இந்தக் காற்று வெளியிடையே…
இந்தக் காற்று வெளியிடையே அல்லவா
காதலையும் காதலின் இரகசியங்கள்
அத்தனையையும் அவன் அறிந்து கொண்டான்!
எப்போதும் சிலிர்சிலிர்க்கும்
பெருங்களியுடனும்
எப்போதாவதுதான்
அசையாத மவுனத்துடனும்
வாழ்கின்றன இந்த மரஞ்செடிகொடிகள்!
வருடிச் செல்லும் காற்று
சொல்லிச் சென்ற பேருண்மையை
எத்தனை முறைகள் அவனும் அதனைப் போலவே
சொல்லிக்கொண்டேயிருக்கிறான்!
வான்வெளியில் பேரொளிரும் ஒரு பொருளைப் பற்றி
எங்கும் விரிந்துகிடக்கும் ஒளியைப் பற்றி
இரு மண் துகள்களுக்கிடையிலும்
நின்று துலங்கும் சூரியனையும்பற்றி
எத்தனை முறைகள் அவனும்தான்
சொல்லிக் கொண்டே இருக்கிறான்?