Monday, October 15, 2012

நெல்லிக்காய்

உன்னைக் கனி என்றழைப்பாரில்லை
இதை எண்ணிக் கவன்றதில்லை நீ.

இது கனிகளைப் போலும்
மென்மையாக இருக்கலாமே.
மழை தீண்டாது
இறுகிக் கெட்டித்த நிலம்போலும்
போலி வன்மையினைத் தேர்ந்து நின்றாய்.

களங்கமற்ற குழந்தையின்
விழிகளைப் போலும் உன் தோற்றம் கண்டோ,
புவிக்கோளம் போன்ற
உன் ஈரவடிவினால் ஈர்க்கப்பட்டோ
நான் உன்னை நெருங்கினேன்?

எத்தகைய ஓர் மெய்மை
மிருதுவான ஒளியாய்
உன் மேனியைத் தழுவிக் கிடந்தது?
எத்தகைய ஓர் மெய்மை
திட்டமிட்டே என்னுள் புகுந்து
என்னை ஆட்கொள்ள
ஒரு காதற் பார்வையும்
மாயத் தோற்றமுமாய்
என் கைக்கெட்டி நின்றது?

என் கைகளுக்கு நீ வரும்வரை
ஒளியும் வெளியும் காற்றும் வருட
தண்ணெனும் மரத்தின் தாய்முலை நீங்காது
சொக்கி நின்ற உன் வாழ்கை
மண்ணின் துயரறியாது.
பின்னும்
என் கைகளின் வெதுவெதுப்பில்
காதலையே அறிந்ததுபோல் மயங்குகிறாய்,
மண்ணின் துயரறியாது.

இம் மண்ணில் படும் உயிரின் வலியை
என் உள்ளங்கை உனக்கு ஊட்டிவிடுமோ என
அஞ்சும் தவிப்பை நீ அறிந்துகொண்டு விடுவாயோ எனப்
பொய்யாகவே நான் அஞ்சுகிறேனோ?

என் இதழ்களும் நாவும்
உன்னைச் சுவைக்கக் காத்திருக்கையில்
உன் உள்ளத்தில் ஓடிய எண்ணங்கள்தாம் என்ன?
அன்பின் வேளை எண்ணங்கள் அறியாதாமோ?

வியர்வையின் உப்பையும்
வாசனையையும் அறிந்த
தூய இதழ்நீரின் ஊற்றோ, மற்று
என்ன இரகசியமோ
புளிக்கும் சாற்றையும்
துவர்க்கும் சக்கையையும்
விசித்திரமான ஆர்வத்தின்
ஒரு செல்லச் சுளிப்போடு
சுவைக்க வைத்தது?

காதல் என் இரத்த ஓட்டத்தையும்
நுரையீரலையும் சுறுசுறுப்பாக்கி
இழையத் தொடங்கியதைக் கண்ணுற்றோ
ஒரு குவளைத் தண்ணீரை
என் எதிரே நீட்டி
இப்போது இதனை
அருந்திப் பாருங்கள் என்றார்
உழைப்புரம் ஏறி
நெகிழ்ந்த தோளும் கைகளுமாய் நின்ற
தோட்டக்காரர்?
அப்போது அது நடந்தது
அந்த நீரும் இப்பூமியும் நானும்
ஒன்றியதால் நிகழ்ந்த
ஒரு பேரனுபவச் சுவை விழிப்பு.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP