்ணீரில் கால்வைக்கக்
கலங்குநீர் கண்டு நிதானித்து
எட்டி, கலங்கா நீரில் பாத்திரம் முழுக்கி
வெற்றிகரமாய் மொண்ட நீரைப்
பத்திரமாய்க் காத்தபடி
வந்த வழியே
வந்த விதமாய்ப் பயணித்துக்
கரையேறி வந்த பின்பு...
பாதி நீரைப் பருகியும் பாதி நீரால்
தன்னைத் தூய்மைப்படுத்தியும் கொள்கிறான்

தாகமில்லா மனிதனோ
நீர் வறளும் போக்கில்
அதனைப் பிடித்து வைத்துக்கொள்ளும் திராணியற்றும்
ஏக்கத்தோடு தன் தொடர்பை வைத்துக்கொண்டிருக்கும்
அந் நீர்நிலையைச் சுற்றியுள்ள சகதி
பொருக்கு, மணல், பாறை இவற்றை விட
வறண்ட அற்பமான ஓர் அந்நியனாய்
அவர்களிடையே அங்கே நிற்கிறான்

தாகமில்லாத மனிதனும் உண்டோ என்று
உங்கள் பேருள்ளம் கசிகிறது அவனுக்காக!

Read more...

ஆற்றங்கரையின் மரம்

தாமரைக் குளத்தில்
அன்னப் பறவைகள் சேரும்;
இடுகாட்டு நிலத்தில்
அண்டங் காக்கைகள் கூடும்;
நின்னை ஒருக்காலும் பிரியாத
தலம் கண்டு பாடுமே
ஆற்றங்கரையின் மரம்!

Read more...

Sunday, October 21, 2012

பாறாங்கற்கள்

உடைந்து உருக்குலைந்து
தனித் தனியாகப் பிரிந்து நிற்கும்
இவை மலைகளோ?
நெஞ்சை அதிரவைக்கும்
இப் பயங்கரத்தின் பொருள்தான் என்ன?

கொடுங் காற்று மழைவெள்ளத்தில் உருண்டு
ஆடுகளை சிறுவர்களை மனிதர்களை
கொன்றழித்துப் படிந்த இரத்தக் கறைகளோ
கண்ணீரோ உண்டோ அவற்றிடம்?

கொடுங்கரங்கள் சில தங்களை உருட்டி
அடிவாரப் பாதையில் உலவி வரும்
மெய்யறிவாளர்களைக் கொல்வதற்குத்
தாங்கள் உடந்தையாயிருப்பதையோ
தங்கள் அபாரமான சக்தியையோ
அறியும் அறிவுண்டோ அவற்றிடம்?

Read more...

துயரபாரம்

வெளி வெளியின் பிரம்மாண்டமும்
இந் நிலவெளியின் உயிர் நாடக
விந்தை உறவுகளும் இரகசியங்களும்
பெருஞ்செல்வமாய்
நம் உள் நிறைந்து ததும்பவில்லையா?

நிகழ்கள் செயல்கள் உண்மைகள்
உறவுகள் பற்றிய
நம் எண்ணங்களில்
உயிர்மையுண்டோ?

எண்ணப் பிரதிமைகளின்
பயனின்மைப் பாறாங்கன்மையை மறைக்கவோ
மலர்கள் வாசனாதிப்
பூஜைகள் பிரார்த்தனைகள் சடங்குகள்
விழாக்கள் குருக்களே?

பசியால் வாடி மடிந்து கொண்டிருப்பவனுக்கோ
ஆசைகளால் தகித்து அலைந்து கொண்டிருப்பவனுக்கோ
வழங்கப்பட்ட இசை நிகழ்ச்சி நுழைவுச் சீட்டு போலானதோ
நம் கலை இலக்கியங்களின் நுண்மாண்கதி?

என்ன செய்வதென்றொருவன் கேட்பானோ
பற்றி எரிந்துகொண்டிருக்கும்
தன் வீட்டிலிருந்து கொண்டே?

மலினமான சந்தோஷங்கள்
மலினமான துக்கங்களுக்கடியில்
கனத்துக் கிடக்கிறதோ
மெய்யான துயர பாரம்,
அன்பினூற்றை
மெய்ம்மையை
உயிரெழுச்சியை
அடைத்தபடி?

Read more...

Saturday, October 20, 2012

கண்ணாடியின் முகம்

”முதலில் உன் முகத்தை நீ நன்கு அறிதலே
என் முகத்தை நீ காணும் வழி” – என்றோ
தவறாது அவன் முகத்தையே
காட்டுகிறது கண்ணாடி?

Read more...

சுனாமி

எங்களது பேரிழப்பை பெருந்துயரை
வேதனையை அறிவாயோ?
பகையில்லாக் கதறல்களையும்
பகையில்லா எழுச்சியினையும்
பார் பார் என்று
எம் மூஞ்சியிலறைந்து காட்டுவதாக எண்ணமா?
எம் உயிர் உடைமைகளுக்கும்
குழந்தைகளின் மண் சிற்றில்களுக்கும்
உனக்கு வேறுபாடு தெரியவில்லையா?
உன்னைப் போலும் பிரக்ஞையில்லா உயிரினமாய்
படைக்கப்பட்டிருக்கவில்லையே, நாங்கள்

புவியுடலின் எந்த ஒரு சீர்குலைவைச்
சமன்செய்ய எழுந்தாய், சுனாமி?
உலகெங்குமிருந்து உனக்கு நிகரானதோர் வீச்சுடன்
எம்மை நோக்கி வருகின்றன,
துயராற்ற விழையும் நிவாரணப் பணிகள்,
என்றாலும் ஆறாத வேதனைகளினின்றும்
விடுதலை தெரியலையே சுனாமி!

முன்னுணர்த்தும் கலையினை நீ மறந்தனையோ
அன்றி, பெற்ற தாயைப் பின்னாளில் மறந்து
புலம்பித் தவிக்கவிடும் பிள்ளையர்தம் நிலையில்
எமக்குத்தான் உனது குரல் கிட்டாது போயிற்றோ
வெவ்விதியே, ஊழ்வினையே சுனாமி!

வெறும் காலோடும் கையோடும் வரும் வேளையெல்லாம்
எம்மை ஆரத் தழுவி ஆடி விளையாடும் அன்னையே,
இன்று கடலோர மெங்கும்
பாதுகாப்பு தேடி ஓடும் கூட்டங்களும்
வேக வாகனங்களுடன் வந்து
வேடிக்கை பார்த்து நிற்கும் கூட்டங்களுமாய்க்
காணும் பதற்றத்தையும் பார்வையையும் கண்டு
வேதனைப்படுகிறாயோ,
வீறிட்டெழுந்து வீசிப் பின்
உட் சுருண்டுகொண்டு நீ அழுவதென்ன சுனாமி?

Read more...

Friday, October 19, 2012

*மணப்பாடு

மலையைப் பொடியாக்கிய
சூரியனுக்கு எதிராய்
மணலை
உயர்த்திக் கொண்டிருக்கிறதோ
கடலிங்கே?

மண்ணைப் பாறையாக்கும்
பாறையைக் குகையாக்கும்
மனிதனை எதுவாக்கும்
இக் கடல்?

வீறழைப்பை விரைந்தேற்க
மனிதர்க்காகத்
துடித்துக் கொண்டிருக்கின்றன
படகுகளும் வள்ளங்களும்;
கொடுத்துக் கொடுத்து ஊறக்
குருதிக் கதகதப்புடன் காத்திருக்கிறது
நன்னீர்ச் சிறுகிணறும்

மனிதர்களைத்தாம் காணோம்

Read more...

குழந்தை

தொலைக்காட்சி நேர்காணலில்
சும்மா சும்மா சிரித்துக்கொண்டே
பதிலளித்தாள் ஒரு சிறுமி

ஒரு பெரிய அலை வந்து
வாரிச் சுருட்டி எறியவும்
ரொம்ப தூரத்திலிருந்த
ஒரு குடிசையின் கூரைமேல் வந்து
பொதுக்கடீரென்று விழுந்திருக்கிறாள்

அப்போது ரொம்ப பயந்திட்டியோ?
வலிச்சுதோ?
சிரிக்கிறாள்

ஆசிரியர்களும் குழந்தைகளுமாயிருந்த
அனைவரும் பலியாகிவிட
தப்பிப் பிழைத்தவள் அவள் மட்டுமே.
அதற்குச் சிரிக்கிறாள்

பதினோரு நாட்கள்
பட்டினியோடு கிடந்து
யாரும் காணாது
உயிர் பிழைத்திருக்கிறாள்.
அதற்கும் சிரிக்கிறாள்

அந்தப் பதினோரு நாட்களும்
அழுது கொண்டேதான் இருந்தாயா?
ஆமாம் என்னும் தலையாட்டல்
ஏதோ காலையில் சாப்பிட்ட
பாயசம் குறித்து நலம் விசாரிக்கப்பட்டது போல

தனது கதை ஒரு காவியமாகவும்
தானொரு நட்சத்திரமாகவும்
மாறிவிட்டதை எண்ணியா
நாணம் கொண்டு
அவள் சிரிக்கிறாள்?

