மலையுச்சியில் வசிக்கும் ஒரு மனிதன்
மிதமான குளிரும்
மிதமான வெயிலுமாய்
எப்போதும் கார்மேகங்கள்
குடை பிடித்துக்கொண்டிருக்கும்
பிரம்மாண்டமான
அந்த மலையுச்சியில் போய்
தனித்து வாழும்
ஒரு மனிதனைப் பார்க்கச் சென்றோம்
(இயல்பின் தளத்தில் தானன்றோ
அப்புலமும் இருந்தது!)
உதகமண்டலப் பூப்போலும் அவர் முகத்தில்
எஞ்ஞான்றும் பொலியும் பசுமை குறித்தும்
குழந்தைமையின் குதூகலம் குறித்தும்
என் நண்பர் கூறக் கேட்டிருந்தேன்
அது உண்மைதான் உண்மைதான் என்றறிந்தேன்
எம்மை வரவேற்று உபசரித்து
அவர் உரையாடிய அன்று முழுவதும்
வண்ணத்துப் பூச்சிகளும் தேனீக்களும் மேயும்
அவர் மலர்த்தோட்ட மெங்கும்
புல்வெளியோடு நின்று விடும் ஆடுகளும்...
விநோதம் இதுவென அதிர்ந்தபடி
விடைபெற்றுச் சென்றோம் அன்று
காட்டின் வழியாக இருட்டிவிடும் முன்னே
பின்னொரு நாள் நான் தனியாக
அவரைக் காண அங்கு வந்தேன்
அங்காந்திருந்த தோட்டத்து மலர்கள்
அப்படியே இருக்க,
ஆடுகள் நல்லிருப்புக் கொண்டிருந்த
அந்தப் புல் வெளியிலோ ஒரு புலி மட்டுமே!
காணாத ஆடுகளுடன்
காடுகளின் இருள் ரேகைகளை அணிந்தபடி!
பார்த்தேன் நான்
அப் புலியின் கண்களிலே
அளப்பரிய உக்கிரமும் வேதனையும்
அனல் உழிழ்ந்து கொண்டிருந்ததை!
அன்று முதல் நான் அங்கு சென்றபோதெல்லாம்
அப் புல்வெளியில்-
ஆடுகள் இருந்தபோது புலி இல்லை
புலி இருந்தபோது ஆடுகள் இல்லை
ஒரே மூடியுடைய
இரண்டு பாத்திரங்கள் கண்டேன்
இருமையின்மை யெனும்
மெய்ம்மையினை அறிந்தேன்