Sunday, March 6, 2011

புத்தர்

மேக முடி சூடி
எல்லாவற்றிற்கும் அப்பால்
மகாமவுனமாய் அமர்ந்திருக்கும்
பிரக்ஞையற்ற மெய்மையல்ல;
ஒரு சிகரம் தன் உக்கிரம் குன்றாது
தன் பள்ளத்தாக்கினை
உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கும் பார்வை.

ஓய்ந்து போய்
நமக்கு நாமே
உபயோகமற்ற ஆறுதல் வேண்டி
நம் வழிபாட்டுக்குரியதாய்ச் செதுக்கிக்கொண்ட
உயிர்மையற்ற விக்கிரகமல்ல;
மானுடத் துயரும், நீதியின்மேல்
பசி தாகமும் கொண்டோர்
நெஞ்சிற் கனலும் வேட்கை.

விழிப்பு

தயை

மெய்ஞ்ஞானம் தந்த
உன்னதப் பொலிவு

உலராத புன்னகை

உறுதிமயமான இருப்பு

உருளும் தர்ம சக்கரம்

ஒளி.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP