Thursday, March 31, 2011

தொடுதல்

ஒளியின் சிறகுகள் உதைத்து வெளிப்படுகையில்
தெறித்து அறுகிறது தொப்புள் கொடி

தேவதைகளின்கண்களின் மின்னுகின்றன
உடலெனப்படுவதன் கன்னிமையும்
உளமெனப்படுவதன் குழந்தைமையும்
உயிரெனப்படுவதன் ஆனந்தமும்

அனாதியிலிருந்து
ஓடிவரும் குருதி துறுதுறுக்கும்
விரல் தொட்டு
'அணைகிறது ஒளி '
எனப் பதறாதே
விரல் தொடுகையில்
கரியும் சிறகுகளின் வெப்பத்தில்
பெறுகின்றன
கன்னிமை தாய்மையை
குழந்தைமை அறிவை
ஆனந்தம் துக்கத்தை

பதறாதே பொறு விரலை எடுக்காதே
அந்த ஒளி உன் விரல் வழியாக புகுந்து
உன்னுள் இயற்றப்படும் வரை பொறு
அப்புறம் கைவந்துவிடும் அந்தக்கலை

பாதம் பதிக்காமல் உலவுதற்கும்
கைகள் விரியாமல் அணைப்பதற்கும்
விரல்களில்லாமல் தொடுவதற்கும்
இதழ்பதிக்காமல் முத்தமிடுவதற்கும்
சொற்களில்லாமல் பேசுவதற்கும்
இல்லாமலே இருப்பதற்குமான கலை .

Read more...

மரத்தின் வீடு

யார் சொன்னது,
மரம் தனக்கோர்
வீடு கட்டிக் கொள்ளவில்லையென்று?

தனது இலைகளாலும் கிளைகளாலும்
கொம்புகளின் அற்புத அமைப்புகளாலும்
தனக்குள்ளே மரம் தனக்கோர்
வீடு கட்டிக் கொண்டுள்ளது

மழை புயல் வெயில் பனி திருடர்கள்
ஆகியவற்றிடமிருந்து நம்மைப்
பாதுகாக்கவே வீடு என அறிந்திருந்த
மனிதனைத் திகைக்க வைத்தது அதன் வீடு

காலம், மரணம், வேதனை ஆகியவற்றிலிருந்து
தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும்
தன் மலர் காய் கனி மற்றும்
இவை எல்லாமுமான தனக்காகவே
அது தனக்கோர் வீடு கட்டிக்கொண்டுள்ளது

Read more...

Wednesday, March 30, 2011

குடும்பம்

சமூகம் வழங்கும் செளகரியங்களும் குரூரமுமாய்
எனது தந்தை இருந்தார்
மனிதன் வழங்கும் அன்பும் கருணையுமாய்
எனது தாயும் இருந்தார்கள்

எனது தந்தைக்கோர் பெரும் பேர் உண்டு
நியாயவான் நாட்டுக்குழைப்பவன் நல்லவன் என்றெல்லாம்
எனது தாய்க்கும் பேர் உண்டு
பாவம் பைத்தியக்காரி ஒன்றுமறியாதவள்

இத்தோடு இந்தப் புவி முழுக்க வினியோகிக்க
போதுமான பெருந்தன்மை எனும் சரக்கு
எங்கள் வீட்டில் இருந்ததென்னவோ
மறுக்க முடியாத உண்மை

என் தாயிடம் நான் கண்டிருந்தேன்
என் தந்தையின் மூர்க்கங்களை எல்லாம்
எப்போதும் மன்ன்னித்து நிற்பதுபோன்ற ஒரு பெருந்தன்மையை
எனது தந்தையிடம் கண்டிருந்தேன்
எனது தாயின் அறிவீனங்களை எல்லாம்
எப்போதும் சகித்துக் கொண்டு முறுவலிப்பதுபோன்ற
ஒரு பெருந்தன்மையை

ஒருநாள் -இல்லை திடார் திடாரென்று-
தந்தை உதைத்தார் தாயின்மீது எகிறி
தாய் சபித்தாள் தந்தை மீது கதறி
நான் முழித்தேன் பார்வையாளனாய்

யார் நிகழ்த்துகிறார் இந்த நாடகத்தை என
நான் கேட்டேன் எனக்குள் நெளிபவனிடம்

தற்செயலாய் ஒருநாள் சந்தித்தேன்
அந்த நாடக இயக்குநரை
என்னைத்தான் தேடிக் கொண்டிருந்தாராம் அவர்
தன் நாடகத்துக்கு இரு பாடல்களை இயற்றித் தரணுமாம்
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவுதற்கோர் டூயட் பாட்டும்
அன்னவர் கீரியும் பாம்புமாயிருக்கையில்
ஒலிப்பதற்கோர் பின்னணிப்பாட்டும்

' ' கவனம் இப்பாடல்களின் பொருளை
உம் நடிகர்கள் புரிந்துகொண்டால்
உம் நாடகம் அம்பேல் '
என்ற எச்சரிக்கையுடன் வழங்கினேன்
எனது இரு பாடல்களை அவரிடம்.

Read more...

நக்ஷத்ரமீன்

உயிர் கொண்டிருக்கையில்
உயிர் கொண்டிருப்பதைத் தவிர
ஒன்றுமறியாது பிசையும் ஐந்துவிரல்களாய்க்
கடலுள் அலைந்து கொண்டிருந்துவிட்டது
இந்த ஜீவன்

மரித்து
அழகுப்பொருளாய்
அதை நான் என் கையில் ஏந்தியபோது
அதிலே பகிரங்கமானது
சொல்லொணாததோர் ரகஸ்யத்தினின்றும்
சில சமிக்ஞைகள்;
நிலை தடுமாறா வண்ணம்
நிற்க விரித்த கால்கள் இரண்டு;
இப் பேரண்டத்தையே தழுவ முன்னி
இதயத்தினின்றும் நீண்ட கைகள் இரண்டு;
ஆர்வம்மிக்கு
மேல்நோக்கி உயர்ந்து எழுந்த
தலைமுளைக்காத கழுத்து ஒன்று

Read more...

Tuesday, March 29, 2011

சந்திப்பு

என்னதான் ஆனாலும்
நீ ஒரு சுயம்பு
நான் ஒரு சுயம்பு
உன்போக்கில் நீ
என் போக்கில் நான்
எப்போதும் நகர்ந்துகொண்டிருக்கும்
இருபுள்ளிகள்

நம் சந்திப்பு அதாவது
புரிந்துகொள்ளல் அன்பு முதலானவை
எங்கு எப்போது எவ்விதம் கிட்டும் ?

சம எடையுள்ள இரண்டுக்கும்
சம அந்தஸ்து அளிக்கும் நீதியுணர்வில்
எப்போதும் நகர்ந்துகொண்டிருக்கும்
இரண்டு புள்ளிகளுக்கு மத்தியில்
தன் செம்மத்திக்காய்
எப்போதும் நகர்ந்துகொண்டிருக்கும் புள்ளி.

Read more...

உள்ளும் புறமுமாய் சில படிமங்கள்

1
நான் திட்டமிடும் எல்லாச் செயல்களிலும்
நேர்த்தி எனும் முழுமை கூடாமல்
கசப்படைந்தேன்
பின்னர் முழுமையெனும் நேர்த்திக்காக
அக் கசப்பையெ முழுங்க வேண்டியவனானேன்

2
நிலாஒளியைச்
சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கும்
குரங்குக் காடுகளின் மேல்
சிதறாத முழுநிலா

1+2
நிலாஒளி போல் அகண்டது
என் இதயச் சதை
சின்னஞ்சிறு இடையூறுக்கும்
சிலந்தி வலைபோல் அது துடிக்கிறது
சின்னஞ்சிறு தூண்டலுக்கும்
நிலாவினைப்போல் அது பாடுகிறது

எப்பொழுதும் எனக்கு ஒரே வேலை
இந்த இதயத்தை பழுதுபார்க்கும் வேலை

Read more...

Monday, March 28, 2011

சீட்டாட்டம்

இடையறாத இயக்கத்தின் மடியில்
[உண்பதற்கும் கழிப்பதற்கும் மட்டுமே
இடம் பெயர்ந்தோம் ]
இரவு பகலற்ற விழிப்பில்
ஆறு இதயங்களுக்கிடையே
ஓர் உரையாடல்

அகாலத்திலிருந்து காலத்துக்கு
சீட்டுகளை இறக்கினோம்
காலமோ விலகி எங்கள் விளையாட்டை
கவனித்துக் கொண்டிருந்தது
காபி போட்டுதந்தது
சோறு சாப்பிட அநை¢த்தது
ஆக எங்கள் சீட்டுக்கள் விழுந்தது
வெறுமையின் மீது

காலாதீத பிரமிப்புடன் சீட்டுக்கள்
எங்கள் சொற்களாயின
எனினும் வெல்ல வெல்ல என துடித்தன
ஒவ்வொருவர் கைகளுக்குமாய்
அவை கழன்று விழுந்தவுடன்
எனினும்
என்னை வெல்லு என்று
தோற்று கலையவே துடித்தன.
ஒவ்வொருவரிடமிருந்தும்
அவை கழன்று விழுந்தவுடன்

அப்போது இப்போது என்று
சுட்டமுடியாத ஒருபோது
என்றோ புதைந்து
துயில் கொண்டிருந்த ஒரு விதை
திடேரென்று வளர்ந்து
ஒரு மலர் காம்பை நீட்டியது
அங்கே
சீட்டாடும் அறுவர்
ஆறு இதழ்கள் உடைய ஒரு மலர்

Read more...

தவவெளி

சுருதி சேர்க்கப்பட்டு
விண்ணென்று நிற்கிறது வாத்தியம்.
உயிரின் உயிரெங்கும் ஆனந்தம் பெருகும்படி
யார் என்னை இங்ஙனம் தொடுவது?

எவருடைய விரல்கள் இவை;
என் நெஞ்சில் பதிந்து தன் காற்றைப் போக்கி
வெறுமையின் விளிம்புகளால் என்னைத் தொடுவது?
பற்றியதற்கே இவ்வளவு பரவசமென்றால்
பாட்டுக்கு என் உயிர் தாங்குமோ?

யாரிது, தன் தவவெளியில் நின்றபடி
முன்னும் இரு கண்களையும் உருட்டி
என்னை ஒரு சிறு பூச்சியெனத் தேடுவது?
இங்கே இருக்கிறேனடா இங்கே இங்கே என
எத்தனை முறை குரல் கொடுத்தும்
கண்டுகொள்ளல் கூடவில்லை.
நீ நிற்குமிடமடா நான்;
மேலும் சொன்னால்
உன் தவவெளி

Read more...

Sunday, March 27, 2011

மணமாயிற்று

தாழ்பாளிட்ட கதவு திறந்து
திரைச்சீலை
மணிபர்ஸில் வந்து உட்கார்ந்துகொண்டது
மனைவியின் புகைப்படம்
படிப்பறை படுக்கையறையாயிற்று
இவனை சங்கிலியின் ஒருகண்ணியாக்கிவிட
சதி நடக்கும் இடமாயிற்று அது
விடுதலை நோக்கி வாய்திறந்த கதவுகள்
படுக்கையை காவல்காக்கும்
ஊமைகளாகி விட்டன
இடைமறிக்கப்பட்டோ
இடை தளர்ந்தோ
இடை புகுந்ததுதைந்திரிய வீழ்ச்சி
வீழ்ச்சியின் கருவில்
உதித்தது
இன்னொரு முயற்சிக்கு ஓர் மனித உரு
வீழ்ச்சியிலும் முயற்சித்தொடரிலுமே
ஜீவித்துவரும் மனிதகுலம்
ஆழ்ந்து உறங்குகிறது இவனருகே
அவளாக

Read more...

இரயில் பெட்டி ஒன்றில் ஒரு கன்னிகாஸ்திரி

வண்டி புறப்படவும்
தனியே விட்டுவிட்டு
மகிழ்ச்சியுடனே
விடைபெற்றுச் சென்றனர் தோழிகள்

மேனியெங்கும்
மணப்பெண் போலொரு நாணத்தின் நறுமணம்
மணமகன் விழித்துக் காத்திருக்கும்
முதலிரவு அறையோ இத்தனிமை என ஒரு விகாசம்
சிலுவை மிளிரும் வெள்ளுடையையும்
தொண்டிதயம் ஒளிரும் என் கன்னிமையையும்
என் நேசரிடம் ஒப்படைக்கப்போவதுபோல் நிற்கிறேன்

வண்டி குரலெடுத்த ஓங்காரத்தில்
புறப்பட்டு ஓடத் தொடங்கிய இரும்பு ராகத்தில்
ஜன்னல் வழி வந்துகொண்டேயிருக்கும்
நிலக்காட்சிகளின் கொள்ளை ஒளியழகில்
வேகமாய் வந்து தழுவும் காற்றில்
சக பயணிகளின் மத்தியில்

என் நேசருடனல்லவா நான் கலந்திருந்தேன்

Read more...

Saturday, March 26, 2011

ஆண் பெண்

ஒரே படுக்கையில்
உடன் படுக்கை கொண்டு
நாம் ஒருவரை ஒருவர்
இழுத்து அணைத்துக் கொள்வதன்
பொருள் என்ன ?

ஆண் பெண் என பிரிந்த
இரட்டைத்தன்மையை மறந்து
இணைய வேட்கும் ஆவேசம்

குழந்தைபசி விழித்து அழ
முலையுடன்
பெண் என நாமம் ஏற்று
என்னை பிரிந்து செல்லும்
ஒருமுனை புரிகிறது
மற்றொரு முனையில்
தனித்து விடப்பட்ட
என் பிரிவின் நோக்கமென்ன ?

சிசு பேணும் முலையவளே
மீண்டும் மீண்டும் வந்து
என்னை ஆலிங்கனிக்கும்
உன்னை விலக்கி
என்னை
தனித்துத் தியானிக்கவைக்கும்
உயிரிீன் நோக்கம்
தனித்து தியானித்திருந்தது

Read more...

இன்னார்

என்று காணப் போகிறானோ,
தான் இன்னாரென்று கருதிக் கொள்வான்
ஆகப் பெரிய கொலைக் கருவியைத் தான்
தன்னுள் மறைத்துக் கொண்டுள்ளான் என்பதை?

தான் இன்னாரென்பதை ஏற்காதவனன்றோ
அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வாகும்
அன்பு தன்னுள் சுரக்கக் காண்கிறான்

தான் இன்னாரென்று காட்டிக் கொள்வதற்குத்தான்
எத்தனை பாடு இந்த முட்டாள் மனிதர்களுக்கு!
இன்னார் என்றில்லாதிருப்பதுவோ
எத்தனை சுலபமென்னும் எத்தனை ஆபத்து
இம் மூடர் மத்தியில்!
அதனால்தானோ அவர்கள் மறைந்து வாழ்கிறார்கள்?
இல்லை, அப்படித் தெரிகிறார்கள்,
இன்னார்கள் கண்களுக்கு மிகுதியும்
இன்னார்கள் மட்டுமே தென்படுவர் ஆதலால்

Read more...

Friday, March 25, 2011

வேலிப்பூக்கள்

வேலிப்படலை
திறந்துபோட்டுவந்து
உட்கார்ந்திருப்பேன்
சுதந்திரமாய்
கன்றுவந்து
பன்னீர்பூமேய்கிற
அழகினைபார்த்துக் கொண்டு

நீ வருவாய்

காலியிளம் வெயிலில்
கன்றாக மேய
குளித்து முடித்த
உன் ஈரச்சேலையை
என் வேலிமீதே காயப்போட

காதல்
வேலிமீறும்
பூவாய் தன்னைத்தான்
சிம்மாசனமேறிக் கொலுவிருக்கும்
அவளுக்கும் அவனுக்கும்
குறுக்கே வந்து
மார்புவரை மறைக்கும்
சவக்கல்வேலிக்குமேலே
பூக்கும் ரோஜாத்தொட்டி
கைகள் கண்டால்
முட்களுடன்

Read more...

அசைவமும் நமது சைவப் பெருமைகளும்

இயற்கையில் மிக இயல்பாக அமைந்துவிட்டிருக்கிற
வன்முறைகளைப் போலவே
சில மனிதர்கள் அசைவமாக இருப்பது
உயிரினங்களில் கொஞ்சம்
கொல்லப்படுவதற்குக் காரணமாகிவிடுகிறது

நான் பார்ப்பான் பிள்ளை தேவர் நாடார்
இந்து முஸ்லிம் கிறித்தவன் பவுத்தன்
அமெரிக்கன் ரஷ்யன் தமிழன் சிங்களவன் என்றிருப்பது
முடிவுறாத மனிதப் படுகொலைப் போர்களுக்கு...

Read more...

Thursday, March 24, 2011

தீ

வீடு திரும்பிக் கொண்டிருந்தேன்
என் பத்தினி இவள் காயப்போட்ட
சிவந்த சேலைபற்றி
எரிந்துகொண்டிருந்தது வேலி

Read more...

பாடரும் பொருள்

அரவாணிகள் ஏன்
பெண்மையையெ விரும்பித் தேர்கின்றனர்?
ஆண் கவியோ பெண் கவியோ
இருவருக்குமே பாடரும் பொருள்-

அன்பைப்போல் மற்றொன்று
பெண்மையன்றி வேறென்ன?

Read more...

Wednesday, March 23, 2011

உதயம்

முன் நடக்கும் பெண்ணணங்கின்
நீலவானக் கொண்டையின் கீழ்
நிலப்பூவே மதுரக்
கழுத்தாய் சரிந்த தோள்வரையாம்
என் கண்கள் மட்டுமே தொடு[ம்]வானில்
கைக்குழந்தைமுகம் ஒன்று சிரிக்கிறது எனக்காக
இவ்வுலகம் எனக்காக

Read more...

கவனிப்பாரற்றவை

கவனிப்பாரற்றவை தம்மைத்
தீவிரமாய் வெளிப்படுத்திக்கொள்கின்றன

கவனிப்பாரற்றவை
கவியின் உள்ளம்
நகராட்சிப் பள்ளிக்கூடம்
அடித்தட்டு மக்கள்

அஸ்திவாரம் தெரிய நிற்கும் கட்டடம்
(மண் களவு போவதால்)
உயிர் பிழைக்கப் பற்றிய விரல்கள்போல்
வேர்கள் தெரிய நிற்கும் மரங்கள்
காணாமற் போன கூரையின் ஓடுகள்
மேகங்கள் திரண்டு பெய்கையில்
மழைதான் பாடம் நடத்த
ஒண்டும் குழந்தைகளின் ஆனந்த மூலைகள்
மக்கள்தம் காலைக் கடன்கள் கழிக்கத்
தோதாய்ச் சமைந்த ஒதுக்குப்புறம்
வெள்ளைச் சுவர்களெங்கும்
சுதந்திரக் கரி எழுத்துக்கள்

Read more...

Tuesday, March 22, 2011

பிள்ளைப் பருவம் போலும்...

பிள்ளைப் பருவம் போலும்
பேதமிலா வாழ்வில்
ஆண் யாரோ? பெண் யாரோ?

ஒளிரும் பேரியற்கைப் பேரெழிலோ
பெண்மை? மற்றும்
அப் பெண்மையினைக் கண்டு எழும்
பேருவகையும் பேரறிவுமோ ஆண்மை?

ஆடியில் தன் அழகைப்
பார்த்து உவந்து கொண்டிருக்கும் பெண்ணே,
இப்போது உன் முகத்தில் சுடர்கிறது
ஒளிரும் பேராண்மை அல்லவா?

Read more...

பாவம்

கல்யாண மண்டபம் வெளியே காற்றாட
சிகரெட்டும் தாம்பூலமுமாய்
நின்று கொண்டிருந்தோம். அருகே
தாழிட்ட ஒரு வாசற் படிக்கட்டில்
புழுதி படிந்து காய்ந்த
எலும்புத் தோல் கோலத்தில்
நொடிந்து துயிலும் ஒரு சிறுவன்.

வீடும் மற்றுமுணவும் விரட்ட விரட்ட
பட்டினியுடன் வீதியலைகிறவன் போலுமிருந்தான்
சாப்பிட்டுப் பல நாட்களிருக்கும்போல் சொல்லிற்று
ஒட்டிய வயிறும் அவன் உடலும்.

உண்மையை அறியும் ஊகங்களுக்குள்
செல்லவிடாது எங்களைத் தடுத்தது
காலங்காலமாய் எங்களுக்குள்
வற்றாது ஓடிக் கொண்டிருக்கும்
பார்ப்பனிய விஷம்.

சிலருக்கு எவ்வளவு சாப்பிட்டாலும்
வயிறு அப்படித்தான் இருக்குமாம்.
ஒட்டிய வயிறு உப்பிய வயிறு குறித்த
‘ஆழமான சிந்தனை’களை நாங்கள்
பகிர்ந்து கொண்டோம்.
கடைசித் தீர்ப்பாய்
பாவம் என்ற ஒரு சொல்லை
அவன்மீது உதிர்ந்து நீங்கினோம்.

Read more...

Monday, March 21, 2011

தேவதேவனின் வீடு:ஒரு குறிப்பு

[ஜெயமோகன் எழுதிய ' நவீனத்துவத்திற்கு பின் தமிழ் கவிதை: தேவதேவனை முன்வைத்து ' என்ற நூலில் இருந்து.]

தேவதேவன் கவிதைகளின் மொழியே அனேகமாக தமிழின் மிக எளிமையான கவிமொழி. அதன் அப்பட்டத்தன்மையும் நேரடியான பாவனையும் நம்மை அயர வைக்கிறது.ஆனால் தமிழில் மிக மிக குறைவாக உள்வாங்கப்பட்ட கவிஞர்களில் ஒருவர் அவர்.காரணம் அவர் பேசும் எந்த விஷயமும் நம்மால் ஏற்கனவே தெளிவாக அடையாளம் காணப்பட்டதோ பேசப்பட்டதோ அல்ல. அன்றாட வாழ்வுக்கும், அன்றாட சிந்தனைக்கும் அப்பாற்பட்ட ஒரு மன எழுச்சி அல்லது மனத்தெளிவு அவர் கவிதைகளின் சாரமாக உள்ளது.அது அனைவராலும் தொட்டுணரக்கூடிய ஒன்றல்ல. அபூர்வமாகவே சிலருக்கு அத்தகைய ஆழமான அமைதியின்மை உள்ளூர குடியேறி அலைக்கழிப்புக்கு உள்ளாக்குகிறது. அவர்களே தேவதேவனின் வாசகர்கள். அந்த அமைதியின்மை அங்கிருந்து அன்றாட வாழ்வின் அனைத்து தளங்களுக்கும் நகரவும் செய்கிறது.

முக்கியமான கவிஞர்களிடம் எப்போதுமே அடிப்படையான படிமங்கள் சில இருக்கும். அவற்றின் நீட்சியாகவே அவர்கள் தங்கள் உலகை கட்டியெழுப்பியிருக்கிறார்கள்.ராபின் பறவை ஏன் எமிலி டிக்கன்ஸன் கவிதையில் மீண்டும் மீண்டும் வருகிறது என்ற கேள்விக்கு மிக மிக விரிவாகவே பதில் சொல்ல முடியும். வேர்ட்ஸ் வர்த்தின் நைட்டிங்கேல் புகழ் பெற்றது. அதைப்போன்றதே தேவதேவனின் மூன்று முக்கியப் படிமங்கள். வீடு,மரம், பறவை.

வீடு எப்போதுமே அவருக்கு மண்ணுடன் தொடர்புள்ளது. மண் அளிக்கும் அடைக்கலத்தின் சின்னம் அது.அதேசமயம் அது ‘விட‘ப்படவேண்டியதும் கூட. துறப்பது ஒண்டிக்கொள்வது என இரு நிலைகளிலும் ஒரே சமயம் வீடு அவருக்கு பொருள்படுகிறது. வெளியுலகின் அலைக்கழிப்புகளுக்கு மாற்றாக இனிமையான உறவுகளின்,தனிமையின் கதகதப்புடன் வீடு இருக்கிறது.ஆனால் அந்த வீட்டை எப்போதும் மரம் ஊடுருவுகிறது. விண்ணிலிருந்து வந்த பறவை உள்ளே புகுந்து சிறகடிக்கிறது.அவ்வழைப்பிலிருந்து முகம் திருப்பிக் கொள்ளவே முடிவதில்லை.

மண்ணில் முளைத்து விண் நோக்கி ஓயாது உன்னி எழும் உயிரின் ஆதி தீவிரத்தின் அடையாளமாக தேவதேவன் எப்போதுமே மரத்தை காண்கிறார். தோல்வியேயற்ற அதன் போராட்டம், காற்றுடனும் ஒளியுடனும் அதன் உறவு. அதன் நிழல் கருணை..

வானத்தின் பிரதிநிதியாக மரணமற்ற ஒளிக்கடலில் நீந்துவது, அச்செய்தியுடன் மண்ணுக்கு வருவது அவரது பறவை

இந்த மூன்று படிமங்களையும் மீண்டும் மீண்டும்வெவ்வேறு வகையில் மீட்டி தொடர்ந்து விரிவடையும் ஒரு வாழ்க்கைத் தரிசனத்தை தேவதேவன் உருவாக்கிக் காட்டுகிறார். தமிழ் புதுக்கவிதையில் அதற்கு இணையான கவித்துவ முழுமை வேறு சாத்தியமானதேயில்லை.

Read more...

காகம்

இதற்குத்தான் நான் குளியலறையிலிருக்கும்
நேரம் பார்த்தாயோ?

மூடியிருந்த தட்டைத் திறந்து
ஒரே ஒரு சப்பாத்தியை உன் அலகால் கவ்வி
என் கண் முன்னாலுள்ள மரக்கிளை நின்று சிரிக்கிறாய்

இயற்கையோடு மட்டுமே இருந்த
வெகு நீண்ட எனது ஏகாந்தவாசம் சலித்துவிடாது
உறவு கொள்வதாய் நினைப்போ?

என் ஏகாந்தவாசத்துள் தூசு கிளப்பி
பிறர் பொருளை அபகரித்தல், பசி, துயரம் முதலாய
மனித உலகச்
சிந்தனையைத் திணித்துவிடும் நோக்கமோ?

Read more...

Sunday, March 20, 2011

நான்

வெள்ளையடிக்க
உயர்த்திய மட்டையிலிருந்து
எரிகல்லாய் உதிர்ந்து
தரையில்
கொட்டிய துளிகள்,
இவள்
கிள்ளியெடுத்துக்
கூந்தலில் சூடிய
வெள்ளை ஜவந்தியாய்ச்
சிரித்த சிரிப்பு
நெஞ்சை நிறைக்க, வெள்ளைச்
சுவரைப் பார்த்தேன்
ஒற்றை ஜவந்திப் பூவாய்ப்
பிரகாசிக்கும் ஆனந்த வெளி! அதிலே
தன்நிழலை இழுத்துக்கொண்டு
சுறுசுறுவென்று நகரும் ஒரு புள்ளி எறும்பாய்
நான்

Read more...

புல்வெளி

புல்விரிப்புச் சுருங்காமல்
அமர்ந்து சென்றிருக்கிறார்கள் யாரோ
தூரத்திலிருந்தபடியே முழுசாய்
ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள் யாரோ

மலர் தேடும் வண்ணத்துப்பூச்சியின்
இறகுத் துடிப்போ என் தயக்கம்?

என் கண்முன்னாலொரு காதல் ஜோடி
வந்தமர்ந்து குலாவிவிட்டு
எழுந்துசெல்கிறதே எப்படி,
புல்விரிப்புச் சுருங்காமல்!

Read more...

Saturday, March 19, 2011

துயர மூச்சு

வெயில் தன் குடை மடக்கி
ஒளியாய் அமர்ந்திருக்கிறது
வீதிகள் அலுவலகங்களெங்கும்
தங்களைத் தாங்களே துன்புறுத்தும்
ஒலிகள் சுமந்து களைத்த மனிதர்களின்
துயர மூச்சு காற்றில் அலைகிறது
ஆலயமணியின் கார்வையில்
மின் அதிர்ச்சிக்கு ஆளாகிப்
புலம்பித் திரிகிறது
எங்கும் அழுகிய பதார்த்த மொன்றின் நெடி
மக்கிக் கொண்டிருக்கும்
கழிவுக் குவியல்களின் வாடை
கர்ப்பக் கிருகத்துள்
வாடித் தலை கவிழ்ந்த மலர்களின் மணம்
காவல் வீரர்களாய் எழுந்து
வீதிகளில் பாய்கிறது
இருளின் பாதாள நகரொன்றின்
நீதி மன்றத்தில் நிறுத்தப்படுகிறார்கள்
குற்றவாளிகள்
ஒவ்வொரு விடியல் செடிகளிலும்
கவலையற்ற மலர்கள் பூக்கின்றன

Read more...

காதல் உள்ளம்

முகமெதிர் முகமாய் வந்துநின்றுவிட்டவர் முகத்தில்
ஒரு தூசு நிற்கச் சம்மதிக்குமோ
துறுதுறுக்கும் காதல் உள்ளம்?

Read more...

Friday, March 18, 2011

மழை பெய்து

அப்போதுதான் முடிந்திருந்தது
அனைத்தும் முழுமுற்றாய் தூய்மைசெய்யப்பட்டு
பளாரென்று நீண்டிருந்தது ஒரு கிளை
நித்யத்திலிருந்து குதித்த ஒரு பாய்ச்சலுடன்
அப்போதுதான் உறையிலிருந்து வெளிப்பட்ட வாள்போல

வானளாவிய சூனிய வெளியெங்கும்
என் பார்வையை இழுத்தபடியே
பறந்துகொண்டிருந்த பறவை அதில் அமர்ந்திருந்தது
அதன் கூரிய கூச்சமுள்ள கால்விரல்களில் காலம்
ஒரு செத்த எலி.

Read more...

அது இருக்கிறது

நான் என்பதே
கனலும் என் உயிராக;
பூமி என்பதே
அதன் உடலாக;

தன்னுடைலைத்தான் பேணும்
செயல்பாடே
இயற்கையாக,
இயற்கை மர்மங்களாக,
நல்லறிவாக;

அது இருக்கிறது

Read more...

Thursday, March 17, 2011

வாயில்கள்

எங்கெங்கும் வெளியேறும் வாயில்கள்
(தப்புதலே வாழ்வாகிப் போனவனுக்கு)

எல்லா வாயில்களுமே சங்கிலித் தொடராக
மற்றொரு மற்றொரு உலகின்
வரவேற்புப் புன்னகை ஏந்திய
உள் நுழையும் வாயில்கள் மட்டுமே
(எப்போதும் வெளி ஆளாய்ப்
புத்துணர்வுடன் விளங்கும் தீரனுக்கு
எதிர்கொள்ளல்களாக உள்ளதே வாழ்க்கை)

உள்ளேறும் வாயில்கள் என்பதும் இல்லை.
அன்னியோன்யனுக்கு
எல்லாமே பேரின்பப் புன்னகை ஏந்திய
அலங்காரத் தோரண வாயில்கள்!

Read more...

ஒளியின் முகம்

நான் என் கைவிளக்கை
ஏற்றிக் கொண்டதன் காரணம்
என்னைச் சுற்றியுள்ளதை
நான் கண்டுகொள்வதற்காகவே;
என் முகத்தை உனக்குக் காட்டுவதற்காக அல்ல

அல்ல;

நீ என் முகத்தைக் கண்டுகொள்வதற்கும்தான்
என்கிறது ஒளி

Read more...

Wednesday, March 16, 2011

புயலில்

புயலில் சரிந்த ஒரு மரத்தை
நிமிர்த்தி நிற்க வைத்துவிட்டேன்
ஒரு நூறு குழந்தைக் கைகளின் உதவியுடன்.
நான் சொன்னேன் குழந்தைகளிடம்
'இவ்வாறே நாம் இந்த உலகை காப்பாற்றப்போகிறோம்'
எல்லாம் வெகு சுலபம்


புயலில்
தன் வாழ்வுக்காய் அன்றி
தன் உயிருக்க்கு மேலாய் நேசித்த ஒன்றை
வெகு தீவிரத்துடன் சொல்ல முயன்றுகொண்டிருந்தது மரம்
சொல்ல முடியாத வேதனையே அதன் சலனம் .


மாசு இல்லா பாதம் போன்ற வேர்கள் தெரிய
வீழ்ந்து கிடந்தது மரம்
தான் நேசித்ததும் சொல்ல விரும்பியதுமான
ஓரு பேருண்மை முன்
வீழ்ந்து வணங்கியபடி அமைதியாகிவிட்டதா அது ?
பரபரப்பான சாலை ஒன்றின் குறுகே விழுந்து
அது குறிப்பால் உணர்த்தும் பொருள் என்ன ?
சுறுசுறுப்பு மிக்க நம் மக்கள் ஆகா
சற்றும் தாமதிக்காமல் இரவோடு இரவாக
இடைஞ்சலில்லாத போக்குவரத்தை ஏற்படுத்திவிட்டார்கள்
அகோரமாய் கைகால்கள் வெட்டப்பட்டு
சாலையோரமாய் இழுத்து இழுத்துவீசப்பட்டிருந்தது.

அணைக்கட்டுகளை உடைத்து மதகுகளை உடைத்து
கரைகளை உடைத்து
படைப்பின் ஆற்றையும் விழுங்கிவிட்டது
பேராசையின் வெள்ளம்
இயந்திர உலகின் நுரையீரல்களில் இருந்து கிளம்பியது புயல்
விருட்சங்களும் ஒளிக்கம்பங்களும் சரிந்து விழுந்து
இருண்ட ராத்திரி .


முழு மரத்திலிருந்து
முறிந்து விழுந்த கிளையினைப்போல
நானும் என் குழந்தையும்

Read more...

படைப்பு

தான் இல்லாமலேயே செயல்படக்கூடிய
ஓர் உலகைப் படைப்பதற்காக
கடவுள் தன்னையே கொடுத்துவிட்டார்

ஒளி, வண்ணமயமான உலகின்
பன்முகங்களை விரித்துக் காட்டுகையில்
இருள், தன் ஒருமைத் தன்மையால்
அனைத்தையும் மூடி
நிலவையும் நட்சத்ரங்களையும்
வரச் சொல்கிறது

பகலை, பரிதியும்
இரவை, நிலவும்
பார்த்துக்கொள்ள
எந்நேரமும்
தன் பணியிலிருக்கும் பூமியில்
வேறு வேலையற்று.

அலகிலா பிரம்மாண்டத்தை
தன் மலைகளாலும் கடல்களாலும்
சொல்ல முயலும் பூமியைக்
கருணையோடு
குனிந்து நோக்குகிறது வானம்;
அத்துடன் தன் அறிவையும்
சந்தேகிக்கிறது அது

Read more...

உற்பவம்

பெரு மழையே, நீ விடாது பெய்து
வெள்ளத்தை உண்டாக்காவிடில்
புயலே, நீ வந்து
என் கூரையைப் பிய்த்துக் குதறிச் செல்லாவிடில்
வெள்ளமே, நீ வந்து
என் குடிசையை இழுத்துக் கடாசி எறியாவிடில்
யாரே எம்மை இனி காப்பார்
இவ் வறிய வாழ்க்கையிலிருந்து?

Read more...

Tuesday, March 15, 2011

பூக்கும் மரங்களின் ரகசியம்

நீரை நாடும் தேடலே
வேர்கள்
சூழலை எதிர்கொள்ளும் மெளனமே
அடிமரம்
ஒளியை நாடும் விழைவே
கிளைகள்
உதிரும் இலைகளின் பிரிவே
மரணம்
பிறப்பின் புதுமை பசுமையே
தளிர்கள்
அறிந்தேன்: பூக்கும் மரங்களின்
ரகசியம்.

Read more...

நச்சுமரக்காடு

ஒரு மரம்
அதன் ஆணிவேர் நான்
அதன் பக்கவேர்கள்
என் மதம் என் ஜாதி என் இனம்
என் நாடு என் கொள்கை என் மரபு
இன்னும் நூறு நூறு சிம்புவேர்களை
நான் சொல்ல வேண்டுமா ?


அச்சம்தரும் வலிமையுடன்
அடிமரம்.
ஆயிரமாயிரமாண்டு எனினும்
மனித குலம் அளவுக்கு இளமை
அதன் இருப்பிற்கும் எதிர்காலத்துக்குமான
உத்த்ரவாதப் பசுமை தழைக்கும்
அதன் கிளைகள்

எந்த புகைப்படத்திலும்
எந்த வரைபடத்திலும்
அடங்க ஆயாசம் கொள்ளும் பின்னல்


எங்கும் காய்த்து குலுங்குகின்றன
தோட்டாக்கள் வெடிகுண்டுகள் அணுஆயுதங்கள்

Read more...

இயற்கையே

என்னைக் கேளாமலேயே எடுத்துக்கொண்டதற்கு நன்றி

அழகு உன் உறிஞ்சுகுழல், அன்னக் கரண்டி.
என் இதயம் தின்றல்லவா செழித்திருக்கின்றன
உன் அவயவங்கள் எல்லாம்

இங்கே ஆயிரமாயிரம் குளறுபடிகள்
எது அழகு ஆராய்ச்சிகள்.
நீ போய்ச் சொல் என் இயற்கையே
என் இதயம் குறித்து நீ போய்ச் சொல்
காண்பதல்ல,
காண்பதில் காண்பதுவே அழகு என்று சொல்

Read more...

Monday, March 14, 2011

பனை

விடு விடென்று கறுத்து உயர வளர்ந்தவள் நீ
எதைக்கண்டு இப்படி சிலிர்த்து கனிந்து நிற்கிறாய் ?


அனைத்தையும் ஊருருவிய பின்னே
ஊடுருவ முடியாத ஒன்றைக் கண்டவுடன்
அதை சிரமேற்கொண்டு கனிந்தனையோ ?


ஒற்றைகாலில் நின்றபடி
உன் தவத்தின் வைரத்தை
என் பார்வையில் அறைந்தபடி நிற்கிறது ஏன் ?


அன்று உன்னால் சமைந்த என் குடிசையுள்
வீற்றிருந்தது அது
பின்பு
இரும்பாலும் சிமென்டாலும் ஆன இல்லத்திலிருந்து
வெளியேறியது அது


கோடரியாலும் வாளாலும் உன்னை வீழ்த்துவோர் முன்
எதிர்ப்பேதும் காட்டாது விழுந்து
நீ நின்ற இடத்தில் அழிக்க முடியாததாய்
நின்றிருந்தது அது .

Read more...

விதிகள்

மகளை ஒரு முழு உருவப் புகைப்படமாக மாற்றி
பைக்குள் வைத்துக் கொண்டு மாப்பிள்ளைதேடும் தந்தை
பழையபடி அப்புகைப்படத்தை
ஒரு பெண்ணாக மாற்றவல்ல மந்திரவாதி ஆவார்.

உற்றத்திலும் சுற்றத்திலும்
ஒரு இதயத்தைக்கூட சந்தித்தறியாத ரசிகன்
அவன் தன் கலைஞனைக் கண்டவுடன்
உயிர்பெருகி சாவான்

வண்ண விகாரங்களும் கர்ண கொடூரங்களூமான
வாழ்க்கையை
வெற்று திரைச்சீலையையும் ஒற்றை வண்ணமும் கொண்டு
எதிர்கொள்ளும் கலைஞன்
உதிரச்சாயம் உள்ளவரையே அவன் வாழ்க்கை

எளியவன் நான் நன்றாகவே அறிவேன்
வரிசையாக நிறுத்தி வைத்தான் நானே கடைசி மனிதன்
முதல்வனை கடவுளை அல்லது மகாத்மாவை
நான் நனறாகவே அறிவேன்
அவரை அடுத்துநிற்கும் பேற்றை நான் பெற்றுள்ளதால்!
எவ்வாறெனில்
பூமி ஒரு கோளம் அதில்
ஒவ்வொரு உண்மையும் ஒரு வட்டம்

இடத்தை அடைக்கும் பொருட்கள் மேலெல்லாம்
தூசியாய் படியும் பரம்பொருள் அது !
அதுமட்டுமென்ன
விதிகளுக்குள் அடங்காது
எல்லாவற்றுக்கும் விதிகளை இயற்றிக் கொண்டிருக்கிறது .

Read more...

புதிய வீடு

மாலை உலாசென்று சென்று
நான் கண்டுபிடித்தது அந்தத் திறந்தவெளி
எனது புதிய வீட்டை நிர்மாணிக்க சிறந்த ஓர் இடம்
ஆர்வமுடன்
என் உடம்பெங்கும் சுற்றித் தழுவித்
தீண்டிற்று திறந்தவெளியின் சர்ப்பக்காற்று

விழி சொருகி என்னுள்
தூரத்தில் தென்பட்டது
ஒரு மலையும் அதன் இடுப்பிலிருக்கும் காடும்.
“ம்மா...!“ என்று எழுந்த கன்றின் குரலாய்
பெருக்கெடுத்ததொரு நேசம் சாட்சியாக
அம்மலையில் ஒரு குகையிருப்பதை உணர்ந்தேன்,
அக்குகையில் நெடுங்காலமாய் நான் வாழ்ந்துவருவதாகவும்.

லாரி லாரியாய்க் கற்கள் வந்திறங்கின என்முன்
எங்கிருந்து? எங்கிருந்து?
அதோ அந்த மலையிலிருந்து என்றார்கள்

Read more...

ஒரு புல்லின் உதவி கொண்டு

ஒரு புல்லின் உதவி கொண்டு
பூமியிலொரு பச்சைக் கம்பளம் விரித்தேன்
ஒரு மரக்கிளையின் உதவிகொண்டு
புள்ளினங்கள் கொஞ்சுமோர்
பள்ளத்தாக்கை எழுப்பினேன்
ஒரு கூழாங்கல்லின் உதவிகொண்டு
மலையடுக்குகளையும் அருவிகளையும் உருவாக்கினேன்
ஒரு தேன்சிட்டின் ஆலோசனை கொண்டு
விண்ணிலோர் மாளிகை அமைத்தேன்
ஒரு கண்ணீர்த் துளி கொண்டு
வானமெங்கும் கார்மேகங்களைப் படரவிட்டேன்

Read more...

Sunday, March 13, 2011

தனிமரம்

ஒரு யாத்ரீக வீரன்
சற்றே இளைப்பறும் இடம்
அவனது தர்சனம்
அதைச்சுற்றிவிரிந்திருக்கிறது
ஓய்வுகொள்ள முடியா பாலை ஒன்றின்
கால் பொசுக்கும் மணல்


தன் இனத்தைவிட்டு
தூரவிலகி நிற்கிறது அது
தன்னியல்பின்
தடையற்ற வளர்ச்சிக்காக
காற்றும் மழையும் ஒளியும் பறவைகளும்
புழுபூச்சிகளும் உள்ளவரை
தனிமை அதற்கில்லை
அது ஏழையல்ல
அது தனக்குள் வைத்திருக்கிறது
ஒரு சோலைவனக்காட்டை
அதுவே தருகிறது
வற்றாத நீர்பெருக்கை


அது நிற்குமிடம்
இல்லை அது இளைப்பறும் இடம்
தனதே தனதான நிழல்
அதன் தர்சனம்

Read more...

அம்மா உனக்கு ஓய்வில்லையா?

ஒரு கணம் சும்மா உட்கார்ந்திருக்கமாட்டாமல்
உன்னை விரட்டுவது எது?
உன் கண்ணில் கசியும்
நூற்றாண்டுத் துயர்களை நான் அறிவேன்
அசோகவனத்துச் சீதையோ, ரவிவர்மாவின்
சிந்தாகுலமிக்க சகுந்தலையோ அல்ல நீ

இந்த அகால வேளையிலும் கூட
பெருக்குமாற்றை எடுத்துக்கொண்டு
பெருக்கிய முற்றத்தையே மீண்டும் மீண்டும்
பெருக்கிய வண்ணமிருக்கிறாய்

காவியக் கற்பனைகளாலும்
தீட்டிவிடத் தீராததோ உன் ரகசியம்?

Read more...

விரும்புவதெல்லாம் ஒன்றே

விரும்புவதெல்லாம்
இந்த மரத்தைப் போலவும்
இந்தப் பறவையைப் போலவும்
இந்த மிதிவண்டியைப் போலவும்
இவ்வுலகில் வாழத்
தகுதி பெற்றிருத்தல்
ஒன்றே

Read more...

Saturday, March 12, 2011

பறவைகள் காய்த்த மரம்

ஓய்வும் அழகும் ஆனந்தமும் தேடி
மேற்கு நோக்கி நடந்த எனது மாலை உலாவினால்
சூர்யனை அஸ்தமிக்கவிடாமல் காக்க முடிந்ததா ?
தோல்வி தந்த சோர்வுடன்
ஓய்வு அறை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தேன்


ஒரு காலத்தில் பூக்களாய் நிறைந்திருந்த மரம்
இன்னொருகாலத்தில் கனிகள் செறிந்திருந்த மரம்
அன்று பறவைகளாய் காய்த்து
இருட்டில் செய்வதறியாது கத்திக் கொண்டிருந்தது


ஒரு நண்பனைப் போல
சூரியன் என்னை தொட்டு எழுப்பிய காலை
வானமெங்கும் பறவைகள் ஆனந்தமாய் பரவ
மெய்சிலிர்த்து நின்றது அந்த மரம்

Read more...

பலி

யார் உண்டாக்கிக் கொண்டிருப்பது
நூறு நூறு மின்னல்களால் அறியப்படும்
இவ்வாளின் சுழற்சியை ?
எவருடைய சிந்தனைகள் இவை ?
அன்றைய காலை சூரியனின்
முகத்தில் ஓர் ஏளனப்புன்னகை

Read more...

தன்னந் தனி நிலா

தன்னந் தனி நிலா
எல்லாவற்றிலும் எதிரொலிக்கிறது
அதன் அழகு

தன்னந்தனி நிலா
தன் அழகைத் தானே ரசிக்கிறது
நீர்நிலைகளில்

தன்னந் தனி நிலா
தன் தனிமை மறக்கிறது
நீர்நிறைக் கண்களில்

Read more...

Friday, March 11, 2011

அழைப்பு

கடைசி மத்தாப்பும் உதிர்ந்து
மரணம் என்னை சூழ
உதிராத மத்தாப்புகள் கோடி ஏந்தி
வானம் என்னை அழைக்கிறது

Read more...

ஒரு சிறு குருவி

என் வீட்டுக்குள் வந்து
தன் கூட்டை கட்டியது ஏன் ?

அங்கிருந்தும்
விருட்டெனப் பாய்ந்தது ஏன் ஜன்னலுக்கு ?
பார் ஜன்னல் கம்பிகளை உதைத்து
இப்பவும் விருட்டென்று தாவுகிறது அது
மரத்திற்கு
மரக்கிளையினை
நீச்சல்குளத்தின் துள்ளுபலகையாக மதித்து
அங்கிருந்தும் தவ்விப்பாய்கிறது
மரணமற்ற பெருவெளிக்கடலை நோக்கி

சுரேலென தொட்டது அக்கடலை என்னை
ஒரு பெரும் பளீருடன்
நீந்தியது அங்கே உயிரின்
ஆனந்த பெருமிதத்துடன்

நீந்தியபடியே திரும்பிப் பார்த்தது தன் வீட்டை

ஓட்டுகூரையெங்கும்
ஒளியும் நிழலும் உதிர் சருகுகளும்
உள் அறைகளெங்கும்
சிரிப்பும் அழுகையும் மரணங்களும்

Read more...

என்னில் ஒரு பாதி பெண்மை…

அற்புதம்!
ஒரு வட்டக் கிணறு
அந்தக்
கிணற்றைப் பிரிக்காத
ஆனாலதனை
ஆண்மை பெண்மை எனப்
பிரித்துக் காட்டிவிடும்
ஒரு ஞானச் சுவர்

Read more...

பாலையில் வீசும் மண்புயல்

பாலையில் வீசும் மண்புயல்
கண்டதென்ன,
மேடு பள்ளங்களை
இடம் மாற்றி அமைத்தது தவிர?

மாலையுருகிப் பெருக்கெடுத்த நதியோ
ஓடி அலைந்து நின்று நடந்து
பார்த்து குதித்துக் கூடிக் கொஞ்சிக் குலாவி
தான் செல்லும் வழிகளையெல்லாம்
தவறாமற் சமைக்கின்றது,
பச்சை பசேலெனும் காடுகளையும்
சோலைகளையும் வயல்களையும்
மனிதர்களையும்

Read more...

Thursday, March 10, 2011

இயற்கைச் சீற்றம்

களங்கமின்மையை நாம் அறியோமோ?

இயற்கைச் சீற்றம் இயற்கைச் சீற்றம்
என்னும் தேய்ந்து மடிந்த சொல்லியந்திர ஒலிப்பு,
அல்லது
அறைந்து எழுப்பப்பட்டது போலும்
திடீர் விழிப்புக் கதறல்

மீண்டும்
அதே இயல்பு வாழ்க்கைக்குத்
திரும்புவதுதான்
நமது
இலட்சியமா?

அநீதியும் துயரங்களுமே
தொடரும் வாழ்வெனில்
இடையறாவிழிப்பின்
இயங்கு தளமெங்கே?

அக் குளத்தில்தான் நீந்துகிறதோ
அப் பொன் மீனும்?

Read more...

இருள் ஒளி

கேள்வி இருளுக்கு
ஒளி பதிலானது
எவ்விதம்?
இருளை உற்று நோக்க நோக்க
இருளே ஒளியாயிற்று
ஒளி நோக்கும்
உந்தலற்று அற்று
ஒளியே இருளாயிற்று
இவ்விதமே
இருளும் ஒளியும் ஒன்றாகி
பேரொளி
கேள்வியும் பதிலும் இணைந்து
பெரு வியப்பு

Read more...

திருமுகமும், வீதிக்குள் அடிவைக்கும் கோலமும்

காற் கொலுசுகள், பறவைகள்
முணுமுணுக்கும் இலைகள்-
அனைத்து ஒலிகளும் மறைந்து
என் கைவளைகள் மாத்ரமே உயிர்த்து நிற்க
இமையா விழிப் பரிதி
துவங்கிய மெல்லொளியில்
இசைந்து அமர்ந்து
நான் என் முற்றத்திலிட்ட மாக்கோலம்-
கண்ணாடியில் பார்த்துக்கொண்ட என் முகம்!
என்றால்
வைகறைத் தெய்வமே! என் உயிரே!
மெய்சிலிர்க்கும் என் உடலன்றோ
இப் பூமி!

Read more...

தீண்டுமின்பம்

காடு கரைகளிலும்
கழனி வெளிகளிலும்
உலவும்
காற்று வந்து அவனைத் தீண்டுகிறதே.

பார்க்கும் இடத்திலெல்லாம்
அவன் படும்
பாடுகளையெல்லாம் பார்த்தவைகளின்
பற்று மிகுந்துருகும்
பார்வை வந்து தீண்டுகிறதே.

கேட்கும் ஒலியிலெல்லாம்
கேட்கிறதே
அவன் நலன் வினாவும் பெருங்கருணை
அவனைத் தீண்டி

தீண்டுமின்பம் துய்த்தவரோ
தீயினின்பம் துய்த்தவரோ
தீண்டாமை இயற்றியது?

விரலை, தீ சுட்டதுவோ
உதறி உதறித் தீராமல்
வாய் கொண்டு தீண்டி ஆற்றுகிறார்?

Read more...

Wednesday, March 9, 2011

இவ்வேளை

வாடாத, வாசமிலாத
இச் செயற்கைப் பூக்கள்
நினைவூட்டிக் கொண்டிருக்க,
வாடி உதிர்ந்து மறைந்த மலர் நீ.

Read more...

மலையுச்சியினின்றும் இறங்கி

மலையுச்சியினின்றும் இறங்கி
என் பார்வை படும்படி
ஓரமாய் வந்து நின்ற மலரே,

கொய்த பிறகும்
வெகு காலம் வாடாதிருக்கும்
உறுதி கொண்ட நின் தாராளத்தை
நான் ஏற்றுக் கொண்டிருக்கவே கூடாதோவென
இப்போது கலங்குகிறேன்.

உன் அழகு கண்டு
வியந்து நிற்கவே வந்த என்னை
ஒரு நாளில் வாடிப் போகிறதுதானே
பறித்துக் கொள்ளுங்கள் பறித்துக் கொள்ளுங்கள்
என்று கூறிய ஓர் ஏழையின் அன்பை
ஏற்றுக் கொண்டிருக்கவே கூடாதோ?

ஒருநாளும் வாடிப்போகாத அன்பை
உணர்த்தி மடியும்
எளிய உயிர்தானோ நீயும்?

Read more...

Tuesday, March 8, 2011

கவி வாழ்வு

‘இருக்கும்போது வருவதே இல்லை’
என்ற ஞானத்தில்
இருந்ததையெல்லாம் வாரி இறைத்துவிட்டு
வெறுமே இருந்தேன்
இல்லாத இப்போதுதான் இக் காக்கைகள்
பிராண்டிப் பிடுங்குவதுபோல்
என்னைச் சூழ்ந்துகொண்டு கரைகின்றன
ஓ! இது ஒன்று எஞ்சி இருக்கிறதா என
அதையும் கையிலெடுத்துப்
பிய்த்துப் பிய்த்துப் போடத் தொடங்கினேன்
அக்ஷய பாத்ரப் பண்டம்போல்
குறையவே இல்லை இதயம்
அந்தக் கரைச்சலும் தீர்ந்தபாடில்லை

Read more...

காதல் லீலைகள்

வியப்பால் விரிந்துவிட்டது
முதல்
தாமரை பூத்த அன்று
வானம்
எங்கும் பரவ
வீசிய மணத்தின்
துக்கமே வண்டென
ஜனித்தது
‘இனி என்ன செய்வது?’
தொடங்கிற்று
காதல் லீலைகளில் பொழுது

Read more...

நிலாவை…

நிலவு எரிந்துகொண்டிருந்த
தருணமோ அது?

(சும்மாதானே இருக்கிறீர்கள்!)
கொஞ்சம் தேங்காயைத்
துருவித் தாருங்களேன்
என்றார் என் மனைவி.

துருவத் துருவத்
தோன்றியனவோ
தூமலர்கள் ஆயிரம்?

Read more...

தேன்சிட்டு

பிச்சு பிச்சு என்று
அது என்னைத்தான் கூப்பிடுகிறது
என்றேன்.

இல்லை, சிப்பீ சிப்பீ என்று
சும்மாதான் கத்துகிறது
என்றான் நண்பன்
நன்றாய்க் கவனித்துக் கேட்ட பின்னும்.
என்ன கவனிப்போ அது!

முத்து முத்து என்று
அது தன்னைத்தான் அப்படிக் கூப்பிடுகிறது
என்று அவன் சொன்னால்
ஏற்றுக் கொண்டுதான் இருப்பேன்!
எத்தனை எளிதாகியிருக்கும் நம் செயல்பாடுகள்?

Read more...

ஏனோ? என்ன அவசரமோ?

நான் மூச்சிரைத்து நிற்கையில்
தன் அருள் முகத்தின் கனிவு காட்டியவாறு
மலை முகட்டினின்றும்
கைநீட்டிக் காத்திருக்கிறார்கள் யாரோ.
என் முதுகை
ஆதரவாய்த் தொட்டும் தாங்கியும்
பொறுமையோடு
என் உடன் வந்து கொண்டிருக்கிறார்கள்.

உச்சியிலிருந்து சரிவில்
நான் இறங்க முயற்சிக்கையில்
அதற்காகத்தான் காத்திருந்தார்கள் போல்-
பேயோ, தெய்வமோ, இருவரும் இணைந்தோ
பிடரி பிடித்து
அவசர அவசரமாய்த் தள்ளுகிறார்கள் என்னை.

Read more...

Monday, March 7, 2011

நான் இருக்கிறேன்

அறை நண்பர்கள் ஒவ்வொருவராய்
பிரியாவிடை பெற்றுப்
பிரிந்து கொண்டிருந்தார்கள்
கண்கள் கலங்கியவர்களாய்.
எனது கண்களும் கலங்கினதான் எனினும்
பிரிந்து செல்வது நானல்லவே.

Read more...

மலர் இதழ் விளிம்பெங்கிலும்

மலர் இதழ் விளிம்பெங்கிலும்
எல்லையற்ற இப் பேரண்டத்தின்
எல்லை கனன்று நிற்கும்
ஒரு வியப்பு.

நம் விழிகளின் அசமந்தத்தைக்
கண்ட மாத்திரத்தில்
காம்பினின்றிழிந்த மலராய்
துயர் கனன்று நிற்கும்
பெருஞ் சோர்வு.

Read more...

Sunday, March 6, 2011

புல்லின் பெருமிதம்

மாசறு நிலையோ;
அன்பின் பெருவிரிவில்
வேர் கொண்டுள்ள மாண்போ;
சூர்யனைத் தன் தலையில்
தாங்கியமையால்
சுடரும் பேரறிவோ;
இனி அடையப் போவது
ஏதொன்றுமிலாத
உயர் செல்வ நிறைவோ;
அருளானந்தப் பெருநிலை ஆக்கமோ;
புன்மையாம் வேகத்
தடையாகி நின்ற பெருவியப்போ
இவ் வைகறைப் பொழுதில்
புத்துயிர்ப்பு கொண்டு நிற்கும்
இப்புல்லின் பெருமிதம்?

Read more...

மரத்தடியில் துயிலும் ஒருவன்

புரண்ட விலாவினில்
ஒட்டியிருக்கிற மணல்
பூமியைப் பிரிந்ததால்
தன் உக்கிரமிழந்து தவிக்கிறது
கருணைகொண்ட மரக்கிளைகள்
தன் கந்தல் நிழலின் வெயில் எரிப்பை
ஈடு செய்ய விசிறுகின்றன
வீசிய காற்று
விலா மணலை உலர்த்தி உதிர்க்கிறது
அதேவேளை
உடம்பின் இன்னொரு விலாவை அழுத்துகிறது
உயிருடன் அவனை விழுங்க இயலாத பூமி

Read more...

பொழுது

அகம் வெடித்தழிந்த புரட்சிக் கணம்.

பொற்கிண்ணத்தில்
பொழிந்துகொண்டிருக்கும் அமுதம்.

புள்ளினங்கள் மிழற்றி ஆடும்
பொன்னூஞ்சல்.

கண்காணாத் தழற் பிழம்பில்
பொன்னுருகிப் புவிபரவும் வேளை.

மூலமுதலாய் நிகழும்
பொற்றீண்டல்.

தூய பசுங் கண்விழிப்பு.

அன்பும் அழகும் மட்டுமே
ஒளிர்கின்ற பெருவெளி.

ஆண்டுகள் கோடி ஆனாலும்
பொய்க்காது வந்து
முத்தமிடும் காதல் பரிசு.

Read more...

விண்ணோக்கிச் செல்வதும்

விண்ணோக்கிச் செல்வதும்
விண்ணை உணர்வதும்
மண்நோக்கியே பொழிவதும்
மழைநீர்த் தேக்கங்கள் என
நின்று நிதானித்து
மண்ணைக் குளிர்வித்தபடியே
விண்ணையே நெஞ்சில் நிறைத்து
விண்ணோக்கியே கிடப்பதும்
அனைத்து உயிர்களையும்
காதலின்பத்தாற்
களிகொள்ளச் செய்வதுமேயன்றோ
நம்மை வாழ்விக்கும்
நம்முடைய ஒரே செயல்!

Read more...

புத்தர்

மேக முடி சூடி
எல்லாவற்றிற்கும் அப்பால்
மகாமவுனமாய் அமர்ந்திருக்கும்
பிரக்ஞையற்ற மெய்மையல்ல;
ஒரு சிகரம் தன் உக்கிரம் குன்றாது
தன் பள்ளத்தாக்கினை
உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கும் பார்வை.

ஓய்ந்து போய்
நமக்கு நாமே
உபயோகமற்ற ஆறுதல் வேண்டி
நம் வழிபாட்டுக்குரியதாய்ச் செதுக்கிக்கொண்ட
உயிர்மையற்ற விக்கிரகமல்ல;
மானுடத் துயரும், நீதியின்மேல்
பசி தாகமும் கொண்டோர்
நெஞ்சிற் கனலும் வேட்கை.

விழிப்பு

தயை

மெய்ஞ்ஞானம் தந்த
உன்னதப் பொலிவு

உலராத புன்னகை

உறுதிமயமான இருப்பு

உருளும் தர்ம சக்கரம்

ஒளி.

Read more...

மரம் வெட்டப்பட்ட இடம்

கனவுகள் தோறும் புகுந்து
என்னைத் துரத்தியது
மரம் வெட்டப்பட்ட இடத்திலிருந்து
என் அறையைத் தாக்கிய வெய்யில்.

முடிவின்றிப் பொசுக்கும் பாலை ஒன்றில்
ஒரு பிடி நிலம் தேடி
முடிவின்றி நடந்து கொண்டிருந்தேன்
ஒரு கனவில்.

குளிரூட்டப்பட்ட சவப்பெட்டி ஒன்றுக்குள்
கைகால்கள் முடக்கி
நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தேன்
ஒரு கனவில்.

நீர் மாற்றப்படாத நீச்சல்குளம் ஒன்றில்
நாற்றமெடுத்த நீர், மேலும் நாறும்படி
பிணமாகக் கிடந்தேன் ஒரு கனவில்.

செவிட்டுக்களை படிந்த
முகங்களுடனும் உடல்களுடனும்
அருவியிலும் ஆற்றிலும்
குளித்துக் கொண்டிருந்தனர் மக்கள்

கழிவுநீர்த் தேக்கம் காத்திரம் உரைக்கும்
அழுக்குச் சேரிகளில்
கொந்தளித்துக் கொண்டிருந்தனர்
மலைவாழ் பழங்குடி மனிதர்கள்.

என் அறையைத் தாக்கிக் கொண்டிருந்தது
அதிகார வன்முறையும் ஆடம்பரங்களும்
அறியாத கவிதை
கண்ணீர் ததும்பும் ஒரு வேதனை
மரம் வெட்டப்படுவதைப் போல அழிந்து
மரம் வெட்டப்பட்ட இடம் போலக் கனன்றபடி.

Read more...

ஒரு சிறு பொறிதான்

ஒரு சிறு பொறிதான்
காற்றின் கரம் பிடித்து
அக்கினிக் குஞ்சாய் மலர்ந்தது காண்!
அக்கினிக் குஞ்சு-தான்-என்ற போழ்து
வீசியடித்த காற்றொன்றால்
கல்மீது மோதி மடிந்தது காண்!

Read more...

இனிப்பது

“அதில் என்ன ஊற்றா இருக்கிறது;
இனிக்கவும் அங்கே என்ன இருக்கிறது;
வெறும் சதை!”
என்று என்னைக் கிண்டினாள்
என் காதலி.
முத்தத்தில் இனிப்பது
வாழ்க்கையல்லவா!

Read more...

நிலாவொளி

நிலாவொளியில்
பேரளவாய்ச் சூழ்ந்துநிற்கும்
இருண்ட இம் மரக்கிளைகளில்
கருணையின் கார்மேகச் செழுமை.
அது, தன் கிளைகளுடனும் வேர்களுடனும்
காட்சியளித்தல்லவா புதுமை!

Read more...

சிந்தனைகளாற் களைத்து…

சிந்தனைகளாற் களைத்து
அதன் பின் தொடரும்
நெடிய தூக்கத்தாலன்றோ
காலங் காலமாய்த் தவறிப் போயின
காலைப் பொழுதின் சொர்க்கங்கள்?

‘விழித்திருப்பவனுக்கே
விடியற் பொழுதுகள்’ என்பதோடு
நின்று விடவில்லை,
தன் சட்டம் ஒழுங்கில்
கறாராக இருக்கும் அன்னை,
பிரியம் பொங்கி
கொட்டிக் கொடுக்கிறாள்
எல்லாப் பொழுதுகளையும்
அவனுக்கு
புத்துணர்வு மாறா
விடியற் பொழுதுகளாய்ச்
சமைத்து.

Read more...

Saturday, March 5, 2011

ஒரு மரத்தைக்கூட காண முடியவில்லை

ஒரு மரத்தடி நிழல் போதும்
உன்னை தைரியமாய் நிற்கவைத்துவிட்டுப் போவேன்
வெட்டவெளியில் நீ நின்றால்
என் மனம் தாங்க மாட்டேன் என்கிறது
மேலும்
மரத்தடியில் நிற்கையில்தான்
நீ அழகாயிருக்கிறாய்

கர்ப்பிணிபெண்ணை
அவள் தாயிடம் சேர்ப்பதுபோல
உன்னை ஒரு மர நிழலில் விட்டுப்போக விழைகிறேன்
மரங்களின் தாய்மை
முலை முலையாய் கனிகள் கொடுக்கும்
கிளைகளின் காற்று
வாத்சல்யத்துடன் உன் தலையை கோதும்
மரம் உனக்கு பறவைகளை அறிமுகப்படுத்தும்
பறவைகள் உனக்கு வானத்தையும் தீவுகளையும்
வானமோ அனைத்தையும் அறிமுகப்படுத்திவிடுமே

ஒரு மரத்தடி நிழல் தேவை
உன்னை தைரியமாய் நிற்க வைத்து விட்டுப்
போவேன்

Read more...

வெண்ணிற அல்லி

வெண்ணிற அல்லி ஒன்று வாய்க்காலிலே
பாப்பாவின் தளிர்க்கை பற்றித் தூக்குகையிலே

வேண்டாம் வேண்டாம் என்று
அது கத்தவில்லை

இக்கரையிலும் தடுக்க ஓர் ஆளுமில்லை

எங்கும் ஒளிந்திருந்த பேரின்பம்
இருவருக்கும் கிட்டியதோ ஒரேவேளை?

Read more...

எங்கிருக்கிறீர்கள்?

காற்றிலும் ஒளியிலும் கூடியிருந்த
இறுக்கம் தளர்ந்துவிட்ட இதம்.
சிறிய வீட்டிலிருந்து
மூடாத கதவுகளும்
எண் அறைகளுமான
மிகப் பெரியதொரு வீட்டிற்கு
விரிந்திருந்தார்கள் அவர்கள்.

அவர்கள் குரல் மாந்தி
இனித்து எதிரொலிக்கவே
பிறவி எடுத்தனவாய் நிற்கின்றன
என் அறைச் சுவர்களும்.

சமையலறையிலிருந்து
“எங்கிருக்கிறீர்கள்
என் அன்பே”
என அவள் விளித்தாள்.
“எல்லா இடங்களிலும்”
என அறிவித்தது அவன் குரல்.

குரல் உதித்த இடம் நோக்கி
தன் கூர்அறிவைத்
தானே வியந்ததுவால்
சிவந்து ஒளிரும் முகத்துடன்
அவள் செல்கிறாள்
கையில் தன் இதயத்தை ஏந்தியபடி.

Read more...

கோடி கோடி ஆண்டுகளாய்

கோடி கோடி ஆண்டுகளாய்
கூடிக் கூடிக் களிக்குமின்பத்தையா
அன்பு எனக் கருதிவிட்டோம்

படுகொலைகளும் துயர்களும்
பிறக்குமிடம் கண்டிலமோ?
இறக்குமிடம் கண்டிலமோ?

கூடிக் கூடி நாம் கற்றதெல்லாம்
அன்பில்லாத உலகில்
அன்பிலாது வாழும் கலைதாமோ?

Read more...

Friday, March 4, 2011

பூப்பு

அவள் இனிய பதின்மூன்றில் ஓர் இரவு
அவள் அணைத்திருந்த பொம்மையினை
பூப்போலப் பறித்துச் சென்றுவிட்ட
ஒரு தேவதை?
பொம்மைகளோடு விளையாடிக் கொண்டிருக்கும்
பெரியவர்களை எண்ணிக்
கண்ணீருகுக்கும் தேவதையானாளோ, அவள்?

Read more...

கருநீலப் பூ

கரிய நதியொன்று
அகண்ட காவேரியாய்ப் பாய்ந்து
குரூரங்கள் செழித்த இப் பூமியில் -
பிழைக்கத் தெரிந்துகொண்ட மனிதர்களாலானதோ
இவ்வுலகம்?

பட்டினி போடப்பட்ட சிங்கத்துடன்
அடிமை ஒருவனை அடைத்துக் களிக்கும்
அரங்குக் கலாரசனையின்
அதே வண்ண மாறுபாடுகள்தாமோ
நம் வாழ்வும் கலையும்?

இந்நதிமூலம் தேடிப் போய்த்
தன் கண்ணாறக் கண்டு வந்ததைத்தான்
அவன் உரைத்தான்,
'சக மனிதனைவிட தான் ஒசத்தி
எனும் குறுகிய இடத்திலிருந்து உற்பத்தியாகியதே
அந்தக் கரிய நதி' என்று!

அப்பாவியாய்க் கண்ணோட்டிக் கிடக்கும் இந்நதியோரம்
நெஞ்சைப் பிழியும் வேதனையே
ஒரு கருநீலப் பூவாய்
தான் பூத்ததன்றி வேறொரு நோக்கமின்றிப்
பூத்து நிற்கிறது, அழகின் ஒரு செயல்பாடாக

Read more...

சிறகுகள்

வானம் விழுந்து, நீர்;
சிறகுதிர்ந்து மீனாகிவிட்டது பறவை

நீரில் எழுந்தது வானம்;
சிறகு முளைத்துவிட்டது மீனுக்கு

சிறகினுள் எழும் சூர்யத் தகிப்பே
சிறகடிப்பின் ரகசியம்; ஆகவேதான்
சுயவொளியற்ற வெறும் ஒரு பொருளை
சிறகுகள் விரும்புவதில்லை;
பூமிபோன்ற கிரகங்களை அது நோக்கவில்லை
(சிறகடிக்கையில்
சிறகின் கீழே வெட்கி ஒடுங்கிக்கொள்கின்றன
பறவையின் கூர்நகக் கால்கள்)

சூரியனுள் புகுந்து, வெறுமே
சுற்றிச் சுற்றி வருகின்றன சிறகுகள்
சிறகின் இயல்பெல்லைக்குள்
நிற்குமிடமென்று ஏதுமில்லை
வெளியில் அலையும் சிறகுகளுக்கு
இரவு பகல்களுமில்லை

Read more...

மாற்றப்படாத வீடு

நெருக்கடியுள் நெரிந்து அனலும் காற்று
என்ன செய்ய?
இந்த வீட்டை நான் இன்னும் விடமுடியவில்லை
பாதிக்கப்படுபவன் நான் மட்டுமே(!?)
சைக்கிளில் போய் வருவேன் வெகுதொலைவு தாண்டி
நகர எல்லையிலிருக்கும் என் பள்ளிக்கு
அதனருகே ஒரு வீடும் கட்டிமுடித்துள்ளேன்
குடிவர மறுக்கின்றனர் என் வீட்டார்
ரிக் ஷாச் செலவே சம்பளத்தில் பாதியாகிவிடும்
என பயமுறுத்துகிறாள் என் மனைவி
உண்மையும்தான் இதற்காகவேதான்
கல்யாணமானவுடனேயே நச்சரித்தேன்
மிதிவண்டி ஓட்டப்படி என்று.

அவளுக்கு அவள் பள்ளி பக்கம்; ஊருக்குள்ளேயே.
அப்பாவுக்கு ஆபீஸ் பக்கம்
(வயதான காலத்தில் பஸ் ஏறி இறங்க வேண்டியதில்லை)
அம்மாவுக்கு கோவில் பக்கம்; மேலும் உறவினர்கள்
(வனத்தில் அலைந்தாலும் இனத்தில் அடையவேண்டாமா?) தம்பிதங்கைகளுக்கு அவரவர் பள்ளிகள் பக்கம்
எனவேதான்
இந்தவீட்டை நான் இன்னும் விடமுடியவில்லை
என்றாலும்
நான் அங்கே ஓரு வீடுகட்டிமுடித்துள்ளேன்.

Read more...

என்ன துயரமிது? என்ன தயக்கமிது?

இந்த இதயம்
ஒரு பெருவெடிப்பில்
கோடானு கோடி
அணுத் துகள்களாய்ச் சிதறி
இதயமற்ற இதயங்களனைத்தையும்
குறி தவறாது பாய்ந்து தீண்டி
நிகழ்த்திவிட வேண்டும்
ஒரு மாற்றத்தை.

அவ்வாறாயின்
இந்த வலியையும் மரணத்தையும்
ஏற்றுக் கொள்வதிலென்ன துயரமும் தயக்கமும்?

Read more...

இரவு

பேசிக்கொண்டேயிருந்து விட்டதில்
நள்ளிரவாகி விட்டது
கொட்டாவித்து ‘தூங்குவோம்’ என்றான் நண்பன்
இரவைக் கடப்பதற்கு இதுவோ வழி?
‘சரி, நீ தூங்கு’ என்று
அவனை - அவன் வீட்டிற்குப்
பாதிவழி வரை அனுப்பிவிட்டுத் திரும்பினேன்
விளக்குகள் அணைத்துத் துயின்றுகொண்டிருந்தன வீடுகள்
தனித்து மாடிமீது விளக்கெரியும் அறை ஒன்று
உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தது அனைத்தையும்
அந்த இரவில்
இரவைப் பார்த்துக் கொண்டிருக்கும்
ஏதோ ஒன்றின் கண் அது; அந்த
ஏதோ ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கும்
இரவின் கண்ணும் அதுவே.
நிச்சயமாக இரவைக் கடக்க முனையும்
வாகனமொன்றின் விளக்கொளியல்ல

Read more...

துள்ளல்

நீரின் மேற்பரப்பில் ஒரு மீன்
துள்ளி விழுகையில் கண்டது சுடும்பாறை
மீண்டும் துள்ளியதில் பறவையின் கொடுங்கால்
மேலும் ஒரு துள்ளலில் மரணம்
மரித்த அக்கணமே பறவை.

Read more...

Thursday, March 3, 2011

உயிரின் பேரின்பக் கொண்டாட்டமோ?

உயிரின் பேரின்பக் கொண்டாட்டமோ
ஒரு தாயும் சேயும் கொஞ்சிக் கொண்டிருந்த
காட்சி?

தாயின் மெய்தீண்டலில் அக்குழந்தை
பாதுகாப்பினையும்
குழந்தையின் தீண்டலில் அத்தாய்
பேரின்பத்தையும்
அனுபவித்துக் கொண்டிருந்தார்களோ,
பாதுகாப்பிற்க்குக் கோட்டைகளையும்
இன்பத்திற்குக் கேளிக்கைகளையும்
சார்ந்துவிட்ட இருள் நடுவே
தம்மை மறந்து?

Read more...

மார்கழியில் தேவதேவன் - ஜெயமோகன்

நவீனத் தமிழிலக்கியப்பரப்பில் தேவதேவனின் கவிதைகளுக்கு மட்டுமே உரிய ஒரு சிறப்பு உண்டு. ஒருவேளை உலக நவீனக் கவிதையிலேயே அது ஒரு அபூர்வமான விஷயமாக இருக்கலாம்.  அவர் துயரங்களைப் பற்றி எழுதியதே இல்லை. அவரது கவிதைகள் அனைத்துமே பரவசங்களைப் பற்றியவை. மன எழுச்சிகளைப் பற்றியவை. உன்னதங்களை நோக்கி முகம் திருப்பி ஒளி பெற்றுக்கொண்டவை. துயரங்கள் என்றால்கூட அவை மகத்தான துயரங்கள். ஒருபோதும் லௌகீகதுக்கத்தின் சிறுமைக்குள் சிக்கிவிடாதவை.

நவீனக்கவிதைகள் என்றாலே அடர்ந்த துக்கத்தின் சித்திரங்கள் என்ற நிலை இன்றுள்ளது. உண்மையான துக்கம் கொஞ்சம், கவிதைக்காக கொதிக்கச்செய்து பொங்கவைத்துக்கொண்ட துக்கம் மிக அதிகம் என்பதே நம் கவிதைகளின் கலவைவிகிதம். நவீனக் கவிதை நவீ£னத்துவக் கவிதையாக நின்றுவிட்டதே இதற்குக் காரணம். தமிழ்க்கவிதையின் பேசுபொருளாக இன்றும் இருத்தலியலே இருக்கிரது. தத்துவப்படுத்தலும் படிமச்சமையலும் கவிதையின் இலக்கணமாக உள்ளது.

தேவதேவன் வாழும் உலகம் வேறு. மானுடவாழ்க்கையை பிரபஞ்சமென்னும் பெரும் நிகழ்விலிருந்து பிரிக்க முடியாத முழுமைகொண்டது அவரது நோக்கு. ஆகவே அவர் காண்பது ஒரு மாபெரும் சக்திக் கொந்தளிப்பை, அதை அறியும் ஆனந்தப் பித்துநிலையை. சராசரி தமிழ் வாசகனின் நுண்ணுணர்வு தொட்டுவிடமுடியாத ஒரு வெளியில் நிற்கும் கவிதைகள் அவை.

ரிஷி அல்லாதவன் கவிஞன் அல்லஎன்று சம்ஸ்கிருத கவிவாக்கியம் ஒன்று உண்டு. மெய்ஞானம் சற்றேனும் கைகூடாத ஒன்று ஒருபோதும் பேரிலக்கியமாக ஆவதில்லை. இன்றைய தமிழில் பேரிலக்கியத்தின் பெறுமதி கோண்ட கவிதைகளை எழுதும் பெரும்கவிஞர் அவர்

தேவதேவனின் புதிய கவிதைத்தொகுதி தமிழினி வெளியீடாக வந்துள்ளது. மார்கழி‘  இரு வரைக் கவிதைகள் அவற்றில் உள்ளன. ஒன்று கவிதையின் அந்த ஆதிப்பரவச நிலையை காட்சிப்பிம்பங்கள் வழியாக அடையும் கவிதைகள். ஜென் அனுபவம் கொண்டவை எனலாம். ஆனால் அவற்றின் உணர்ச்சி வெளிப்பாடுமுறை நம்மாழ்வாரிலிருந்து எழும் பக்திக்கவிதை இயக்கத்தின் சாயல் கொண்டது.

புல்லின் பெருமிதம்

மாசறு நிலையோ
அன்பின் பெருவிரிவில்
வேர்கொண்டுள்ள மாண்போ
சூரியனைத் தன் தலையில்
தாங்கியமையால்
சுடரும் பேரறிவோ
இனி அடையப்போவது
ஏதொன்றும் இல்லாத
உயர்செல்வ நிறைவொ
அருளானந்தபெருநிலை ஆக்கமோ
புன்மையாம் வேகத்
தடையாகி நின்ற பெருவியப்போ
இவ்வைகறைப்பொழுதில்
புத்துயிர்ப்பு கொண்டு நிற்கும்
இப்புல்லின் பெருமிதம்?

இன்னொருவகைக் கவிதை நவீனத்துவக் கவிதை உருவாக்கிய படிம உருவாக்கத்தினூடாக அதைக் கடந்துசெல்வது. எளிமையான ஒரு கற்பனைச் சித்திரத்தை அளித்து அதன் நுண்தளம் வழியாக அதே பரவச நிலையை வெளிப்படுத்தும் கவிதைகள்.

உடற்பயிற்சி ஆசிரியர்

கடவுள் ஒருநாள்
உடற்பயிற்சி ஆசிரியரைப்போல
எல்லாமனிதர்களையும்
ஒரு நெடிய வரிசையாய் நிற்க வைத்தார்

அப்புறம்
ஒரு நீண்ட கம்பியை
வட்டமாக வளைப்பதுபோல
முதல் மனிதனையும்
கடைசிமனிதனையும்
அடுத்தடுத்து வரும்படி
அவ்வரிசையை
ஒரு வட்ட வளையமாக்கினார்

தோதான வெற்றுக்கைகள் கொண்டு
கைகள் கோர்த்துக்கொள்ளச்செய்தார்

அக்கணம்
ஒரு மின்சாரம் இயக்கியதுபோல
பற்றிக்கொண்டது அந்த மகிழ்ச்சி
அத்தனை முகங்களையும்

Read more...

பூனை

முதல் அம்சம்
அதன் மெத்தென்ற ஸ்பரிசம்
குழைவு அடிவயிற்றின்
பீதியூட்டும் உயிர் கதகதப்பு

இருவிழிகள் நட்சத்திரங்கள்
பார்க்கும் பார்வையில்
சிதறிஓடும் இருள் எலிகள்

'நான்! நான்!''என புலிபோல
நட்டுக்குத்தென வால் தூக்கி நடக்கையில்
உருளும் கோட்டமுள்ள சக்கரமென
புழுப்போல
அதன் வயிறசைதல் காணலாம்

கூர் நகங்களுடன் ஒலியெழுப்பாத
சாமர்த்திய நடை இருந்தும்
'மியாவ்'என்ற சுயப்பிரலாப குரலால்
தன் இரையை தானே ஓட்டிவிடும்
முட்டாள் ஜென்மம்

நூல்கண்டோடும்
திரைச்சீலைகளின் அசையும் நுனியோடும்
விளையாடும் புத்திதான் எனினும்
பறவைகளை பாய்ந்து கவ்வும் குரூரமும் உண்டு

எலியை குதறுகையில்
பகிரங்கப்படும் அதன் கொடும்பல்லையும்
நக்கி நக்கி பாலருந்துகையில்
தெரியவரும் இளகிய நாக்கையும்
ஒரே மண்டைக்குள் வைத்துவிட்டார் கடவுள்

ஞாபகப்படுத்திப்பாருங்கள்
உங்கள் குழந்தைப்பருவத்தில் நீங்கள்
இப்பூனையைக் கண்டு பயந்ததைப்போலவே
சினேகிக்கவும் செய்திருக்கிறீர்களல்லவா?

தேவ தேவன் கவிதைகள் முழுத்தொகுப்பு: தமிழினி வெளியீடு

Read more...

வரைபடங்கள்

வான்வெளியில் பிரகாசிக்கும் ஒரு பொருளைக்காண
வரைபடம் எதற்கு ?

வானமோ
இரு மண்துகள்களுக்கும் இடையிலும் இருக்கிறது

Read more...

இலையசைவு

விருப்பமோ தீர்மானமோ இன்றி
இலையில் தங்கியிருந்த நீர்
சொட்டு சொட்டாக விழுந்துகொண்டிருந்தது
ஆனால் முடிந்தவுடன் ஒரு விடுதலை;
‘அப்பாடா’ என மேலெழுந்தது இலை

அது தன்னில் ஒரு புன்னகை ஒளிரத்
தேவையான ஈரத்தை மட்டுமே வைத்துக்கொண்டு
ஆமோதிப்போ மறுதலிப்போ அல்லாத
ஒரு தலையசைப்பைச் செய்வதாய்
அசைந்துகொண்டிருந்தது இங்குமங்குமாக:
ஒரு நீண்ட கிளையின் சிறு உறுப்பு
தான் என ஒரு கணமும், முழுமுதல் என ஒரு கணமும்

இங்குமங்குமாய் அல்லாது
வேறெங்கும் செல்லாத ஒரு பயணியாய்
என்றும் இருக்கிறதைமட்டுமே அறிந்திருந்தது அது.

Read more...

வீடும் வீடும்

பாதுகாப்பற்ற ஒரு மலரின் கதகதப்பினுள்
பாதுகாப்புடன் இருக்கிறேன் நான்
என்னை ஆசுவாசப்படுத்த முயலும் இந்த வீடு
ஒரு காலத்தில்
என்னை ஓய்வுகொள்ள விடாது
வாட்டியெடுத்த ஓட்டைக் குடிசையிலும்
குளிருக்குப் பற்றாத
அம்மாவின் நைந்த சேலையிலும்
கருக்கொண்டது
எப்போதும் நம் இலட்சியமாக இருக்கும்
இவ்வுலகம் பற்றிய கனவு
நம்மில் ஒருக்காலும் இதுபோல
கருக்கொண்டதில்லை என்று அறிவேன்
மலரோடு தன் வேலை முடிந்ததும்
விலகி வெளி உலாவும் கருவண்டைப்போல
நாம் ஒருக்காலும் இருந்ததில்லை என்பதையும்
நான் அறிவேன்.

Read more...

தெய்வங்கள்

இலாபமே குறிக்கோளான
ஒரு தொழிற் கூடச் சுவரில்
அனைத்துப் பிரிவுக் கடவுள்களும்
காட்சியளிக்கின்றனர்
பேணப்படும் தெய்வமோ:
சாதுர்யம்.

போரும் அமைதியின்மையுமே
குறிக்கோளானாற் போன்ற
நம் சமூகச் சுவரில்
ஒவ்வொரு கடவுளையும் மறுக்கிற
ஒவ்வொரு கடவுள்.
பேணப்படும் தெய்வமோ:
அறிவீனம்

Read more...

Wednesday, March 2, 2011

கவிதையைக் கவிதைதான் மதிப்பிட முடியும் - தேவதேவன்

சும்மா இருக்க வந்ததுதான் என்றாலும் கவிதையால் நமது உலக வாழ்வை மதிப்பிடாமல் இருக்க் முடியவில்லை .உலகவாழ்வை கவிதை மதிப்பிடுகிறதே என்று அதற்காக கவிதையை உலகவாழ்வு மதிப்பிட்டு விடலாமா ? விட முடியுமா ?கவிதையை கவிதைதான் மதிப்பிட முடியும். அதாவது கவிதை தன்னைத்தான் மதிப்பிட்டுக் கொள்கிறது.வேறு எதற்கும் அந்த அதிகாரத்தை அது கொடுக்கவில்லை.

ஓர் இலக்கியக்கூட்டத்தில் பிரமிள் தனது கவிதைகள் குறித்து கேட்கப்பட்டபோது ' அவையெல்லாம் ரத்தினங்கள் ' [gems] என்றார். அதற்கு அந்த வாசகர் ' அப்படியானால் அவை வெறும் அணிகலன்கள்தானா ? ' ' என்று எதிர் வினை செய்ததற்கு அவர் ' ரத்தினம் -- அது ஓரு சக்திமிக்க ஆயுதம்! ' என்றார்.

பிரமிள் தனது வாசகனுக்கு தான் சென்றடைந்த உயரத்துக்கு அவனை அழைத்துச்செல்ல அடிவாரத்திலிருந்து உச்சிவரை படிகளை அமைத்துக் கொண்டிருப்பதில்லை. அவனது ஆர்வத்திலும் திராணியிலும் நம்பிக்கை வைத்தபடி வெகு வேகமாயும் லாவகமாயும் தாவித்தாவிசெல்வது அவர் சிந்தனை.

எனது நீள் கவிதையான கானகவாசியில் ரத்தினத்தை தேடிசெல்கிறது ஒருகூட்டம் .இயற்கையின் ஓர் அற்புத சிருஷ்டியாகிய ரத்தினம் இங்கு பேராசையின் குறியீட்டாக ஆவது தேர்ந்த வாசகர் ஒருவரை திடுக்கிட வைத்தது.

ஒரு சந்தர்ப்பத்தில் '....அப்படியானால் கவிதை இந்த வாழ்வுக்கு ஒன்றும் செய்யாதா ? ' என்று கேட்கப்பட்ட போது நான் சொன்னேன் ' ரத்தினம் இயற்கையின் ஓர் அற்புத சிருஷ்டி என்ற முறையில் நம்மிடம் கேட்டு நிற்கும் விலை என்ன ? மனித சமூக அளவுகோல்களால் நாம் அதற்கு அளித்திருக்கும் மதிப்பு, விலை மனிதனை படுகுழிக்குள் தள்ளிவிடக்கூடியது என்ற உண்மை நமக்கு உணர்த்துவது என்ன ? ரத்தினம் ஒரே சமயம் சிருஷ்டிகரத்தின் குறியீடாகவும் , பேராசையின் குறியீடாகவும், நிகழ்வதன் சிக்கலை அவிழ்த்து வாழ்வை மீட்சிகொள்ளும் முறையே கவிதை என்பது ... '

உண்மைதான் , ஒரு பொருளின் உலகியல் மதிப்பை அறவே ஒதுக்கிவிடுகிறது கவிதை .ஆகவே நாம் மீண்டும் மீண்டும் இதை சொல்லிக் கொள்கிறோம் ,உலகவாழ்வை கவிதை மதிப்பிடுகிறதே என்று கவிதையை உலக வாழ்வு மதிப்பிட்டுவிட முடியாது .கவிதையை கவிதையால்தான் மதிப்பிட முடியும்.

[நுழை வாயிலிலே நின்றுவிட்ட கோலம் முன்னுரை 19991]

Read more...

01 (பைனரி)

0

கடலில் கடலாவோம்
வானில் வானாவோம்
நிலத்தில் நிலமாவோம்
மரணத்தில் மரணமாவோம்
வாழ்வில் வாழ்வாவோம்

1

கடலில் நீந்துவோம்
வானில் சிறகடிப்போம்
நிலத்தில் நடப்போம்
மரணத்தில் வாழ்வோம்
வாழ்வில் மரிப்போம்

01

கடலாயிருந்துகொண்டே நீந்துவோம்
வானாயிருந்துகொண்டே சிறகடிப்போம்
நிலமாயிருந்துகொண்டே நடப்போம்
வாழ்வாயிருந்துகொண்டே மரிப்போம்

Read more...

கவிதையின் அரசியல் : தேவதேவன் - ஜெயமோகன்

எங்களூரில் தினம் ஒரு இடத்தில் 'தகடு எடுப்பு' நடக்கும். மாலையானால் பேருந்தில் பூசாரி வந்திறங்குவார். பெரிய துணிப்பை, நீண்ட கூந்தல் பெரிய மீசை ஜிப்பா. அவரிடம் ''அண்ணாச்சி தகடு ஆரு வீட்டுக்கு?''என்று கேட்டபடி வேடிக்கைபார்க்கும் கும்பல் பின்னால் போகும்.

அந்தி கறுத்ததும் வீட்டுக்கு தென்மேற்கு மூலையில் நுனிவாழை இலை விரித்து, பச்சைமட்டைக்கீற்றில் தேங்காயெண்ணை ஊற்றி சுருட்டிய துணித்திரியில் பந்தம் கொளுத்தி, நான்குபக்கமும் நட்டு, நடுவே கல்லில் சாமி ஆவாகனம் பண்ணி நிறுத்தி ,மஞ்சள்பொடிகலந்த அரிசிப்பொரியும் உடைத்த தேங்காயும் தெச்சி செவ்வரளிப்பூவும் படைத்து, பூசாரி உடுக்கு முழக்கி அமர்வார்.

ஒருகட்டத்தில் இருந்தபடியே மெல்ல ஆடி ''ஹிய்யே!!!'' என்று அலறி எழுந்து சன்னதம் கொண்டு ஆடுவார். ''நான் மாதி வந்திருக்கேண்டா... ரெத்தம் குடுடா!'' என்று கூவி ஆடி ஆடி வீட்டுத்தோட்டத்தின் சில மூலைகளில் சென்று நின்று காலால் தட்டிக் காட்டுவார். அந்த இடத்தில் வீட்டு உரிமையாளர்கள் மண்ணை தோண்டுவார்கள். தோண்டி தோண்டி இளக்கிய இறுகிய மண்ணில் இருந்துச் சட்டென்று ஒரு செம்புச்சுருள் அகப்படும். தகடு!

செய்வினைசெய்து மந்திரம் பொறித்த இந்த தகடு பூசாரியின் காலில் இடுக்கப்பட்டிருக்கும் என்றும், இடுக்கியபடியே அவர் ஊரிலிருந்தே கிளம்பி வருவார் என்றும் எனக்கு என் சொந்த பெரியப்பா மகன் இதேவேலையைச் செய்ய ஆரம்பித்த போதே புரிந்தது.

நெடுங்காலமாக நம் இலக்கியச்சூழலில் இலக்கியப்படைப்பில் அரசியலைக் கண்டடையும் பணியும் இந்த ரீதியில்தான் நடந்துவந்திருக்கிறது. பூசாரி கூலிவாங்கி கும்பிட்டு போய்விடுவார்.அதன் பின் படைப்பு கிடந்து அலமுறையிடவேண்டும், நான் அது அல்ல என்று. கவிதையில் அரசியலைக் கண்டடைவது ஓர் அரசியல் செயல்பாடு மட்டுமே. இலக்கியத்திற்கும் அதற்கும் தொடர்பில்லை. பெரும்பாலும் அரசியல்வாதிகளால் அவர்களின் அப்போதிய தரப்புக்கு ஏற்ப விருப்புவெறுப்புகளுக்கு இணங்க அது செய்யபப்டுகிறது. அரசியலை மட்டுமே காண்பது மூடர்களின் வேலை.

ஏறத்தாழ இருபதுவருடங்களுக்கு முன்பு கவிதையின் அரசியல் பற்றி ஒரு ஆர்வமூட்டும் விவாதம் நடந்தது. அன்று கருத்துலகில் முற்போக்கினர் ஒரு வலுவான தரப்பாக விளங்கி வந்தார்கள். அனைத்தும் அரசியலே, அரசியல் இல்லாமல் எதுவுமே இல்லை என்ற கூவலை இலக்கியத்தில் ஓங்கி ஒலித்தனர். இன்றும் அதே குரல் அழகியலுக்குப் பதில் அரசியல் என்ற மழுங்கிப்போன ஒலியாக கேட்கத்தான் செய்கிறது.

அப்போது தம் கவிதைகளைப்பற்றி பேசிய பிரமிள் அவை அரசியலுக்கு அப்பாற்பட்டவை என்றார். அரசியல் என்ற சொல்லால் சுட்டப்படும் உலகியல் சார்ந்த, அதிகாரம் சார்ந்த சிந்தனைகளுடனும் செயல்பாடுகளுடனும் அவற்றுக்கு தொடர்பில்லை என்றும் அவற்றுக்கு அரசியல் உண்டென்றால் அது கவிதையின் அரசியலே என்றும் சொன்னார்.

கவிதையில் பிரமிளின் நேர்மாணவராகவும் தொடர்ச்சியாகவும் வந்தவர் தேவதேவன். தேவதேவன் கவிதைகளுக்கு பிரமிள் எழுதிய முன்னுரைகளிலும் கவிதைக்குரிய இந்த தனி அரசியலை சுட்டிக்காட்டியுமிருக்கிறார். பின்னர் தேவதேவன் 'கவிதைபற்றி' என்ற தன் சிறு நூலிலும் பல உரையாடல்களிலும் இதைப்பற்றி பேசியிருக்கிறார்.

இங்கு தேவதேவன் சுட்டிக்காட்டிய ஒரு உதாரணத்தைமட்டும் நினைவூட்ட விழைகிறேன். தன் கவிதைகளை பிரமிள் ரத்தினங்கள் என்றார். அது இடதுசாரி விமரிசகர் ஒருவரை எரிச்சலடையச் செய்தது. அப்படியானால் அவர் கவிதைகளுக்கு ரத்தினங்களைப்போல பயன்மதிப்பு ஏதும் இல்லையா, அவை வெறும் அலங்காரப்பொருட்களும் ஆடம்பரப்பொருட்களும் மட்டும்தானா என்று கேட்டார்.

பிரமிள் சார்பாக அதைப்பற்றி சிந்திக்கும் தேவதேவன் ரத்தினங்களைப்போலவே கவிதையின் பயன்மதிப்பும் குறியீட்டுரீதியானதே என்கிறார். அன்றாடவாழ்க்கை சார்ந்து பயன்படுத்திக் கொள்ள முடியாததால் ரத்தினங்கள் உலகியலுக்கு அப்பாற்பட்டவையாக உள்ளன. உலகியலால் ரத்தினங்களை மதிப்பிட்டுவிட முடியாது. அவற்றின் மதிப்பு அவை சுட்டிநிற்கும் அபூர்வமான ஒரு அழகியலின், அது சார்ந்த மனஎழுச்சியின், அதன் மூலம் உருவாகும் குறியீட்டுத்தன்மையின் விளைவாக உருவாகி வருவது.

அதுபோலவே கவிதையும் என குறிப்பிடும் தேவதேவன் இபப்டிச் சொல்லி முடிக்கிறார் 'ஆம், உலகியலை கவிதை மதிப்பிடுகிறதே என கவிதையை உலகியல் மதிப்பிட்டுவிட முடியாது'.

மிக அபூர்வமான ஒரு வரி இது. உலகின் சிறந்த கவிதைகளில் தோய்ந்த ஒருவருக்கு இது மிக எளிமையான அடிப்படைக்கூற்றாக தென்படும். ஆனால் கவிதையை உணர்ந்திராத ஒருவருக்கு எத்தனை ஆயிரம் சொற்களால் விளக்கினாலும் சற்றும் புரியவைக்க இயலாது.

ஏறத்தாழ முப்பதுவருடங்களாக எழுதிவரும் தேவதேவனின் கவிதைகளைப் புரிந்துகொள்ள இவ்வரியையே திறவுகோலாகக் கொள்ளலாம். 'உலகியலால் மதிப்பிட முடியாத உலகியலை மதிப்பிடும் கவிதைகள்' அவை.

இத்தனை வருடங்களில் தமிழ் சூழலில் இருந்து தேவதேவனைப்பற்றி வந்த பெரும்பாலான அபிப்பிராயங்கள் எளிய உலகியல் நோக்கை அவரது கவிதைகள் மேல் போட்டு அவரை வகுக்கும் முயற்சிகள். மரம் மட்டை பறவை பூ என்று கவிதை எழுதும் அழகியல்வாதி என்ற மனப்படிமமே பொதுவாக உள்ளது. அழகியல் கோட்பாட்டாளர்கள் அவரை 'படிமக்கவிஞர்' என்று சொல்லக்கூடும். தத்துவ நோக்கில் அவரை 'மீபொருண்மையியல் கவிஞர்' [Metaphysical Poet] என்று வகுத்திருக்கிறார்கள். சமூக மாற்றத்துக்க்குக் குரல்கொடுக்காத 'அகவய'க் கவிஞர் அவர் என்று அவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இவற்றால் அளவிடப்படாமல் இவற்றையெல்லாம் அளவிடும் தன்மையுடன் அவரது கவிதைகள் நின்றுகொண்டிருக்கின்றன. அவரது கவிதைக்காலகட்டத்தில் பல அழகியல், திறனாய்வுக் கோட்பாடுகள் வந்து சென்றுவிட்டிருக்கின்றன. காலத்தால் மேலும் மெலும் ஒளிபெற்று நாம் வாழும் காலகட்டத்தின் மகத்தான கவிஞராக அவர் இன்று நுண்ணியவாசகர்களால் கணிக்கப்படுகிறார். எந்த பெரும் கவிஞனையும்போல அவரும் எதிர்காலத்தின் படைப்பாளி.

தன்னையே களைந்து விட்டு இயற்கையின் பிரம்மாண்டம் முன் நிற்பதே தேவதேவனின் கவிதையின் முதல் இயல்பாகும். அது ஒருவகை நிர்வாணம். தன் அடையாளங்களை, தன்னிலையை, தான் என்ற பிரக்ஞையை படிப்படியாகத் துறந்து தானே அதுவாக ஆகி நிற்கும் பெருநிலையைச் சென்றடைகிறார்.

இந்தப்படிநிலைகளில் ஏதேனும் ஒன்றில் நின்றபடி தன்னைக் கவிஞர் என அவர் உணரலாம். அப்போது தன் வாழ்க்கையை தம்மவர் வாழ்க்கையை அவர் திரும்பிப்பார்க்கக் கூடும். அவை அறச்சீற்றமாக, ஆவேசமாக, கையறுநிலையாக வெளிப்படவும்கூடும்.

நாம் அரசியல் எங்கே இங்கு பொதுவாகச் சொல்வது நமது உலகியல் சூழலுக்கான நேரடி எதிர்வினையை மட்டுமே. நமது தன்னிலையால், நமது தேவைகலால் உருவாவது இது. அந்த அரசியலுக்கும் தன்னிலையை அழித்து அடையும் கவிதையின் அரசியலுக்கும் பெரும் வேறுபாடு உண்டு.

ஆகவேதான் தன் அரசியல் என்பது மண்ணில் வேறு எங்குமுள்ள அரசியல் அல்ல, அது கவிதையின் அரசியல் மட்டுமே என்று தேவதேவன் சொல்கிறார். ஒரு கவிஞனாக மட்டுமே உணரும் நிலையின் குரலே அவரது கவிதைகள். எந்த நிலைப்பாடுக்கும் எந்த இறுதிக் கோட்பாட்டுக்கும் கட்டுப்படாத சுதந்திரத்தின் கவிதைகள் அவை. எந்த தரப்பும் அவற்றை சொந்தம் கொண்டாட முடிவதில்லை. அவர் நிற்பதற்கு அன்றாட வாழ்க்கையில் பீடமே இல்லை.

தன்னை ஓர் எளிய மனிதனாக, தான் வாழும் காலம்- இடம்- வரலாற்றுச்சூழலுக்கு கட்டுப்பட்டவனாக தேவதேவன் உருவகித்துக் கொள்வதில்லை. ''எல்லாவற்றையும் மனிதன் பாவம் அங்குலப்புழுவைப்போல தன்னைவைத்தே அளந்துகொள்கிறான். அவன் எல்லையின்மையைத்தொடும் ஒரு பேராளுமையாக தன்னை கண்டடைந்து கொள்ளாதவரை அவனது பார்வையும் படைப்பும் குறைவுபட்டதாகவே இருக்கிறது'' என்று சொல்லும் தேவதேவன் [முழுத்தொகுப்புக்கான முன்னுரை] தான் தனக்கென தேவதேவன் என்ற பேரை சூட்டிக் கொண்டதே தன் முதல் கவிதை என உணர்வதாகச் சொல்கிறார்.

இரைபொறுக்கவும்
முட்டையிடவும் மட்டுமே
மண்ணுக்குவரும்
வான்வெளிப்பறவை ஒன்று’ - என தன்னை உணர்தலே அவரது சுயம்.

இவ்வாறு தன்னை அதுவாக, பிறிதிலாததாக, முடிவிலியாக உருவகித்துக் கொண்ட ஒருவனின் அரசியல் எதுவோ அதுவே தேவதேவனின் கவிதைகளின் அரசியல். அந்தப் பெருநிலையை அவர் கவிதைகளில் கண்டடைந்தவர்கள் அதை புரிந்துகொள்வதில் சிரமமேயில்லை.

முன்பு ஒரு முறை ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருக்கும்போது அவர் சொன்னார். '' 'கேளடா மானுடா!'என்று பாரதி பாடுகிறானே அவன் என்ன மானுடன் அல்லவா? தேவனா? என்ன அகங்காரம் இது?'' நான் சொன்னேன் ''சற்றும் மிகையகங்காரம் இல்லாமல் சாதாரணமாக ஒருவன் ஏய் மானுடச்சாதியே என்று கூவ முடியுமென்றால் மட்டுமே அவன் கவிஞன். கவிதை நிகழும் அக்கணத்தில் மானுடனாக இருப்பவன் கவிஞனே அல்ல'' என்று.

கவிதையின் அரசியல் என்றால் இதுதான், மண்ணில் நிகழும் அதிகாரப்பூசல்களில், கோட்பாட்டு விவாதங்களில், சமர்களில் ஒரு தரப்பின் குரலாக நிற்பதல்ல அது. மண்ணில் வாழும் அனைத்து உயிர்களின் மேலும் பொழியும் பெருங்கருணையின் குரலாக நிற்பது.

ஒரு தரப்பின் குரலாக ஒலிக்கும் படைப்புகள் வாதாடுகின்றன. தாக்குகின்றன. வசைபாடுகின்றன. மெல்ல மெல்ல வெறுப்பையே ஆயுதமாகக் கொள்கின்றன. அவற்றின் அறசீற்றமும் நீதியுணர்வும்கூட மெல்லமெல்ல எதிர்மறையானதாக மாறிப்போகிறது.

நாராயணகுருவை பிற இந்திய சமூக சீர்திருத்தவாதிகளிடம் இருந்து முற்றாக மாறுபடுத்திக் காட்டும் அம்சம் இதுவே. அவர் மெய்ஞானி, சமூக சீர்திருத்தக் குரலாக ஒலித்தவர். ஏறதாழ ஐம்பது வருடம் மாபெரும் மக்களியக்கங்களை நிகழ்த்திய அவர் எந்நிலையிலும் எதிரமறையாக எதுவுமே சொன்னதில்லை என்று வரலாறு சொல்கிறது. வெறுப்பற்ற ஒரு நேர்மறை இயக்கம் அது. அது ஞானியின் அரசியல்.

அதற்கு இணையானதே கவிதையின் அரசியல். எழுதுகையில் கவிஞன் ஞானியே. அவனால் தொடகூடாத உச்சம் என ஏதும் இல்லை. அந்த மெய்நிலையில் நின்று ஈரமுலராத பேரன்பை மட்டுமே ஆயுதமாகக் கொண்டு நிற்கும் ஆக்கங்கள் தேவதேவன் படைப்புகள்.

எத்தனையோ தேவதேவன் கவிதைகளை இத்தருணத்தில் நான் நினைவுகூர்கிறேன்.

'அன்றைய அற்புதக் காட்சியாய்
சாலையின் நடுவே முளைத்து நின்றது ஒரு புல்!'

என்ற பெருவியப்பின் வெளியில் அலையும் தேவதேவனை நமக்குக் காட்டும் கவிதைகள் ஒருபக்கம் என்றால்

’ஆயிரம் மனிதர்களோடு நான் அமர்ந்திருக்கையில்
மொத்த உலகத்தீமையின் ஆயிரத்தில் ஒருபங்கு
என் தலையை அழுத்தியது’

என்று கொந்தளிக்கும் தேவதேவனைக் காட்டும் கவிதைகள் மறுபுறமுமாக விரிகின்றது அவரது கவியுலகம். அந்த அதிதூய முழுமைநிலையில் நின்றபடியே இந்தக் கொந்தளிப்பும் நிகழ்கிறதென்பதே தேவதேவதேவன் கவிதைகளின் அரசியலாகும்.

இந்த தூய அழகியல்வாதியே மனிதாபிமானமும் அறச்சீற்றமும் பொங்கும் கவிதைகளை எழுதியிருக்கிறார் என்பதை இப்படித்தான் நாம் புரிந்துகொள்ளவேண்டும். அக்கவிதைகளில் உள்ள அடிவயிற்றுச் சீற்றத்தை நாம் ஒருபோதும் நம் தொழில்முறைப்புரட்சியாளர்களிடம் கண்டுகொள்ள முடியாது.

சிலவருடங்கள் முன் திண்ணியம் என்ற ஊரில் தலித்துக்களை மலம் தின்ன வைத்த போது தேவதேவன் எழுதிய தீவிரமான கவிதைகள் சிலரை ஆச்சரியப்படச் செய்தன. இவர் மலர்களையும் வண்ணத்துப்பூச்சியையும் பற்றி எழுதுபவர் அல்லவா என்ன ஆயிற்று என்று கேட்டார்கள். தேவதேவனை தொடர்ந்து வாசிக்கும் வாசகர்களுக்கு அக்கவிதைகள் எந்த வியப்பையும் உருவாக்கவில்லை. என்றுமே அந்த உக்கிரமான அறச்சீற்ற நிலையில்தான் அவர் இருந்திருக்கிறார். அவ்வரிசையில் வைக்கத்தக்க பல கவிதைகளை அவரில் நாம் காணலாம் .அச்சமயம் அந்நிகழ்வுடன் அவரது கவிதை இணைந்துகொண்டது அவ்வளவுதான்.

அவரது சீற்றம் எளிய அரசியல் கோபம் அல்ல. ஏன் அது நீதியுணர்வின் வெளிப்பாடுகூட அல்ல. அது அதைவிட மேம்பட்ட ஒன்று. அது தன்னை மண்ணில் வாழும் அனைத்துயிரிடமும் கண்டுகொண்டு ஒரு பெருங்கருணையாக உணரும் ஒரு கவிஞனின் குரல். அறக்கோபம் எரிந்த திண்ணியம் கவிதைகளின் அதே குரலையே நாம் 'யாரோ ஒருவன் என்று எப்படிச் சொல்வேன்?' என்ற கவிதையிலும் ஆரத்தழுவும் பேரன்பாகக் காண்கிறோம். கைவிடப்பட்டவனை, தெருவில் வாழ்பவனைக் கண்டு கவிமனம் கொள்ளும் உணர்வு அது '--யாரோ ஒருவன் என எப்படிச் சொல்வேன்?'' அக்கவிதைக்கும் இந்த திண்ணியம் கவிதைகளுக்கும் அடிபப்டை மன எழுச்சி ஒன்றே.

நித்ய சைதன்ய யதியை சொல்லாமல் நான் முடிக்க இயலாது. நடக்கப்போகும்போது ஒரு அழகிய சிறு இறகு தரையில் கிடந்தது. நித்யா அதை எடுத்து தன் மென்விரல்களினால் மெல்ல வருடினார். 'விண்ணின் ஒரு சொல். ஒளியாலும் காற்றாலும் எழுதப்பட்ட ஒரு கடிதம்...'என்றார்.

அது சற்று கற்பனாவாதச் சாயலுடன் ஒலித்ததாக அப்போது எனக்குப் பட்டது. 'அது ஒரு எளிய பறவையின் ஒரு மயிர். அதற்கு பறக்க உதவாதபோது உதிர்க்கபப்ட்டது'என்றேன்.

'விண்ணிலிருக்கும் பறவை தன்னை தனித்தறிவதில்லை. ஆகவே அதுவும் விண்ணும் வேறு வேறல்ல...'என்றார் நித்யா. தேவதேவனின் இக்கவிதைகள் முடிவிலா விசும்பின் கடிதங்கள் என்றே எண்ணுகிறேன். அதில் ஒரு துளியென தன்னை அழித்தவனால் ஆக்கபட்டவை என்பதனால்.

[30-1-2008 அன்று திருநெல்வேலி தூய சவேரியார் கல்லூரி தமிழ் துறை சார்பில் தேவதேவன் விளக்கு விருது பெற்றதை கௌரவிக்கும் முகமாக நடத்தப்பெற்ற 'தேவதேவன் கருத்தர'ங்கில் ஆற்றிய உரை]

Read more...

குருவியுடன் சற்று நேரம்

நான் அதைப்பார்த்து புன்னகைத்தவுடன்
அது கேட்டது
'என்ன செய்துகொண்டிருக்கிறாய் ? '
'ஒரு கவிதையை எழுதப்பார்க்கிறேன் '
'புரியும்படியாக சொல் '
'உன்பார்வையில் சொல்ல வேண்டுமானால் பறத்தல்
படிப்பவர்களை கொஞ்சம் பறக்கும்படி செய்கிற
சில வரிகள் எழுத முயன்றுகொண்டிருக்கிறேன் '
'உனக்கு பறக்கத் தெரியுமா ? '
'பறக்கத்தெரிந்தவன்தானே எழுத முடியும் ? ' '
'அப்படியா ரொம்ப சந்தோஷம்
அதுதான் உன்னைப்பார்த்த உடனேயே
எனக்கு உன்மேல் ஒரு பிரியம்
ஏற்பட்டது போலிருக்கிறது
சரி இப்போது என்னோடு வருகிறாயா
ஒரு ரவுண்டு போய்வருவோம் '

இருவரும் பறக்கதொடங்கினோம்

'எங்கே போயிருந்தீர்கள் இத்தனைநேரம் ?
எத்தனை முறை கூப்பிட்டேன் தெரியுமா ? '
மாடிப்படி ஏறிவந்து எரிச்சலுற்றாள் மனைவி

எழுதுவதிலேயே மூழ்கி இருந்திருக்கிறேன் என்றேன்
வெற்றுக்காகிதத்தை சுட்டிக்காட்டி
விடாது அவள் துரத்த
உண்மை வெளியே வந்துவிட்டது

Read more...

உப்பளம்

சேறு மித்துக் கூறு கட்டிய
தெப்பங்களிலும் பாத்திகளிலும்
என் நாடி நரம்புகளிலும்
நிரம்புகின்றன
பூமியிலிருந்தும் கடலிலிருந்தும்
மின்சார வேகம்
உறிஞ்சிக் கொட்டுகிற
நீர்

நீருக்கும்
சூரியனுக்கும்
நடுவே
நீரோடு நீராய்க்
காய்ச்சப்படும் மனிதன்
முதிர்கிறான்
ஒரு தானியக் கதிராய்.
ஊமை இதழ் திறந்து
எட்டிப் பார்க்கின்றன
உப்புப் பற்கள்.
இப்புன்னகை காணவோ
இத்தனை உழைப்பும்?
மனிதப் பாட்டின் அமோக விளைச்சல்
மலை மலையாய்க் குவிந்து
கண்கூச வைக்கிறது
பூமியின் மேல்தோலைப் பிறாண்டித்
தூசு போர்த்தும் பேய்க்காற்றின்
ஜம்பம் சாயாதபடி
பூமியெங்கும்
இடையறாது நீர் தெளித்துக்
கண்காணிக்கிறான் மனிதன்
மீண்டும் எடுத்துக்கொள்ளப்
பொழியும் மழையிடமிருந்து
காக்கிறது
அம்பாரங்களின் மார்மூடிய
மேலாடைக் கற்பு.
கோடானுகோடிக்
கண்சிமிட்டல்கள் ஓய்ந்து
நிலைத்த பார்வை
இருள்திரை நீங்கிய
சூர்யப் பிரகாசம்
விடிவு
நிழலற்ற பேரொளி
ஓர் உப்புக் கற்பளிங்கில்
சுடர்கிறது
கடலும் பூமியும் பரிதியோடிய
பெருங்கதை
மானுஷ்யம்
வியர்வை

Read more...

Tuesday, March 1, 2011

யாரோ ஒருவன் என எப்படிச் சொல்வேன்?

குப்பைத்தொட்டியோரம்
குடித்துவிட்டு விழுந்துகிடப்போனை

வீடற்று நாடற்று
வேறெந்தப் பாதுகாப்புமற்று
புழுதி படிந்த நடைபாதையில்
பூட்டு தொங்கும் கடை ஒட்டிப்
படுத்துத் துயில்வோனை

நள்ளிரவில் அரசு மருத்துவமனை நோக்கிக்
கைக்குழந்தை குலுங்க அழுதுகொண்டு ஓடும் பெண்ணை

நடைபாதைப் புழுதியில் அம்மணமாய்
கைத்தலையணையும் அட்டணக்காலுமாய்
வானம் வெறித்துப் படுத்திருக்கும் பைத்தியக்காரனை

எதனையும் கவனிக்க முடியாத வேகத்தில்
வாகனாதிகளில் விரைவோனை

காக்கிச் சட்டை துப்பாக்கிகளால் கைவிலங்குடன்
அழைத்துச் செல்லப்படும் ஒற்றைக் கைதியை

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP