இந்த இடத்திற்குத்தான்...
இந்த இடத்திற்குத்தான்
உங்கள் எல்லோரையும்
அழைத்து வந்துவிட விரும்புகிறேன்
ஆனால் உங்கள் ஒவ்வொருவரினதும்
முழு ஒத்துழைப்பும் இல்லையெனில்
இது நடக்காது.
துளிகளால்தாம்
பெருவெள்ளம் என்பதை
நாம் எப்போதும் சொல்லிக்கொண்டேயிருக்கிறோம்.
இங்கே வந்துவிட்டால்
எரியும் நம் தாகவிடாய்
எல்லாம் அடங்கிவிடும்.
எரியும் நம் தாகவிடாய்
எல்லாம் அடங்கிவிட்டால்
நாம் இங்கே வந்துவிடலாம்
என்றும் சொல்லலாம்.
இங்கு அங்கு எனும் இடங்களில்லை
காலமும் இல்லை
ஒரு நொடிதான் காலம்
என்றும் சொல்லலாம்.
எல்லாம் அடங்கிவிடும் இங்கே
பேர் புகழ் பெருஞ்செல்வம்
எதுவுமே தேவைப்படாது
ஒரே ஒரு துயரம்தான்
நம்முடைய தாகமாய் நம்மிடம்
தங்கிவிடக்கூடும்
எல்லோரும் இந்த இடத்திற்கு
வந்துவிட வேண்டும் என்பதே அது!
இந்த இடத்திற்குத்தான்
உங்கள் எல்லோரையும்
அழைத்து வந்து விட விரும்புகிறேன்.
அங்கே நான் இருக்கமாட்டேன்
நாம் மட்டுமே இருப்போம்.
இல்லை, நாமும் இருக்கமாட்டோம்
நம் உறவு மட்டுமே இருக்கும்!