நடுநிசி ஊளைகள்
மற்றெல்லாரையுமே
எதிரி எதிரி எனக் குரைக்கும்
நாய்களே காவல்
எனச் சரணடைந்தாயிற்று
வீடுதோறும் கட்டி வளர்க்கப்படும்
செல்ல நாய்களுக்கு
வீதி செல்வோர் அனைவருமே
ஆறலைக் கள்வர்தாம் என்றாயிற்று
பொது வாழ்வுப் பிரக்ஞையினால்
கொதித்துக்கொண்டிருந்த தோழர்களிடையே
வாயில்லாததும் ஆனால் நல்ல மோப்பமுடையதுமான
ஒரு நாய்க்குட்டி சுற்றிச் சுற்றி வந்தது
யாருடைய வீட்டுநாயாகவும்
ஆக விதியற்று
தெரு நாயாய் சுற்றி அலையத் தொடங்கியது
அந்தக் குட்டி நாய்.
நாய்க் கடிபட்டோரின் வேதனையையும்
நாய் பயம் நீங்காதோரின் தீராக் கவலைகளையும்
நன்கறிந்ததாய்க் காணும் தெரு நாய் அது.
வீட்டுநாய்களைப் போலின்றி
சுனாமிகளுக்கும் தப்பித்து வாழும் தெருநாய்
சிறுவர்களின் கிறுக்குக் கல்லடிகளுக்கும்
மனிதர்களின் குருட்டுத்தனங்களுக்குமாய்த்
துன்புற்றபடியே
சோர்ந்து போய்விடாமல் திரியும் தெருநாய்
இதயத்தைப் பிசையும் வேதனையாய்
அதன் விழியீரத்தில் காணும் துயரம்,
திடீர் திடீரென எழுந்து
பரபரத்து விரையும் கால்களின்
ஒரு கணமும் தாமதிக்க விரும்பாத அவசரம்,
அதன் இளைப்பாறலில் தெரியும் நிராசை
அதன் களங்கமின்மையில் பிறந்துவிட்ட
பேரறிவுச் சுமை மற்றும் விடுதலை,
அதன் வாலாட்டலில் எதிர்நோக்கும் நம்பிக்கை
அனைத்தையும்-
அது நடுநிசி தேர்ந்து
பெரும் கடமையுணர்வால் கிளர்ந்தெழுந்ததுபோல்
ஓயாது உரத்துக் கூறிக் கொண்டிருக்கும் ஊளை