Tuesday, March 1, 2011

நீரில் தெரியும் நெற்கதிர்கள் - கவிஞர் க.மோகனரங்கன்


’கருணைமிக்க பேரியற்கையின் முன் வியந்து நிற்கும் குழந்தைமை’ என்று இவருடைய கவிதைகளின் ஆதார மையத்தைச் சுருக்கிச் சொல்வதென்றால் ஒற்றை வரியில் கூறிவிடலாம்.

தமிழ்க்கவிதைகளில் காணப்படும் பொதுவான போக்குகளிலிருந்து வெகுவாக ஒதுங்கியும், அதே சமயத்தில் தனக்கான தனித்தன்மையுடனும் ஒலிப்பது தேவதேவனின் தணிவான குரல். தொடர்ந்து 30 ஆண்டுகள், 15 தொகுதிகள், 900க்கும் அதிகமான பக்கங்கள் என விரியும் அவரது கவிதைகளின் பரப்பு அசாதரணமான விரிவும், வண்ண மாறுபாடுகளும், ஆழமும் கொண்டது.

ஒருவன் இயற்கையுடன் கொள்ளும் விதவிதமான தொடர்புகளும், அத்தருணங்களின் தீராவியப்பும் அவற்றினூடாக மனம் கொள்ளும் விகாசமும், சாந்தியுமே தேவதேவனின் கவிதைகளில் திரும்பத் திரும்பக் காட்சிப்படுத்தப்படுகிறது. ஒருவித உன்னத்மாக்கலின் பரவசத்துடன் அவர் அக்காட்சிகளை சித்தரிக்கும்போது உருவாகிவரும் நெகிழ்ச்சி தமிழ்ப் புதுக்கவிதைகளில் அரிதான ஒன்றாகும். இதைத் தவிர அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகள், சமூக உறவுகளில் எதிர்கொள்ள நேரிடும் முரண்பாடுகள் முதலியன குறித்த ஒரு விசாரமும் இவர் கவிதைகளில் அடியோட்டமாகத் தென்படுகிறது. அச்சிக்கல்களுக்கான காரணிகளை இவர் அரசியல், பொருளாதார மட்டத்தில் தேடுவதில்லை. மாறாக, மனிதர்களின் அக வறுமையையே அனைத்திற்கும் காரணமாகக் காண்கிறார்.

பரந்த இந்த பூமி, இதில் இடையறாது தொழிற்படும் பஞ்ச பூதங்கள், இதன் நடுவே தோன்றிய பலதரப்பட்ட தாவர, மிருக உயிர் ராசிகள், இவை அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்து ஒரு ஒத்திசைவுடன் வினையாற்றி வந்தன. இது பிரபஞ்ச இயக்கத்தின் தவிர்க்க முடியாத நியதி. தோன்றி கோடிக்கணக்கான ஆண்டுகள் வரைக்கும் பூமி, இநியது வழுவாமலேதான் சுழன்று கொண்டிருந்தது. இரு கால்களில் எழுந்து நின்ற மனிதன் பின்னர், இந்த உலகின் மையம் ‘நானே’ என்று தலை கனத்து நடக்க முற்பட்டபோதுதான் இந்த ஒத்திசைவின் சுருதி முதன்முறையாக பிசகத் தொடங்கிற்று. இன்று உலகில் காணப்படும் அத்தனை சீர்கேடுகளுக்குமான ஊற்றுமுகம் அச்சுருதியின் குலைவிலிருந்தே பிறக்கிறது. மனிதன் திரும்பவும் இயற்கையோடு இயைந்து, அதன் ஒரு பகுதியாகத் தன்னை உணர்ந்து நடக்கத் துவங்கினால், அவனுடைய வாழ்வு நிறைவும் அமைதியும் கொண்ட ஒன்றாக ஆகிவிடும் என்று நம்புபவர்கள் ஒரு சாரார் உண்டு. கடவுள் மற்றும் மத நம்பிக்கைகளின் மாற்றாக இயற்கையை வழிபடும் இத்தகைய சிந்தனைகளின் தொகுப்பை ‘இயற்கை மறை ஞானம்’ (Nature Mysticism) என்று குறிப்பிடுவார்கள். இதே போன்ற கூறுகளையும், சாயலகளையும் தேவதேவன் கவிதைகளில் காணலாம். குறிப்பாக இவர் கவிதைகளில் தொடர்ந்து வரும் அந்த ‘மரம்’ நமது சிந்தனை மரபில் உருவகித்துச் சொல்லப்பட்டிருக்கும் பெருங்கருணை என்ற  காலாதீதமான பண்பின் குறியீடாகவே நிற்கிறது எனலாம்.

