சுனாமி
எங்களது பேரிழப்பை பெருந்துயரை
வேதனையை அறிவாயோ?
பகையில்லாக் கதறல்களையும்
பகையில்லா எழுச்சியினையும்
பார் பார் என்று
எம் மூஞ்சியிலறைந்து காட்டுவதாக எண்ணமா?
எம் உயிர் உடைமைகளுக்கும்
குழந்தைகளின் மண் சிற்றில்களுக்கும்
உனக்கு வேறுபாடு தெரியவில்லையா?
உன்னைப் போலும் பிரக்ஞையில்லா உயிரினமாய்
படைக்கப்பட்டிருக்கவில்லையே, நாங்கள்
புவியுடலின் எந்த ஒரு சீர்குலைவைச்
சமன்செய்ய எழுந்தாய், சுனாமி?
உலகெங்குமிருந்து உனக்கு நிகரானதோர் வீச்சுடன்
எம்மை நோக்கி வருகின்றன,
துயராற்ற விழையும் நிவாரணப் பணிகள்,
என்றாலும் ஆறாத வேதனைகளினின்றும்
விடுதலை தெரியலையே சுனாமி!
முன்னுணர்த்தும் கலையினை நீ மறந்தனையோ
அன்றி, பெற்ற தாயைப் பின்னாளில் மறந்து
புலம்பித் தவிக்கவிடும் பிள்ளையர்தம் நிலையில்
எமக்குத்தான் உனது குரல் கிட்டாது போயிற்றோ
வெவ்விதியே, ஊழ்வினையே சுனாமி!
வெறும் காலோடும் கையோடும் வரும் வேளையெல்லாம்
எம்மை ஆரத் தழுவி ஆடி விளையாடும் அன்னையே,
இன்று கடலோர மெங்கும்
பாதுகாப்பு தேடி ஓடும் கூட்டங்களும்
வேக வாகனங்களுடன் வந்து
வேடிக்கை பார்த்து நிற்கும் கூட்டங்களுமாய்க்
காணும் பதற்றத்தையும் பார்வையையும் கண்டு
வேதனைப்படுகிறாயோ,
வீறிட்டெழுந்து வீசிப் பின்
உட் சுருண்டுகொண்டு நீ அழுவதென்ன சுனாமி?