Read more...

Thursday, October 18, 2012

பொழுது புலர்ந்ததும்

பொழுது புலர்ந்ததும்
முற்ற முதற் செயலாய்
வீடு நீங்கி
வெளிவாசற் கதவு திறந்து
அவன் தன் நாயுடன் ஒன்றி
நடக்கத் தொடங்கியதைத்தான்-
எத்தனை பேரளவான அக்கறையுடன்
உய்த்து ஒலிகளடங்கிக்
கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தது
வானமும் பூமியுமான இப்பேருலகம்!

தன்னைத் தானே
சில சுற்றுக்கள்
சுற்றி முடித்து
புட்டம் குனித்து
முக்கி முக்கி இரண்டொரு மலத்துண்டுகள்
விட்ட பின்
விழியீரம் கதற
நான்கு கால்களாலும்
பரட் பரட்டென்று தரையைப்
பிறாண்டி முடித்து ஓயும்
நின் செயல்
பொருளற்றுப் போன பழக்கமா?
அன்றி,
நீ ஓயாது அறைந்து கூறும் சில வரிகளா?

Read more...

நடுநிசி ஊளைகள்

மற்றெல்லாரையுமே
எதிரி எதிரி எனக் குரைக்கும்
நாய்களே காவல்
எனச் சரணடைந்தாயிற்று

வீடுதோறும் கட்டி வளர்க்கப்படும்
செல்ல நாய்களுக்கு
வீதி செல்வோர் அனைவருமே
ஆறலைக் கள்வர்தாம் என்றாயிற்று

பொது வாழ்வுப் பிரக்ஞையினால்
கொதித்துக்கொண்டிருந்த தோழர்களிடையே
வாயில்லாததும் ஆனால் நல்ல மோப்பமுடையதுமான
ஒரு நாய்க்குட்டி சுற்றிச் சுற்றி வந்தது

யாருடைய வீட்டுநாயாகவும்
ஆக விதியற்று
தெரு நாயாய் சுற்றி அலையத் தொடங்கியது
அந்தக் குட்டி நாய்.
நாய்க் கடிபட்டோரின் வேதனையையும்
நாய் பயம் நீங்காதோரின் தீராக் கவலைகளையும்
நன்கறிந்ததாய்க் காணும் தெரு நாய் அது.
வீட்டுநாய்களைப் போலின்றி
சுனாமிகளுக்கும் தப்பித்து வாழும் தெருநாய்
சிறுவர்களின் கிறுக்குக் கல்லடிகளுக்கும்
மனிதர்களின் குருட்டுத்தனங்களுக்குமாய்த்
துன்புற்றபடியே
சோர்ந்து போய்விடாமல் திரியும் தெருநாய்

இதயத்தைப் பிசையும் வேதனையாய்
அதன் விழியீரத்தில் காணும் துயரம்,
திடீர் திடீரென எழுந்து
பரபரத்து விரையும் கால்களின்
ஒரு கணமும் தாமதிக்க விரும்பாத அவசரம்,
அதன் இளைப்பாறலில் தெரியும் நிராசை
அதன் களங்கமின்மையில் பிறந்துவிட்ட
பேரறிவுச் சுமை மற்றும் விடுதலை,
அதன் வாலாட்டலில் எதிர்நோக்கும் நம்பிக்கை
அனைத்தையும்-
அது நடுநிசி தேர்ந்து
பெரும் கடமையுணர்வால் கிளர்ந்தெழுந்ததுபோல்
ஓயாது உரத்துக் கூறிக் கொண்டிருக்கும் ஊளை

Read more...

Wednesday, October 17, 2012

மலையுச்சியில் வசிக்கும் ஒரு மனிதன்

மிதமான குளிரும்
மிதமான வெயிலுமாய்
எப்போதும் கார்மேகங்கள்
குடை பிடித்துக்கொண்டிருக்கும்
பிரம்மாண்டமான
அந்த மலையுச்சியில் போய்
தனித்து வாழும்
ஒரு மனிதனைப் பார்க்கச் சென்றோம்
(இயல்பின் தளத்தில் தானன்றோ
அப்புலமும் இருந்தது!)

உதகமண்டலப் பூப்போலும் அவர் முகத்தில்
எஞ்ஞான்றும் பொலியும் பசுமை குறித்தும்
குழந்தைமையின் குதூகலம் குறித்தும்
என் நண்பர் கூறக் கேட்டிருந்தேன்
அது உண்மைதான் உண்மைதான் என்றறிந்தேன்
எம்மை வரவேற்று உபசரித்து
அவர் உரையாடிய அன்று முழுவதும்

வண்ணத்துப் பூச்சிகளும் தேனீக்களும் மேயும்
அவர் மலர்த்தோட்ட மெங்கும்
புல்வெளியோடு நின்று விடும் ஆடுகளும்...
விநோதம் இதுவென அதிர்ந்தபடி
விடைபெற்றுச் சென்றோம் அன்று
காட்டின் வழியாக இருட்டிவிடும் முன்னே

பின்னொரு நாள் நான் தனியாக
அவரைக் காண அங்கு வந்தேன்
அங்காந்திருந்த தோட்டத்து மலர்கள்
அப்படியே இருக்க,
ஆடுகள் நல்லிருப்புக் கொண்டிருந்த
அந்தப் புல் வெளியிலோ ஒரு புலி மட்டுமே!
காணாத ஆடுகளுடன்
காடுகளின் இருள் ரேகைகளை அணிந்தபடி!

பார்த்தேன் நான்
அப் புலியின் கண்களிலே
அளப்பரிய உக்கிரமும் வேதனையும்
அனல் உழிழ்ந்து கொண்டிருந்ததை!

அன்று முதல் நான் அங்கு சென்றபோதெல்லாம்
அப் புல்வெளியில்-
ஆடுகள் இருந்தபோது புலி இல்லை
புலி இருந்தபோது ஆடுகள் இல்லை
ஒரே மூடியுடைய
இரண்டு பாத்திரங்கள் கண்டேன்
இருமையின்மை யெனும்
மெய்ம்மையினை அறிந்தேன்

Read more...

காலி மனை

மனிதர்கள் வாழும்
வீடுகள் கட்டடங்களைக் கண்டு
ஒருபோதும் மனம் நிறைந்தவனாய்க்
காணப்படாத நீ,

கட்டி முடிக்கப்பட்ட
அக்கட்டடங்களுக்கிடையே
புதிதாய்க் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும்
கட்டடங்களைப்
பார்க்கும் போது மட்டும்
அவை
விரைவில் கட்டிமுடிக்கப்பட
அவாக் கொண்டனவாய்ப்
பரபரப்பெழக்
காணப்படுவதென்ன?

இப்போதிங்கே எங்கே வந்து நிற்கிறாய்?

உனது காலி மனையெனவோ
விழியெட்டும் தூரம்வரை
விரிந்து கிடக்கிறது இப் பூமி?

சொர்க்கத்தின் வரைபடச் சுருளினைக்
கையில் வைத்திருப்பவன் போல்
நாளும் நீ இங்கே
வந்து வந்து பார்த்தபடி நிற்பதென்ன?

வறுமைகளாலும் பேராசைகளாலும்
வக்கரித்துப் போன மனிதர்களிடையே
அடிமைத்தனத்தாலும் அதிகாரத்தாலும்
மழுமாறிப் போன மனிதர்களிடையே
மூட வாழ்க்கையின்
வன் கொடுமைக் கதறல்கள்
குருதி காணப் பிறாண்டும் துன்பங்களிடையே
அயராதவன்போல் அமர்ந்து
எல்லையிலாக் கணிதப் பேரறிவுடனும்
கனலும் வேட்கையுடனும்-
இசை விழையும் உயிர்க் குருத்தை
வருடி வருடி...
அல்லும் பகலுமாய்
நீ ஆராய்ந்து முடித்த வரைவுதான்
என்ன நண்பா?

அஸ்திவாரம் எங்கே?
ஆள் பலம் எங்கே? கட்டுமானச்
சரக்குகள் இன்னும் வந்து சேரவில்லையா?
வெறுமனே வந்து வந்து எத்தனை நாட்கள்
இப் பூமியினை இப்படிப்
பார்த்துக் கொண்டேயிருக்கப் போகிறாய்?
விம்மும் உன் நெஞ்சினை
நீவித் துயராற்றப்
பாய்ந்து வரும் காற்றறியுமோ
இவ் வெளியறியுமோ கதிர் அறியுமோ
எல்லாம்?

Read more...

Tuesday, October 16, 2012

வாட்டம்

சந்தையில் அதன் பசுமையால் ஈர்க்கப்பட்டு
வாங்கி வந்துமென்ன,
துணைவியாரின்
எதிர்பாரா அசவுகரியத்தால்
வீட்டிற்கு வந்தும் அது வாடிக்கொண்டிருக்கிறது!

நீங்கள்தான் இன்று அதை ஆய்ந்து தர வேண்டும்
இல்லையெனில் அது இன்னும் வாடிவிடும்
என்று வாடினார் அவன் மனைவி

வீர்யமிழந்து விட்ட வேர்களும்
நிர்வாணமான மெலிந்த தொடைகள் போல்
நீண்ட தண்டுகளுமுடைய
அந்த உடல்களைக்
கட்டோடு அரிவாள்மனையில் வைத்து
வன்மை சிறிது கொடுத்துத்
துணித்துக் – கொண்டிருந்தபோது தான்-

யாரோ அவனுட் புகுந்து இவன் மூலமே
மனிதர் மீது மனிதர் கொள்ளும் கொடுஞ் செயல்களை
விபரமாய் நிகழ்த்திக் காட்டிக்கொண்டிருப்பதை
உணர்ந்தான்

முடிவில்
அந்த ஒத்தாசையால் அவன் மனைவிதான்
சற்று வாட்டம் நீங்கியிருந்தார்

Read more...

கடற்கரைக் கோயில்கள்

கடல் நம்மை அழைத்தபோதோ
கரையோர வாழ்வோடு
(திருச்செந்தூர் வேலவா)
உன்னையும் நான் மறந்தேன்?

*கடலாட்டின் மகிழ் உச்சியிலோ
கண்டுகொண்டேன்,
எட்டும் தூரத்தில்தான்
அது தகதகத்துக் கொண்டிருந்ததை

கரிக்கும் இத்துயர்க் கடலின் அலைக்கழிப்பில்
களி கொள்ளும் வாழ்வுதான் வாழ்வா?
அஞ்சி நிற்பானை ஆட்கொண்டடிமையாக்கி
உணர்வழிக்குமிந்த
உயிரற்ற கற்கோவில்களின்
கணிதப் பிரம்மாண்டம்மான் அழகு என்பதா?
கலை என்பதா?

அமைதியற்ற இக் கடலினையே பார்த்து நிற்கிறேன்
கரை மணலெங்கும்
உணர்வழிந்த மனிதர்களின் மலக் கழிவுகள்.
நிற்குமிடத்தில் நின்றபடி
பார்த்து முடித்தாயிற்றா போகலாமா,
இன்னொரு கோயில், இன்னொரு ஸ்தலம்
என்றபடி எமது சிறிய வெள்ளை மாருதி வேன்

நூற்றாண்டுகள் மாறாத அழுக்கும் புழுக்கமும் இருளுமாய்
அட்டுப் பிடித்த விக்கிரகங்களுக்கும்
புனிதர்களின் நினைவுகளாய்
உயர்ந்த தேவாலய விதானங்களுக்கும் வெளியே
வான விதானத்தின் கீழ்
என்ன ஒரு பேரன்பு, தாய்மை, குதூகலம்!
பொங்கிப் பொங்கி எழுந்து
கரம் அணைத்து நீராட்டும் காதற் பெருக்கிற்கு
அட்டியின்றி
தனை அளித்து நின்றுவிட்ட
பாறைகளையும் ஒலியையும் கேட்டபடி
கடலையே பார்த்துக்கொண்டு நின்றேன்

அனைத்தையும் முடித்துக்கொண்டு
புத்தாற்றலுடன் பாய்ந்து செல்லத் தொடங்கியது
எங்கள் வாகனம்,
இயற்கை வெளியூடே...தம் வழியின்
பேரழகைக் கண்டுகொண்ட குதூகலம்

Read more...

Monday, October 15, 2012

நெல்லிக்காய்

உன்னைக் கனி என்றழைப்பாரில்லை
இதை எண்ணிக் கவன்றதில்லை நீ.

இது கனிகளைப் போலும்
மென்மையாக இருக்கலாமே.
மழை தீண்டாது
இறுகிக் கெட்டித்த நிலம்போலும்
போலி வன்மையினைத் தேர்ந்து நின்றாய்.

களங்கமற்ற குழந்தையின்
விழிகளைப் போலும் உன் தோற்றம் கண்டோ,
புவிக்கோளம் போன்ற
உன் ஈரவடிவினால் ஈர்க்கப்பட்டோ
நான் உன்னை நெருங்கினேன்?

எத்தகைய ஓர் மெய்மை
மிருதுவான ஒளியாய்
உன் மேனியைத் தழுவிக் கிடந்தது?
எத்தகைய ஓர் மெய்மை
திட்டமிட்டே என்னுள் புகுந்து
என்னை ஆட்கொள்ள
ஒரு காதற் பார்வையும்
மாயத் தோற்றமுமாய்
என் கைக்கெட்டி நின்றது?

என் கைகளுக்கு நீ வரும்வரை
ஒளியும் வெளியும் காற்றும் வருட
தண்ணெனும் மரத்தின் தாய்முலை நீங்காது
சொக்கி நின்ற உன் வாழ்கை
மண்ணின் துயரறியாது.
பின்னும்
என் கைகளின் வெதுவெதுப்பில்
காதலையே அறிந்ததுபோல் மயங்குகிறாய்,
மண்ணின் துயரறியாது.

இம் மண்ணில் படும் உயிரின் வலியை
என் உள்ளங்கை உனக்கு ஊட்டிவிடுமோ என
அஞ்சும் தவிப்பை நீ அறிந்துகொண்டு விடுவாயோ எனப்
பொய்யாகவே நான் அஞ்சுகிறேனோ?

என் இதழ்களும் நாவும்
உன்னைச் சுவைக்கக் காத்திருக்கையில்
உன் உள்ளத்தில் ஓடிய எண்ணங்கள்தாம் என்ன?
அன்பின் வேளை எண்ணங்கள் அறியாதாமோ?

வியர்வையின் உப்பையும்
வாசனையையும் அறிந்த
தூய இதழ்நீரின் ஊற்றோ, மற்று
என்ன இரகசியமோ
புளிக்கும் சாற்றையும்
துவர்க்கும் சக்கையையும்
விசித்திரமான ஆர்வத்தின்
ஒரு செல்லச் சுளிப்போடு
சுவைக்க வைத்தது?

காதல் என் இரத்த ஓட்டத்தையும்
நுரையீரலையும் சுறுசுறுப்பாக்கி
இழையத் தொடங்கியதைக் கண்ணுற்றோ
ஒரு குவளைத் தண்ணீரை
என் எதிரே நீட்டி
இப்போது இதனை
அருந்திப் பாருங்கள் என்றார்
உழைப்புரம் ஏறி
நெகிழ்ந்த தோளும் கைகளுமாய் நின்ற
தோட்டக்காரர்?
அப்போது அது நடந்தது
அந்த நீரும் இப்பூமியும் நானும்
ஒன்றியதால் நிகழ்ந்த
ஒரு பேரனுபவச் சுவை விழிப்பு.

Read more...

Sunday, October 14, 2012

வைகறை

வைகறைச் செல்வீ!
உஷா!
காலைப் பொழுதின்
திவ்யமான அமைதியே!
இயற்கையின்
எல்லாப் பொருட்களிலும்
இலங்குகின்ற மவுனமே!
என் பேரழகே!

ஒரு மரத்தின்முன் நின்றுகொண்டோ
சின்னஞ் சிறிய என் தோட்டத்தில்
அமர்ந்துகொண்டோ
நின்முன்
நான் செயலற்றுவிட்டேன் என்றபோது
நீ அமைதியிழந்தனையோ?

பின், என்ன அதிர்ச்சியினால்
நீ குரலிழந்தனை?
தாளமுடியாத நெஞ்சின் குரலிழந்த கதறலாய்
ஒலிக்கிறது நினது உக்கிரமான அமைதி.
மவுனமான நின் பார்வையில், அசைவுகளில்
கனலும் துயரங்கள்தாம் என்ன?
மனிதர்களால் இன்னும் தீண்டப்படாது
அமிழ்ந்துகிடக்கும் அம்ருதப் பெருஞ்செல்வமும்
நெருப்பிலிட்ட நெய்யாய்த்தானாயிற்றோ?
நின் கதறலில், நினக்காய் என் குரல் தேரும்
அவசரமான அழைப்புமுனதோ?

Read more...

ஆறுகளும் ஏரிகளும்

அப்புறம் என்ன செய்வதென
நிலமெங்கும் கனன்று கொண்டிருக்கிறது
ஆயிரம் கரம் நீட்டி – பூமியின்
மாசு களைந்துவிட்ட மழை.

Read more...

Saturday, October 13, 2012

இயற்கையுட் புகுந்து

இன்னும்
தன் மைந்தனுக்கு
வயது வரவில்லை எனத்
தாய்மை கடைப்பிடிப்பவனோ
இடுப்பில் உலகேந்தி
பாரம் சுமந்தலைகிறான்?

உலகம் தன்னைத் தானே
காத்துக் கொள்ளட்டுமென்று
கவலை துறந்தவனோ
இயற்கையுட் புகுந்து
இன்பத்தை இயற்றுகிறான்?

சற்றே நெளிந்த
தென்னை மரத்தின்
வேண்டாத அண்மை காரணமாய்
குறுக்கு ஒடிந்து விழுந்து விடும்போல்
வலி தாங்கி
வளைந்து நின்றது
நெடிதோங்கிய பன்னீர்மரம்.

அதனை ஒரு கயிறால்
தென்னையோடு இழுத்துக்
கட்டிவிடுதல்தான் உத்தமம் என்று
கூடியது யோசனை. தென்னையிலும்
இரண்டு மட்டைகளை ஒடித்துவிடவேண்டும்.

இப்போது
என்றுமில்லாத அளவு மலர்களும்
என்றுமில்லாது ஒளிரும் வெண்மையும்
காதலும் நாணமும்
களிப்பும் கொண்டாட்டமுமாய்ச் சிலிர்த்து
ஒயில்கொண்டு நின்றது
காதல் தென்னையின் கரஅணைவில்
பன்னீர்மரம்.

Read more...

முகவரி

*தேவமோ?
நான் எனும் பிரக்ஞைத் துயர்வலியோ?
அடிபட்ட சிறுபுள்தாமோ?

அன்னவனைத்தான்
பேருணர்வுகளின் உதிரமாகும்
பேரியற்கை தாங்கும் ஆமோ?

வானமே இறங்கி வந்து
’உம்மை விட்டுப் பிரியேம்’ என்று
வேர் முளைத்துக் கிடக்கும் கால்கள்.
கதிரொளியில்
தரையெல்லாம் ஒளிரும் பொன் இலைகள்.
வருகை தவறாது வந்து மகிழ்ந்து
வாழ்த்தியபடியே இருக்கும் பறவைகள்.
வால் சுருட்டி கால்மடக்கி
அமைதியை
அசைபோட்டுக் கொண்டிருக்கும்
கனத்த உருவமுடைய கால்நடைகள்
அயர்வு தீண்டிவிடாதவாறு
மாறி மாறி வந்து காக்கும்
பருவத் திருவிழா அரண்கள்
(இன்று மரங்கள் பூத்தொளிரும்
இளவேனில் எழிற் காலம்)

தனித்துப் போன அந்த இல்லத்தை
வினோதமாய்ப் பார்த்துச் செல்லும்
வழிப்போக்கர்களிடையே
அன்பின் துயருடையோர் கால்கள்மட்டும்
அவ்விடம் ஓர் *தவக்கம் விட்டுச் செல்வதென்ன?


*தேவம் = தெய்வீகம், *தவக்கம் = தயங்கி நின்றுவிட்டுச் செல்லுதல்

Read more...

Friday, October 12, 2012

சுட்டும் முகம்

பார்வையும் அதனடி பிறக்கும்
செயலுமான வாழ்வைச்
சுட்டும் முகமாகவோ
அன்று காட்சியளித்தது அது?

முழு பூமியின் மேலும் விரிக்கப்பட்ட
முழு நிலக்காட்சியாக
மனித குல வரலாற்றின்
இன்ப துன்பக் கோலங்கள் அத்தனையும்
ஒரே வேளையில் ஒரே இடத்தில்
ஒற்றையாய்!

Read more...

முதன்மையிடம் உனக்கெனவே கொடுத்து

முதன்மையிடம் உனக்கெனவே கொடுத்து
நீர் நடுவே அழிந்துநிற்கும் மரங்கள்!
விண் ஒளிரும்
அப் பெருஞ் செயல் மாண்பை
யாவர்க்குமுரைக்கும் கோலமாய்
நீர் நடுவே பட்ட மரங்கள்மீது
சிறகொடுக்கி நிற்கும் பறவைகள்.

கானகத்து நடுவே
பூத்தொளிரும் வானகம்.

மாமலைகளும்
வான்மழை வணங்கித்
தம் இதயத்துள் பொதிந்த கோலம்.

கானகத்தின் – இன்னும் காணற்கரிய மாண்புகளைக்
காண வேண்டி அந்நீருக்குள்
கால் துடித்து நிற்கும் படகுகள்.

படகுகளைத் தம் தோள்மேல் சுமந்து
வலம்வரும் தாய்மை தந்தைமையைப்
புரிந்துகொண்ட அன்பு தானோ
அச்சம் நீங்கி
கரையெங்கும் தம் குடும்பத்தோடு
அமைதி கொண்டுலவும்
காட்டெருமைகளும் யானைகளும்
மான்களும் மிளாக்களும்?

Read more...

Thursday, October 11, 2012

மலர்கள் குலுங்கும் மரம்

திடீரிட்ட
இன்பத்தின் காதற்கோலமோ என
பளீரிடும் மலர்க்கொத்துகளேந்தி நிற்கும்
பன்னீர்மரம்.

உற்றுக் கவனித்தால்
முதிராச் சிறுசிறு மொட்டுகளோடு
மலர விடைத்து நிற்கும் மொட்டுகளும்
கொள்ளை இன்பத்தாற் கெலித்த
ஒளிவிழிப் பூக்களோடு
கண்ணீர்க் கோடுகளென
காம்பினின்றிழிந்து தொங்கும் பூக்களும்.

Read more...

மார்கழி மாதம்

மார்கழி மாதம் –
வேறென்ன வேண்டும்?
உயிரின் உயிரைத்
தீண்டுகிறது குளிர்.
கோலங்களில் வந்தமர்கிறது
மலர்.

கொடியதொரு காலம்.
உயிரை ஜில்லிட வைத்து
மரக்கச் செய்கிறது
ஆரம்பத் திகில்.
அலங்கோலமெங்கும்
தெறிக்கும் குருதி
அவன் பிரக்ஞைக்கு வராது.

கொடியதொரு காலத்தில்
கொடியதொரு காலமேயாயிருக்கும்
மனிதர்கள்.

Read more...

Wednesday, October 10, 2012

நித்யானந்தம்

காலடிப் பள்ளத்தில்
மிகுதியாய்த் தேங்கிய நீரும்
இனித்த்தோ கொஞ்ச நேரம்?

தன் மரகதப் பெருஞ் செல்வம்
மளமளவென்று
முதிர்ந்து கனிந்து
இலை இலையாய் உதிர்ந்து கொண்டிருந்த
எழிற் கோலத்தில்
தன் மெய்மறந்திருந்ததோ அது?

ஈரத்தொடு வெப்பமும்
இணை சேர்ந்த அழற்சி
தன் வேர் தொடவே
அது திடுக்கிட்டதோ?

இலைகள் யாவும் உதிர்ந்து
உயிர்க்கிறுதியாய்
தன் உள்ளெலும்பு தைக்கும்
அனல் எரிக்கத் தொடங்குகையில்தான்
அது விழித் தெழுவதற்காய்த்
தீண்டி விட்டதோ துயரும்தான்?

வெள்ளம் மெல்ல வற்றிவிட
வேர் அழுகிவிடாது தப்பித்து
மெல்ல மெல்ல துளிர்த்துப் பெருகிப்
பெற்ற மீளுயிரின்
பல்லாயிரம் பொன்விரல்கள் துடித்து
காற்று வெளி வீணை மீட்டப்
பாடல் தொடங்கிவிட்ட போதும்
அது அனிச்சம் அறியாதது போலவே
தன் அதிர்ஷ்டம் எண்ணிக்
குதிக்கும் கொண்டாட்டமும் அறியவில்லை.

நித்யானந்தப் பிறவி இல்லை அது.

Read more...

ஒளிரும் தனிமையுடன்

ஒளிரும் தனிமையுடன்
நாற்சந்தியின்
ஒரு பள்ளத்தில் சுடர்விடும்
மூலை வீடு.
ஒரு வைகறைப் பொன்வேளை
வைரநகைக் கழுத்தணியாய்
வீட்டைச் சுற்றிய மழைத்தேக்கம்.

Read more...

Tuesday, October 9, 2012

பறவைகள்

அண்ட சராசரமெங்கும்
அலைந்து திரிந்து
கட்டக் கடைசியாய்
இங்கே வந்து
காலூன்றி நிற்கும் இவை என்ன?

இம் மரங்களின் காலடியில்
கலையாத கார்மேகங்களென
மகிழ்ந்து குழுமி
மண்டிக் கிடக்கும்
இந் நிழல்களின் பொருள்?

இந் நிழல்களின்
இடையறாத குளிர்மையில்
வால் சுருட்டி கால் மடக்கி
அமர்ந்திருக்கும் விலங்குகளென
வீடுகள்!

இவ் வீடுகளுக்குள்ளோ
தன் இல் உறைவான் குறித்து
ஒரு சொல் உதிர்க்காத மவுனம்.

Read more...

நிலவெளி

எத்துணை அழகு!
விண்ணளவு பூமியாய்
விரிந்து நிற்கும் நிலவெளிதான்-
பற்றுமய்யம் ஒன்றில்லாத
இன்மையும் தனிமையும்
முழுமையும் அறிந்த
ஓர் மனிதன் போலவே.

Read more...

Monday, October 8, 2012

உனக்காக

உனக்காக வேண்டியே
வளர்ந்த மரச் செறிவு.
உனக்காக வேண்டியே
வளர்ந்த மரச் செறிவு நடுவே
ஒளிரும் நீர்த் தேக்கம்.
உனக்காக வேண்டியே
வளர்ந்த மரச் செறிவு நடுவே
ஒளிரும் நீர்த் தேக்கத்திற்காய்
தன்னை அழித்துக் கொண்டு நிற்கும்
பட்ட மரங்களின் மாண்பு.
இப்போது
உனக்காக வேண்டி
உனக்குப் பதிலியாகவோ,
பட்டஇம் மரக் கொம்புகள் தோறும்
தம் அகம் அழிந்த மோன வணக்கமாய்
அசைவற்று அமர்ந்திருக்கின்றன
இப் பறவைகள்?

Read more...

முழு இரவு

அவன் அழுதபடியே பார்த்துக் கொண்டிருந்தான்
தவறான பாதையில் வெகுதூரம் சென்றிருந்த அவர்களை.

எவ்வாறு அவன் அவர்களைத் தடுத்து நிறுத்துவான்?
தொடர்ந்து நிகழும் போர்களைத்
தன் உரிமைக்கும் நீதிக்குமான
சவால் என் எண்ணியவர்களாய்
உற்சாகமாய்த் தொடரும் பேதைமையை,
தங்கள் மேன்மைகளனைத்தையும்
கடவுள் எனப் புறம் நிறுத்தி
கைகூப்பி விடைகொடுத்துவிட்டுப்
பதர்களாய் வாழ்கிற மூடமதை,
துயரின் தோற்றுவாயை,
தங்கள் ஒரு அடிவைப்பை நிறுத்திய கணமே
சரியான பாதைக்கு உடனழைத்துச் செல்லக்
காத்திருக்கும் காலதூரமற்ற கருணை ஊற்றை
எப்படி உணரவைப்பான் அவன்?

விலகவொண்ணா வலியுடனே
பாய்ந்துபோய் அவர்களின்
பாதநிலமாகிக் கொண்ட பாய்ச்சல்களும்
அவர்கள் கண்ணுறும்படிக்கு
யாதொன்றுமாகிநின்ற கதறல்களும்
பயன் காணாது போவதுவோ?

செயலின்னையே உருவானவனோ
தானே செயலானவனோ
மெய்மை உணர்ந்த மனிதன்?

தூய மகிழ்ச்சியை அறிந்த மனிதன்
துயருடையோனாகவே இருக்கிறான்.
இயற்கையின் மைந்தன்
முதுமை காண்பதில்லை எனினும்
துயருடையோனாகவே இருக்கிறான்.
மனித இனத்தின்மீது மட்டுமே கவிந்துள்ள
துயர் படிந்தவனாக, முதிர்ச்சியின்
உச்சாணிக் கொம்பில் பூத்துத்
தாழத் தேன் சிந்தும் மலரும் கனியுமான பின்னும்
துயருடையோனாகவே இருக்கிறான்.
தூய நீரூற்று எங்குள்ளது என அறியும் அம்மனிதனே
துயரின் பிறப்புக்கண் அனைத்தும் அறிவான்.

சொல்லிச் சொல்லித் தோற்றொருநாள்
மவுனமாகி விடுவானோ, இயற்கை தன் குரலுக்காகவே
அவனைப் படைத்துள்ளது என்பதறியாது?
அகண்டாகார விண்ணே வியந்து நிற்கும்
இயற்கை வெளியாகிவிடுவானோ,
இயற்கைவெளியாகிவிடுவதே மரணமென்பதறியாது?
மரணத்தின் வாயில் திறந்தன்றோ
மரணமிலாப் பேரானந்தப் பெருவெளியமுதம்
பருகுகிறான்!

அவன் வயிறு பார்த்துத் தன் முலை விலக்கி
எழுந்து நிற்கும் அந்த ஊமைத் தாயினுள்ளம்
அவனை ஊமையாயிருக்க விடுமோ?

காதலைத் தன் உள்ளத்தில் வைத்து
வெகுநேரம் களிப்புற்று இருக்கும் மனிதன்
துயருக்கும் அவ்வாறே இடம் கொடுத்துக் கனிகிறான்.

வருகிறேன் எனச் சொல்லி
வராமல் திரியும் மனிதனைக் குறித்த
காத்திருத்தல்களெல்லாம் வீணானதோ?
தொலைந்துபோன குழந்தையுடன்
கண்காட்சியின் அலுவலகத்தில் நின்றபடி
உற்றவரை வந்து பெற்றுக் கொள்ளும்படி அழைக்கும்
ஒலிபெருக்கிக் குரலாயும் அவன் உரைக்கவில்லையா?

நாம் கொஞ்சிக்குலவி மகிழ்ந்து
விளையாடிக் கொண்டிருக்கும் அறைக்கு வெளியே
கண்ணைக் குதறும் போர்க்களமொன்று
பெயர்த்துத் தகர்ப்பாரின்றிக்
கொழுத்து இயங்கிக் கொண்டிருப்பதைக்
கண்ணுறுவார்தம் கதறல்கள்தாமோ அவன் கவிதைகள்?

ஆட்டத்திலே மனம் செல்லவில்லை என்றவனை
ஆட்ட வீரனாக்க எப்படி முடியும்?
ஆட்டத்தில் எப்போதும் தோற்றுக்கொண்டே வரும்
துயரத்தின் நீலநிலா வெளிதான்
தகுதியும் நற்குறியுமான கொடையோ?

இந்த முழுஇரவையும் பற்றிய ஒரு கவிதைதான்
தவறான பாதையில் வெகுதூரம் சென்றுவிட்ட
அவர்களைத் தடுத்து நிறுத்தும்.

Read more...

Sunday, October 7, 2012

பூ சிற்பம்

தோட்டத்திலிருந்த பூக்கள் சில
அறைக்குள்ளிருந்த பூ சிற்பம் கண்டு
எட்டி எட்டி நோக்கித்
தன் வியப்பால் மகிழ்ந்து கொண்டிருந்தன.

அவனைக் கண்டும்
அப்படி ஒரு இன்பப்புறம் நிலவுகிறது எனும்
நிச்சயமான ஒரு தோற்றம்
வெளிப்படுத்த முடியாத மகிழ்ச்சியினால்
நெளியச் செய்கிறதே அவனை!

காதலர்கள், தங்கள் காதலை வெளிப்படுத்த
அவனைப் பரிசளித்துக் கொள்கையில்
ஒரு சொல்லும் உதிர்க்காத
மாபெரும் சொல்லாகவன்றோ
மாறிவிடுகிறான் அவன்!

அவன் பூ சிற்பம் புது மதமொன்றின்
வழிபடு சிலையாக மாறி
பூக்களினை அறியாதாராகி விடுவாரோ மனிதர் எனில்
அவன் பூ சிற்பம்
அழிவிலாத உறுதியுடன்
அழியத் துடித்தபடி
வேண்டி நிற்பதுதான் என்ன?
தோட்டத்திலிருந்த பூக்கள் சில
அறைக்குள்ளே
எட்டி எட்டி நோக்கி
அதைத்தான் உரைத்துக் கொண்டிருக்கிறதோ
இப்போது?

Read more...

ஒரு புல்தாவரம்

கவியின் அம்சமோ?
வெளிப்படுத்தப்படாவிட்டால் ஆகாதோ?

காலமெல்லாம்
மவுனமாய்
மண்ணிற் புதைந்து கிடந்து
ஆண்டுக்கொருமுறை – சித்திரை மாதம் –
அன்பின் ஆர்வத்தால் ஊதிப் பெருத்த
ஓர் இதய இரத்தக் குழாய் போய்
நீண்ட மென் தண்டொன்றின் முனையில்
குமிழியிட்ட ஒற்றை மலரோ
ஒரு நூறின் கொத்தோ என
கோள வடிவில்
ஒரு கொள்ளை அழகை
உருட்டி நீட்டுகிறது
இந்தப் புல் தாவரம்.

