Wednesday, July 2, 2025

ஒளியை மறந்துவிடுவார்களோ?

ஒளியை மறந்துவிடுவார்களோ என்று
திகைக்க வைக்கின்றனர்
கொஞ்சநேரம்
நிழல்களோடே
விளையாடத் தொடங்கிவிட்ட மரங்கள்!

Read more...

Monday, June 30, 2025

ஒரு புல்!

நடைபாதையின்
சதுர சதுரத் தளக் கற்களுக்கிடையே
ஒரு ஊசி நுனி இடைவெளி கண்டு
உட்புகுந்துவிட்டது ஒரு புல்!

அது வளர்கிறது! வளர்கிறது!
மனிதனின் பாதையில்
கண்டிப்பாய்
அவன் பார்வையை எட்டிவிடும்படியாய்!

Read more...

Friday, June 27, 2025

கண்மருந்து,,,

கண்மருந்துச் சொட்டுடன்
அய்ந்து நிமிடங்கள் விழிமூடியிருக்க
காலத்தை உங்கள் கையில்
ஒப்படைத்துவிட்டல்லவா
அவன் தன் அன்பனுடன்
மூழ்கிவிடுகிறான்?

பிரதி உபகாரக்
காதல் வெளிப்பாடாய்
காலத்தோடும் அவனுக்குக்
கடமைகளிருக்கிறதல்லவா?

Read more...

Wednesday, June 25, 2025

காதல் எனும் செயல்வடிவம்…

காதல் எனும் செயல்வடிவம் கொண்டதோ
காற்று?

உபவன மாஞ்சோலைக்குள்
ஒரு காற்று
பெருங்கூட்டமாக
குழுக்களாக
தனித்தனியாக
பிரிவிலாத ஒன்றின்
பேருயிராக
பேருரையாக.

இவையெல்லாம் சொற்கள்
மானுட உளறல்கள்
சமயங்களில்
ஆபத்தானவைகளும்கூட

சொற்களைத் தவிர
நம்மிடம் வேறொன்றுமில்லையா
செயல்கள்? பொருள்கள்?

நம் செயல்களுக்கும் பொருள்களுக்கும் மட்டுமே
உரித்தானது என்பதைக் காட்டுவதற்குத்தானா
நம்முடைய எந்தப் பிடிக்குள்ளும்
அகப்படாமல் போய்க்கொண்டே இருக்கிறது
காற்று?

Read more...

Monday, June 23, 2025

இந்தக் காற்று வெளியிடையே…

இந்தக் காற்று வெளியிடையே அல்லவா
காதலையும் காதலின் இரகசியங்கள்
அத்தனையையும் அவன் அறிந்து கொண்டான்!

எப்போதும் சிலிர்சிலிர்க்கும்
பெருங்களியுடனும்
எப்போதாவதுதான்
அசையாத மவுனத்துடனும்
வாழ்கின்றன இந்த மரஞ்செடிகொடிகள்!

வருடிச் செல்லும் காற்று
சொல்லிச் சென்ற பேருண்மையை
எத்தனை முறைகள் அவனும் அதனைப் போலவே
சொல்லிக்கொண்டேயிருக்கிறான்!

வான்வெளியில் பேரொளிரும் ஒரு பொருளைப் பற்றி
எங்கும் விரிந்துகிடக்கும் ஒளியைப் பற்றி
இரு மண் துகள்களுக்கிடையிலும்
நின்று துலங்கும் சூரியனையும்பற்றி
எத்தனை முறைகள் அவனும்தான்
சொல்லிக் கொண்டே இருக்கிறான்?

Read more...

Monday, June 16, 2025

தனக்குத் தன்னையே…

முழு ஆற்றலுடன்
தனக்குத் தன்னையே
பின் உந்தமாக வைத்துக்கொண்டு
ஒரு சிறு
தூண்டலுக்காகக் காத்திருக்கிறது
மெழுகுவர்த்தி!

Read more...

Friday, June 13, 2025

தும்பி (தட்டான்)

அடிக்கடி
அந்தரத்தில் நின்றே
(என்னஅஅ அழுத்தமாய்ச்)
சிறகடிக்கிறது தும்பி!

ஏன்?

என் வாசகர்களுக்கு
நான் சொல்ல வேண்டியதே இல்லை
என்கிறது அது!

Read more...

Monday, June 9, 2025

மூளைக்கு ஓய்வு கொடுங்கள்!

எப்போதும்
அமைதியும் ஆழ்ந்த யோசனையுமாய்
இருப்பது போல் தோன்றிய
அவனை நோக்கி
மூளைக்கு ஓய்வு கொடுங்கள்!
மூளைக்கு ஓய்வு கொடுங்கள்!
என்றார் துணைவியார்
எத்துணை பெரிய தேவவாக்கு! அக்கறை!

ஆங், அது எனது மரணமல்லவா என
அலறிக்கொண்டு முழித்தது மூளை!
ஆங், அப்போதுதானே நான் வருவேன் எனக்
களி கொண்டு குதித்தது வாழ்க்கை!

‘இரண்டுபேரும் (ஒற்றுமையாய்)
சற்று அமைதியாயிருக்க மாட்டீர்களா’
என்று அதட்டியது பெரிசு!

Read more...

Friday, June 6, 2025

அவன் நடை உலாவும் உபவனத்தில்…

அவன் நடை உலாவும் உபவனத்தில்
அன்று பூமியின் பச்சைக்குடம்
பாலமுதாய் நிறைந்து
பொங்கி வழிந்தோடுவது போல
சிலந்தி அல்லிச் செடிகளின்
வெண்மலர் வரிசை…

பெருவெளியெங்கும்
ததும்பி அலையடிக்கிறது
பேரமைதி கொந்தளிக்கும்
அதன் ஆட்டமும் பாட்டமும்
யாருடையவோ இதயத்தை
எதிரொலிப்பதுபோல!

அறிமுகமற்ற மனிதர்களானாலும்
ஒரே வழியில் எதிர்ப்பட்டவர்களாய்
புன்னகைத்துக் கொள்ளும்
மனிதர்களில் ஒருவர்
அன்று புதிதாய் வாய்மலர்ந்து
காலநிலையையும்
காற்றையும் வெளியையும் புகழ்கிறார்.

சொல்லமுடியாத ஒன்றை
மொத்த உலகிடமும்
பகிர்ந்து முடித்துவிட்டவர்கள் போலும்
இத்தகையதோர் பெருநிலைதான்
பொங்கிவழிந்து
நிறை பெருகிக் கொண்டிருக்கிறதைக்
கண்டு கொண்டவர்கள் போலும்…

Read more...

Wednesday, June 4, 2025

அவன் உன்னை…

அவன் உன்னை நெருங்கியபோது
அவன் மூச்சு உட்கொண்ட உன் நறுமணம்
இந்த மொத்த உலகையும் நேசித்த
மலர்களிடமிருந்து நீ பெற்றுக்கொண்டதாலோ
பிற பொழுதெல்லாம் அவன் உடலும் உயிரும்
இம் மொத்த உலகையும்
நேசிப்பதாய் மாறிவிட்டுள்ளது?

இக் கவிதையினை வாசித்துக்கொண்டிருக்கும் அன்பனே,
வேகத் தொற்று ஒன்றால்
நாம் இந்த உலகை மாற்றிக் கொண்டிருப்பதைப்
பாராய்!

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP