காதல் எனும் செயல்வடிவம்…
காதல் எனும் செயல்வடிவம் கொண்டதோ
காற்று?
உபவன மாஞ்சோலைக்குள்
ஒரு காற்று
பெருங்கூட்டமாக
குழுக்களாக
தனித்தனியாக
பிரிவிலாத ஒன்றின்
பேருயிராக
பேருரையாக.
இவையெல்லாம் சொற்கள்
மானுட உளறல்கள்
சமயங்களில்
ஆபத்தானவைகளும்கூட
சொற்களைத் தவிர
நம்மிடம் வேறொன்றுமில்லையா
செயல்கள்? பொருள்கள்?
நம் செயல்களுக்கும் பொருள்களுக்கும் மட்டுமே
உரித்தானது என்பதைக் காட்டுவதற்குத்தானா
நம்முடைய எந்தப் பிடிக்குள்ளும்
அகப்படாமல் போய்க்கொண்டே இருக்கிறது
காற்று?