ஆயின், இன்பம் எங்கே?
நம் வாழ்வைக்
கேள்விக்குரியதாக்குகின்றனவே
அன்பினதும் அழகினதும் முன்னிலையில்
கண்ணீரை ஊற்றெடுத்து நிற்கின்ற
நம் கண்கள்!

Read more...

Saturday, October 6, 2012

விலங்குகள்

தடபுடலாய்
தானே தன் தட்டத்தை எடுத்துப் பரிமாறி உண்ணும்
சிறுவனைப் போல, கான் நடுவே
சிறுத்தை ஒன்று மான் கவ்விப்
பசியாறிக் கொண்டிருந்தது,
வானும் மலையும் தருக்களும் நீரும்
தம் தாயுடன் மும்முரமாய்
உரையாடிக் கொண்டிருந்த திவ்ய வேளை.

Read more...

இலைகளின் வடிவம்

நீராலான இவ்வுலகில்
காற்றின் தாலாட்டில்
கண்மயங்கி நிற்கும்
காலிப் படகோ நான்?

இதுவே என் வாழ்வின்
மகத்தான பேறோ?
மானுடமனைத்தும் விடுதலை பெற்று
இப் பேற்றினை எய்தும் –
வழி சுட்டுவதே
இனி நம் வாழ்வின்
மகத்தான இலட்சியமோ?

அழியாத இந்நினைவையே
யுக யுகாந்திரங்களாய்
தன்னில் மறவாது கொண்டிருக்கும்
கோடானு கோடி இலைகள் அத்தனையிலும்
தம் படகுவடிவம் புரிந்து கொள்ளப்பட
பேரானந்தம்.

Read more...

எந்த ஓர் ஒழுங்கில்

எந்த ஓர் ஒழுங்கில்
அடுக்கப்பட்டுள்ளது
உலகின் அனைத்து அறிவுகளும்
ஒரு கணினியில்?

எந்த ஓர் ஒழுங்கில்
அடுக்கப்படுகிறது
உலகின் அனைத்து அறிவுகளும்
ஒரு மனிதனின் மூளையில்?

எந்த ஓர் ஒழுங்கில்
ஒழிந்து ஒளிர்கிறது
உலகின் அனைத்து அறிவுகளின்
தோற்றமும் மறைவும் இருப்பும்?

Read more...

Friday, October 5, 2012

நதி

இடையறாத கொந்தளிப்புடன்
பாய்ந்து ஓடிவருகிறது கடலை நோக்கி.
பொறு நதியே, பொறு.
கடலோ, விண்ணிடம் இறைஞ்சும் பிறவி.

அமைதி கொள்ளுங்கள் நண்பர்களே
அமைதி கொள்ளுங்கள்.
விண், விம்மி விடைத்துத் துடித்தபடி
ஒவ்வோர் உயிருள்ளும் புகுந்து
ஆங்குள கோபுரங்கள் தேவாலயங்கள் மசூதிகள்
இன்ன அனைத்தையும் தகர்த்து
ஆங்கே தன்னை நிறுத்தித்
துயரனைத்திற்குமாய்
ஓர் முற்றுப்புள்ளி வைத்துவிடக்
கனலும் பிரம்மாண்டம்;
காத்திருக்கிறது;
கவனியுங்கள் நண்பர்களே, கவனியுங்கள்.

Read more...

நீர்மையும் பசுமையும் தகிப்புமாய்...

இழக்க வொண்ணாத் தாயகமோ;
அமைதியும் அழகும் இன்பமும் ஏற்றமும்
நம்மைச் சுறுசுறுப்பாய் வைத்திருக்கும்
அசவுகரியங்களுமாய்
ஒளிரும் காதற் தனி இல்லமோ
காலத்தாற் சீர்குலைந்தவை அறியாதே
காலம் விட்டகன்று நிற்கும் தேனோ;
ஆடுகள் மேய்த்தபடியோ
எருதுகள் குளிப்பாட்டியபடியோ
உலவும் காதல்மடம் ஒளிரும்
கன்னிச் சிறு பெண்ணவள் தாய்மடியோ;

விஷம் விளையும் நிழல்களிற் போய்
நலம் நாடிக் கிடக்கா தனிமையோ;
யாவுமுணர்ந்த மனிதனின்
வலியும் மவுனமுமேயான வரைபடமோ;
நன்மையினதும் தீமையினதும்
ஊற்றுக்கண்கள் காட்டும் ஓவியமோ;

விடியலும் தனிமையுமாய்
நெளிவு குழைவுகளுக்கிடமளிக்கா
வல்லுரமிக்க மெய்மையோ

நீர்மையும் பசுமையும் தகிப்புமாய்க்
கனலும் இந் நிலக் காட்சி?

Read more...

Thursday, October 4, 2012

யானை

இப் பூமி ஓர் ஒற்றை வனம்
என்பதை உணர்த்தும் ஒரு கம்பீரம்.
வலம் வரும் நான்கு தூண்களுடைய
ஒரு பேராலயமாகி
வானுயரத் துதிக்கை தூக்கி
கானகம் அதிர ஒலிக்கும்
உலக கீதம்.

Read more...

மலையின் மாண்பு

இலைகளின்றி
கிளைகளின்றி
தாங்கும் விரல் காம்பு தவிர
பிறிதொரு
விரலுயரமும் தேவையற்று
நேரடியான
ஒரு மலராகவே மலர்ந்துள்ளது
மலையுச்சியில் ஒரு தாவரம்!

Read more...

அசோக வனம்

எத்துணை மேன்மையும் அழகும் கொண்ட பெயர்!
தான் கண்டு பேருவகை கொண்ட
சுந்தர வனத்திற்கு
மாளாத் துயரும் மாண்புகளுமுடைய
ஓர் மகத்துவனால் மட்டுமே
சூட்ட இயன்றிருக்கும் பெயர்!

Read more...

Wednesday, October 3, 2012

நீரவலம்

பள்ளத்தின் நீர்ப் பிடிப்பு
நீர் உறிஞ்சும் தன்னை இழந்து
நீர் தேக்கி நாறிக் கொண்டிருக்க;

அதில் ஒரு பாடு மண் சேர்க்க;

அம்மண் உறிஞ்சி
விஞ்சிய நீர் விரிந்து

தங்கள் நிலத்தாலும் இனிதே உறிஞ்சப்பட

எவ்விடமும் துயர் இல்லாதொழியும்
மெய்மை காண வல்லவரோ
பள்ளம் ஒழிக்க அஞ்சம் மூட மனிதர்?

Read more...

ஓடும் ரயில் வேகம் தொற்றி

ஓடும் ரயில் வேகம் தொற்றி
அதிர்ந்தன சப்தநாடிகளும்
அதன் வழியில் அவன் இனி குறுக்கிடமுடியாது?

புவி முழுமையையுமாய்
அடக்கி நெரித்தபடி
விரைந்து நெருங்கிக் கொண்டிருக்கும் ஆபத்தை
நேர் நின்று பார்த்தவனாய்
அதிர்ந்தன அவன் சப்தநாடிகளும்.

உடைந்த ஆற்றுப் பாலம் கண்டு
மூச்சிரைக்க ஓடிவந்து நின்று
ஆபத்துக்கு ஆபத்துரைக்கும்
அறியாச் சிறுவர்கள் போலும்
வாழ்ந்து முடிவதில் என்ன பயன்?

இதயத்திலிருந்து பாய்ந்து விரிந்து நின்ற
கைகளும் கால்களும் தலையுமாய்
குறுக்கிட்டு மடிவதன்றி என்ன வழி?

வாள்போலும்
ஆற்றைக் குறுக்கறுத்தோடும் இரயில் வண்டியும்
திரும்பி ஓர் நாள்
ஆற்றோடு கைகோர்த்துச் சிரித்துக் கொண்டோடாதா?

Read more...

Tuesday, October 2, 2012

புத்த சிலுவைகள்

அந்தப் பேரன்பையும் பெருவிரிவையும் கண்டோ
இத்தனை பெரிய விதானத்தைக்
கட்டி எழுப்பியிருக்கிறான் மனிதன்?

பின்னும்
தேவாலய வளாகத்துள்ளே
எதற்கோ
ஒரு கல்லறைத் தோட்டம்?

ஆயிரம் முளைகள் போலும்
எழுந்து நிற்கும்
கல்லறைகள் ஒவ்வொன்றும்
நம் நினைவுகளை எள்ளி நகைத்தபடி
தன்னுள் ஏதுமிலா வெறுமையினைப்
புத்த சிலுவையுடன்
உரத்து ஒலித்துக் கொண்டிருப்பதையா
குடைபிடித்து இசைக்கின்றன
இந்தப் பெருமரங்கள்?

காலமும் ஒளியுடன் கொஞ்சி
உறவாடிக் கொண்டிருப்பதிலேயே மகிழும்
இந்தப் பெருமரங்கள்
காலைப் பொழுதின் திவ்யத்தைக்
காலம் முழுவதுமாகக் காக்கத் துடிப்பதென்ன?

பத்த சிலுவைக் கல்லறை ஒன்றின்மேல்
வியந்து நிற்கும் ஒரு மோன வணக்கம்.
சிறகு குவித்துக் காலூன்றி
குனித்த புருவமும் பனித்த பார்வையுமாய்ச்
சிலையாகி நிற்கும் ஒரு தேவதை!

Read more...

எத்துளியிலும் இருக்கும் அதற்கு

எத்துளியிலும் இருக்கும் அதற்கு
கோயில் எதற்கு?

உணர்வுகள் கூர் ஆவதுண்டோ
நம் வழிபாட்டுச் சடங்குகளால்?

வேடிக்கையாயில்லையா
தனது பிரதிமைகள்முன்
தானே தலைகுனிந்து நிற்பது?

சுரணையும் அறிதலுமாய்ச்
சுடரும் உயிர்த்தழலையா
கழற்றிவைத்துவிட்டு நிற்பது?

பிறர் துயர் முன்னன்றோ
அவன் கண்கலங்க வேண்டும்?

தன் குற்றம் முன்னன்றோ
அவன் தலை குனிய வேண்டும்?

புதுப் புனல் சுழித்தோடும்
பசிய மலர் வெளியில்
களித்துப் புரண்டோடும் காற்று
ஒளிப்படுகையில் சிலிர்க்கையில்
நமக்கு வசப்பட்டுவிடாதா
செம்மாந்த வாழ்வின் இரகசியங்களை நோக்கித்
தீர்க்கமாக நம்மை உந்தும் ஆற்றல்?

Read more...

Monday, October 1, 2012

தேவதேவன் கவிதைகளில் மொழி

தேவதேவன் கவிதைகளில் மொழி பற்றிப் பேச வந்திருக்கிறேன். அதற்கு முன் மொழி என்றால் என்ன என்று எனக்குத் தெரிந்ததை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.

தேவதேவனை முன்பின் தெரியாத ஒருவர் இங்கே வந்து, “தேவதேவன் யார்?” என்று கேட்டால், நாம் என்ன செய்வோம்? கைநீட்டி இங்கே இருக்கிற தேவதேவனைக் காட்டிக் கொடுப்போம். தேவதேவன் இல்லாத ஓர் இடத்தில் ஒருவர் வந்து, “தேவதேவன் யார்?” என்று கேட்டால், அவரைக் கைநீட்டிக் காட்ட முடியாது; அவரைப் பற்றி ஒன்றிரண்டு வார்த்தைகளாவது, உளறியாவது, காண்பிக்க வேண்டும். ஆக, உள்ளதைச் சொல்வதற்கு அல்ல, இல்லாததைச் சொல்வதற்கே மொழி என்று தெளிகிறது. அப்படித்தான் மொழி, நம் இடைவெளிகளை நிரப்பி, நமக்குள் ஒரு தொடர்பையும் நம் செயல்பாடுகளுக்கு ஒரு தொடர்ச்சியையும் தருகிறது.

‘சிவப்பு’ என்பது, நம் சிறுவயதில், நம் தாய் தந்தையரோ ஆசிரியரோ, சிவப்பு நிறமுள்ள பொருட்களைக் காட்டிக்காட்டி நமக்குக் கற்றுத்தந்த ஒரு சொல். ஓர் ஊசியால் குத்துப் பட்டால் நமக்கு நோகிறது. நோவு என்னவோ நமக்குள் நிகழ்வதுதான், ஆனால் அந்த உணர்வுக்கான ‘நோவு’ என்கிற சொல் நமக்கு வெளியில் இருந்தே கிட்டுகிறது. வினைச்சொற்களும் அப்படித்தான். ஒருவர் நம்மை நோக்கி நெருங்குவதை ‘வருகுதல்’ என்றும்; நம்மை விட்டு விலகுவதைப் ‘போகுதல்’ என்றும் சொல்லித் தெரிகிறோம். ஆக, மொழி நமக்கு உள்ளிருந்து சுரக்கிற ஒன்றில்லை; நமக்கு வெளியே இருந்து புழங்குகிற ஒன்று.

மொழி நமக்கு வெளியே இருப்பதினால், அது எல்லார்க்கும் பொதுவாக இருக்கிறது. ஆனால் அனுபவங்கள் பொதுவாக இருப்பதில்லை. அதுவும் ஒரு கவிஞரின் அனுபவத்தைப் பற்றி என்ன சொல்ல? தனித்துவமான அந்த அனுபவத்தைச் சொல்ல, பொதுமொழி போதுமானதாக இல்லாமற் போகலாம். அந்தக் கட்டத்தில் கவிஞர் என்ன செய்வார்? தனக்கென்று ஒரு தனிமொழியை உருவாக்கிக் கொள்ள முடியுமா?

ஒரு திரைப்படம் பார்த்தேன். “தாரே ஜமீன் பர்” என்கிற ஹிந்திப் படம். கதாநாயகன் ஓர் எட்டுவயதுச் சிறுவன். எந்நேரமும் கனவிலும் கற்பனையிலும் வாழ்பவன். ஓவியம் நன்றாகத் தீட்டுவான், ஆனால் பள்ளிப் பாடங்கள் அவனுக்குப் புரிகிறதில்லை. ஒருநாள் ஆசிரியர் அவனிடம் சொல்கிறார், “Ishaan, read the first line from page 23.” அவன் எழுந்துநின்று முழிக்கிறான். “I say, read the firat line from page 23.”
அவன் சொல்லுகிறான், “அக்ஷரோ(ங்) நாச்தே ஹை(ங்)”. வகுப்புச் சிறுவர்கள் எல்லாரும் சிரிக்கிறார்கள். ஆசிரியருக்குப் புரியவில்லை. அவர் கேட்கிறார், “What?” அவன் சொல்லுகிறான், “The letters are dancing, sir!” ஆசிரியர், “Is it? Okay, then read the dancing letters.” அவன், “Kich bich klich blich chacha chich.” வகுப்பறை சிரிப்பால் அதிர்கிறது. “Get out of the class!”

ஒரு கவிஞர் தன் அனுபவத்துக்கு என்று ஒரு தனிமொழி அமைத்தால் இப்படித்தான் இருக்கும்.

மேலும், கவிஞர்கள் கவிதை எழுதுவது தம் அனுபவத்தைப் பிறருக்குத் தொற்ற வைப்பதற்காக. அதனால், தமக்கும் பிறருக்கும் இடையில் உள்ள இடைவெளியை நிரப்ப அவர்கள், வேறு வழியின்றி, பொதுமொழியைப் பயன்படுத்தியே ஆகவேண்டும். அந்தக் கட்டாயத்தில், கவிஞர்கள் அந்தப் பொதுமொழியைத் தங்களுக்குத் தோதாக வளைத்து நெளித்துக் கொள்கிறார்கள்.

||தீக்குள் விரலை விட்டால், உன்னைத் தீண்டும் இன்பம்..|| இது பாரதி;

||பார்வைச் செவிப்பறையில் பருவம் முரசறையும்.|| இது பிரமிள்;

||ஈரமற்றுப் போன குரலின் அவலத்தைச்/ சொல்லிச் சொல்லிக் கரைகின்றன/ தந்திக் கம்பிகளின் மேல்/ வயலின் குருவிகள்.|| இது க. மோகனரங்கன்;

||காற்றோட்டமான சொற்களால் விழிகளை உலர்த்தினேன்.|| இது ஜெ. பிரான்சிஸ் கிருபா.

கவனியுங்கள், இங்கே எடுத்துக் காட்டிய எந்தக் கவிதை வரியிலும், நாம் அறியாத அல்லது பழக்கப்படாத ஒரு சொல் கூட இல்லை. இப்படி, இவர்கள் பொதுமொழியில் இருந்தே தத்தம் அனுபவங்களுக்கு ஏற்ப ஒரு தனிமொழியை உண்டுபண்ணி வெளிப் படுகிறார்கள். இவர்கள் பெற்ற அனுபவத்தை அப்படியே உள்வாங்க, நமக்குக் கொஞ்சமே கொஞ்சம் பயிற்சி அல்லது நாட்டம் இருந்தால்கூடப் போதும்.

இனி, இதுபோல, கவிஞர் தேவதேவனுக்கும் ஒரு தனிமொழி உண்டா என்றால், உண்டுதான்:

||தோணிக்கும் தீவுக்கும் இடையே/ மின்னற் பொழுதே தூரம்.||

||வெய்யில் பாவுபோடும் மார்கழியில்/ கூதல் காற்றே ஊடாய்ப் பாய்ந்து பாய்ந்து/ நாள்தறி நடக்கும்.||

||கருங்கூந்தலின் ஹேர்பின்னில்/ கொழக்கிட்டுக் கிடக்கும் தேவகுமாரனின் தலை.||

||மின்கம்பிக் கோடிட்ட வானப் பலகையில்/ காகச் சொற்றொடர்.||

எல்லாக் கவிஞர்களுக்கும் இதுபோன்ற மொழிநெசவு, இயல்பாய், தானே வருவதுதான். ஆனால் தேவதேவனின் மொழி, பெரும்பாகம், இந்த நெசவுகளால் அலங்கரிக்கப்பட்ட ஒன்றே அல்ல. அவருக்கு மொழி முக்கியமில்லை; தான் கண்டு தெளிந்த கருத்தே முக்கியம். அதனால் அவர் கையாளும் மொழி, அன்றாட வாழ்க்கையில் வழங்கும் பொதுமொழிபோல் அவ்வளவு சாதாரணமானது.

||செடி ஒன்று காற்றில்/ உன் முகப்பரப்பிற்குள்ளேயே அசைகிறது./ கோணங்கள் எத்தனை மாற்றியும்/ இங்கிருந்து உன்முகம் காண முடியவில்லை./ இவ்விடம் விட்டும் என்னால் பெயர ஆகாது./ ஆனால் காற்று உரத்து வீசுகையில்/ செடி விலகி/ உன் முகம் காண முடிகிறது.||

என்னே ஒரு சாதாரண மொழி! ஆனால் என்னே ஓர் அரிய தத்துவ அனுபவம்! Intensity-ஐக் குறிக்கும் ‘உரத்து’ என்கிற சொல், இங்கே, பார்ப்பவரைச் சார்ந்தோ பார்க்கப்படுவதைச் சார்ந்தோ இடம்பெறாமல், எங்கும் வியாபித்திருக்கும் இயற்கைக்கு வழங்கப் படுகிறது.

||நான் என் கைவிளக்கை/ ஏற்றிக் கொண்டதன் காரணம்/ என்னைச் சுற்றியுள்ளவற்றை/ நான் கண்டுகொள்வதற்காகவே./ என் முகத்தை உனக்குக் காட்டுவதற்காக அல்ல./

அல்ல/ நீ என் முகத்தைக் கண்டுகொள்வதற்காகவும்தான்/ என்கிறது ஒளி.||

இங்கே, ‘என் கைவிளக்கு’, ‘நான் ஏற்றிக்கொண்டது’ என்று சொல்வதின் மூலம் ஒளியைத் தன் ஆளுமைக்கு உட்பட்டதாக ஆக்குகிறார். கடவுளுக்கும் மேல் கவிஞனை உயர்த்திப் பாடுபவர் தேவதேவன். மட்டுமல்ல, தன் சாதாரண மொழியால் அதை சாதித்துக் காட்டுபவர். அதுவும், குண்டித்துணி கிழிந்த ஒரு சிறுவன் ஒரு மாளிகைச் சுவரில் மூத்திரம் போகிற அலட்சியத்தோடு அதைச் செய்பவர்.

||ஒரு மரத்தடி நிழல் போதும்/ உன்னை தைரியமாய் நிற்கவைத்துவிட்டுப் போவேன்/ கர்ப்பிணிப்பெண்ணை/ அவள் தாயிடம் சேர்ப்பது போல.||
.
இந்த உணர்வை, இப்படி ஒரு சாதாரண மொழியில் அல்லாமல், வேறு விதமாகச் சொல்ல முற்பட்டால் சுளுக்கிக்கொண்ட கழுத்துக்குமேல் ஒரு முகம் போல ஆகிவிடும்.

தமிழ் ஆர்வலர்கள், தேவதேவன் கனமானதொரு மொழியை நமக்கு ஆக்கித் தரவில்லையே என்று குறைபடலாம். ரொமான்டிக் கவிஞரான வேர்ட்ஸ்வொர்த், தான் மக்களின் மொழியில்தான் எழுதுவேன் என்று வலுக்கட்டாயமாக எழுதியவர். நவீனத்துவக் கவிதைகளின் ஆசானான போதலேர், சந்தை மொழியில்தான் கவிதை எழுதப்பட வேண்டும் என்றோர் இலக்கணமே வகுத்தவர். எளிமையை உயர்த்திப் பேசும் தன் கவிதைகளுக்கு தேவதேவன் இப்படியொரு சாதாரண மொழியைத் தேர்ந்தது பொருத்தம்தான். ஆனால் அதே மொழி, அவருடைய “மின்னற்பொழுதே தூரம்” தொகுப்பில் உள்ள கவிதைகளில் வெளிப்பட்டு இருப்பது போல, கூர்மை கொண்டு நிகழுமேயானால் இன்னும் சிறப்பாக இருக்கும். இனி அவர் எழுதப் போகும் கவிதைகளில் இதை மட்டுமே நான் ஆசைப்படுகிறேன்.

ஒரு வயற்காட்டில் சில எலிகள் இருந்தன. மழைக்காலம் நெருங்கிக்கொண்டு இருந்தது. எல்லா எலிகளும் மழைக்காலத்துக்காக உணவுப் பொருட்கள் சேமித்துக்கொண்டு இருந்தன. ஆனால் ஒரே ஒரு எலி மட்டும் அப்படிச் செய்யவில்லை. அந்த எலியைப் பார்த்து மற்ற எலிகள், “நீ மழைக் காலத்துக்காக ஒன்றும் சேமிக்கவில்லையா?” என்று கேட்டனவாம். அதற்கு அந்த எலி, “நான் வெயில் வெதுமையையும், வெளிச்சத்தையும், பளிச்சிடும் வர்ணங்களையும் சேமித்துக்கொண்டு இருக்கிறேன் - எல்லாருக்காகவும்.” என்றதாம். அது போல தேவதேவனும் பிற கவிஞர்களும் நம் எல்லாருக்காகவும் சேமித்துக்கொண்டு இருக்கிறார்கள் - வெதுமையையும், வெளிச்சத்தையும், பளிச்சிடும் வர்ணங்களையும்.

வாய்ப்பளித்தமைக்கு நன்றி! வணக்கம்.

(ஆண்டு 2008, பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரிக் கருத்தரங்கில் கவிஞர் திரு. ராஜசுந்தரராஜன் அவர்கள் ஆற்றிய உரை.)

Read more...

அந்தச் சிறு பொழுதிற்குள்...

ஒவ்வொரு வீடும்
கடவுளையா எதிர்நோக்கிக்
காத்திருக்கிறது?

அவர் புறப்பட்டுவரும் இடத்தையும்
சென்று சேருமிடத்தையும்
அறிவரோ மனிதர்கள்?

அவரை வரவேற்று
உடனமர்ந்து உரையாடி
உண்டு மகிழ்ந்தா
வாழ்ந்து கொண்டிருக்கிறது
வீடு?

அவர் வந்த நேரத்திலிருந்து
தம்பதியினர் இருவரும்
வழி உணவுப் பொட்டலத்துடன்
அவரை வண்டியில் அமர்த்தி
அவர் புறப்பட இருக்கும்
நேரம் வரைக்குள்ளாகவோ
இத்துணை பெரும் பணியொன்றைச்
செய்து முடித்துள்ளார்கள்?

அவர் சென்று சேருமிடம்வரை
இத் தண்டவாளத்தை அமைத்து
அதில் ஓடும் ஒரு வாகனத்தையும்
அமைத்துள்ளார்கள்!
விண் முழுவதையும்
மேகத்தால் அலங்கரித்துள்ளார்கள்!
வியர்க்க வியர்க்க ஓடி ஓடி
பைம்புனல்களையும் பசுவெளிகளையும்
விரித்துள்ளார்கள்.
களி துள்ளும் ஆர்வத்துடனும் வியப்புடனும்
அமர்ந்தும் எழுந்தும் பறந்தும்
அவரை நோக்கிச் சிறகடிக்கும் வெண்கொக்குகளே
மிகப் பெரிய மதிப்பையும் கவுரவத்தையும்
நல்கி நிற்கும் மலைகள், மரங்கள், காடுகள்
தோப்புகள், புல்வெளிகள், மலர்கள், பறவைகள் என்று
அத்தனையையும் அவருக்காக அவர்கள்...!
அந்தச் சிறு பொழுதிற்குள்!

Read more...

வானுச்சியிற் பறந்து செல்லும் ஒரு பறவை

கண்டடைகிறது,
ஒரு நீர் நிலையை,
நிழல் தருவை,
அது நினைப்பதுண்டோ,
பேசுவதுண்டோ,
அவற்றைத்
தான் கட்ட வேண்டுமென்று?

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP