Wednesday, March 30, 2011

குடும்பம்

சமூகம் வழங்கும் செளகரியங்களும் குரூரமுமாய்
எனது தந்தை இருந்தார்
மனிதன் வழங்கும் அன்பும் கருணையுமாய்
எனது தாயும் இருந்தார்கள்

எனது தந்தைக்கோர் பெரும் பேர் உண்டு
நியாயவான் நாட்டுக்குழைப்பவன் நல்லவன் என்றெல்லாம்
எனது தாய்க்கும் பேர் உண்டு
பாவம் பைத்தியக்காரி ஒன்றுமறியாதவள்

இத்தோடு இந்தப் புவி முழுக்க வினியோகிக்க
போதுமான பெருந்தன்மை எனும் சரக்கு
எங்கள் வீட்டில் இருந்ததென்னவோ
மறுக்க முடியாத உண்மை

என் தாயிடம் நான் கண்டிருந்தேன்
என் தந்தையின் மூர்க்கங்களை எல்லாம்
எப்போதும் மன்ன்னித்து நிற்பதுபோன்ற ஒரு பெருந்தன்மையை
எனது தந்தையிடம் கண்டிருந்தேன்
எனது தாயின் அறிவீனங்களை எல்லாம்
எப்போதும் சகித்துக் கொண்டு முறுவலிப்பதுபோன்ற
ஒரு பெருந்தன்மையை

ஒருநாள் -இல்லை திடார் திடாரென்று-
தந்தை உதைத்தார் தாயின்மீது எகிறி
தாய் சபித்தாள் தந்தை மீது கதறி
நான் முழித்தேன் பார்வையாளனாய்

யார் நிகழ்த்துகிறார் இந்த நாடகத்தை என
நான் கேட்டேன் எனக்குள் நெளிபவனிடம்

தற்செயலாய் ஒருநாள் சந்தித்தேன்
அந்த நாடக இயக்குநரை
என்னைத்தான் தேடிக் கொண்டிருந்தாராம் அவர்
தன் நாடகத்துக்கு இரு பாடல்களை இயற்றித் தரணுமாம்
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவுதற்கோர் டூயட் பாட்டும்
அன்னவர் கீரியும் பாம்புமாயிருக்கையில்
ஒலிப்பதற்கோர் பின்னணிப்பாட்டும்

' ' கவனம் இப்பாடல்களின் பொருளை
உம் நடிகர்கள் புரிந்துகொண்டால்
உம் நாடகம் அம்பேல் '
என்ற எச்சரிக்கையுடன் வழங்கினேன்
எனது இரு பாடல்களை அவரிடம்.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP