தேவதேவன் கவிதைகளில் மொழி
தேவதேவன் கவிதைகளில் மொழி பற்றிப் பேச வந்திருக்கிறேன். அதற்கு முன் மொழி என்றால் என்ன என்று எனக்குத் தெரிந்ததை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.
தேவதேவனை முன்பின் தெரியாத ஒருவர் இங்கே வந்து, “தேவதேவன் யார்?” என்று கேட்டால், நாம் என்ன செய்வோம்? கைநீட்டி இங்கே இருக்கிற தேவதேவனைக் காட்டிக் கொடுப்போம். தேவதேவன் இல்லாத ஓர் இடத்தில் ஒருவர் வந்து, “தேவதேவன் யார்?” என்று கேட்டால், அவரைக் கைநீட்டிக் காட்ட முடியாது; அவரைப் பற்றி ஒன்றிரண்டு வார்த்தைகளாவது, உளறியாவது, காண்பிக்க வேண்டும். ஆக, உள்ளதைச் சொல்வதற்கு அல்ல, இல்லாததைச் சொல்வதற்கே மொழி என்று தெளிகிறது. அப்படித்தான் மொழி, நம் இடைவெளிகளை நிரப்பி, நமக்குள் ஒரு தொடர்பையும் நம் செயல்பாடுகளுக்கு ஒரு தொடர்ச்சியையும் தருகிறது.
‘சிவப்பு’ என்பது, நம் சிறுவயதில், நம் தாய் தந்தையரோ ஆசிரியரோ, சிவப்பு நிறமுள்ள பொருட்களைக் காட்டிக்காட்டி நமக்குக் கற்றுத்தந்த ஒரு சொல். ஓர் ஊசியால் குத்துப் பட்டால் நமக்கு நோகிறது. நோவு என்னவோ நமக்குள் நிகழ்வதுதான், ஆனால் அந்த உணர்வுக்கான ‘நோவு’ என்கிற சொல் நமக்கு வெளியில் இருந்தே கிட்டுகிறது. வினைச்சொற்களும் அப்படித்தான். ஒருவர் நம்மை நோக்கி நெருங்குவதை ‘வருகுதல்’ என்றும்; நம்மை விட்டு விலகுவதைப் ‘போகுதல்’ என்றும் சொல்லித் தெரிகிறோம். ஆக, மொழி நமக்கு உள்ளிருந்து சுரக்கிற ஒன்றில்லை; நமக்கு வெளியே இருந்து புழங்குகிற ஒன்று.
மொழி நமக்கு வெளியே இருப்பதினால், அது எல்லார்க்கும் பொதுவாக இருக்கிறது. ஆனால் அனுபவங்கள் பொதுவாக இருப்பதில்லை. அதுவும் ஒரு கவிஞரின் அனுபவத்தைப் பற்றி என்ன சொல்ல? தனித்துவமான அந்த அனுபவத்தைச் சொல்ல, பொதுமொழி போதுமானதாக இல்லாமற் போகலாம். அந்தக் கட்டத்தில் கவிஞர் என்ன செய்வார்? தனக்கென்று ஒரு தனிமொழியை உருவாக்கிக் கொள்ள முடியுமா?
ஒரு திரைப்படம் பார்த்தேன். “தாரே ஜமீன் பர்” என்கிற ஹிந்திப் படம். கதாநாயகன் ஓர் எட்டுவயதுச் சிறுவன். எந்நேரமும் கனவிலும் கற்பனையிலும் வாழ்பவன். ஓவியம் நன்றாகத் தீட்டுவான், ஆனால் பள்ளிப் பாடங்கள் அவனுக்குப் புரிகிறதில்லை. ஒருநாள் ஆசிரியர் அவனிடம் சொல்கிறார், “Ishaan, read the first line from page 23.” அவன் எழுந்துநின்று முழிக்கிறான். “I say, read the firat line from page 23.”
அவன் சொல்லுகிறான், “அக்ஷரோ(ங்) நாச்தே ஹை(ங்)”. வகுப்புச் சிறுவர்கள் எல்லாரும் சிரிக்கிறார்கள். ஆசிரியருக்குப் புரியவில்லை. அவர் கேட்கிறார், “What?” அவன் சொல்லுகிறான், “The letters are dancing, sir!” ஆசிரியர், “Is it? Okay, then read the dancing letters.” அவன், “Kich bich klich blich chacha chich.” வகுப்பறை சிரிப்பால் அதிர்கிறது. “Get out of the class!”
