இப்போதெல்லாம் மனிதர்கள்...
“இப்போதெல்லாம் மனிதர்கள்
நம்மைப் பார்ப்பதேயில்லை
எப்போதும் கைபேசியிலும்
அல்லது ஏதாவது ஒரு எண்ணங்களிலும்தான்
மூழ்கியவர்களாய் இருக்கிறார்கள்
எல்லாப் பிரச்சனைகளும்
காரணங்களும்
விடுதலையின் அமைதியும்
தாங்களே என்பதறியார்”
இந்த அகால வேளையிலும்
நடை உலா வந்தவர்களைப் பார்த்து
கனிவுடனும் பெருந்துயருடனும்
பேசிக்கொண்டனர்.
சொக்கவைக்கும்
ஜில்லென்ற குளிர்காற்றும்
ஊர்ந்து சென்று கொண்டிருந்த
உச்சிநிலாவும்
விண்மீன்களை மறைத்துவிட்ட
மழைமேகங்களும் நீலவானமும்
இரவிருளில் ஆன்றமைந்துவிட்ட
மரச்செறிவுகளும்
விரிவளாகத்தின் வீதிவிளக்குகளும்.