இலக்கியா
உடல் உறுப்பு ஒன்றின்
தசைநார்ப்பிசகு வலிபோக்க வந்த
நிபுணரான அந்தப் பெண்ணுக்கு
மாறா இளமை ஒன்று மிளிரும் மாய அழகு!
மானுட அழகின் பொதுமொழி பேசும் கண்கள்!
சிகிச்சை பயிற்சிக்கு இடையே இடையே
நடந்த உரையாடலில்
பெருநகர்களுக்கே உரிய
உலகின் வேறு வேறு தலங்கள்
வேறு வேறு மொழிகள்
வேறு வேறு இனங்களையெல்லாம் கடந்த
புத்தம் புதியதொரு செய்தியாக
தான் ஒரு குழந்தைப்பேறு மருத்துவரும்கூட
என்றார் அவர்
அவர் பெயர் 'இலக்கியா' எனும்
பொருள்தரும் சமஸ்கிருதச் சொல்.
அவரது பொழுதுபோக்காய்:
கால்பந்து மற்றும் கதக் நடனம்.
அம்மா பரதநாட்டியர்,
அப்பாவும் கவிதைநேசர்
இலக்கியா எனும் பெயருடன்
மகளுக்கு இசையையும் நாட்டியத்தையும்
கற்றுக்கொடுத்தவர்.
உலகைக் கொடூரமாய்ப் பாழ்படுத்திக்கிடக்கும்
சாதி மத இன பிரிவுகளையெல்லாம் தடுத்து
உலகை இணைத்துவிடுவதற்கான
அடையாளமாய்
கலையும் இலக்கியமும் மருத்துவமுமாய்
அந்த பெண்மணி_
மானுட அழகின் பொதுமொழி பேசும்
கண்களுடன்!