ஒரு கவிஞர் தன் அனுபவத்துக்கு என்று ஒரு தனிமொழி அமைத்தால் இப்படித்தான் இருக்கும்.
மேலும், கவிஞர்கள் கவிதை எழுதுவது தம் அனுபவத்தைப் பிறருக்குத் தொற்ற வைப்பதற்காக. அதனால், தமக்கும் பிறருக்கும் இடையில் உள்ள இடைவெளியை நிரப்ப அவர்கள், வேறு வழியின்றி, பொதுமொழியைப் பயன்படுத்தியே ஆகவேண்டும். அந்தக் கட்டாயத்தில், கவிஞர்கள் அந்தப் பொதுமொழியைத் தங்களுக்குத் தோதாக வளைத்து நெளித்துக் கொள்கிறார்கள்.
||தீக்குள் விரலை விட்டால், உன்னைத் தீண்டும் இன்பம்..|| இது பாரதி;
||பார்வைச் செவிப்பறையில் பருவம் முரசறையும்.|| இது பிரமிள்;
||ஈரமற்றுப் போன குரலின் அவலத்தைச்/ சொல்லிச் சொல்லிக் கரைகின்றன/ தந்திக் கம்பிகளின் மேல்/ வயலின் குருவிகள்.|| இது க. மோகனரங்கன்;
||காற்றோட்டமான சொற்களால் விழிகளை உலர்த்தினேன்.|| இது ஜெ. பிரான்சிஸ் கிருபா.
கவனியுங்கள், இங்கே எடுத்துக் காட்டிய எந்தக் கவிதை வரியிலும், நாம் அறியாத அல்லது பழக்கப்படாத ஒரு சொல் கூட இல்லை. இப்படி, இவர்கள் பொதுமொழியில் இருந்தே தத்தம் அனுபவங்களுக்கு ஏற்ப ஒரு தனிமொழியை உண்டுபண்ணி வெளிப் படுகிறார்கள். இவர்கள் பெற்ற அனுபவத்தை அப்படியே உள்வாங்க, நமக்குக் கொஞ்சமே கொஞ்சம் பயிற்சி அல்லது நாட்டம் இருந்தால்கூடப் போதும்.
இனி, இதுபோல, கவிஞர் தேவதேவனுக்கும் ஒரு தனிமொழி உண்டா என்றால், உண்டுதான்:
||தோணிக்கும் தீவுக்கும் இடையே/ மின்னற் பொழுதே தூரம்.||
||வெய்யில் பாவுபோடும் மார்கழியில்/ கூதல் காற்றே ஊடாய்ப் பாய்ந்து பாய்ந்து/ நாள்தறி நடக்கும்.||
||கருங்கூந்தலின் ஹேர்பின்னில்/ கொழக்கிட்டுக் கிடக்கும் தேவகுமாரனின் தலை.||
||மின்கம்பிக் கோடிட்ட வானப் பலகையில்/ காகச் சொற்றொடர்.||
எல்லாக் கவிஞர்களுக்கும் இதுபோன்ற மொழிநெசவு, இயல்பாய், தானே வருவதுதான். ஆனால் தேவதேவனின் மொழி, பெரும்பாகம், இந்த நெசவுகளால் அலங்கரிக்கப்பட்ட ஒன்றே அல்ல. அவருக்கு மொழி முக்கியமில்லை; தான் கண்டு தெளிந்த கருத்தே முக்கியம். அதனால் அவர் கையாளும் மொழி, அன்றாட வாழ்க்கையில் வழங்கும் பொதுமொழிபோல் அவ்வளவு சாதாரணமானது.
||செடி ஒன்று காற்றில்/ உன் முகப்பரப்பிற்குள்ளேயே அசைகிறது./ கோணங்கள் எத்தனை மாற்றியும்/ இங்கிருந்து உன்முகம் காண முடியவில்லை./ இவ்விடம் விட்டும் என்னால் பெயர ஆகாது./ ஆனால் காற்று உரத்து வீசுகையில்/ செடி விலகி/ உன் முகம் காண முடிகிறது.||
என்னே ஒரு சாதாரண மொழி! ஆனால் என்னே ஓர் அரிய தத்துவ அனுபவம்! Intensity-ஐக் குறிக்கும் ‘உரத்து’ என்கிற சொல், இங்கே, பார்ப்பவரைச் சார்ந்தோ பார்க்கப்படுவதைச் சார்ந்தோ இடம்பெறாமல், எங்கும் வியாபித்திருக்கும் இயற்கைக்கு வழங்கப் படுகிறது.
||நான் என் கைவிளக்கை/ ஏற்றிக் கொண்டதன் காரணம்/ என்னைச் சுற்றியுள்ளவற்றை/ நான் கண்டுகொள்வதற்காகவே./ என் முகத்தை உனக்குக் காட்டுவதற்காக அல்ல./
அல்ல/ நீ என் முகத்தைக் கண்டுகொள்வதற்காகவும்தான்/ என்கிறது ஒளி.||
இங்கே, ‘என் கைவிளக்கு’, ‘நான் ஏற்றிக்கொண்டது’ என்று சொல்வதின் மூலம் ஒளியைத் தன் ஆளுமைக்கு உட்பட்டதாக ஆக்குகிறார். கடவுளுக்கும் மேல் கவிஞனை உயர்த்திப் பாடுபவர் தேவதேவன். மட்டுமல்ல, தன் சாதாரண மொழியால் அதை சாதித்துக் காட்டுபவர். அதுவும், குண்டித்துணி கிழிந்த ஒரு சிறுவன் ஒரு மாளிகைச் சுவரில் மூத்திரம் போகிற அலட்சியத்தோடு அதைச் செய்பவர்.
||ஒரு மரத்தடி நிழல் போதும்/ உன்னை தைரியமாய் நிற்கவைத்துவிட்டுப் போவேன்/ கர்ப்பிணிப்பெண்ணை/ அவள் தாயிடம் சேர்ப்பது போல.||
.
இந்த உணர்வை, இப்படி ஒரு சாதாரண மொழியில் அல்லாமல், வேறு விதமாகச் சொல்ல முற்பட்டால் சுளுக்கிக்கொண்ட கழுத்துக்குமேல் ஒரு முகம் போல ஆகிவிடும்.
தமிழ் ஆர்வலர்கள், தேவதேவன் கனமானதொரு மொழியை நமக்கு ஆக்கித் தரவில்லையே என்று குறைபடலாம். ரொமான்டிக் கவிஞரான வேர்ட்ஸ்வொர்த், தான் மக்களின் மொழியில்தான் எழுதுவேன் என்று வலுக்கட்டாயமாக எழுதியவர். நவீனத்துவக் கவிதைகளின் ஆசானான போதலேர், சந்தை மொழியில்தான் கவிதை எழுதப்பட வேண்டும் என்றோர் இலக்கணமே வகுத்தவர். எளிமையை உயர்த்திப் பேசும் தன் கவிதைகளுக்கு தேவதேவன் இப்படியொரு சாதாரண மொழியைத் தேர்ந்தது பொருத்தம்தான். ஆனால் அதே மொழி, அவருடைய “மின்னற்பொழுதே தூரம்” தொகுப்பில் உள்ள கவிதைகளில் வெளிப்பட்டு இருப்பது போல, கூர்மை கொண்டு நிகழுமேயானால் இன்னும் சிறப்பாக இருக்கும். இனி அவர் எழுதப் போகும் கவிதைகளில் இதை மட்டுமே நான் ஆசைப்படுகிறேன்.
ஒரு வயற்காட்டில் சில எலிகள் இருந்தன. மழைக்காலம் நெருங்கிக்கொண்டு இருந்தது. எல்லா எலிகளும் மழைக்காலத்துக்காக உணவுப் பொருட்கள் சேமித்துக்கொண்டு இருந்தன. ஆனால் ஒரே ஒரு எலி மட்டும் அப்படிச் செய்யவில்லை. அந்த எலியைப் பார்த்து மற்ற எலிகள், “நீ மழைக் காலத்துக்காக ஒன்றும் சேமிக்கவில்லையா?” என்று கேட்டனவாம். அதற்கு அந்த எலி, “நான் வெயில் வெதுமையையும், வெளிச்சத்தையும், பளிச்சிடும் வர்ணங்களையும் சேமித்துக்கொண்டு இருக்கிறேன் - எல்லாருக்காகவும்.” என்றதாம். அது போல தேவதேவனும் பிற கவிஞர்களும் நம் எல்லாருக்காகவும் சேமித்துக்கொண்டு இருக்கிறார்கள் - வெதுமையையும், வெளிச்சத்தையும், பளிச்சிடும் வர்ணங்களையும்.
வாய்ப்பளித்தமைக்கு நன்றி! வணக்கம்.
(ஆண்டு 2008, பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரிக் கருத்தரங்கில் கவிஞர் திரு. ராஜசுந்தரராஜன் அவர்கள் ஆற்றிய உரை.)