ஓநாய்கள்
பசித்த நம் விழிகளில்
உணவின்மீது அழுந்தும்
பற்களின் அசைவில்
ஊறிக் கலக்கும் உமிழ்நீரில்
இன்னும் இருக்கிறதோ அது?
மிருக மூர்க்கத்திற்கும்
கருணைக்குமிடையே
எத்தனை லட்சம் ஆண்டுகளாய்
நடந்துகொண்டிருக்கிறது
இந்தச் சமர்?
உயிரின் உக்கிரமேதான் ஆயின்
அது சக உயிரொன்றிற்குத் துயராதல் அறமாமோ?
ஓநாய்கள் அழிவை நோக்கி
அருகி வருகின்றன என்பது உண்மையா?
அல்லது, நம் இரத்தத்துள் புகுந்து
இன்றும் ஜீவித்துக்கொண்டிருக்கும்
அதிநவீனத்துவ தந்திரமோ?
மனித அணுக்கத்தாலோ
இரக்கத்தாலோ
என்ன ஒரு பின்வாங்கலோ
ஓநாயின் மரபணுவுள்
ஏதோ நெகிழ்ந்து
திசை மாறி
நாய்கள் பிறந்து
மகத்தானதோர் அறியாமை விழிகளில் மின்ன
வாலாட்டிக்கொண்டு
தாமும் மனிதனை நெருங்குகின்றன?
மனிதனைப் போலவே கனவு காணும் ஒரே மிருகம்!
மனிதனும் நாயும்
நெருங்கிக் குலவிக்
கொஞ்சி மகிழும்
இரகசியமும் இலட்சியமும்தான் என்ன?