வைகறை
வைகறைச் செல்வீ!
உஷா!
காலைப் பொழுதின்
திவ்யமான அமைதியே!
இயற்கையின்
எல்லாப் பொருட்களிலும்
இலங்குகின்ற மவுனமே!
என் பேரழகே!
ஒரு மரத்தின்முன் நின்றுகொண்டோ
சின்னஞ் சிறிய என் தோட்டத்தில்
அமர்ந்துகொண்டோ
நின்முன்
நான் செயலற்றுவிட்டேன் என்றபோது
நீ அமைதியிழந்தனையோ?
பின், என்ன அதிர்ச்சியினால்
நீ குரலிழந்தனை?
தாளமுடியாத நெஞ்சின் குரலிழந்த கதறலாய்
ஒலிக்கிறது நினது உக்கிரமான அமைதி.
மவுனமான நின் பார்வையில், அசைவுகளில்
கனலும் துயரங்கள்தாம் என்ன?
மனிதர்களால் இன்னும் தீண்டப்படாது
அமிழ்ந்துகிடக்கும் அம்ருதப் பெருஞ்செல்வமும்
நெருப்பிலிட்ட நெய்யாய்த்தானாயிற்றோ?
நின் கதறலில், நினக்காய் என் குரல் தேரும்
அவசரமான அழைப்புமுனதோ?