முழு இரவு
அவன் அழுதபடியே பார்த்துக் கொண்டிருந்தான்
தவறான பாதையில் வெகுதூரம் சென்றிருந்த அவர்களை.
எவ்வாறு அவன் அவர்களைத் தடுத்து நிறுத்துவான்?
தொடர்ந்து நிகழும் போர்களைத்
தன் உரிமைக்கும் நீதிக்குமான
சவால் என் எண்ணியவர்களாய்
உற்சாகமாய்த் தொடரும் பேதைமையை,
தங்கள் மேன்மைகளனைத்தையும்
கடவுள் எனப் புறம் நிறுத்தி
கைகூப்பி விடைகொடுத்துவிட்டுப்
பதர்களாய் வாழ்கிற மூடமதை,
துயரின் தோற்றுவாயை,
தங்கள் ஒரு அடிவைப்பை நிறுத்திய கணமே
சரியான பாதைக்கு உடனழைத்துச் செல்லக்
காத்திருக்கும் காலதூரமற்ற கருணை ஊற்றை
எப்படி உணரவைப்பான் அவன்?
விலகவொண்ணா வலியுடனே
பாய்ந்துபோய் அவர்களின்
பாதநிலமாகிக் கொண்ட பாய்ச்சல்களும்
அவர்கள் கண்ணுறும்படிக்கு
யாதொன்றுமாகிநின்ற கதறல்களும்
பயன் காணாது போவதுவோ?
செயலின்னையே உருவானவனோ
தானே செயலானவனோ
மெய்மை உணர்ந்த மனிதன்?
தூய மகிழ்ச்சியை அறிந்த மனிதன்
துயருடையோனாகவே இருக்கிறான்.
இயற்கையின் மைந்தன்
முதுமை காண்பதில்லை எனினும்
துயருடையோனாகவே இருக்கிறான்.
மனித இனத்தின்மீது மட்டுமே கவிந்துள்ள
துயர் படிந்தவனாக, முதிர்ச்சியின்
உச்சாணிக் கொம்பில் பூத்துத்
தாழத் தேன் சிந்தும் மலரும் கனியுமான பின்னும்
துயருடையோனாகவே இருக்கிறான்.
தூய நீரூற்று எங்குள்ளது என அறியும் அம்மனிதனே
துயரின் பிறப்புக்கண் அனைத்தும் அறிவான்.
சொல்லிச் சொல்லித் தோற்றொருநாள்
மவுனமாகி விடுவானோ, இயற்கை தன் குரலுக்காகவே
அவனைப் படைத்துள்ளது என்பதறியாது?
அகண்டாகார விண்ணே வியந்து நிற்கும்
இயற்கை வெளியாகிவிடுவானோ,
இயற்கைவெளியாகிவிடுவதே மரணமென்பதறியாது?
மரணத்தின் வாயில் திறந்தன்றோ
மரணமிலாப் பேரானந்தப் பெருவெளியமுதம்
பருகுகிறான்!
அவன் வயிறு பார்த்துத் தன் முலை விலக்கி
எழுந்து நிற்கும் அந்த ஊமைத் தாயினுள்ளம்
அவனை ஊமையாயிருக்க விடுமோ?
காதலைத் தன் உள்ளத்தில் வைத்து
வெகுநேரம் களிப்புற்று இருக்கும் மனிதன்
துயருக்கும் அவ்வாறே இடம் கொடுத்துக் கனிகிறான்.
வருகிறேன் எனச் சொல்லி
வராமல் திரியும் மனிதனைக் குறித்த
காத்திருத்தல்களெல்லாம் வீணானதோ?
தொலைந்துபோன குழந்தையுடன்
கண்காட்சியின் அலுவலகத்தில் நின்றபடி
உற்றவரை வந்து பெற்றுக் கொள்ளும்படி அழைக்கும்
ஒலிபெருக்கிக் குரலாயும் அவன் உரைக்கவில்லையா?
நாம் கொஞ்சிக்குலவி மகிழ்ந்து
விளையாடிக் கொண்டிருக்கும் அறைக்கு வெளியே
கண்ணைக் குதறும் போர்க்களமொன்று
பெயர்த்துத் தகர்ப்பாரின்றிக்
கொழுத்து இயங்கிக் கொண்டிருப்பதைக்
கண்ணுறுவார்தம் கதறல்கள்தாமோ அவன் கவிதைகள்?
ஆட்டத்திலே மனம் செல்லவில்லை என்றவனை
ஆட்ட வீரனாக்க எப்படி முடியும்?
ஆட்டத்தில் எப்போதும் தோற்றுக்கொண்டே வரும்
துயரத்தின் நீலநிலா வெளிதான்
தகுதியும் நற்குறியுமான கொடையோ?
இந்த முழுஇரவையும் பற்றிய ஒரு கவிதைதான்
தவறான பாதையில் வெகுதூரம் சென்றுவிட்ட
அவர்களைத் தடுத்து நிறுத்தும்.