தேவமலர்கள்
குட்டி வானத்தைத்தான்
அவன் ஒரு போர்வையாய்ப்
போர்த்திக்கொண்டு
தலையைமட்டும்
வானத்திற்கு வெளியே நீட்டியவனாய்
துயின்றுகொண்டிருந்தான்.
வேற்றுக் கிரகத்திலிருந்துதான் ஒரு மனிதன்
தழைக்கும் காம்போடு
ஒரு மலரைக் கொண்டுவந்தான்.
ஒரே மலர்தான்
முதல் மலராய்
வேர்விடத் தொடங்கியது இந்த பூமியில்.
அப்புறம் இந்த பூமியில்
எல்லா இடங்களுக்கும் பரவிவிட்டது.
ஆனால் ஒவ்வொரு மலருமே
தன்னை முதல் மலராகவும்
மனிதர்கள் தேடும்
பேர், புகழ், பெருஞ்செல்வம் எல்லாம்
தானேதான் என்றும்
நொடிதோறும்
மாறி மாறி நிகழ்ந்து கொண்டேயிருக்கும்
தனது பிறப்பையும் மரணத்தையும்
சொல்லவே முடியாது என்றும்
கண்டவரே கிடையாது என்றும்
சொல்லிக்கொண்டேயிருக்கிறது காண்!