கவிதை
எண்ணங்களால் உருவாக்கப்பட்ட
தத்துவங்களல்ல இது.
எந்த மனிதனும்
கண்டேயாக வேண்டிய
உண்மை.
உயிரின் குரல்.
அமைதியின் மொத்தம்.
அழகின் கொண்டாட்டம்.
அன்பின் ஈரம்.
அறத்தின் தகிப்பு.
புத்த புன்னகை.
நித்தியத்தின் கரங்களிலிருந்து
சுழலும் வாள்.
ஒளிமட்டுமேயான
ஓவியநிலா.
நாம் அறியாதவற்றின்மீது
தோன்றித் தவழ்ந்து ஓடும்
அமுதநதி.
உண்மையைச் சொல்வதானால்
அது நினைவில் வைத்துக்கொள்ளக்கூடிய
ஞாபகம் அல்ல!
முழுவாழ்வின் மலர்ப் புன்னகை.
முழுமையின் புனிதத் தொடுகை.
சிதைவும் உயிரின்மையுமல்ல.
உடைந்த ஒரு பகுதி அல்ல.
உடைந்த ஒரு பகுதியின்
கண்ணீரோ கூக்குரலோ
கதறலோ அல்ல.
எனினும்
முழுமையின் முழுவாழ்வின்
கண்ணீர் என்றொன்றும்
காதல் என்றொன்றும்
இருக்கவே இருக்கிறது
ஆற்றல்களெல்லாம் அடக்கப்படாமலேயே
கொந்தளித்துக் குழைந்துகொண்டு கிடக்கும்
அமைதி என்பதும் அதுதான்.
கவிதை என்பதும் அதுதான்.
இந்தக் கவிதை “கவிதையின் மதம்” கட்டுரைத் தொகுப்பில் முதல் கட்டுரையின் இறுதியாய் உள்ளது.