அந்த முகம்
லட்சுமி லட்சுமி என்று
ஒரு சிறுமி இருந்தாள்.
அவள் தன் தம்பிப் பாப்பாவை
பார்த்துக்கொள்ள வேண்டிய நிலைமை
உரிய வயதில் பள்ளிக்கூடம்
காணாது போக்கிற்று.
காலங் கடந்து சென்று படித்த படிப்பும்
அம்மாவுடன் வேலை செய்ய வேண்டி
பாதியில் முடிந்தது. அப்புறம்
வெளியே போயும் வேலை செய்து
தன் முதுகொடித்துக் கொண்டாள்.
கல்யாணமாவதற்குத்தான்
என்ன பாடு பட்டு விட்டார்கள்
அவள் பெற்றோர்
ஆனால் கல்யாணமாகியும்
அவளுக்கு ஒரு வாழ்க்கை
அமையாது போனதுதான் என்ன கொடுமை.
மாமியாரும் நாத்தனாரும் கொழுந்தனாரும்
அவளைக் கூறுபோட
ஓய்வில்லா வேலைகளையும் அவமானங்களையும்
கேட்கவோ பகிர்ந்துகொள்ளவோ
இரவிலும்
அவள் கணவனுக்கு
ஒழியவே இல்லை நேரம்
அவனும் அமைதியில்லாமல்
அவள்மீதே எரிந்துவிழுந்து கொண்டிருந்தான்
எல்லாவற்றுக்கும்.
கல்யாணத்திற்கு முன்பிருந்த
ஒரு சின்னக் கனவுக்கும் கூட
வழியற்றுப் போன வாழ்க்கை எனினும்
ஒருநாள் திடீரெனக் காதல் தேவதை
அவள் மீது இரங்கி ஒரு பரிசளித்தது.
நோயில் படுத்த லட்சுமி
எழுந்திருக்கவேயில்லை.
அவள் படுக்கையைச் சுற்றிச் சுற்றி
நோயாளிப் பெண்ணை
ஏமாற்றிக் கட்டிக் கொடுத்துவிட்டதாய்-
(பரிசு ரகசியம் அவர்களுக்கென்ன தெரியும்?)
அவள் பெற்றோரை வசைபாடிக் கொண்டிருந்த
கணவன் குடும்பத்தையும் விட்டு
தப்பிச் சென்று விட்டாள் அவள்.
குழிக்குள் பிடிமண் அள்ளிப்போடக்
குனிந்த வேளை
நான் அதிர்ந்து போனேன்
பொழுது பூத்த தாமரைமலராய்
அப்படியொரு நிறைவும் அமைதியும் ஒளிர்ந்த முகத்தை
முதன்முதலாய்
காணப்பெற்றவனாய்.
துயரங்களினின்றும்
மானுடம் விடுதலை பெறுவதற்கான
ஞானத்தை அடையத் தடையாயிருப்பது
துயரங்கள்தாம்
என உரைத்துக்கொண்டிருந்த்து
அந்த முகம்.