தாகமுள்ளவன்
வெட்டவெளியின் இதயத் துடிப்போ?
வெகுதூரமாகி நறுங்கிய பரப்பில்
கட்டிச் சூர்ய ஒளியாய்ப்
பளபளத்துக் கொண்டிருக்கிறது தண்ணீர்.
தகித்துக்கொண்டிருக்கும் வெளியில்
தாகமுள்ள ஒருவன் அதைத் தேடுகிறான்
அப்போது விண்ணுலகே
அவனை ஆசீர்வதிக்கச் சூழ்ந்து வந்து நிற்கிறது
பாறையும் பாறைபொடிந்த மணலும் தாண்டி
காய்ந்த சகதிப் பொருக்குகள்
சருகுகளாய் நொறுங்க நடந்து
காலணிகளைக் கழற்றிவிட்டு
பாதங்கள்கூசி முகஞ்சுளிக்க
கால்பதியும் சகதிக்குள் கதியற்று
கால்தூக்க கால் ஊன்றத்
தெறிக்கும் சகதிக்குள் நெளிந்து
கால்பாவத் தோதான கடுந்தடம்
காணக்கிடைக்காது தோற்றும்
பொறுமையிழக்காமல் நகர்ந்து முன்னேறி
தண்ணீரில் கால்வைக்கக்
கலங்குநீர் கண்டு நிதானித்து
எட்டி, கலங்கா நீரில் பாத்திரம் முழுக்கி
வெற்றிகரமாய் மொண்ட நீரைப்
பத்திரமாய்க் காத்தபடி
வந்த வழியே
வந்த விதமாய்ப் பயணித்துக்
கரையேறி வந்த பின்பு...
பாதி நீரைப் பருகியும் பாதி நீரால்
தன்னைத் தூய்மைப்படுத்தியும் கொள்கிறான்
தாகமில்லா மனிதனோ
நீர் வறளும் போக்கில்
அதனைப் பிடித்து வைத்துக்கொள்ளும் திராணியற்றும்
ஏக்கத்தோடு தன் தொடர்பை வைத்துக்கொண்டிருக்கும்
அந் நீர்நிலையைச் சுற்றியுள்ள சகதி
பொருக்கு, மணல், பாறை இவற்றை விட
வறண்ட அற்பமான ஓர் அந்நியனாய்
அவர்களிடையே அங்கே நிற்கிறான்
தாகமில்லாத மனிதனும் உண்டோ என்று
உங்கள் பேருள்ளம் கசிகிறது அவனுக்காக!