வெளிப்படையான சித்திகரிப்புகளுக்கப்பால் உள்ளுறையாக அமைந்த எண்ண விசாரங்களைப் பொறுத்தவரையிலும், கடவுள் நம்பிக்கையற்ற, மதம் சாராத, ஒழுக்க மதிப்பீடுகளுக்கு அப்பாற்பட்ட அகவயமான சிந்தனைகளை உள்ளீடாகக் கொண்டவை தேவதேவனின் கவிதைகள். தவிரவும் இவர் கவிதைகளில் காணப்படும் காட்சி விவரஐ, படிம அமைப்பு போன்றவற்றை எடுத்துக் கொண்டால், அவற்றில் சங்க இலக்கியங்களில் ஓர் உத்தியாக முன்னிலைப்படுத்தப்படும் இயற்கை நவிற்சித் தன்மையினையும், வெளிப்பாட்டு மொழி எனப்பார்த்தால் பக்தி இலக்கியங்களில் ததும்பி வழியும் உணர்வு நெகிழ்ச்சியையும் ஒருசேரக் காணலாம்.

இலக்கியப் படைப்புகளை உத்தி மற்றும் பாணிகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தி மதிப்பிட முயலும் வாசகன் ஒருவன் இருப்பானெனில், அவ தேவதேவனின் கவிதைகளை எதிர்மறையாக அணுகும் சாத்தியமே அதிகம். இயற்கையை விதந்தொதும் விதமாக எழுதிக் குவிக்கப்பட்ட, பதினெட்டாம் நூற்றாண்டினைச் சேர்ந்த கற்பனாவாதக் கவிதைகளின், மரபுடன் இணைத்து நோக்கி, இவர் கவிதைகளைக் காலத்தால் பின்தங்கிய ஒன்றாக அவன் கருதக்கூடும். ஆனால். அது உண்மையாகாது. சாதாரணமாக தமிழ் நவீனத்துவக் கவிதையை அளவிட உபயோகிக்கும் வடிவ நேர்த்தி, சொற்தேர்வு, ஒற்றையுடல், நெகிழ்வற்ற இறுக்கம், உணர்வுச் சமநிலை போன்ற அளவுகோல்கள் இவர் கவிதகளை மதிப்பிட நமக்க்குப் பெரிதும் தடையாகவே அமையும்.

தேவதேவன் தன் கவிதைகளின் வடிவம் குறித்து கறாரான பார்வை எதையும் கொண்டிருப்பவராகத் தெரியவில்லை. ‘கவிஞனுக்கும் வாசகனுக்கும் பொதுவான மொழியில், தன்க்கே பிரத்தியேகமான ஓர் அனுபவத்தை - அதுவே மானுடனின் பொது அனுபவமாதலால் - பகிர நினைப்பதில்தான் மொழி உருவாகிறது. மொழியை மீறிய அந்த உணர்வுகளும், தரிசனங்களுமே கவிதைக்குத் தேவையானவை’ என்று கூறும் தேவதேவனின் கவிதை வரிகள் அந்தந்த கவிதைத் தருணங்களின் மனவெழுச்சிக்கேற்ப பொங்கிப் பிரவகிப்பதாகவோ, ததும்பி வழிவதாகவோ, மெதுவாக ஊறிப் பரவுவதாகவோ அமைகிறது.

தன் மனநிலையை மையமாகக் கொண்டு புறஉலகு முழுவதையும் மதிப்பிடும், நவீனத்துவ நோக்கின் பாதிப்பு இவரிடம் காணப்படுவதில்லை. மற்ற கவிஞர்களிடமிருந்து தேவதேவன் மாறுபடும் முக்கிய இடம் இதுதான். மனிதனின் நடத்தையிலுள்ள கீழ்மையை, விலங்குத் தன்மையை, புலனின்ப வேட்கையை, அதற்கான அவனது ஆழ்மன விருப்பங்களைப் பற்றிய கருமையான சித்திரங்கள் எதையும் இவருடைய கவிதைகளில் நாம் காண முடிவதில்லை. மனிதன் என்பவன் அவன் இச்சைகளால் அலைக்கழிக்கப்படும் பிராணி மட்டுமன்று, அசாதரணமான தருணங்களில் அவ்விச்சைகளையும் மீறி அவனை மேலெழச் செய்யும் ஆன்மாவும் கொண்டவனே மனிதன் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டவராகத் தென்படுகிறார் தேவதேவன்.

இன்றைய உலகியல் நடப்புகளிபடி பார்த்தால், இந்நம்பிக்கை ஒரு யதார்த்தமான கனவான, பழமையை நோக்கி நினைவு வலையை விரிக்கும் ஒரு ஏக்கமாகக்கூட ஒருவருக்குத் தோன்றக்கூடும். ஆனால் அது வெறும் கனவோ, ஏக்கமோ மாத்திரம் அல்ல. மனிதனின் உணர்வு, அறிவு அனைத்தையும் அதனளவில் விலகி நின்று, முரணற்ற இணைவாகக் காணும் ஒரு நிலையிலிருந்து பிறப்பது, மனிதனைக் குறித்த இந்நம்பிக்கை. நடைமுறை வாழ்வின் சிக்கல்களுக்கு மேலாக இந்நம்பிக்கையை உயர்த்திப் பிடிக்க கவிஞனுக்கு அசாதரணமான தீரமும், சுய நிச்சயமும் வேண்டியுள்ளது. ஒரு பொறியை ஊதி ஊதிப் பெரிக்கி, பெருந்தீயாக்கிக் கொள்வதைப்போலவே இந்நம்பிக்கையை அவன் மனவெழுச்சிகொண்ட சொற்கள் மூலம் வளர்த்தெடுத்து நம்முன் வைக்கிறான். அதனாலேயே, இவருடைய விவரணைகளில் மெலிதான கற்பனாவாதத் தன்மையும், மொழியில் மிகையோவென தோன்றக்கூடிய தீவிரமும் நெகிழ்ச்சியும் பல இடங்களில் காணப்படுகிறது.

சாதாரணமானதோ, அசாதாரணமானதோ தன்னை ஈர்க்கும் வாழ்வின் எந்த ஒரு தருணத்தையும் கவிதையாக்கிப் பார்க்கும் விருப்பம் கொண்டவராகத் தென்படுகிறார் தேவதேவன். இவர் தன் கவிதைகள் மூலமாக அன்றாட அனுபவங்களுக்குள் இருந்தே ஒருவித அழகியல் நேர்த்தியையும், அகவயமான இசைவையும் கண்டடையத் தொடர்ந்து முயல்கிறார். அதன் காரணமாகவோ என்னவோ, சில இடங்களில் அசாதாரணமான தருணங்கள் எனப்படுபவை எளிமையான சொற்களிலும், சாதாரணமான அனுபவங்கள் எனத்தோன்றுபவை தீவிரமான மொழியிலும் எழுதப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது.

இவர் தேவதேவன் என்ற தன் புனைபெயருக்கு ஏற்ப, எப்போது விண்மீன்களைக் குறிவைத்துத் தன் தூண்டிலை வீசிவிட்டுக் காத்திருப்பவராகவே இத்தொகுதியின் மூலம் நமக்குத் தெரியவருகிறார். அவ்வாறு காத்திருப்பதில் சலிப்பு ஏற்பட்டோ என்னவோ, பிச்சுமணி கைவல்யம் என்ற சாதாரண மனிதராக, சில இடங்களில், வெறும் மீன்களைப் பிடிக்கவும் அந்தத் தூண்டிலை வானத்திலிருந்து தரைக்கு இறக்கியிருப்பதையும் காணமுடிகிறது. அண்டவெளியையே ஆரத் தழுவிக் கொள்ளுமளவுக்கு அகண்ட நெஞ்சைக்கொண்ட அதே கவிஞன், சில புள்ளிகளில் மட்டும் ஏன் தொட்டாற்சிணுங்கியாகிவிடுகிறான் என்பதை நம்மால் விளக்கமுடியாது என்றாலும் புரிந்துகொள்ளலாம்.

நீரில் தெரியும் நெற்கதிர்கள்
சொர்க்கத்தின் விளைச்சல்கள்
நாம் அதனை
நேரடியாய் அறுக்கமுடியாது.

இது இத்தொகுப்பிலுள்ள சிறிய கவிதைகளில் ஒன்று. தேவதேவனின் கவிதகளில் உள்ள சொற்களும், நீரில் தெரியும் அந்த நெற்கதிர்கள் போன்றவையே. அவற்றை நேரடியாக, எளிமையாகப் பொருள்கொண்டுவிட இயலாது. மனித வாழ்வின் ஆழத்தை, ’அன்பு’, ’காருண்யம்’ போன்ற மரபு வழிப்பட்ட சொற்கள் மூலமாக வெளிப்படுத்த முயலும் இக்கவிதைகள், முதல் பார்வைக்கும், வாசிப்பிற்கும் தெரிவதைவிட அதிகமான அர்த்தவெளியை உள்ளடக்கியிருப்பவை. பலவேளைகளில், இதன் அர்த்தம் காலத்தில் மிகத் தொலைவில் இருக்கிறது. அதனாலேயே கனவு போலவும் தோன்றுகிறது. என்றாலும் இத்தகைய கனவுகள் இல்லாமல் மனிதன் யதார்த்தத்தில் ஒரு முன்னெட்டு வைக்கமுடியாது.

[தமிழினி வெளியிட்டுள்ள தேவதேவன் கவிதைகள் முழுத் தொகுப்பிற்கு கவிஞர் மோகனரங்கன் எழுதிய முன்னுரை]

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP