Monday, October 30, 2023

புன்னகையுங்கள்! புன்னகையுங்கள்!

கடவுள் படைத்த இவ்வுலகில்
கடவுளின் ராஜ்ஜியம் இல்லாமலா?
மெய்ம்மையான மதம் ஒன்றில்லாமலா?
புன்னகையுங்கள்! புன்னகையுங்கள்!

கவிதையின் மதம் உலாவும்
கடவுளின் ராஜ்ஜியத்தைச்
சிதைப்பனவற்றையெல்லாம்
ஏற்காமலிருப்பதுதான்
அழிப்பது காப்பது கட்டுவது என்பதெல்லாம்!

தேவையெல்லாம்
பேரளவானதொரு புரிதலன்றி
வேறென்னவாக இருக்க முடியும்?

உள்ளும் புறமுமாய்
இருப்பதும் இல்லாமலிருப்பதும் எது?

மாற்றி மாற்றிப் போடும் தோசையைக்
கருக விடுகிறோமோ?

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்த் தொடரும்
நம் அத்தனை துயர்களுக்கும்
போர்களுக்கும் வாதைகளுக்குமான
காரணங்களை நான் அறிந்துள்ளேன்

தாகம் தீர்க்கும் அமுதமாக
என் அருகே நான் பருக அமர்ந்திருக்கும்
இந்த ஒரு குவளையிலுள்ள தண்ணீர்
துளித் துளிகளால் மட்டுமே கூடிய ஒரு முழுமை அன்றி
ஒருக்காலும் பிறிதொன்றால் பிறந்ததல்ல
என்பதை நான் உறுதியாகச் சொல்வேன்.

நான் சொல்வது எதையும்
நீங்கள் நம்பினாலும் நம்பாமல் போனாலும்
விளைவது ஒரே ஆபத்துதான்.

நான் “செய்யாதீர்கள்” என்று சொல்லி
நீங்கள் செய்யாமல் போனாலும்
செய்தீர்களேயானாலும்
அது ஆபத்தேதான்!

சொல்வதை உணர்கையில்தான்
இருக்கிறது
கடவுளின் ராஜ்ஜியமும் கவிதையின் மதமும்!

தேவையெல்லாம்
பேரளவானதொரு புரிதலன்றி
வேறென்னவாக இருக்க முடியும்?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP