கலைச் செல்வியே, அம்மா!
உள்ளதாம் பொருளை
ஓதி உணர்த்த முடிந்ததா?
ஓதும் வேதங்களால்
உள்ளொளி துலங்கியதா?
கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத்தில் இருப்பாள்
துயர்மலி உலகின் பெருவலி கொண்ட
துய்யர்களிடமும் இருப்பாள்தானே?
கருணை வசனங்கள் போதுமோ
கருணை அதில் உண்டோ, செல்வி?
கள்ளமற்ற முனிவர்களா,
கள்ள முனிவர்களா என்பதையும்
கண்ணுடையார் ஒருவரால்தானே
கண்டுகொள்ள முடியும், தேவி?
கைப்புண்ணைக் காணக்
கண்ணாடி வேண்டுமோ, அம்மா?
உள்ளதாம் பொருள் அதனையே
வளர்ப்பதற்கு வேறு வழியே இல்லையா?
அதைக் காட்டாமல்
துதிகளுக்கோ காத்திருப்பவள் நீ?
எம் அன்னையே
காண்பவர்களோடு காணாதார்க்கும்கூட
அருளும் நீ
கவிதையின் மதம் உலாவும்
கடவுளின் ராஜ்ஜியத்தை
அழித்துக் கொண்டேயிருக்கும் மனிதனுக்கும்
அளித்துக்கொண்டேதானே இருக்கிறாய்
கடவுளின் ராஜ்ஜியத்தை?
மெய்ச் செயல்வடிவமாக மட்டுமே
ஒளிரும் கருணையே!
துதிகளுக்கு வளையாத
அரும்பொருளேயான ஆளுமையே...!