Sunday, June 30, 2013

காலிக் குவளை

சாப்பாட்டு வேளையில்
தண்ணீர் எண்ணித்
தூக்கின செம்பின்
திடுக் கென்ற வெறுமை-
நிலைகுலைந்து
நிலை நிறுத்திய
ஞாபகமூட்டல்?

Read more...

அருவிக் கரையில்

பீச்சுக்கு நீலப் புடவை
பொருட்காட்சிக்குச் சிவப்பு
கருப்புப் புடவை கண்ணெதிரே
’அருவிக் கரைக்கு எதை உடுத்த’?

’அம்மணத்தை மறைக்கும்
கருப்புப் புடவை வேண்டாம்டி,
வெள்ளைப் புடவை உடுத்தெ’ன்றேன்

கொட்டும் அருவி பிடித்து
மனம் மலை ஏறும் ஒரு மூச்சாய்

குளிக்க
நெருக்கியடிக்கும்
கூட்டம் மோதி
அருவி கருக்கும்;
இவள் கூந்தலோடு கூந்தலைப் போல்
தொற்றிக் கொள்ளும்
ஒரு கருப்பு இவளையும்

Read more...

Saturday, June 29, 2013

உண்ண முடியாத உணவு

கண்ணில்படும்
பிம்பங்களையெல்லாம்
அகோரப் பசியோடு
அசை போடத் தொடங்கி –
அந்தோ பாவம்
எந்தப் பிம்பமும்
குளத்தின் வாய்க்குள்
அரைபடாது, இறங்காது
டிமிக்கி கொடுக்கும்,
காயும் பசிவயிற்றைக்
காலம் விழுங்கி–
யிருக்கும் அப்போது

Read more...

தண்ணீர்க் குடம்

தெருப் பைப்பில்
நாபிக் கொடியாய் விழும் நீரைச்
சுருதியுடன் உட்கொண்டு
மனம் நிரப்பிப் போன – தாய்
அழுகையாய் சுருதிமாறி
தூக்கி இடுப்பில் வை – என்னைத்
தூக்கு தூக்கு என்றேங்கும்
நீர்க்குடம் எடுத்துத் தன்
இடுப்பில் அமர்த்திக் கொள்ள;
பொக்கை வாய்ச் சிரிப்புச் சிரிப்பால்
காணும் சேலை யெல்லாம்
சிலிர்க்க நனைக்கும் அது
அப்புறமும்
அரவாகத் தொங்கி அசையும்
அக் கையும் அணைய வேண்டி
அடம் பிடிக்கும்
அலம்பி அலம்பி – அவள்
சிற்றிடையில் அழுந்தி

Read more...

Friday, June 28, 2013

மனுஷ வாசம்

நீர்க் கரைக்கு இறங்கி வந்த
காகங்கள் குளித்து முடித்துக்
கூட்டங் கூட்டமாய்ப் பறந்து செல்லும்
வானில்
கருமேகங்கள் திரண்டு மறிக்கும்

மழையில் நனைந்த காகங்கள்
மரக்கிளைகள், மாடிச்சுவர் தந்திக் கம்பிகளில்
எல்லாம் ஒடுங்கி அமர்ந்து
அனைத்தையும் நினைத்துப்
பார்த்து முடிக்கும்; எனினும்
மீண்டும்... மீண்டும்...

கங்குலுக்குப் பின்னாலே
புலரியும் வருந்தி நிற்க
யாருக்கும் புலப்பட விரும்பாது
குளித்து முடித்துப் போய்விடப் பார்க்கும்
பெண் குட்டிகள்...

பஸ் குறித்த குறை நேரத்துள்
குளித்துக் கரையேறுவதாய்ப் பறக்கும்
டூரிஸ்ட கூட்டம்...

கானகத்தில்
கொஞ்சமும் எதிர்பாரா வேளையில்
திடீரென்று காட்சியளிக்கும்
மனுஷ வாசம்...

Read more...

சந்திப்பு

நிலவை
தென்றலை
மேகத்தை
நாரையை
நதியை
கிளியை
புறாவை இன்று,
எழுத்துக்குமேல் எழுத்து
எல்லாம் தூதுவிட்டுப்
பார்த்தாச்சு!
இனி
நானே வரப்போகிறேன்
நேரே!
(என் கவிதைகளையெல்லாம்
போட்டுவிட்டு?)

Read more...

Thursday, June 27, 2013

குளிர் உலுக்கும் ஒரு காலைப் போதில்

பிரக்ஞை,
விறையல் தாங்காது
பிணங்களின்மேல் நிருத்தமிடும்
காளியாய் நெஞ்சை உலுக்க;

அறுத்தறுத் தெறிந்த
மாமிசப் பிண்டங்களென
ஆற்றுக்குள் தெரிந்த
பாறைகளையும்
தனி உயிராய்
கிழக்கே எழும் சூரியனையும்

பார்த்தபோது
விறையலே இல்லை

Read more...

காட்சிகள்

ஒரு அமைதிப்
பெருவெள்ளத்தில்
நீல முகமும்
திசை திசையாய்ப் பரவிய
கூந்தலும்
நிறைஞ்ச கழுத்துமாய்
ஏகாந்தவதி ஒருத்தி நீராடும்...
அந்த ஜலப்பரப்பில்
மிதக்கும்
அவளின் கழுத்து அணிமணிகள்
மாத்ரமே
இங்கே உன் கண்களுக்குத் தெரியும்
காட்சிகள்

Read more...

Wednesday, June 26, 2013

மலையடிவாரத்தில் மழை

குளித்துக் கரையேறிய பெண்ணொருத்தியோ
கோதும் காற்றிற்
கூந்தலுலர்த்தும்
மலைச் சரிவு?

மீண்டும் மீண்டும் பொழிவதற்கோ
மேகம் மேகமாய்
அவள் கூந்தல்?

கொள்ளை இன்பமும்
குறுகுறு நடையுமாய்
திருமபித் திரும்பிப் பார்த்துச்
சிரித்துச் சிரித்து ஓடும் நதி
அதனை எட்டிப் பிடிப்பதற்கெனவே
சரசரவென ஓடிவரும் அவள்!

Read more...

சௌகரியமான அறை ஒன்றில்

தாகித்துத் திரும்பிப் பார்த்தேன். கைகால்
தலையைச் சீவி எறிந்துவிட்டு
முண்டத்தைக் குடைந்து செய்த-
அந்த இரத்தம் இன்னும் உலராத
ஈர நீர்ப் பானை

முகத்தை அரித்த உணர்வுகளைக்
கழுவத் திரும்பினேன்:
மெத்தப் பணிவுடன்
குனிந்து
தலை தாழ்த்தி
ஒரு பல் இளிப்புடன்
தயாராய் நீட்டி நின்றது
பேஸின், ஓர் ஆள் போல

நரகலில் புரண்டதுபோல்
உடம்பெல்லாம் கூசிக் குறுக
இருந்தபடியே
பாத்ரூமை நோக்கிச் சென்றது மனம்
ஷவரின் துளைகள் விரல்களாய் நீண்டு
பாய்ந்து என் உயிரைக் குடிக்க
வெறித்தது என்னை,
கனமான கனத்துடன் அழுத்திக்
கொன்றுவிட முயன்றது
என்னை, என் மூளைக்குள்
ஓர் ஓவர்ஹெட் டாங்க்

அவ்வறையை விட்டு
வந்தேன் சுதந்திரமான
காற்று என் முகத்தைக் கொஞ்ச
கண்ணுக்கு அவ்வறை
அறவே மறைந்துபோக; மறந்து போக
வந்து
குளித்துக்கொண்டிருந்தேன் இந்நதியில் அன்று.
அப்புறம் என்றும்,
உடம்பை உதிர்த்துக் கரையோரம் ஒதுக்கிவிட்டு

Read more...

Tuesday, June 25, 2013

கோபிகா மரங்கள்

மேலே தெரியும் சூரியன்
புடவை வியாபாரியாய்
உதறி வீசிக் காட்டுவான்
தன் வண்ணங்களை

கடல் நீலம் விம்மி அலைக்கும்;
பூமி மீது
கொக்கு பூத்த வயல்கள் சிலிர்க்கும்;
புரண்டு திரிந்து ஆட அழைக்கும்
பொன்மணல் காடு மின்னும்;
இருவர் மனமும்
கட்டிப் பிடித்தே கலந்து விடத் தவிக்கும்
அவஸ்தையை நீர் நிலையில்
காட்டிச் சிரிக்க,
திகைத்து
மரமாகிப் போயினர் கன்னியர்,
கதிரவனவன் கண்ணனாய்
இறங்கி வாராக் கானகத்தே!

Read more...

அம்மணி அம்மணி என்று ஒரு பெண்

வேலைக்காரப் பெண் அவள்; அனாதை போல.
குடம் தூக்கி வீடுகளுக்குத்
தண்ணீர் எடுத்து ஊற்றக்கொண்டிருப்பாள்
கிணற்றடியில் அமர்ந்து
பாத்திரம் துலக்கிக்கொண்டிருப்பாள்
சாப்பாட்டுப் பாத்திரஙகள் அள்ளிச்
சுமந்துகொண்டு செல்வாள் ரோட்டில்
இரண்டு கைகளிலும் பைக்கட்டும் அதன்
சிறுவர்களும் பற்றிவர
அவர்கள் நடையினுக்கு
இசைந்து இசைந்தே தான்
இம் மென்னடை கற்றிருப்பாள்
கண்களில் எப்போதும்
காணும் ஓர் ஆழ்கடல் சோகம்
உச்சிப் பொழுதில் கணுக்கால் நீரில்
துணி துவைத்து வைத்துவிட்டு
இந் நதிக்குள்ளே இறங்கிப் போவாள்
அப்போது மாத்ரமே
அந்த ஒளியை கண்டிருக்கிறேன் அவள் முகத்தில்;
ஒரு அன்யோன்யமான
அந்தரங்கமான
உறவில் வெளிப்படும் வெளிச்சத்தை!

Read more...

நிறைவேற்றம்

மோகம் ததும்பும் நீர்ப்பரப்பு
தீரா வேட்கையில்
துள்ளி எழும் மீனின் துடிப்பு
’படக்’கென நிறைவேறியதென்ன!
லாவகமாய்க் கொத்திச்
சென்றது ஒரு பறவை
வானில் நீந்தி

Read more...

Monday, June 24, 2013

நதிக்கரை மர நிழல்கள்

நிர்வாணக் கோபியராய்
கரையெட்டிய மரங்கள்
கால்களில் மோகம் வளர்த்து
நதிநீரை நோக்கி ஓடும்
தலையிலே மோகம் வளர்த்து
வானத்தை நோக்கி இறைஞ்சும்.
மோக
நிழலுக்குள் நனைந்தபடி
மனிதர்கள் போவர் வருவர்
குளித்துக்
கரையேறியவர்தான் யாரோ?

Read more...

சிரசாசனம்

மல்லாடி மல்லாடிக்
களைத்து
வெளுத்து
எரியும் மூளையைச்
சாந்தப்படுத்த
தியானம் எழுந்தது உடன்
முகஞ் சிவக்க விழி சிவக்கப்
பூத்தது ஒரு
மோனத் தாமரைத்
தடாகம் அதில்
நலுங்காமல் நீந்தி
அலம்பி விடாமல் எழுந்து
நிமிர்ந்து
சுவாசிக்கையில்
மேலெழுந்த தடாகமே
மேகமாய்ப் பொழிந்து
குளிப்பாட்டிற்று தொடர்ந்து
தாமரை தான் சூரியனாய்த்
தொங்கிற்று மேலே
என் தலைக்குள்

Read more...

தெப்பக் குளத்தில் தெரிவன

நகரின் அசங்காத
பொய்த் தோற்றக் கட்டடங்கள்
கோவில் தெப்பக்
குளத்தில் நெளியும்
குளத்தில் இறங்கிக்
’கலக்கும் ரகளை’யில்
கட்டடங்கள் எல்லாம்
குலைந்து நடுங்கும்

கோயிலின் உச்சிக்
கோபுரமும் சேர்ந்தல்லோ...

Read more...

Sunday, June 23, 2013

இரவு

பச்சைகள் கறுக்கும்போது
நதி, என் ரதி
வைரமாய் மின்னிக் காட்டும்

Read more...

தீர்த்தம்

மொண்டு தூக்கிய நீர்
அலம்பி
மீண்டும் கிணற்றில் விழ
கிணற்று நீர் முகஞ்சுளித்துப்
பிணக்கிக் கொள்ளும்:
தலையில் விட்ட ஜலத்திலும்
கோபத்துடன் தெறித்து
விலகிப் போகும் கொஞ்சம்;
வெட்கங்கெட்ட மோகத்துடன்
எனைத் தழுவிப் புணர்ந்த நீரும்
சோர்ந்து போய்த் தரையில் இறங்கும்

Read more...

சோப்புக் கட்டி

என் சோப்புக் கட்டிக்கு
மாம்சமானவைகளையெல்லாம் தொட்டு
மயங்கிச் சோர்கிற
ஆசையே கிடையாதாம்
’அட என் அழுக்குப் போக்குடா’ன்னு
பிடித்து வைத்து வேலை வாங்கினா
தன் ஜோலியே பெரிசா
வழுக்கி வழுக்கிப் போகிறதே
தண்ணியையே பார்த்து

Read more...

வயல் வெளியில்

இறங்கி ஏறி
இறங்கி ஏறி
அள்ளுவதும் கொட்டுவதும்
அள்ளுவதும் கொட்டுவதுமாய்
அலுக்கும் கமலையும்
சலிக்கும் காளைகளும்

தீராது
சுற்றியும்
தீராது
ஓலமிடும்
கப்பிகளின் சோகத்தில்,
சுற்றி பசேலென்று முறுவலித்து
வயல் பாடும் ராகத்தில்

மனசு தேறும்

Read more...

Saturday, June 22, 2013

நீர்க் குடம்

ஆசையோடு புகுந்து
நிரம்பிய குடத்தைத்
தன் ஆழத்துள் வைத்துக்கொள்ள
ஆர்வமாய் இழுக்கும்
குளத்தை
எதிர்த்துத்
தூக்கிக்கொண்டன வளைக்கரங்கள்
அலம்பித் திமிறித்
துள்ளிக் குதித்து விழுந்த நீரை
பாராட்டி அணைத்துக் கொண்டே
அலைமோதி அரற்றிற்று குளம்
குடத்து நீரும் அவள் இடுப்பில்
விக்கி விக்கி
அழுதுகொண்டே போயிற்று எனினும்
சமாதானிக்கவே
சமன் நிலையே நோக்கிச் சென்றனர்
குளமும், அவள் இடுப்புக்
குடமும்

Read more...

முகத்துக்கெதிரே

கரையில் உதிர்த்த ஆடைகள்
காற்றிலே துடிக்கும்போது
குளத்தில் நீர் ஆடும் பெண்கள்
கோபியராய் எண்ணிக் கொள்வர்.
தாமரையாய் முகமும் சிவக்கக்
’கண்ணனை எங்கே?’
எனத் தேடா
பறிகொடுத்த ஆடை பற்றித்
தவிப்பேதும் காட்டிக் கொள்ளா
சொரணையற்ற முகத்துக்கெதிரே
காட்டுவான் முத்து நீரில்
வானவிற் சேலை ரகங்களை

Read more...

குடம் தரித்தவள்

குடம் தூக்கி
ஆடி ஆடி
வாயாடி சிரித்துச் சிந்தி
வந்து போகும் அப்பெண்களெல்லாம்
ஓய்ந்த பொழுதில்
வெறிச்சிட்ட
அவ் வொற்றையடிப் பாதையின்
இடையில் இருக்கும் அக்கிணறு

இடுப்புக் குடத்துடனே திகைத்து
நின்று விட்ட ஒரு பெண்...

Read more...

Friday, June 21, 2013

மின்வெட்டு

கிணற்றை உறிஞ்சிக்
கொட்டும் குழாய் நீர்
பொட்டுனு நிறுத்தப்பட்டது
தோட்டக்காரன்
(குழாயடியில் சுகித்துக்கொண்டிருக்கும்)
உன்மீது கொண்ட
பொச்சரிப்பினாலல்ல

’பின்னே?’

அண்ணாந்து பார்,
கண்ணீரென
சில சொட்டுக்கள் உதிர்த்துவிட்டு
வாய்பிளந்து உன்னை நோக்கும்
குழாய் முகச் சூனியத்தை!

Read more...

இடுப்பில் அழும் குடம்

’என்ன வேலையிது!
இட்டு நிரப்பவும் – பின்
எடுத்துக் கொட்டவும்!
பிரியதமா! இவ்வாழ்வே எனக்கொரு
வேதனையான வேலையாகிவிட்டதே!’

இடுப்பில் அழும் குடம் என்னை
உலுக்கி உசுப்பி
அதை இதை பார் பார் என
’பரக்க’க் காட்டி

சும்மா சும்மா
நிறைத்து வரப் போவதும்
வந்து வந்து
கொட்டிக் கொட்டிக் கவிழ்ப்பதும்
அங்கேயே போவதும் ஏன்...

Read more...

இடையீடு

அடிமண்ணெடுத்துக்
காட்டுகிறேன் பார் என்று
கிணற்றில் குதித்து
மேலே வந்து விரித்தவன்
கையின் மண் –
சிரிப்பாய்ச் சிரித்தது
கிணற்று நீரின் ஈரம் மின்ன

Read more...

ஒரு சந்தியா காலம்

குளக்கரை மேடு
வானம் காட்டும்
போய் நின்றாலோ
குளம்தான் சிரிக்கும்

வெட்கச் சிரிப்புடன்
இறங்கிய சந்தியை
குளித்துக்கொண்டிருக்கிறாள்
குளத்துக்குள்ளே

உனது சோகங்கள் தரித்த
உரு ஒலி நிசப்தம்
யாவும் கருப்பாக
நீங்கும் கருப்பாக
குளக்கரை மேட்டில்...

உழவு மாட்டுடன், தோளில்
உழுத கலப்பையுடன்...
கஞ்சிக் கலயம்
புல்லுக் கட்டு, விறகு
இடுப்புக் குழந்தையுடன்...
ஆட்டு மந்தை செலுத்தும்
கைக்கோலுடன்...
டாக்கிஸிலிருந்து தாபிக்கும்
காதலன் பிளிறலுடன்...

Read more...

Thursday, June 20, 2013

காதல் லீலைகள்

வியப்பால் விரிந்துவிட்டது
முதல்
தாமரை பூத்த அன்று
வானம்
எங்கும் பரவ
வீசிய மணத்தின்
துக்கமே வண்டென
ஜனித்தது
’இனி என்ன செய்வது?’
தொடங்கிற்று
காதல் லீலைகளில் பொழுது

Read more...

ஏதோ ஒரு சிறை

அளி பாய்ச்சியிருந்த தாழ்வாரம்
அகத்தே அவள் தெரிந்தாள்
வெகுநேரம் காத்திருந்தான்
அவ் வீதியில்

ஏதோ ஒரு சிறை

வாய்க்கால் நீரில்
கால் நனைய விட்டபடி
அமர்ந்தான் கரையில்
நாணல்களின் பின் தெரியும்
தாமரையைப் பார்த்தவாறு

Read more...

Wednesday, June 19, 2013

புழுதி படிந்த தாமரைகள்

நெடுஞ்சாலைப்
புழுதிவலையில்
அகப்பட்ட தாமரைகள்,
பேருந்துகளும் சரக்குப் பேருந்துகளும்
ஓடிக் காய்த்துப் போன சாலைஓரம்
முங்கி முங்கிப்
புழுதி துடைத்துக்கொண்டன.
புழுதியுடன் புழுதி வீச்சை வைதுகொண்டே
அந்தப் பேருந்துகள் பின் ஓடி
அடிவான்வரை போய்த்
திரும்பவும் குளிக்கவே
திரும்பி வந்தன

Read more...

நல்ல மேய்ப்பன்

நதி சிலிர்க்க
முத்தம் முத்தமென
ஆடுகளுக்கு நீர் காட்டிக்கொண்டே
அவன் மட்டும்
கைக் கோலுடன்
அப்பாலே பார்த்து நின்றான்

Read more...

Tuesday, June 18, 2013

ஆற்றங்கரை மரங்கள்

நீர்ப் பூக்களை
அடையாளமாய் விட்டுவிட்டு
ஈரத்துடன், நீர்க் குடத்துடன்
கரையேறிப் போகும் பெண்கள்
நீருக்குள் கால் அலையக்
கரையோரம் அமர்ந்த மரங்கள்
கால் பெயர்த்து எழ முயன்று
முடியா வேதனையில்
முகஞ் சுளித்து மூச்சுவிடும்
அப் பெண்கள் பின்னே,
தாமரைகளை மறந்து

Read more...

பாலம்

வழியில் குறுக்கிட்ட
ஒரு சிறுநீர்க் குட்டையை
தாவ வீசிய கால் போல
நதி நீரைத் தாண்டும் பாலம்
நதியில் குளித்துக் கொண்டிருக்கும்
என் மன
ஊற்று பெருகி இவ்
வெளியெங்கும் படர்ந்த
வெள்ளத்தில்
மிதக்கும் ஒரு பரிசல்

Read more...

குளியல்

கொட்டும் ஒளியில்
தலையவிழ்த்துக் குளிப்பாள்
தாமரை - தன்
நீர் ஆடை நனைந்து
நிலமேனி தன்னில்
வித்தாக
வித்தாக

Read more...

Monday, June 17, 2013

இறங்க வேண்டிய இடம்

மழையூடே பயணம்
மனம் நனைந்து குளிரும்
ஆட்டோ டிரைவர்
முதுகோடு முகம் வைத்து
சுவாசிக்கத் தவிக்கும் பிரியம்
’யோசனைகளிலேயே நீ காலத்தைக்
கழித்து விட்டாய் மனமே!
இறங்க வேண்டிய இடம்
வந்தது இறங்கு’ என்று
வண்டி நிற்கும்
உலுக்கலுக்கு ஒப்புதலாய்
தலையசைத்துக் கொள்ளும் மனசும்.
மணிபர்ஸுத் துழாவலுடன் அம்மா
’ஒன்னரை ரூபாயா ஒன்னே முக்காலா’-
பேரத்தை மீண்டும் கிளற
டிரைவரின் கண்கள் எட்டி
அம்மாவின் முகத்தை எரிக்க
அவனுள் புகுந்து
பொசுக்கத் தொடங்கும்
முடிவில்லாப் பயணம் ஒன்றின்
ஆரம்பம்

Read more...

நாய் மோளும் பாறை

வெயில் மழைக்குச்
சொரணையற்ற எருமை
குத்திட்ட பாறையாக
நதிநீரில் கிடக்கும்
லயித்து
குளித்துக்
கரையேறி விட்டோம் என
நதியோரம் நெஞ்சை
நிமிர்த்தி நிற்கும் பாறைக்கு -
விரைந்து வந்து நாய் ஒன்று
நனைத்துக் காட்டும்

Read more...

பாலத்தில் ரயில் ஓட

பாதைப் பறவைகளாய்
நதிக்குளியல் விலகிக் கொள்ளும்
வெறும் பாலம் நதிநீரில்
மிதக்கின்ற படகாகும்
பறவைகள் வந்தமர்ந்தவுடன்
ரயில் வேகம் புகுந்து அவனை
நதி நீரில் போட்டு அலைக்கும்
முடிந்து
வெறும் பாலம் படகாகும்
மீண்டும் பாலத்தில் ரயில் ஓட...

Read more...

Sunday, June 16, 2013

விடுபட்ட தாமரைகள்

குத்தகைக்காரன்
கை மறந்தோ
மெய் வருந்தியோ
விட்டுச் சென்ற தாமரைகள்,
பச்சைப் பசேலென்று சூழந்த
சுற்றத்தில் மகிழ்கின்ற
சுகமிழந்து நிற்கும்.
குளத்தில் இறங்கிக்
குடத்துநீர் மொள்ளக்
குனிந்தவளின் முகம்
நீர் அலுங்கிக் ’கிச்சுக்கிச்சு’ மூட்டச்
சிரித்துக்கொள்ளும் சிரிப்பு அத்
தாமரைக்குச் சென்றும்
தாமரைகள் உணர்ச்சியற்று
சை து ள் ம்
அ ந் கொ ளு

Read more...

நன்றி

தனிமை,
குளத்தில்
இறங்கினான்.
கொஞ்ச நேரத்தில்
குஞ்சு மீன்கள்
கூட்டமாய் வந்து
மொய்த்தன தனிமையை.
கண்டு நின்ற தாமரைக்
குடும்பம் அசைந்து
நன்றி சொல்ல
இவன்
பாதையோரம்
நிறுத்தி வைத்த
சைக்கிள் ஹாண்டபாரில்
முறுவல் பூத்தது
ஒரு வெள்ளைத் தாமரை

Read more...

Saturday, June 15, 2013

எதிரேயிருந்தவள்

*’முகமே வாய் என
உதடுகள் நூறு விரித்து’த்
தாகித்து நிற்கும் தாமரைக்
குளத்தில்
வழிப்போக்கன் இறங்கி
இரண்டு வாய்
அள்ளிக் குடித்து நிமிர்கையில்
தான் பருகும் அக்கணத்தே
யாரோ தன்னைத்
தான் பருகியதாய்ப்
பிரமை தட்ட
எதிரே:
வெட்கத்தில் சிவந்து போய்
வானத்தில் முகம் புதைத்துப்
பார்த்தது தாமரைப் பூ

*பிரமிள்

Read more...

மழலைகள்

மாராப்பு நீக்கி
முலை சப்பும் மழலையென
மணல் விலக்கி
ஊற்றுநீர் எடுக்க
மண்டியிட்டு குனிந்த பெண்கள்

ஒழுக ஒழுகக் குடம் தூக்கி
அடி பெயரும் பாதங்கள்
வருட வருட
மனம் நெகிழும் நதித்தாயின்
முலை சுரக்கும்

Read more...

Friday, June 14, 2013

நான்

தன் தாயகம் விட்டு வெளியேறும்
தொலைதூர யாத்ரீகனைப் போல்
ஆழமான திரும்பிப்பார்த்தலுடன்
ஈர உடுப்புடன் – ஒரு பெண்
இம்மருத மரங்களை விட்டு விலகிச் செல்கிறாள்
இவ்வாற்றங்கரையருகே

நிர்வாணக் கோபியராய்
நீலவானை நோக்கி
(கை கொண்டு முலை மறைத்து
தொடைகள் பின்னிக் குறி மறைத்து)
ஆடைக்கு இறைஞ்சுவார்கள்
மருதமரக் கன்னியர்கள்
கண்ணன் நான்
இங்கே தான் ஒளிந்து நிற்பதைக்
காணாமல்

Read more...

எவ்விதம் நான் அவளை அடைந்தேன்?

முத்தமேற்கக்
கழுத்தை வளைக்கும் கையென
பாறையைச் சூழ்ந்த ஓடை.
தாகித்து வந்த வழிப்போக்கன்
அள்ளிப் பருகி எழவும்
தாகம் தணிந்து
மாலையென – இவன்
மார்பில் கிடக்கிறாள்
நதிக் கன்னி இப்போது

Read more...

Thursday, June 13, 2013

பூப் பறிப்பு

கவனிப்பாரற்ற
பொழுதுக்
குளத்திலொரு தாமரையைக்
கைநீட்டிப் பறிக்கப்
பார்க்கிறது ஒரு சிறுமி
சேறும்
சிக்கல் கொடியும்
அறியாத ஆழமும்
நலுங்கும் நீரில்
காட்டும் பயம்.
தாமரை இலை நீர் சிரித்துக்
கொடுக்கும் தைரியம்

Read more...

வானை நோக்கி ஒரு ரோடு

நகரத்துச் சந்தடி,
நெருக்கி நெருக்கி அடைத்து மறித்து
முறைத்துத் தள்ளும்
கட்டடங்கள், வாகனங்கள்
எல்லாம் கடந்து...
வானக் குடை முழுசாய்
விரிந்த வெளிப் பூமி,
நிலவாகக் காணும் வெயில்,
ஏக மௌனம்,
எங்கிருந்தோ உதித்தவர் போல்
ஆணும் பெண்ணுமாய்ச் சிலர்
சாலை அமைக்கும் காட்சி
எங்கே?
சாலை நேரே கண்ணெட்டும் தூரம் வரை
வீடோ ஊரோ ஏதுமில்லை;
அடிவானம் அன்றி.
அருகே
தூளி ஒன்றைத் தாலாட்டும் தாயாய்
தா(ழ்)வாய்க் கவிந்த கருவைமரத்தில்
கனிகனியாய்க் காய்த்துக் குலுங்கின
கஞ்சி நிறைந்த தூக்குச் சட்டிகள்.

Read more...

Wednesday, June 12, 2013

ஒற்றைச் சேலைக்காரி

பம்பு செட்டு தோறும்
குரூப் போட்டோவுக்குப்போல்
உற்றுஉற்று நிற்கும்
அம்மண அம்மணத் தென்னந்தோப்புகள்

குளித்து முடித்த ஒரு
ஒற்றைச் சேலைக்காரி
நீல நீளப் புடவைக்காரி
ஈரப்புடவையின்
ஒரு சுற்றால்
தன் அம்மணம் மறைத்து
மறு கோடியை
ஒரு அம்மணத் தென்னையின்
இடையில் கட்டி
காத்திருந்தாள்
காத்திருந்து
தன் ஒற்றைச் சேலையையும்
அம் மரத்தைச் சுற்றிக் கட்டிவிட்டு
அம்மணமாய்த் தான் நடந்து
மறைந்து போனாள்

Read more...

தண்ணீர் குடிக்கும் ஆடு

பரந்த வெளியில்
மேய்ந்து களைத்த ஆட்டுக் குட்டி
கையென நீண்ட கழுத்து
ஸ்படிகக் குட்டை
தன்னைத்தான்
பருகும் காட்சி!

Read more...

கடலடி

சுருட்டி
மடக்கி
உறக்கங் கொள்ளவும்
மேலேறி மிதக்க
விரைந்தேகும்
நீர்க்குமிழியென
கனவுகள்

விழித்துக் கொள்ளவும்
கடலடி
அழுந்தும் வாழ்வு
நனவுகள்

Read more...

கும்மாளம்

சகலமும் மயங்கிச்
சித்திரமாய்ச் சமைய
மரத்தடியில் தன்பாட்டுக்குக்
குழல் வாசித்துக்கொண்டேயிருக்கிற
கண்ணன்

படம் வரைந்து முடித்து
கழுவிக் குவளையில் போட்ட
தூரிகையாய் இருக்கையில்,

மூளைக்கு மேலே
தொங்கும் விளக்குச் சுடரின்
மின்னலடித்த ஒளியில்
பளிச்சிட்டது:
கூட்டங் கூட்டமாய்க்
கும்மாளியிட்டுச் சிரிக்கும்
குளித்துக் கரையேறாத
கோபியர்கள்!

’ரூமப் பூட்டிட்டு
எங்க கௌம்பியாச்சு தொர?’

’ஆடைகளைக் கவர்ந்துவர’

Read more...

Tuesday, June 11, 2013

காடு

தன் இதயச்
சுனையருகே
தாகித்து நின்றான்,
காடெல்லாம் அலைந்தும்
காணாத மான் கூட்டம்
காண

Read more...

கடற்கரைக்கு வழி

அறைச் சுவர் நெரிக்கப்
பிதுங்கும் அவனுக்கு –
’பாவம் பாவம்’ என
வழிவிடும் வாசல்.
இரு கரையும் நின்று
மறிக்கும் கட்டடங்கள்
’கைதி’யென அவனை
மிரட்டி ’நட!’த்தும்.
அங்கங்கே
’தப்பி’என பல
சந்துகள் இரங்கும்.
கண்டு நுழைந்தால்
அங்கும் இருகரை
அதே போல் அவனை!
இப்படி
’நட!’ந்து! ’நட!’ந்து ’நட!’ந்து
கடற்கரை வந்து அமர்வான்
சுகமாய்
கடலின்மீது மனத்தை விரித்துவிட்டு
அடிவானைக் குறிவைக்க

Read more...

ஆறு

செம்மறியாய்க்
குதித்தாட, பாட
பாறை காட்டிப்
படுத்திருக்கும் ஆறு

மேலே
பறந்து செல்லும் கொக்கைப் பார்த்து
வேதனிக்கும் நெஞ்சின் கோலம்

Read more...

காணாத அவள்

அவிழ்த்துப் போட்ட சேலையாய்
பாறையில் படர்ந்த கொடிகள்!
காற்று பிடித்து
இழுத்துப் போட்ட சட்டையாய்
தரையில் பூத்த செடிகள்!
முகத்தில் பூச
உரைத்த மஞ்சளாய்
பாறையில் முழிக்கும் பூக்கள்!
குளிக்க முயன்று
தோற்ற நாக்காய்
நீண்டு கிடக்கும் நதி
திகைத்த வானம்
எல்லாம் சொல்லும்
ஏகாந்தமாய்க்
குளித்துக்கொண்டிருந்த ஒரு தேவதையை!
எங்கே...? யாரும்
காணவே இல்லாத
அவள் ஸௌந்தர்யத்தைக்
கண்டு ராவணனாய்க்
கவர்ந்து சென்ற புருஷன் யார்?

Read more...

Monday, June 10, 2013

இரு விழாக்களும் விலைமகளிர்களும்

ஆயிரம் ஒளி விளக்குகளுடன்
பிரகாசிக்கும் இரவுதான் என்ன!
வண்ண வண்ண
விளையாட்டுக் கருவிகளும்
வேடிக்கைப் பொருட்களும் சூழக்
குழந்தைகளும்,
அழகுப் பொருட் கடைகள் சூழ
அணிமணிகள் பூண்டுலவும் அணங்குகளும்
காதலும் கண்களுமாய் உலவும் தேவர்களுமாய்
விழாக் கோலம் பூண்ட கோயில்!
மானுடர் தாம்
அடைந்துவிட்ட இலட்சியத்தால்
பூரிட்டெழும் மகிழ்ச்சிபோலே
சாமக் கொடைக் கொண்டாட்டத்தை
உரத்து ஒலிக்கும் ஒலிபெருக்கி!
முழு உலகும் போல்
ஊரே ஓரிடம் கூடிக் குவிந்திருக்க
என்ன குறை என்ன குறை
சொல் மகனே எனக்
கேட்டதுவோ ஓர் அன்னைக் குரல்?

தூர
அழைத்துச் சென்று
யாவும்
தடையற்று உலவும்
அருட் பெருவெளியோ என
விரிந்த வானப் பந்தலின் கீழ்
நிலவும் விண்மீன்களும் போதாது
ஒளிரும் நம் குழல் விளக்குகளும்
உற்று உற்றுக் காட்ட
அறுவடை முடிந்த வயல் நடுவே
சட்டத்திற்கும் காவலுக்கும்
அகப்படாத எச்சரிக்கையுடன்
நிறுத்தியதோர் டிராக்டர் மேடையினை
முள் அரணும், கைத்தடிகள் ஏந்திய
முரடர்களும் காக்க,
கற்புலகும் பண்பாடும்
கூச்ச நாச்சமும் துறந்து
ஒலிக்கும் ஆபாசப் பாடல்களுக்கும்
தாளங்களுக்கும் கூச்சல்களுக்குமாய்
மெது மெதுவாய் ஒன்று ஒன்றாய்
அத்தனை ஆடைகளையும் களைந்து
காமத்திற்கே காம்மூட்டும்
வெறியாட்டு நடனமாடும்
விலை மகளிர்களும்
அந்த அன்னைதாமோ?
தெய்வம்தாமோ?

இரு விழா மேடைகளுமே
ஒன்றுக்கொன்று
தூரத்து ஒலியாகி
அமைதியற்றுத் திகழ்கின்ற பூமியையும்
தட்டி அணைத்துக் கொள்வதும்
அவர்கள் கருணைதாமோ?

Read more...

Sunday, June 9, 2013

தீயும் ஒளியும்

காலம் காலமாய்
அணையாது
காத்துக் கொள்ளப்பட்டுவரும்
தீ ஒன்று
ஒளியாக இருக்க முடியாது.
ஏனெனில்
ஒளி -
அது
காலத் தொடர்புடை தன்று.
மட்டுமின்றி – மன்னிக்கவும் -
மிகுந்த துயரத்துடனே தான்
இதை ஒருவர் கூற முடியும்:
அது பேரழிவுகளின்
தீ மூலமாகவும் திகழ்வதாகிவிடும்.
ஆகவே
கவனமாக இருப்போமாக
எந்த ஒரு காபந்துகள் மீதும்!

பற்பல மதங்கள்
பற்பல பிரிவுகளுக்கு நடுவே
யாராக இருந்தபடி
நாம்
இன்ன இடம் சென்று
இன்ன கடவுளரை
இன்ன முறைப்படி
தீவிரமான அனுஷ்டானங்களுடன்
வரிந்து வணங்கி நிற்கிறோம்?
எதற்காக? ஏன்? –
கேள்விகட்கெல்லாம் பதில் வழங்கி
நம்மை ஆபத்துக்களினின்றும் காக்கும்
ஒளி –
அது
தேசத் தொடர்புடையதுமன்று.
ஆகவே எச்சரிக்கையோடிருப்போமாக!

நமது சூழல்கள்
நமக்குத் தந்த
பழக்க வழக்கங்கள்
பண்பாடுகள்
எல்லாம்
ஒளியாகித் திகழ்வனதாம்
என்பதில்லை
ஏனெனில்
ஒளி –
அது
எந்தத் தொடர்புடையதுமன்று
ஆகவே
முழு விழிப் போடிருப்போமாக!

Read more...

Saturday, June 8, 2013

அவள் அழகினிலே

அவள் அழகினிலே
ஒளிவீசியதோர்
தெய்வாம்சமோ
அந்த விலைமகட்பெண்
தன்னை அத்துணை ஆபாசப்படுத்தி
ஆ(ட்)டிக் கொண்டிருக்கையிலும்
அவளை, அருவருப்போ வெறுப்போ இன்றிக்
காப்பாற்றிக் கொண்டு வந்தது?
எக்குறையுமிலாத ஒரு
நற் குடும்பத்துப் பையன்
அவளைப் பைத்தியமாய்ப் பற்றி
யாவரும் போற்றிடும்
இல்லறம் நடாத்தவும் தூண்டியது?

Read more...

ஆப்பிள்காரன்

தலைச் சுமையாய் ஆப்பிள் விற்பவனின்
கூடை ஆப்பிள் ஒன்று
விலை போகாமல்
வீணே அழுகி விடுவேன் என்று
பயமுறுத்திச் சாதித்துக்கொண்டது
அவனிடம் தனது காதலை.

”ஓயாத தலைச் சுமைக்கிடையே
ஒரு சிறு இளைப்பாறலன்றோ உன் அன்பு!”
அவன் புலம்பினான்
”காதலால் நெய்யப்படாத என் வாழ்வில்
உன் காதல் தேன் துளியாய் இனித்து
பின், தன் போதாமையால் தோற்று
இறுதியாய்
இத் தலைச்சுமைதானே வென்று நிற்கிறது?”

குரல் கேட்டு
அவன் சுமை இறக்க
மலரும் ஒவ்வொரு இளைப்பாறலும்
முதிர்ந்தொருநாள் தன் முழுமையினை
எய்திடாதா?

Read more...

Friday, June 7, 2013

அக்கினிச் சட்டிகளும் ஆயிரம் கண்ணகிகளும்

தீவிழி காட்டும் பெண் தெய்வங்கள் நோக்கி
நடந்து நடந்து களைத்து
நம்பிக்கைகளைத் தூர எறிந்து
நோன்பிருந்து நொந்த உடலை
உறுதி எய்திய உன்மத்தம் பிடித்தாட்ட
வெறி கொண்டு
திசையதிரக் கொட்டும் மேளங்களைத்
துணைக்கழைத்துக் கொண்டு
தள்ளாடும் நடையினையே
உக்கிர நடனமாக்கி
தன்னுள் எரிந்த போன்சாய் நெருப்பை
மாறி மாறிக் கைகளில் ஏந்தியபடி
அச்சமூட்டும் நின் தோற்றம்
அசைத்துவிடும் இம் மனிதர்களை
என்றெண்ணியோ
ஆடுகிறாய் நீ பெண்ணே?

தேறாது செத்த அடிமைத்
தீமைகளிலேயே மூழ்கிக் கிடக்கும்
மானுடனைத்
’தெய்வம் நான்’ என
அறைந்து உலுக்கித்
தன் நிலைக்குத் கொண்டுவரவோ
ஆடுகின்றனை?
தெய்வம் பல பலச் சொல்லித்
தீயை வளர்த்திடும் சிறு
மூடர்க்கு உறைக்கவோ
அக்கினிச் சட்டியினை
ஏந்திக் கனன்றபடித்
’தெய்வம் நான்!’ ’தெய்வம் நான்!’
என்றறைகின்றனை?

உற்றம் சுற்றம் மஞ்சளித்து
குடம் குடமாய் ஊற்றும் நீரில்
அணையாது நின்றெரியும் சுடராய்
அக்கினிக் கவசம் ஏந்தித்
தகிக்கிறாய்!
வழிகாட்டும் பந்தமோ
வாழ்விக்க வந்த தாய்மையோ
மனித குலம் ஓர் குடும்பம்
எனும் மாட்சிமையோ
மண்டைக்குள் சுரக்காத
மூளைகள் அதிரவோ
திசைச் சுவர்கள் நெகிழ நெகிழ
முட்டி முட்டி
ஆடுகிறாய் பெண்ணே?

தீண்டுமின்பம் அறியாதானைத்
தீட்டுக் கண்டுபிடித்தவனைச்
சகல நோய்களையும் உண்டாக்கி
மருந்துக் கடை இயற்றிப் பிழைப்பவனை
தீண்டி, அவன் மடமைகளை யெல்லாம்
ஆரத் தழுவும் தன் அணைப்பாலேயே
நொறுக்கித் தகர்த்து;
தம்மைத் தாமே வழிபடும்
சடங்குகளையெல்லாம் நிறுத்தி
நீருக்குள் புகுந்து
மேகமாகிப் பொழியவோ
பெருகி மடை உடைத்து,
பேய்கள் ஆடும்
பாழ் மண்டபங்களை யெல்லாம்
தரை மட்டமாய்ப் போக்கி
உலகைக் கழுவிப் புதுக்கவோ,
தீயேந்தி
தெருவிலிறங்கித்
திசைகள் குலுங்க –
உன்னை உன் ஆட்டமே
உருக்குலைத்துத் துன்புறுத்தியும்
விலகாது விரும்பி விரும்பி
ஆடுகின்றனை?

பெண்ணைப்
பேயெனவும் அடிமை எனவும்
பகை எனவும் பண்ட மெனவும்
பிதற்றிய மூடமதை,
முறைத்து மிதித்துத் தள்ளிய
மூர்க்கத்தை
இன்றும் பேணுதற்கோ
அக்கினிச் சட்டி ஏந்தி
அபிநயிக்கின்றனை?

தோற்றுப் போன தந்தைமை நோக்கி
தாய்மைக்கு இருக்கை கேட்டோ
அக்கினிக் கொடி ஏந்தி
ஆர்ப்பரிக்கின்றனை?

உன் பிள்ளைகளைச்
சோணியாக்கும்
நோய்களினைச் சாம்பலாக்கி
பேருணர்வைச் சமைத்து ஊட்டும்
அடுப்பு நெருப்போ இவ்வக்கினி?

பேருணர்வின் நுண்வடிவாம்
நின் காதலால் கட்டப் பெற்ற இல்லத்தை
கல், இரும்பால் சிறை செய்து
போகக் கட்டிலாகவும்
பேராசைத் தொட்டிலாகவும்
சிறுமதியின்
பதுங்கு குழியாகவும்
ஆயுதக் கிடங்காகவும்
மாற்றி விட்ட ஆண்மனதைச்
சுட்டுப் பொசுக்கி
ஊதி உதறிவிடும்
புயலோ இவ்வக்கினி?

தாளாத தன் நெருப்பைத்
தாங்கிப் பிடித்தபடி
நடுக்கும் குளிரைத்
தன் கனலாலே வென்றபடி
வழியெல்லாம் நீர்த்தடங்களை
வாரி இறைத்தபடி
உலகுய்யும் மந்திரத்தை
தன் தரிசனத்தால் ஒலித்தபடி
ஆடும் வெறி கொண்டனையோ
பெண்ணே?

தந்தைமை ஆட்சி தோற்க
தம் மக்களுக்காய்
அறம் கேட்டு அறம் நிறுத்தப்
பொங்கிவரும் ஆவேசமும்
ஆன்றமைந்து நிற்கும் அடக்கமுமாய்
அக்கினிச் சட்டி ஏந்தி
தன்னை உருக்கி உருக்கித்
தகதகக்கும் பொன்னாகி
ஆடிவரும் தூய்மையோ
அறமோ ஆருயிரோ
கலையோ ஓவியமோ
காதலோ பிள்ளைமையோ?

மாளாப் பெருந்துயர்
அக்கினியைத் தாங்கியபடி
கெஞ்சும் கால்களுக்குப் பணியாது
உலகுய்யும் மரணம் நோக்கி
மலை ஏறிக்கொண்டிருக்கும்
மாளாக் கண்ணகிகளோ?

Read more...

Thursday, June 6, 2013

அன்னத்தாயக்கா வீடு

தன் ஓய்வு ஒழிவெல்லாம்
தெரு வாசலிலேயே வந்து நிற்கிறாள்
அன்னத்தாயக்கா.
கல்யாணமாகி
அவள் இந்தத் தெருவுக்கு வந்து
ஆண்டு ஒன்றுதான் ஆகிறது
போவோர் வருவோரிடமெல்லாம்
அப்படி ஒரு உறவு
எப்படி வந்ததோ அக்காவுக்கு!

பூவே என நிற்பவளை
பூக்காரக்கா வந்து பிடித்துக்கொள்ள
பேசுகிறார்கள் பேசுகிறார்கள்
பிரிய மனமில்லாதவர்களானாற்போல்
பேசுகிறார்கள். பேச்சின் முடிவில் ஒரு முழம் பூ
இன்பக் கடமைபோல் வாங்கிக் கொள்கிறாள், அக்கா.

தலைச் சுமையும் கூவலும்
தள்ளாத வயதின் தளர்நடையுமாய்
ஒரு முதியவர்
வாசலில் நிற்கும் அக்காவைப் பார்க்கிறார்.
எந்த ஊர் தாத்தா? என வினவி
அய்யோ அவ்வளவு தூரத்திலிருந்தா எனப் பரிந்தபடி
சுமையிறக்கி சற்றே இளைப்பாற இடம் கொடுத்தபடி
பத்து ரூபாய்க்குப் பண்டமும் வாங்கிக் கொள்கிறாள், அக்கா.

முரண்டி வளைந்து நெளியும்
மட்டமான ஊக்குகளும் பிறவும் விற்க
மாதத்திற்கொருமுறை வரும் பாத்திமாவிடம்
பிறவிதோறும் தொடர்ந்துவரும் உறவோ அக்காவுக்கு?
என்ன பிணக்கு! என்ன சல்லாபம்!

தன் வீதி வழி போகும் முதியவர் பெண்டிர்
ஏழை எளியவர் குழந்தைகள்
அத்தனை பேர் பெயரும் கதைகளும் அவள் அறிவாள்
போலவே அத்தனை பேரும் அவளை அறிவரோ?

மனிதர்களைவிடவும் தாங்கள்தாம்
அவளை நன்கறிந்தவர்கள் போலும்
பீடுடனே மகிழ்ந்து மகிழ்ந்து
தலையாட்டிக் கொண்டிருக்கின்றன
அவளோடுதான் வந்து நின்றவைபோல
அவள் வீட்டைச் சுற்றிலும் மரங்கள்.

Read more...

அன்பின் தீண்டல்

அன்பின் தீண்டல் அறிந்ததனாலோ
அமரவாழ்வு எய்தி நிற்கின்றனர்,
அதியமானும் அவ்வையும்
நெல்லிக் கனியும்?

Read more...

அன்னவர் நீர்மை

தாவரங்கள்
நீர் நிலைகள்
காட்டு விலங்குகளுக்குள்ளே
பேராசைமிக்க வணிகனாகி
பேர்புகழைக் காமுற்று
காசுள்ளவர்களையும் பிரமுகர்களையுமே
தேடித் தேடிப் போய்ப்
பல்லிளித்துப் பேணுகிற
ஒரு கோணங்கி உண்டோ?
அன்னவர் நீர்மையினால்
அடிமைகளும் குற்றங்களும்
துயரங்களுமுண்டோ?

Read more...

Wednesday, June 5, 2013

பறை

போதையூட்டித்
தாலாட்டித் தூங்க வைக்கவா
ஒவ்வொரு மேடையிலும்
சங்கீத மூர்த்த
சாந்த சொரூபப் பாவனையுடன்
கள்ளப் பின்னணியாயமர்ந்து
ரீங்கரித்துக் கொண்டிருக்கிறாய்
எனது நண்பனே?

விண்ணதிர
மானுடரனைவரையும்
உசுப்பி எழுப்பும்
இந்த உக்கிரப் பேரோசை
தன்னைக் கண்டு
தானே அதிர்ந்து நிற்க;
காணுமிடமெங்கும்
மெய்மை ஒளிர;
மேடைகள் கோபுரங்கள் அதிர்ந்து
விழுந்து நொறுங்க;
வானம் தன் நட்புப் புன்னகையுடன்
குனிந்து நோக்க;
எத்தகைய தடித் தனங்களுக்கும்
உறைக்க வேண்டுமென்ற
அதீத ஒலியுடன்
ஒலிக்கும் இப்பேரிசைக்கும்
செவியுறா செவிகளை நோக்கி
கனல் கொப்பளிக்கும் விழிகள்
காறி உமிழ;
உயிர்த்தெழுந்த உணர்வுகள்
நெஞ்சுலுக்க;
நெகிழத் தொடங்கும்
உன் இதயத்தை மறைத்தபடி
இன்னுமா பாவனை செய்துகொண்டிருக்கிறாய்
நண்பனே?

பொங்கிவரும் மலைச் சுனையாய்க்
குதித்தோடிவரும் குழந்தைகளை
நம் ஈன மதக் கல்வியால்
இடைமறிக்காது
அதிரும் புத்தம் புதுக்
குருதியுடன்
உயிரனைத்துடனும்
நேசமாய் அமர்ந்து
நம் அறியாமைகளாலும்
அதிகார, போக
இச்சைகளாலும்
செய்த பாவங்களை யெல்லாம் எண்ணி எண்ணிக்
குற்றவுணர்வுகளால் உருகிக்
கண்ணீர்மல்கக்
கரையும் உன் அழுகையே,
காலம் உறுமி உறுமி எழுப்பும்
என் பேரிசைக்குப் பின்னணியாக
என்று வருவாய் இவ்விடம்
எனது நண்பனே?

Read more...

வாள்வித்தை

வாள் வித்தையின் முதற்கட்டம்
அணையாத கொதி உலையையும்
சம்மட்டியையும்
வியர்வை ஆற்றையும் கொண்டு,

தன் அருமை உணரா
ஆருயிர் ஜடத்தின்மீது கொண்ட
சீற்றம் போலும் ஆற்றலுடன்
அடித்து அடித்து
தீட்டித் தீட்டி

பார்வையே
பார்ப்பவர் குருதியைத் தீண்டிவிடும்
கதுமைக்காய்
கூர் பேணிக் கொண்டேயிருத்தல்.

வாள் வித்தையின் உச்சகட்டம்
கையிலெடுத்த வாளைச்
சுழற்றாமலே வெற்றி காணல்.
(வில்வித்தையின் உச்சகட்டம் வில்லைக் கையிலெடுக்காமலே குறியை வீழ்த்திவிடல் என்னும் ஜென் மொழியின் மறு ஆக்கமே இக் கவிதை.)

Read more...

Tuesday, June 4, 2013

வெளிவாயில்...

வெளிவாயிற்
தாழ்ப்பாள் திறக்கும் ஒலியும்,
என் இருப்பினை உறுதிப்படுத்த
வினவும் ஒரு குரலும்
என் மனைவி
மேலே எனச் சுட்டும் சைகையும்
மாடிப்படிகளில் ஒலித்துவரும்
காலடிகளும்
வேதனைமிக்கதொரு செய்தியினைத்தான்
இன்று கொண்டுவருமோ?

Read more...

எந்த ஒரு மதமும்

எந்த ஒரு மதமும்
அம்மதம்
அம்மதம் அல்லாதார் எனவிரண்டாக
அவனைத் துடிதுடிக்க அறுத்துத்
துண்டிக்க முயல்வதென்ன?


அறைகுறை அறிவின் ஆபத்துக்களறியாது
உலகம் புல் மேய்ந்து கொண்டிருப்பதென்ன?

எல்லாவற்றையும் அணைத்தபடி
எல்லாவற்றிற்கும் அப்பால்
எத் தீவினைகட்கும் பிடி கொடாது
தன்னந் தனியாய்க் கனன்று கொண்டிருப்பதென்ன,
மெய்யறிவாளன் கண்ட மதம்?

Read more...

பூணூல் தடுக்கிப் பயில்வான்

புல்லானாலும் கல்லானாலும்
புருஷன் புருஷன் என்றபடி
கண்கலங்க மட்டுமே அறிந்தவளாய்
தாலியை முத்திக் கொள்கிறாள்,
உச்சியிலும் நெற்றியிலும்
குங்குமம் அணிந்துகொண்ட
குடும்பப் பெண். காப்பாற்றி விடுகிறது
அவள் கற்பு, பூணூல் தடுக்கி விழுந்து
குற்றுயிராய்ப் போராடிக்கொண்டிருந்த
அவள் கணவனை.

Read more...

Monday, June 3, 2013

மெய்யறிவில்லாத மூட செல்வந்தரோ நாம்?

ஒற்றையடிப் பாதையோ
வண்டித் தடமோ
தார்ச் சாலையோ –
பறவை பதறி விலகும், பாம்பும்
நமது வருகையிலா நேரம் பார்த்தே
கடந்து செல்ல நினைக்கும்
யாரும் குறுக்கிட அஞ்சும்
நமது சாலையில்
நமக்கு வழிவிட்டே
வாழும் எளிய உயிர்களால்தான்
நம் வாழ்க்கை அமைந்துளதெனும்
உணர்வில்லாத மனிதனை
என்னவென்று சொல்வது?

நாம் செல்லும் பாதையெங்கும்
வணக்கம் வணக்கம் என்று
பணிந்து நிற்கும் மனிதர்கள் கண்டு
ஒருவகை இன்பம்
துள்ளும் முன்
ஒரு கணம்
உணர்ந்ததுண்டா, அவர்கள் –
அருமை ஒன்றால் ஈர்க்கப்பட்டு
தோழமைத் தலைமையின் கீழ் ஒரு
சமயப் பணிக்காய் வந்தவர்களல்லர்;
வயிற்றுக்காய்
அடிமைப்படுத்தப்பட்டவர்கள் என்பதை!

மேற்பக்கம் ஆள்பவர்களையும்
கீழ்ப்பக்கம் அடிமைகளையும்
இடவலப் பக்கங்களில் செல்வர்களையும்
நெருக்கி அண்டையமைத்து
தம்மையும் இம் மூ உலகையும்
அணை கட்டிக் காக்கத் தெரிந்த
புத்திசாலி – நம்மைப்
பார்த்துத்தான் சொன்னானோ இயேசுவும்
ஊசியின் காதுக்குள் ஒட்டகம் நுழைந்தாலும்
செல்வந்தன் சொர்க்கத்துள் நுழைய முடியாதென்று.
எத்தனை காலம் மறைத்து வாழ்வோம், நண்பனே
நம் கையொன்றின் குறை விகாரத்தை?

Read more...

செல்வமே! என் செல்லமே!

யாவற்றினும்
நானே சிறந்ததோர்
உள்நிறை
என்கிறதோ,
ஆசை ஆசையாய்க்
காலிப் பெட்டிகளைச்
சேகரிக்கிற குழந்தை?

Read more...

இன்னும் பிழைத்துக் கொண்டிருக்கிறார்

தாய்மீதும்
இயற்கை மீதும் கொண்ட
காதலுக்கு இணையாய்
பெண்ணவள்தன்
முதற் காதலும் வியப்பின்பமும்
அவள் தந்தை தனயரிடமும்
தொடங்கியிருந்ததாலன்றோ
இன்னும் பிழைத்துக்கொண்டிருக்கிறார்
இந் நச்சுலகைப் படைத்துத் துயருறும்
காதலறியா ஆடவர்!

Read more...

Sunday, June 2, 2013

நோக்கமில்லாததொரு அன்பு

நோக்கமில்லாததொரு அன்பு
என்னை முத்தமிட்டது கண்டேன்.
இது போதும் எனக்கு,
இந்த அகண்டம் உள்ளவரை.

அதற்குமொரு நோக்கமிருந்தது
கண்டேன்.
அதைப் பாடினேன்.
பாடுவேன்
இந்த அகண்டம் உள்ளவரை.

துறவு என்றும் உறவு என்றும்
ஏதாவதொரு சொல்லுக்குள் பிடித்து
அடித்துக் கொன்றுவிடத்
துடிக்கும்
மனிதர் கைக்குள் அகப்படாது
புவிமலரைச் சுற்றிவரும் தும்பியாகத்
திரிவேன்,
இந்த அகண்டம் உள்ளவரை.

Read more...

இந்தக் கவிதைத் தொழிலில்

இந்தக் கவிதைத் தொழிலில்
அவனது திறமையென்று
என்ன இருக்கிறது?
இருப்பதெல்லாம்,
அமைதியான இரவு
விரிந்த வானம்
ஒளிரும் நிலவு
புனல் தழுவ நெகிழும்
பாறைகளும் நாணல்களும்;
தனக்குள்ளே
துளைந்துலவும் மீன்களுடன்
பாய்ந்துகொண்டிருக்கும் நதி;
அசையாது
ஒரு தூண்டிலுடன் அமர்ந்திருக்கும்
அவன்.
வேறென்ன?

Read more...

Saturday, June 1, 2013

பறவைகள் அதிராத மெல்லடிகள்

பறவைகள் அதிராத மெல்லடிகள் முயன்று
தேற்றிக் கொண்டிருந்தான்,
வெடிச் சத்தம் கேட்டுச்
சிதறித் துடிக்கும் பறவைகளாய்த்
திணறும் சொற்களை.

துயரோடு துயராகி உகுத்த
கண்ணீரும் கடப்பாறையும் கொண்டு
ஓசையின்றி
உடைத்துக் கொண்டிருந்தான்,
அவிந்து கெட்டித்த அதிர்ச்சிகளின்
மவுனப் பெருந் துயர்ச் சுவர்களை.

இடிந்து சரிந்த சுவர்களுக்கப்பால்
ஒளிரும்
நித்ய உதயக் காதற் கதிரவனை
வெற்றுக் கனவும் அபூர்வமுமாக
விட்டு விடுவதோ நியதி?

Read more...

நடை வண்டி

நான்கு சுவர்கள்
காலம் காத்தபடி தொடர்ந்துவரும்
தட்டுமுட்டுச் சாமான்கள்
அம்மா, அப்பா,
சித்தப்பா, சித்தி
சகோதரர்கள் மற்றும்
உற்றார் உறவினர் சுற்றத்தார் ஜாதிசனம்
உன்னைச் சுற்றிலும்.
நீ சுற்றிவர.

தளர் நடைச் சிசுவே,
என் தேவ குமாரனே!
உனக்குக் கொடையளிக்கப்பட்டிருக்கும்
இந்த நடைவண்டி,
யாவர்மீதும் முட்டி முட்டி நிற்க,
கண்டு சிரிப்பவர்களை
உன் பொக்கைவாயும் நிமிர்ந்து சிரிக்க
காலமும் நீ இங்கேயேவா சுற்றிக் கொண்டிருப்பாய்,
என் கண்மணீ?

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP